பொதுக்காலம் 2-ஆம் ஞாயிறு
14 - 01 - 2018
1 சாமு 3: 3, 10-19; 1கொரி 6: 13-15; 17- 20; யோவா 1: 35 - 42;
தேடுங்கள் கிடைக்கும் என்றார் இயேசு (மத் 7:7).
‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று ஒளவையும் கூறுகிறார். நடைமுறை வாழ்க்கையிலும், நாம் தேடலில்தான் வாழ்கிறோம். நல்ல வேலைக்காக தேடுகிறோம். நல்ல வரனுக்காக தேடுகிறோம். நல்ல வீட்டிற்காக தேடுகிறோம்.
இன்றைய நற்செய்திப் பகுதியில் இயேசுவை சிலர் தேடுகிறார்கள். அதனால் இயேசுவை கண்டுக்கொள்கிறார்கள். கண்டுகொள்ளலின் தொடர்ச்சியாக அவரோடு தங்குகிறார்கள். தாங்கள் பெற்ற இந்த காணலின் அனுபவத்தை மற்றவரும் காண செய்கிறார்கள்.
திருமுழுக்கு யோவான், திருமுழுக்கு யோவானின் சீடருக்கு ‘இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி’ என்று இயேசுவை அடையாளம் காட்டுகிறார். திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இருவர் இயேசுவை பின்தொடர்கின்றனர். இயேசு, அவர்களைப் பார்த்து என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்கிறார். தாங்கள் தேடியதை கண்டுகொண்டு விட்டோம் என்று சொல்லாமல் சொல்லி, தாங்கள் கண்டடைந்தவர் தங்களின் ஆசிரியர் (ரபி) என்று ஏற்றுக் கொண்டு, உங்களோடு தங்க விரும்புகிறோம் என்று எங்கே தங்கியிருக்கிறீர்? என்று கேட்கிறார்கள். யோவான் நற்செய்தியில் மெனோ (னிeஐலி) என்ற வார்த்தை தனித்த பொருள் கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ‘இருத்தல்’ என்னும் ஆழ்ந்த பொருளைத் தரும். உதாரணமாக யோவா 14:10 இல் ‘நான் தந்தையினுள்ளம் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா?’ என்ற வாக்கியத்தில் குறிப்பிடப்படும் ‘இருத்தல்’ என்ற வார்த்தைதான் தங்கியிருத்தல் என்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தேடியவர் கண்டார்கள், அதிலே ஒன்றானார்கள். இந்த ஒப்பற்ற அனுபவத்தை இயேசுவை பின் சென்ற திருமுழுக்கு யோவானின் இரண்டு சீடர்களில் ஒருவர் அந்திரேயா, தன் சகோதரர் சீமோனை, நாங்கள் மெசியாவை (கடவுளால் அருள் பொழிவு பெற்றவரை) கண்டு கொண்டு விட்டோம். நீயும் வந்து கண்டு அந்த அற்புத அனுபவத்தில் இணைந்துக் கொள் என்று அழைத்து வருகிறார். இயேசுவும் அவரை வரவேற்று அவருக்கு ‘பாறை’ என்று பொருள்படும் ‘கேபா’ என்று அழைக்கப் படுவாய் என்கிறார்.
முதல் வாசகத்தில் சிறுவன் சாமுவேல் கடவுளால் அழைக்கப்படுகிறார். முதலில் சாமுவேலால் அது கடவுளின் அழைத்தல் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. குரு ஏலி அவனுக்கு கற்றுக் கொடுக்கிறார். ‘ஆண்டவரே பேசும் அடியான் கேட்கிறேன்’ என்று பதில் மொழி கூற கற்று கொடுக்கிறார்.
இறைவன் தரும் அழைப்பினைக் கண்டுக் கொள்பவர்கள் விண்ணகத்தை மண்ணகத்திற்கு அழைத்து வருபவர்கள்.
No comments:
Post a Comment