பணிவு என்னும் இனிய பாதை
அருள்பணி. மகுழன்,
பூண்டி மாதா தியான மையம்
18. அனைத்தும் இறைவனின் கொடைகளே!
அநேகமாக அனைத்துக் கலாச்சாரங்களிலும் நன்றி விழா இருப்பதை நாம் காணலாம். அதாங்க நம் பொங்கல் விழா. நம் நாடு வெப்பம் மிகுந்த நாடு. எனவே மழைக்காலம், குளிர்காலம் முடிந்த பிறகு விவசாயம் நன்முறையில் நடைபெற்றதற்காக ஜனவரி மாதத்தில் பொங்கல் விழாவை விமரிசையாகக் கொண்டாடுகிறோம். அமெரிக்கா போன்ற குளிர் மிகுந்த நாடுகளில் குளிர்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நன்றிவிழாவை கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் நன்றிவிழா (
Thanksgiving Day) நவம்பர் மாதத்தில் வரும் 4 வது வியாழக்கிழமை ஆகும். அந்த விழாவை கொண்டாடும் போது அவர்கள் விருந்தில் கட்டாயம் ஓர் உணவு வகை இருக்கும். வான்கோழி இல்லாமல் நன்றி விழா இருக்காது. அதற்கு ஒரு காரணத்தை அவர்கள் சொல்கிறார்கள். அதாவது ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா சென்று குடியேறிய போது அவர்கள் உண்ணுவதற்கு பெரிதும் துணைபுரிந்தது காட்டு வான்கோழிகள் தானாம். எனவே அதற்கு ஒரு நன்றியாக நன்றி விழாவின் போது வான்கோழி கட்டாயம் இடம் பெறுகிறது.
நன்றி விழா உணவை உண்ணுவதற்கு முன்பு வழக்கமாக தொடக்க செபம் (Grace) செய்வது வழக்கம். அந்தக் குடும்பத்தில் அனைவரும் சாப்பிடுவதற்கு முன்பாக ஜான் என்ற 8 வயது சிறுபிள்ளை செபம் செய்ய சொல்லி பெரியவர்கள் சொன்னார்கள். சிறுவனுக்கு திடீரென எதுவும் மனதில் தோன்றவில்லை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தான். பிறகு சொன்னான். ‘ஆண்டவரே, என்னை இது போன்று ஒரு வான்கோழியாக படைக்காததற்காக உமக்கு நன்றி சொல்கிறேன். அல்லது நானும் இது போன்று இறந்திருப்பேன்’ என்று சொல்ல அனைவரும் சிரித்து விட்டனர். இறைவன் நமக்கு வழங்கியுள்ள முதன்மையான கொடை, முக்கியமான கொடை நம் வாழ்க்கை. வாழ்க்கை என்பது இறைவனின் இனிய அழைப்பு. இன்னொரு விதத்தில் பார்த்தால் வாழ்க்கை என்பது இறைவனின் இலவசக் கொடை. நாம் வாழ்க்கையைக் கொண்டாடும்போது அதனை பரிசாக வழங்கிய இறைவனையே கொண்டாடுகிறோம். நாம் வாழ்க்கையை சிறப்பிக்கும்போது அதனை வழங்கிய இறைவனையே பெருமைப்படுத்துகிறோம். நம் வாழ்க்கை மட்டுமல்ல, மற்றவர்கள் வாழ்க்கையும் இறைவனின் இனிய கொடைகளே! அவற்றை நாம் மதிக்கும் போது அதன் கொடையாளியாகிய இறைவனையே மகிமைப்படுத்துகிறோம். நமக்கு வாழ்க்கையை அளித்து அதனை பலரால், பல விதங்களில் சிறப்பாக்கிய இறைவனை நினைத்துப் பார்த்து அவருக்கு நன்றி சொல்வது நம் கடமையாகும். நன்றி என்னும் ராகம் இல்லாமல் உலகம் என்னும் பாடல் இனிமை பெறாது. நன்றி என்னும் வண்ணம் இல்லாமல் வாழ்க்கை என்னும் ஓவியம் நிறைவு பெறாது.
உங்களின் வாழ்க்கை வரவு செலவு அட்டவணையை (யழியிழிஐஉe றீஜுeeமி) கொஞ்சம் பார்ப்போமா? உங்கள் பிறப்பு தான் உங்களின் தொடக்க இருப்பு. (Balance Sheet) உங்களிடம் வந்து சேருபவை வரவு. உங்களிடம் இருந்து செல்பவை செலவு. உங்கள் இறப்பு இறுதி இருப்பு. உங்கள் நல்லப் பண்புகள் உங்களின் சொத்துக்கள். உங்களின் தீய பழக்க வழக்கங்கள் உங்களின் தேய்மானம். உங்கள் மகிழ்ச்சியே உங்களின் இலாபம். உங்கள் கவலைகளே உங்களின் நஷ்டம். உங்கள் நல் வாழ்வே உங்களின் மூலதனம். உங்கள் பணிவே நீங்கள் பெறுகின்ற வட்டி. உங்கள் ஆணவமே நீங்கள் செலுத்துகின்ற வட்டி. இறுதியில் நினைவில் கொள்ளுங்கள். இறைவனே உங்கள் தணிக்கையாளர் (Auditor).
உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு என்பதையும் கவனித்தீர்களா? 15 வயது வரையில் பாராட்டையும், பராமரிப்பையும் அதிகமாக பெறுவீர்கள். 15 வயது முதல் 25 வயது வரை எல்லோருடைய கவனத்தையும் உற்சாகப்படுத்துதலையும் பெறுவீர்கள். 25 வயது முதல் 35 வயது வரை குடும்ப மகிழ்ச்சியையும், குழந்தை மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். 35 வயது முதல் 45 வயது வரை உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த ஆசானாய் சிறந்த தலைவராய் (Hero) தெரிவீர்கள். 45 வயது முதல் 60 வயது வரை பொறுப்பின் சிகரமாய், தியாகத்தின் உருவமாய் திகழ்வீர்கள். 60 வயதிற்கு மேல் மீண்டும் குழந்தையாய் ஆனால் சிறந்த மாதிரியாக (Model) இருப்பீர்கள். எல்லா காலக்கட்டத்திலும் சில கஷ்டங்கள் இருக்கலாம். ஆனால் எல்லா வயதிலும் பல சிறப்புகளை கொண்டிருப்பீர்கள். முடி கருப்பாக இருந்தால் அதற்கு சில மரியாதைகள் உண்டு. ஆனால் முடி வெள்ளையாகும் போதும் சில மரியாதைகள் உண்டு. தலை வழக்கையாக இருந்தால் வணக்கம் சொல்ல மட்டும்தான் தோன்றும். ஆனால் சில முகங்களுக்கு தலை வழுக்கையாக இருந்தால் வணங்கி மகிழத் தோன்றும். எல்லா உருவங்களும், எல்லா வயதினரும், எல்லா நிறத்தினரும் சிறப்பு மிக்கவர்களே? நான் இளைஞனாக இருந்த போது கொஞ்சம் கலராக இருப்பேன். ஆனால் ஒல்லியாக இருப்பேன். இப்போது கலர் மங்கி விட்டது. ஆனால் சதை போட்டுவிட்டது. அந்தக் காலத்திலும் எனக்கு அன்பர்கள் இருந்தார்கள். இந்தக் காலத்திலும் எனக்கு அன்பர்கள் இருக்கிறார்கள்.
அன்பிற்கினியவர்களே! நாம் வாழ்வை நினைத்துப் பார்த்து மகிழ்வின் பாதையில் எப்போதும் அதை அமைத்துக்கொள்ள முன் வர வேண்டும். ஒவ்வொரு பகலும் இனிய நாளாக அமைய இயலாது. ஆனால் ஒவ்வொரு நாளிலும் சில இனிய தருணங்களை நாம் ஏற்படுத்தலாம். ஒரு கடைக்கு எழுதுப்பொருட்கள் வாங்குவதற்காக சென்றேன். பேசிக்கொண்டிருக்கும் போது கடைக்காரர் சொன்னார். சார் ஒவ்வொரு நாளும் சராசரியாக 200 பேர் என் கடைக்கு வருகிறார்கள். ஆனால் சராசரியாக இரண்டு பேராவது எனக்கு எரிச்சலூட்டும்படி நடந்து கொள்கிறார்கள். ஆனால் நான் அதனை பொருட்படுத்துவதில்லை. அந்த 198 பேரை நினைக்காமல் வெறும் 2 பேரை மனதில் கொள்வது முட்டாள்தனம் என்றார். ஒவ்வொரு நாளும் நாம் பணிவோடு இறைவனுக்கு நன்றி செலுத்தும்போது வாழ்க்கைக் கணக்கில் மகிழ்ச்சி என்னும் சொத்து அதிகமாகும். நாம் தாழ்ச்சியோடு பிறருடைய குறைகளை பெரிதுபடுத்தாமல் இனிய தருணங்களை மனதில் கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கைக் கணக்கில் வட்டியோடு நாம் பலன் பெறலாம்.
புனித அன்னை தெரசாவின் படத்தை போட்டு அதன் கீழே இந்த வசனங்கள் இருப்பதை நான் ஓரிரு இடங்களில் பார்த்திருக்கிறேன். ‘வாழ்வது ஒரு முறை, வாழ்த்தட்டும் தலைமுறை’ அந்த வார்த்தைகள் அவருக்கு நூறு சதவீதம் பொருந்தும். நாம் வாழ்க்கை என்னும் கொடையை பயன்படுத்தி இறைவனை மகிமைப்படுத்த புலரும் புத்தாண்டில் உறுதி எடுப்போமா? (தொடரும்)
No comments:
Post a Comment