இறந்த விசுவாசிகளின் நினைவு தினம்
02 - 11 -2016
எசா 25 : 6, 7 - 9; உரோ 5 : 5 - 11; லூக் 7 : 11 - 17
மரணப்படுக்கையில் படுத்திருந்த ஒரு பணக்கார தந்தையின் பக்கத்தில் அமர்ந்து, 3 மகன்கள் இப்படி பேசிக் கொண்டார்கள்.
முதல்வன் : கல்லறை 5 கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறதே. அப்பாவை அங்கு எப்படி கொண்டு செல்வது? என்றான்.
இரண்டாமவன் : நாம் வைத்திருக்கின்ற காரில் கொண்டு செல்லலாம்; இருந்தாலும் அதற்கு அதிக பணம் செலவாகிவிடுமே என்றான்.
மூன்றாமவன் : குதிரை வண்டியில் கொண்டு செல்லலாம். ஆனால் குதிரை வண்டி கிடைக்குமா? என்றான்.
தந்தை கூறினார், நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். வீட்டு மூலையில் இருக்கிற எனது கைத்தடியை எடுங்கள். நான் நடந்தே கல்லறைக்குச் சென்று விடுகிறேன் என்றாராம்.
நாம் கவனமாக இல்லையயன்றால் பணம் பாசத்தை விழுங்கிவிடும். லூக் 12 : 15‡ல் ‘எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாதபடி கவனமாக இருங்கள். ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவுதான் இருந்தாலும், செல்வப்பெருக்கினால் வாழ்வு வந்துவிடாது’ என்கிறார் இயேசு.
கருவிலே உருவாக்கப்படும் இந்த உடல்
இளமைக் காலங்களில் துள்ளிக் குதிக்கிறது.
வயது ஆக ஆக வளர்ச்சிப் பெறுகிறது
முதுமை வேளையில் முற்றிவிடுகிறது
முதுமையோடு இறப்பும் ஒட்டிக் கொள்கிறது.
இறைவனது பார்வையில் இறப்பு என்பது ஒரு நிரந்தரமான முற்றுப்புள்ளி அல்ல. இறப்பிற்கு பிறகும் வாழ்வு உண்டு. அந்த வாழ்வு ஒளிமயமான வாழ்வு, அத்தகைய வாழ்விற்கு நம்மை பாவ நிலையிலிருந்து பிரித்து எடுத்து, அழைத்துச் செல்லும் அதிகாரமும், ஆற்றலும், வலிமையும் இறைவனுக்கே உண்டு.
மனிதனை படைத்த இறைவன் மனிதனுக்கு சாவின்மேல் அதிகாரம் கொடுக்கவில்லை (சங்.தி 8 : 8). கொடுக்கப்பட்ட மனித வாழ்வு இறைவனது கொடை. ஆகவேதான் புனித பவுல் அடிகளார், வாழ்வு என்பது கிறிஸ்துவே, சாவது என்பது ஆதாயமே (பிலி 2 : 21) என்கிறார். ஒவ்வொரு மனிதனிலும் கிறிஸ்து வாழ்கிறார் என்றும், மனித உடலின் முக்கியத்துவத்தையும், ஆன்மாவின் புனிதத்துவ அவசியத்தையும் பவுல் அடிகளார் கூறவார்.
எப்போது மனிதர் இம்மண்ணில் பிறக்கின்றாரோ அப்பொழுதே அவரது இறப்பும் பின் தொடர்கிறது. பிறப்பு என்று இருந்தால், இறப்பை கண்டிப்பாக சந்தித்தே ஆகவேண்டும். ஒருவர் கூறினார்,
பிறப்பு என்பது இறப்பின் தொடக்கம்.
இறப்பு என்பது பிறப்பின் முடிவு என்றார். இதனையே
வாழ்வு என்பது சாவின் தொடக்கம்
சாவு என்பது வாழ்வின் முடிவு- என்று கவிஞர் கண்ணதாசன் கூறுவார்.
இறந்துவிட்ட இப்பூமிக்கு எந்த இறைவன்
உயிரூட்டினானோ, அந்த இறைவன்
இறந்தவர்களுக்கும் உயிரூட்டக் கூடியவன் ஆவான் என்கிறது திருக்குறான். 41 / 19
வாழ்வைக் கொடுத்து அதை பயனுள்ளதாக மாற்றும் அதிகாரத்தை மனிதனுக்கு தந்த இறைவன், இறுதிநாளில் நமது செயலுக்கு உகந்த பலாபலனையும் தருகிறார். அந்த அர்த்தமுள்ள வாழ்வைப்பெற இறைவன்மீது முழுமையான நம்பிக்கை கொள்ள நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். எனவேதான் இயேசு, ‘உயிர்த்தெழ செய்பவரும், வாழ்வு தருபவரும் நானே, என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வர்’ என்கிறார்.
நமக்கு முன் இறந்தவர்கள், வாழ்வின் கண்ணாடிகள். இப்பொழுதே இறைவன் அடியில் வாழும் உயிர்க்கும் வாழ்வை உயிரோட்டத்துடன் வாழ்வோம்
No comments:
Post a Comment