Pages - Menu

Tuesday 5 December 2017

இயேசு, மனித பிறப்பில் உயிரானார், உறவானார்.

இயேசு, மனித பிறப்பில் உயிரானார், உறவானார்.

சகோ. விமலி FHIM. இதயா கல்லுVரி, குடந்தை

வானதூதர்கள் வாழ்த்துப் பாட
வாஞ்சையோடு வந்த நிலவே
எளிய வாழ்வை எடுத்தியம்ப
இடையர்கள் இதயம் நனைய
இனம்புரியா இன்பம் அடைய
மரியின் மடியில் தவழ்ந்தாயே
மாசேதும் இன்றி மிளிர்ந்தாயே

மகிழ்ச்சி பிறக்க, அமைதி பிறக்க, மனித இதயங்களின் இயேசு ஆண்டவர் நமது இல்லக் கோவிலுக்குள் பிறக்கப்போகிறேன் என்றார். வலிமை பிறக்கும் ‡ இறைவலிமை பிறக்கும் (எசா 9:6) அருள் பிறக்கும் ‡ மீட்பரின் அருள் பிறக்கும் என்று எத்தனை ஆண்டுகளாக நாம் இயேசு பிறப்பு விழாவைக் கொண்டாடி வருகிறோம். உலகில் பிறப்புகள் அத்தனையும் இறைவனின் கை வண்ணமாகத் திகழ்கின்றன. சிலரின் பிறப்பு  உலகிற்கு அழிவைத் தருகிறது. எனவேதான் நாம் சிலரைப் பார்த்து, ‘இம்மனிதர்  பிறவாமல் இருந்தால் நலமாய் இருக்குமே’ என்று சொல்கின்றோம் (கிட்லர், யூதாஸ், இன்றைய அரசியல் தலைவர்கள்).  சிலரது  பிறப்பு இவ்வுலகில் புதிய சகாப்தத்தை உருவாக்கியதால் ( ஆபிரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா, புனித அன்னை தெரசா, அருளாளர் இராணி மரியா...) நாம்   “இவர்களைப் போல் எல்லோரும் இருந்தால் இவ்வுலகம் எவ்வளவு நலமாக இருந்திருக்கும்” என்றும் சொல்கிறோம். ஆக, மனிதரின் பிறப்பு அவர்கள் வாழும் வாழ்வின் அர்த்தத்தைக் கொண்டுதான் புகழவோ அல்லது இகழவோப்படுகிறது. இவ்வுலகில் கடவுளாக வணங்கப்படுகிறவர்களில், இயேசு பெருமானின் பிறப்பு மட்டுமே மனித  குலம் முழுவதும் அமைதியின் அரசரை எதிர்நோக்கியிருந்தது என்று விவிலியம் சுட்டுகிறது.

  உயிரானார்

காலம் காலமாய் இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்தில் உழல்வதை அறிந்த  இறைவன் அவர்களின் கூக்குரலுக்குச் செவிகொடுத்து, மனித உருவில் தோன்றினார் (பிலி 2:7).  நன்மையே நிறைந்த இறைவன் பாவிகளின் உடல் எடுத்தார். நம்மைப் போலவே வாழ்ந்தார். எனவே அவருக்கு மனிதரின் பசி தெரியும். மனிதர்களின் வேதனையும் துன்பமும் தெரியும். அன்புள்ள மனிதராக எப்போதும் வாழ்வது கடினம் என்று நினைக்கின்ற நமக்கு, அவர் வாழ்ந்து காட்டினார். பாவமில்லாமல் பிறந்து, பாவம் செய்யாமலே  வாழ்ந்து, பரிவோடு மனித உயிரானவர். உயிரை இழந்தவர்களுக்கு உயிரளித்தார். (லாசர், நயின் நகர் கைம்பெண் மகன்). இவ்வாறு மனிதர்களின் மாண்பை உயர்த்தினார். அனைத்திலும் நன்மையையே நிறைந்து அனைத்திலும் முழுமையாய் விளங்கிய கடவுள், மனித உயிரெடுப்பது இவ்வுலக மக்கள் அனைவரின் சிறப்பே. அவர்  மண்ணில் மனிதராக  உயிரெடுத்தது மனித குலத்திற்குப் பெருமை  சேர்த்தது.

