திருவருகைக் காலம் இரண்டாம் வாரம்
10 - 12 - 2017
எசா 40: 1-5, 9-1 1, 2 பேது 3: 8 - 14; மாற் 1: 1-8
பெரிய அரசியல் தலைவர்கள் ஓர் இடத்திற்கு செல்கிறார்கள் என்றால் பல மாதங்களுக்கு முன்பே உளவுத்துறை மற்றும் காவல்துறை, வருவாய் துறை போன்றோர், அவ்விடத்தைப் பார்வையிட்டு, தலைவரின் வருகைக்குத் தயார் செய்வார்கள். இயேசுவும் தான் செல்ல விருந்த இடங்களுக்கு, தன் சீடர்களை அனுப்பி வைக்கிறார் என்று பார்க்கிறோம். ‘தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய் சேர்ந்தார்கள்’ (லூக் 9:52) .
இயேசுவின் முன்னோடியாய் திருமுழுக்கு யோவான், இறைவனால் அனுப்பப்படுகிறார். இயேசுவும், திருமுழுக்கு யோவானும் அவரவர் தாயின் வயிற்றில் இருக்கும் போதே சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இன்றைய நற்செய்திப் பகுதியில் பாலைவனத்தில் திருமுழுக்கு யோவானின் பணியைப் பற்றி பார்க்கிறோம். ஏசாய நூலில் எழுதியுள்ளபடி, ‘ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்வார்’.... என்பது (விப 23:20) (மலா3: 1) (ஏசா 40:3) ஆகிய குறிப்புகளின் தொகுப்பாகக் காணப்படுகிறது. பாவ மன்னிப்படைய மனமாறி திருமுழுக்குப் பெறுங்கள் என்று திருமுழுக்கு யோவான் போதிக்கின்றார். ‘யூதேயாவில் அனைவரும், எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்’ (மாற் 1:5) என்று கூறப்பட்டுள்ளது. ‘இதோ எனக்குப் பின்வருகிறவரின் மிதியடி வாரை அவிழ்க்கக் கூட தகுதியற்றவன்’ என்று தன் நிலையை பணிவோடு கூறுகிறார். ‘எனக்கு பின்னால் வருகிறவர் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்’ என்கிறார். திருமுழுக்கின் பொருள் என்னவென்றால், ‘என்னை மாற்றிக் கொள்ள முன் வருகிறேன் என்பதும் அதே நேரத்தில் இறைவன் என் பாவங்களை மன்னிக்க முன் வருகிறார்’ என்பதாகும். முதல் வாசகத்தில் பாபிலோனிய அடிமை தனத்தினால் மனம் ஒடிந்து போயிருந்த மக்களுக்கு நம்பிக்கையான வார்த்தைகளை ஏசாயா கூறுகிறார். ‘கனிமொழி கூறுங்கள் என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள். புதிய வழியை தயார் செய்யுங்கள். ஆண்டவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய வருகின்றார். ஆயனைப் போல் தம் மந்தையை மேய்ப்பார்’.
ஆக ஒரு பக்கம் நமது மனமாற்றம், இறைவனை நெருங்கி செல்வது, மற்றொரு பக்கம், கடவுள் நம்மை நெருங்கி வருவது. இந்த அனுபவங்கள் இன்றைய வாசகங்களால் எடுத்துச் சொல்லப்படு கின்றன.
இந்த அனுபவம்தான் திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரத்திலும் நம்மிடம் இடம் பெற வேண்டும். மனமாற்றத்தினால் கடவுளின் ஆற்றலினுள் நாம் நுழைகிறோம். மனமாற்றத்தின் இனிமையை பலர் உணராது இருக்கின்றனர். மதுபானங்களின் விலையை அரசு அண்மையில் உயர்த்திய போது, குடிமகன்கள் வேதனைப்பட்டார்கள். ‘எங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை. எங்களுக்காக பேச யாரும் இல்லை’ என்று புலம்பினர்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில், பேதுரு, ‘அவர் உங்களை மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள்’ என்று அறிவுரை வழங்குகிறார்.
இத்திருவகைக் காலத்தில், நம்மை இன்னும் தூய்மையாக்க முயற்சி செய்வோம். நம்மிடமுள்ள பள்ளத்தாக்குகள், குன்றுகள், கோணலானவை, கரடுமுரடானவை ஆகியவைகளை சீர் செய்வோம். வாகனத்தில் ஒருபாகம் கெட்டுப் போனாலும் வாகனம் ஓடாது. அதேபோல சிறு குறைகளும் இறைவனின் உறவை நிறைவு செய்யாது.
No comments:
Post a Comment