வெற்றி உங்கள் கையில்
- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,
M.A., M.Ed; M. Sc; M. Phil; PGDCA, NET; Ph.D.,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்
நேர்மறை ஒரு வளர்பிறை
அது பிராய்லர் கோழி இல்லாத காலம். வீட்டில் வளர்ந்த வெள்ளைக்கோழியை விரட்டிப்புடிச்சு விருந்தாளிக்கு கொழம்பு வச்சுக் கொடுத்தாச்சு. கோழிக்கறி வயிற்றுக்கு உள்ளே போய் பேசுதாம் இப்படி,
“வெரட்டிப் புடிக்கையிலே என்ன தான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி?
நான் ஊர்வலம் போறேன் என்றுதான் சொல்லுச்சாம் வெள்ளக்கோழி.
கழுத்தறுக்கையில் என்ன தான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி?
நான் ஆபரேசன் பண்ணிக்கிறேன் என்று தான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி.
தோல உரிக்கையில் என்ன தான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி?
நான் சட்டைய கழட்டுறேன் என்றுதான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி.
எண்ணெயில் பொறிக்கையில் என்ன தான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி?
நான் எண்ணைய் தேச்சு குளிக்கிறேன் என்றுதான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி.
வயித்துக்குள்ள போகையில என்ன தான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி?
இந்த உலகம் ரொம்ப பெரிசுன்னு சொல்லிச்சாம் வெள்ளக்கோழி”.
இது ஒரு நாட்டுப்புறப் பாடல். இந்தப் பாடலைப் பாடியவர் திரு.புஷ்பவனம் குப்புசாமி.
பாட்டு நகைச்சுவையாக இப்படி இருந்தாலும் ஒரு வரியில்கூட அந்த கோழி தான் ஆபத்தான நிலையில் இருக்கிறேன் அல்லது வேதனைப்படுகிறேன் என்று சொல்லவில்லை. இதைத்தான் நேர்மறையான சிந்தனை (Pலிவிஷ்மிஷ்ஸe வீஜுஷ்ஐவஷ்ஐஆ) என்பர்.
நான் இரண்டு பூனைக்குட்டிகள் வளர்க்கிறேன். நடைப்பயிற்சி போகும்போது என்னோடு வரும். பிறகு ஓய்வு எடுக்கும். என் அறைக்கு நான் வரும்போது என்னோடு வரும். சாப்பிடும்போதும் வரும். என் அறைக்கு முன்பாக பலமணி நேரம் வெளியில் எனக்காக காத்திருக்கும். அதற்கு திண்பண்டங்கள் கொடுப்பேன். என் அறைக்கு முன்னால் காத்திருந்தால் திண்பண்டம் கிடைக்கும் என்ற நேர்மறையான உள்ளுணர்வு அதற்கு அதை பெற்றுக் கொடுக்கிறது. நம் வீட்டில் வளரும் வளர்ப்புப் பிராணிகள்கூட “கிடைக்கும், கிடைக்கும்” என்ற உள்ளுணர்வினால் காத்திருந்து உணவைப் பெற்றுக் கொள்கிறது. ஐந்தறிவு உள்ள பிராணிகள் இவ்வாறு நேர்மறை உள்ளுணர்வோடு வாழும்போது ஆறறிவு பெற்றுள்ள நாம் அதைவிட அதிகமான நேர்மறை எண்ணத்தை பெற்றிருக்க வேண்டும்.
எப்போதும் உங்களின் சிந்தனையில், பார்வையில், செயலில் நேர்மறை எண்ணங்கள் விதைக்கப்படட்டும். ஒருபோதும் எதிர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டாம். அவைகள் உங்களின் நல்லெண்ணங்களைத் திருடி வாழ்வில் மகிழ்ச்சியையும், வெற்றியையும் பறித்து விடுகிறது. நீங்கள் வலிமையானவராக எண்ணினால், வலிமையானவராக மாறலாம். வெற்றி வீரராக எண்ணினால் வெற்றி வீரராக மாறலாம். சக்தி வாய்ந்தவராக எண்ணினால் சக்தி வாய்ந்தவராக மாறலாம். மேன்மைமிக்கவராக எண்ணினால் மேன்மைமிக்கவராக மாறலாம். ஆகவே நேர்மறை எண்ணங்கள் நம்மை மிக நல்லவராக மாற்றி வெற்றியாளராக உருவாக்குகிறது,
எனது நண்பரின் குடும்பத்தில் நடந்த நிகழ்வை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் நண்பரின் மனைவி மருத்துவமனைக்குச் சென்று கர்ப்பப்பையை ஸ்கேன் செய்த போது அதில் கட்டி இருப்பதாக மருத்துவர் கண்டுபிடித்தார். அதை அறுவை சிகிச்சை செய்து எடுத்துவிட வேண்டும் என்றும் கூறினார். சரியாக ஒருவருடம் கழித்து மீண்டும் ஸ்கேன் செய்த பொழுது கட்டி கரைந்து போய் இல்லாமல் இருந்தது. குடும்பமே மகிழ்ச்சியால் துள்ளியது. நான் “எப்படி இப்படி பட்ட அதிசயம் நடந்தது?” என்று கேட்டேன். அதற்கு என் நண்பர் சொன்னார், “என் கட்டி ஒரு வருடத்தில் கரைந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று மனைவி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அதேபோல் கரைந்தும் விட்டது பாருங்கள். நேர்மறை எண்ணத்தினால் ஏற்பட்ட விளைவு இது. இது நேர்மறை எண்ணம் செய்த அதிசயம். நேர்மறை எண்ணம் என்பது ஒரு மந்திர விளக்கு. அந்த விளக்கிடம் நாம் எதை கேட்கின்றோமோ அவை எல்லாவற்றையும் அது கொடுக்கும். ஆகவே நாம் ஒவ்வொருவரும் நேர்மறையான எண்ணங்களை விதைத்து வெற்றியை அறுவடை செய்து வெற்றியாளர்களாக வலம்வருவோம்.
“ரோஜா செடியில் முட்கள் இருக்கின்றதே என்று வருத்தப்படலாம் அல்லது முட்களின் மத்தியில் ரோஜா மலர்கள் இருக்கின்றதே என்றும் மகிழ்ச்சியடையலாம்”- ஆபிரகாம் லிங்கன்.
No comments:
Post a Comment