 உணவானார்

முதல் ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் தங்களின் விழாக்காலங்களில் சிறப்பான உணவை நண்பர்களுக்கும், விருந்தினர்களுக்கும் மகிழ்வோடு பகிர்ந்து கொண்டாடுவதை விவிலிய வரலாறு நமக்கு எடுத்தியம்புகிறது. உணவு இஸ்ரயேல் மக்களின் பழக்க வழக்கத்தையும், விடுதலை வாழ்வையும் எடுத்தியம்புகிறது. இச்சூழலில் இயேசுவின் பிறப்பு இஸ்ரயேல் குலத்தில் நிகழ்ந்தேறுகிறது. அது மாட்டுக் கொட்டகையில் நிகழ்கிறது. மீட்பின் வரலாற்று நாயகனின் பிறப்பு விலங்குகளின் மத்தியில் நிகழ்கிறது (லூக் 2:12). ஆடு மாடுகள் தங்களுக்கான இரையை உட்கொள்ளும் தீவனத் தொட்டியில் இயேசு கிடத்தப்படுகின்றார். அவர் வாழ்ந்தபோதும் மக்களுக்கு உணவை வழங்கி பசியாற்றியிருக்கின்றார். இறைவார்த்தை கேட்க வந்த மக்கள் திரும்பிச் செல்லுகின்றபோது பசியோடு செல்வார்களே என்று அவர்கள் மீது பரிவு கொண்டு உணவு வழங்கினார் என்று நற்செய்தி நூல்கள் சுட்டிக் காட்டுகின்றன. அவர் ஆன்மீகப் பசியையும் ஆற்றினார். உடல் பசியையும் ஆற்றினார். இவ்வாறு எல்லோருக்கும் உணவானார். “மரம் கனியால் அறியப்படுவது போல ஓர் ஆள் அவருடைய செயல்களால் விளங்குவார்”. நல்ல செயல் எதுவும் வீணாகாது. நமது வாழ்வில் மனித நேயச் செயல்களால் பிறரின் வாழ்வு சிறப்படைய வேண்டும். இந்தியாவில் 30 கோடி மக்கள் ஒருவேளை உணவில்லாமல் அன்றாடம் உறங்கச் செல்கிறார்கள் என்பது தெரிவதில்லை. உடல் பசி கொண்டவர்களுக்கு உடல்பசியைப் போக்கும் கருவியாகவும், சாதியக் கொடுமைகளை அனுபவிக்கும் விளிம்புநிலை மக்களுக்கு விடுதலை பசி போக்கும் கருவியாகவும், உரிமைக்காகப் போராடும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிமை வழங்கும் கருவியாகவும், இயேசுவின் பிறப்பு என்ற இவ்வுணவு அமைய வேண்டும். எனவே உணவான இயேசுவை நம்பிக்கையையும், அமைதியையும், விடுதலையையும் வழங்கும் உணவாகப் பகிர்வோம். அப்போது இவ்வுலகில் இறைவன் பிறர் பசிப்போக்கும் உணவாவார்.

 உறவானார்

வரலாற்றின் தொடக்க காலத்தில் வலியோர் சிந்தனை ஓங்கிய காலக்கட்டத்தில் இயேசுவின் பிறப்பு, உறவும், உரிமையும், நீதியும் இல்லாமல் தவித்த மக்களுக்கு இயேசுவின் பிறப்பு நம்பிக்கையைக் கொடுத்தது. காரணம் அவரின் பிறப்பைக் கண்டு அரசர்களும், அரசியல் தலைவர்களும் அஞ்சினார்கள். அச்சூழலே ஒதுக்கப்பட்ட மக்களுக்கு விடியலாக இருந்தது. “எங்கள் சார்பாக எவரும் இல்லையே” என்று வாழ்வு கசந்து இருந்த  மக்களுக்கு அவரின்  பிறப்பு புதிய  உத்வேகத்தைக் கொடுத்தது. பாவிகளோடும், ஏழைகளோடும் உறவானார். யாரை உலகம் தேவையற்றவர்கள் என்று ஒதுக்கியதோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கக் கடவுளின் பிறப்பு, அவர் மகன் இயேசுவில் நிகழ்ந்தேறியது. அது உறவை முன்னிலைப்படுத்தியது. கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு ஒற்றுமையைத் தர வேண்டும். முழுமையான உறவு மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும். நமது செயல்கள் உறவை உருவாக்க வேண்டும். பழைய உறவுகளைப் புதுப்பிக்க வேண்டும். பிளவுகளில் இருக்கும் உறவுகள் சரிசெய்யப்பட வேண்டும். அப்போது கிறிஸ்துவின் பிறப்பு இவ்வுலகிலும், நமது சமூகத்திலும், இல்லத்திலும் சிறப்பானதாக அமையும்.

மானிட வரலாறு முழுவதும் கடவுள் உடனிருப்பவராக, நெருக்கமானவராக, அருள்பவராக, தூயவராக, இரக்கமுடையவராக எப்பொழுதும் இருந்து வருகிறார். அந்த இயேசுவை நம் வாழ்விலே உள்ளத்திலே, இல்லத்திலே ஏற்கும்போதும் நம்முடைய வாழ்வும் மகிழ்ச்சியால் துள்ளும். அன்னை மரியா இயேசுவை ஈன்றெடுத்ததைப்போல, இயேசுவைப் பிறருக்கு ஒவ்வொருவரும் நமது மனித வாழ்வில் இப்புதிய (2018) ஆண்டில் பிறருக்கு அன்பின் உயிராய், உணவாய், உறவாகி நம்பிக்கையின் உரைவிடமாக இருப்போம்.

முடிவாக

மருத்துவமனைகளிலும், முதியோர் இல்லங்களிலும், அனாதை இல்லங்களிலும், பாலியல் பலவினமானவர்களிலும், நோயாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோரிலும், சிறப்புப் பள்ளிகளிலும், சிறைச்சாலைகளிலும் ஏராளமான மக்கள் அன்பிற்காகத் தவிக்கின்றார்கள். மனிதரின் மாண்பை உயர்த்த அவர்களை அரவணைப்போம். உரையாட, கவலைகளை கண்ணீர்களைப் பகிர்ந்து கொள்ள, ஆறுதல் கூற மனிதர்கள் இல்லையே என்று ஏங்குகிறார்கள். அவர்களின் வாழ்வில் நாம் நம்பிக்கை ஒளியேற்றுகின்ற போது, அம்மக்கள் புது உயிர்பெறுகின்றார்கள். “நல்ல வார்த்தைகளால் நல்ல உறவு மாற்றங்களையும் ஏற்படுத்த முடியும்”. குழந்தை இயேசுவின் வழியாய் இவ்வாண்டு ஆண்டவரின் அன்பு, உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் என்றும் தங்குவதாக.

No comments:

Post a Comment

Ads Inside Post