இறைவனின் அன்னையாகிய துVய கன்னி மரியா
புத்தாண்டு விழா ஜனவரி - 1, 2018
எண் 6:22-27, கலா 4,4-7, லுVக் 2,16-21
அருட்பணி. பு. சிரில் ரிசர்ட் கிருபாகரன்
இன்று அன்னையாம் திருச்சபை கன்னிமரியாள் இறைவனின் தாய் என்கின்ற மறைப்பொருளையும், புத்தாண்டு தினத்தையும் சிறப்பிக்கின்றது. கன்னி மரியாள் இறைவனின் தாய் என்கின்ற நம்பிக்கைக் கோட்பாடு கி.பி.451 இல் எபேசு பொதுச்சங்கத்தில் கிறிஸ்துவின் மனித இயல்பிலும், இறையியல்பிலும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை களைவதற்காக கொடுக்கப்பட்டது. இந்த நம்பிக்கைக் கோட்பாட்டின் வழியாக தப்பறை கொள்கைகளை அகற்றி திருச்சபையின் வாழ்வை வளமையாக்கிய தினம் இன்று. ‘இலையுதிர் காலம் என்பது மரணமல்ல. இன்னொரு தயாரிப்புக்கான தொடக்கம். அஸ்தமனம் என்பது மறைவு அல்ல. இன்னொரு உதயத்திற்கான பதுக்கம்,’ என்ற வைரமுத்துவின் வார்த்தைகளைப் போல, இலையுதிர் காலம் போலவும், அஸ்தமனம் போலவும் 2017 ஆம் ஆண்டில் நடந்த நன்மை, தீமை அனைத்தும் மறைந்து, புதிதாக துளிர்த்துள்ள, புதிய உதயமாகிய 2018 ஆம் ஆண்டில் இறைவன் நமக்குக் கொடுக்கும் இன்னொரு வாய்ப்பை இரு கரத்தோடு வரவேற்போம்.
ஏவாள் என்கின்ற முதல் பெண்ணின் வழியாக பாவம் ஆட்சி செய்யத் தொடங்கினாலும், அன்னை மரியாள் என்கின்ற புதிய ஏவாள் வழியாக அருள் ஆட்சி செய்ய கடவுள் வழி வகுத்தார். இத்தகைய அளப்பெரிய அன்னையின் உதவியினால்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கலா 4.7இல் வாசிப்பது போல ‘நாம் அனைவரும் கடவுளுக்குரிய பிள்ளைகள் என்கின்ற அருள்நிலையை பெறுகிறோம்.’இத்தகைய பிள்ளைகளின் வாழ்வு எப்பொழுதும் பிறருக்கு வாழ்வு கொடுகின்ற, வெளிச்சம் கொடுக்கின்ற அற்புத ஜோதியாக மிளிர வேண்டும். நம் வாழ்நாளில் பல புத்தாண்டு கொண்டாட்டங்கள் வந்து போகலாம். பல சூளுரைகளுடனும், உறுதிமொழி களுடனும், உத்வேகத்துடனும் ஆரம்பிக்கும் புதுவருடம் சில ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் தளரா மனத்துடன் ஓடினோம் என்கின்ற எண்ணம் மேலோங்கும் பொழுதுதான் வெற்றி பரிசை சுவைக்க முடியும்.
வாழ்க்கையில் மிக மோசமான சூழ்நிலைகளில் பல வெற்றியாளர்கள் சிக்கித் தவித்திருக்கின்றார்கள். அவற்றைத் தங்களுடைய அசாத்திய மனப்பாங்காலும், திடமான தன்னம்பிக் கையாலும் அயராத முயற்சியினாலும் தோல்விகளை முறியடித்து தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றியை சுவைத்திருக்கிறார்கள். நிறைய சிந்தனை செய்து, குறைவாகப் பேசி, துல்லியமாகத் திட்டமிட்டு, கவனத்தோடு செயல்படுகின்ற மனப்பக்குவம் நமக்கு வேண்டும். தமிழருவி மணியன் அழகாக சொல்வார், ‘மரணமில்லா பெருவாழ்வு, நோயின் நிழல், தீண்டாத உடல் நலம், கட்டுப் பாடற்ற சுதந்திரம், துன்பமில்லாத இன்பம் முரணும் மோதலுமற்ற சமுகச்சூழல் அமைய வேண்டும் என்பது எல்லா மனிதர்களின் ஆசை. நினைத்தபடி எல்லாம் நடந்துவிட்டால் அதற்கு பெயர் வாழ்க்கை இல்லை.’ எந்த சூழ்நிலையிலும் நிறைவான மனம், கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை, பிறர் நலம் பேணும் செயல்கள் இவையே நம் சந்தோசத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன. பூத்திருக்கும் புத்தாண்டில் புதிய முயற்சிகள், புதிய உறுதிமொழிகள், புதிய வாழ்க்கை, புதிய பயணம் மேற்கொள்ள வாழ்த்துகிறேன்.
No comments:
Post a Comment