திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு
17 - 12 - 2017
எசா 61: 1-2, 10-11; 1தெச 5: 16-24; யோவா 1: 6-8, 19 - 28;
திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறாகிய இன்று, அருள்வாக்குகள், திருமுழுக்கு யோவானைப் போல, நாமும் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் நிலையினை ஏற்றுக் கொண்டு வாழ அழைக்கின்றன.
சென்ற வாரம், திருமுழுக்கு யோவான் இயேசுவிற்காக எவ்வாறு பாலைவனத்தில், மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தார். எவ்வாறு வழியை தயார் செய்தார் என்ற கருத்து நம்முன் வைக்கப்பட்டது. இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவான் தன் நிலையைப் பற்றி சாட்சியம் அளித்து, அதே நேரத்தில், மக்களின் நடுவில் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயேசுவைச் சுட்டிக் காட்டுகின்றார்.
இயேசுவே, தான் யார் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று சீடர்களிடம் கேட்டு, தன்னைப் பற்றிய புரிதலை சீடர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (மத் 16: 13 ‡ 20). ஆனால் இங்கு, யூதர்கள் திருமுழுக்கு யோவானை, நீர் யார்? என்று கேட்க, யோவான் தன் நிலையை பணிவுடன் விளக்குவதை இன்றைய நற்செய்திப் பகுதியில் பார்க்கின்றோம். யோவான் நற்செய்தியில் யூதர்கள், இயேசுவின் எதிரிகளாகவே முன் நிற்கிறார்கள் (யோவா 5: 10-15,16-18; 7:1-13; 8: 48 - 52 -57; 9: 18 - 22; 10: 24-31,33; 11:8; 18:12,14,31,36,38; 19: 7-12,14; 31:38; 20: 19). அத்தகைய யூதர்கள் திருமுழுக்கு யோவானையும் சுற்றி வலைக்கின்றார்கள். எருசலேமிலுள்ள யூதர்கள் என்றும் (1:19), பரிசேயர் என்றும் (1:24) அவர்கள் விளக்கப் படுகிறார்கள். அவர்கள் ‘நீர் யார்?’ என்ற அடிப்படையான கேள்வியைக் கேட்கின்றார்கள், தான் மெசியா அல்ல என்றும், எலியா அல்லது இறைவாக்கினர் என்பவரும் நானல்ல என்கிறார்.
ஆண்டவருக்காக வழியை செம்மை யாக்குங்கள் என்று பாலைவனத்தில் ஒலிக்கும் ஒலி என்ற எசா 40:3 குறிப்பினைக் கூறி, தன்னைப் பற்றி பணிவாக விளக்குகிறார். (லூக் 3:15) இல் திருமுழுக்கு யோவானை, மெசியா என்றே மக்கள் கருதியதாக கூறப்பட்டுள்ளது. அத்தகைய நிலையில், தன்னை வழியைக் காட்டும் வெறும் ஒளி என்று விளக்குகிறார்.
வழி என்பது விவிலியத்தில் காணப்படும் ஒரு முக்கியமான கருத்துக் கோட்பாடு. கடவுளின் வழி என்றும் (இச 32:4; விப 18:25), ஆண்டவரின் வழி என்றும் (மாற் 1:3) இயேசுவே, தானே வழி என்றும் (யோவா 14:6), கிறிஸ்தவ மறை தனிவழி என்றும் (திப 9:2; 19: 9‡23) நெறி குறிப்புகளைப் பார்க்கிறோம். திருமுழுக்கு யோவான் இயேசுவின் வழிக்கு வழி செய்கிறார். தன்னை பாலைவனத்தில் ஒலிக்கும் ஒலி என பணிவாகக் கூறுகிறார்.
முதல் வாசகத்தில், இயேசு தன் பணியை ஆரம்பிக்கும்போது, நாசரேத்தூர் தொழுகைக் கூடத்தில் வாசித்த அப்பகுதி கொடுக்கப்பட்டுள்ளது (எசா 61). இதில், ‘அருள்பொழிவு செய்துள்ளார்’ என்ற வார்த்தை தனிப்பட்ட பொருள் கொண்டதாகும். அருள்பொழிவு என்பது இறைவன் செயல். அதனால் மக்களின் உள்ளம் ஒளிர்விக்கப்படுகிறது. இதன் துணைக் கொண்டு, மனிதர் இறைவனின் செயல், அதனால் மக்களின் உள்ளம் ஒளிர்விக்கப்படுகிறது. இதன் துணை கொண்டு, மனிதர் இறைவனின் வார்த்தையைக் கேட்டு, அதனை வாழ்வாக்கும் வல்லமையைப் பெறுகிறார்கள்.
திருமுழுக்கு யோவான் இயேசுவுக்கான வழியை தயார் செய்யும் பணியினை முழுமையாக உணர்ந்துக் கொண்டு அதற்காக தம்மையே அர்ப்பணிக்கிறார். பலர் அவர் பணியை ஏற்றுக் கொண்டனர். பலர் அவரை சந்தேகக் கண்கொண்டு பார்த்தனர். இறுதியில் அவர் தலையே துண்டிக்கப்படும் சாட்சிய வாழ்வுக்கு தன்னை உட்படுத்தினார்.
இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார், தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளை புறக்கணிக்க வேண்டாம் (1 தெச 5: 19-20) என்று தெசலோனிக்கருக்கு அறிவுறுத்துகிறார்.
No comments:
Post a Comment