ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா
07 - 01 - 2018
Fr. M.A. சூசைமாணிக்கம், திரு இருதய குருமடம்.
எசா 60 : 1-6; எபே 3: 2- 3, 5-6; மத் 2: 1 - 12;
ஒரு கிராமவாசி ஒரு முனிவரிடம் சென்று, இறைவனை அடைய என்ன வழி? என்று கேட்டார். அதற்கு முனிவர், இடைவிடாமல் தேடு என்றார். கேட்டவன் ஒரு சாதாரண மீனவன், எழுத்தறிவு, படிப்பறிவு மற்றும் உலக ஞானம் இல்லாதவன். அப்பாவி என்று கூட சொல்லலாம். இதைப்பற்றி அந்த கிராமவாசி மீண்டும் முனிவரிடம் கேட்டபோது, திணறி திணறித் தேடு என்ற பதில் கிடைத்தது. கிராமவாசிக்கு ஒன்றுமே புரியவில்லை. திணறி திணறி எப்படி தேடுவது என்றான். முனிவர் அவனை நதிக்கரையிலுள்ள படியில் இறங்கச் சொல்லி, தனது இரு கைகளாலும் அவனை நீரில் அமுக்கிப் பிடித்தார். பின் கையை விட்டார். இப்படித்தான் தேடவேண்டும் என்று சொல்லி, நடையைக் கட்டினார்.
நாட்கள் உருண்டோடின. அவனது தேடல் மிக வேகமாக இருந்தது. இறைவனையும் கண்டான். மகிழ்ந்தான். தனது தேடலின் விளைவாக கிடைத்த தெய்வதரிசனம் பற்றி சொல்ல முனிவரை தேடிச் சென்று சொன்னான். இதைக் கேட்ட துறவி உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? நம்மைப்போன்ற சாதாராண மனிதர்களுக்கெல்லாம் கடவுள், அவ்வளவு சுலபத்தில் காட்சி தந்துவிடமாட்டார். அதை முதலில் புரிந்துகொள் என்றார்.
ஆன்மீகவாதிகளின் ஆன்மீக தேடலின் இலட்சணம் இதுதான். எனது தெய்வீகத்தின் வெளிப்பாட்டை சுட்டிக்காட்டும் திருக்காட்சி விழாவை திருச்சபைக் கொண்டாடுகிறது. கீழ்த்திசை ஞானிகள் மூவர் தங்களின் தேடலாக இறைமகன் இயேசுவைக் கண்டு கொள்கின்றனர். பிற இனத்தாரின் பிரதிநிதிகளாக இந்த மூன்று ஞானிகளின் வருகை அமைந்தது. பிறந்த மண்ணில் ஞானிகள், அரசர்கள், குடிமக்கள் என எவ்வளவோ பேர் இருந்தும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத தெய்வ தரிசனம் ஊர், பெயர் தெரியாத ஞானிகள் மூவருக்கு கிடைக்கின்றது.
மெசியாவைக் காண்பதே வாழ்வின் நிறைவு என்று நினைத்த இந்த மூன்று அரசர்களின் தேடலில் ஏரோதுடைய தேடல் வித்தியாசமானது. யூதர்களுடைய அரசன் பிறந்திருக்கின்றார் என்ற செய்தியை கேட்டு மனக்கலக்கம் அடைந்த ஏரோதும் இயேசுவைக் காணத் துடிக்கின்றான். இது இவனுடைய அன்பின் தேடல் அல்ல. மெசியாவைக் கொல்ல வேண்டும் என்ற நயவஞ்சகத் தேடல். தனது ஆட்சிக்கு போட்டி வந்துவிட்டது. சுயநலத்தோடு மக்களை சுரண்டி வாழ இனி வாழ முடியாது என்ற தீய சிந்தனையோடு ஏரோது கலக்கம் அடைகிறான்.
இறைவனின் திட்டத்தின்படி, வாழ்வின் நிலையறியாது, இருளாகிய பாவத்தில் வீழ்ந்து உலன்று கொண்டிருக்கும் மனிதர்களை காக்க, மனித அவதாரம் எடுத்த மெசியாவின் இறைவெளிப்பாடு தீயவனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் விண்மீன் மறைந்து போனது. இந்நிகழ்வு தீமையைக் கண்டு ஒவ்வொரு மனிதனும் விலக வேண்டும் என்ற அடையாளத்தைக் குறிக்கின்றது. நன்மைகளுக்கு தீமை வழிவிட்டது. மூன்று அரசர்கள் மெசியாவைக் கண்டனர். மகிழ்ச்சி கொண்டனர். அவர்கள் தேடிய மெசியா தனிப்பட்ட இனத்துக்கோ, மதத்திற்கோ, அமைப்பிற்கோ உரியவர் அல்ல. இவ்வுலகத்திற்கே உரித்தானவர். மெசியாவின் பிறப்பு எல்லோருக்கும் சொந்தமானது என்பதை ஞானிகளின் வருகை குறித்துக் காட்டுகிறது.
புலர்ந்திருக்கின்ற புதிய ஆண்டில் பிறந்திருக்கின்ற மெசியாவை, நம்மோடு வாழும் சக மனிதர்களில் தினம் கண்டுகொள்ளும் தேடலில் இறங்குவோம்.
No comments:
Post a Comment