Pages - Menu

Monday 4 December 2017

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு B

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு
03 - 12 - 2017

எசா 63: 16 - 17; 64: 1,3 - 8; 1 கொரி 1: 3-9;   மாற் 13: 33-38

தூங்காமை கல்வி துணிவுடைமை  இம்மூன்றும்
நீங்காமை நிலனாள் பலருக்கு  (குறள் 383)

‘விழித்திருக்கும் போதே விழியை பிடுங்குவது’ என்பர். பெரும் தலைவர்களுக்கு வரும் பாதுகாவலர்கள், கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு, சுற்றிலும் கவனித்துக் கொண்டேயிருப்பர். விழிப்பாயிருந்தால் ஆபத்து களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். கொடுக்கப்பட்ட பணிகளை நிறைவாகவும் சிறப்பாகவும் செய்யலாம்.

திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு இன்று, இறைவன் நம்மை சந்திக்கும் நேரம் நமக்குத் தெரியாத நிலையில் சோர்வுக்கும், சொகுசுக்கும் இடம் கொடுக்காது நம் சாட்சிய வாழ்வை தொடர்ந்து  கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் இன்றைய நற்செய்திப்பகுதி கூறுகிறது. நெடும் பயணம் செல்லவிருக்கும் ஒருவர் பணியாளர்களைப் பார்த்து  ‘விழிப்பாயிருந்து  உங்கள் பணியை செய்யுங்கள்’ என்று அறிவுறுத்தி செல்கிறார். எந்த நேரத்தில் அவர் வருவாரென்று தெரியாது. அவர் வரும்போது நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கக் கூடாது என்ற அறிவுரையுடன் முடியும் அந்த உவமையின் பொருளாக, இயேசுவும், ‘விழிப்பாயிருங்கள்’ என்று அறிவுறுத்துகிறார். விழிப்பாயிருங்கள் என்ற வார்த்தை நான்கு முறை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலருக்கு கிரகரி என்ற பெயர் உண்டு. விழித்திருங்கள் என்ற வார்த்தைக்கு பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை கிரகோரேயா (Gregoreo) என்பதாகும்.

‘மனதில சுருக்குனு இருந்தா தூக்கமே வராது’ என்பர். என் மகளுக்கு வேலை கிடைக்காத நிலையில் எனக்குத் தூக்கமே வரமாட்டேங்குது என்றார் ஒருவர். இறைவனுக்காக நம் பணிகளை செய்கிறோம் என்ற கருத்து நம் மனதில் நின்றால் விழிப்பாயிருக்கும் நிலை ஏற்படும். பொதுவாக தனது பணி என்றால் பொறுப்பாக செய்வார்கள். மற்றவர் பணி என்றால் ஏனோதானோ என்று செய்வர். அலுவலகங்களில் ஏதாவது சான்றிதழ் பெற வேண்டுமென்றால், பல காரணங்கள் கூறி உடனடியாக தரமாட்டார்கள். பணம் கொஞ்சம் கொடுத்து விட்டால் எல்லாம் விரைவாக நடக்கும்.

பத்து கன்னியர் உவமையும் (மத் 25: 1- 13) ‘விழிப்பாயிருங்கள் ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது’ (மத் 25:13) என்று விழிப்பாயிருந்து ஆண்டவருக்காக காத்திருக்கும் கருத்தை தெரிவிக்கிறது.

முதல் வாசகத்தில், ‘பாவியான மக்களை திருத்திட இறைவனே உதவி செய்ய வேண்டும்’ என்ற கருத்து இடம் பெறுகிறது. ‘ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை. உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமை சொத்தாகிய குலங்களை முன்னிட்டும் திரும்பி வாரும்... நாங்கள் களிமண். நீர் எங்கள் குயவன்’. (ஏசா 63: 16-17; 64:8)

இரண்டாம் வாசகத்தில் பவுல், கொரிந்து மக்களுக்கு இறைவன் அளித்துள்ள கொடைகளுக்காக நன்றி கூறுகின்றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காக காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை (1 கொரி 1:7).
   
மூன்று வயது பையனுக்கு பிறந்த நாள். அவரின் மாமா, ஒரு கையில் 500 ரூபாயை வைத்துக் கொண்டு, மற்றொரு கையில் தங்க மோதிரத்தை வைத்துக் கொண்டு, ஏதாவது ஒன்றை மட்டும் நீ எடுத்துக் கொள்ளலாம் என்றார். அப்பையன் விழிப்பாக, ‘மோதிரத்தை ரூபாய் நோட்டில் மடித்து ஒன்றாக கொடுங்கள்’ என்றான் விபரமான பையன்.
நிரந்தர விழிப்புணர்வு தான் நிரந்தர வளர்ச்சியை தரும்.                                  -  ஹோம்டோன் ஹிங்கிலி.

சுதந்திரத்தினை காப்பதில் நாம் விழிப்புணர்வுடன் இல்லை யயன்றால் பெரும்பான்மையானவரின் அதிகாரம் ஒரு சிலர் கைகளில் சென்றுவிடும். -  எவன்டெல் பிலிப்ஸ்

போர், அமைதி ஆகியவைகளின் விதைகள் மற்றவர் களிடத்தில் விதைக்கப்பட்டுள்ளன. எனவே விழிப்பாயி ருங்கள்.  - கிரிபோர்ட் கோகன்

No comments:

Post a Comment

Ads Inside Post