Pages - Menu

Wednesday, 4 May 2016

இறை இரக்கத்தின் அரசியும், மே மாத வணக்கமும்

இறை இரக்கத்தின் அரசியும், மே மாத வணக்கமும்

-  அருட்தந்தை அ. பிரான்சிஸ் அடிகளார், பாபநாசம்

மே மாதம் மாதாவின் வணக்க மாதம். இந்த மாதத்தின் எல்லா நாட்களிலும் இறை அன்னைக்கு தனி வணக்க வழிபாடு செய்கின்றோம். மே மாத முதல் நாள் தொழிலாளரான புனித வளனார் நினைவு கூறப்படுகின்றார். அன்னை மரியாவின் கணவரும், இயேசுவின் வளர்ப்புத் தந்தையுமான இவர் இல்லத்தலைவர்களுக்கு முன்மாதிரியாகவும், தந்தையர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றார். அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் என்பதன் அர்த்தம் திருக்குடும்பத்தில் விளங்கியது.

இத்தகு மாண்புமிக்க புனித வளனாரின் விழாத் தொடங்கி, அன்னை மரியா எலிசபெத்தம்மாளைச் சந்தித்த விழா வரையிலான 31 நாட்களும் மாதாவின் வணக்க நாட்களாகத் தொடக்க  காலம் தொட்டே அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் அழகின் முழுமையான அன்னை மரியாவின் திருச்சுரூபத்தை அலங்கரித்து அழகு பார்ப்பார்கள். பல வண்ண மலர்களைக் கொண்டு புத்தம் புது கோணத்தில், ஒவ்வொரு நாளும் அன்னையின் புதுமைகளும், அன்றன்று செய்யக் கூடிய புனிதச் செயல்பாடுகளும் வாசிக்கப்படும். இவையயல்லாம், இறைமக்கள் அன்னையின் பாதையில் நடந்து, இறைமகன் இயேசுவின் சீடத்துவத்தில் இரண்டறக் கலந்திட  உதவிடும் வழிபாட்டு செயல்களாகும்.

தாய் என்பவள் யார்? தன்னையே தருபவள் தாய். அவளின் இரத்தம்தான் நம் ஒவ்வொருவரிடமும் ஓடிக்கொண்டிருக்கிறது. அம்மா என்ற மூன்றெழுத்தினுக்கு அதிசய சக்தி  உண்டு.. தாயின் மடியில் தலைவைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை என்கிறது ஒரு பாடல். நாம் மனம் கலங்கி நிற்கின்ற வேளையிலும் மனதின் பாரத்தைக் குறைத்து நல்ல ஆலோசனை வழங்கி கோணலானவற்றைச் செம்மைப்படுத்தி வாழ்க்கையின் சறுக்கலகளில் சரிந்து விழாமல் நம்மை நிலை நிறுத்த  உதவுபவர் தாய். 

இறையாட்சியின் தாய் :

அவர் (இயேசு) பெரியவராயிருப்பார், உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அருள்வார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது (லூக் 1 : 32 - 33). கபிரியேல் வானதூதரின் இந்தச் செய்தியின் மூலம் இயேசு மண்ணுலகில் கொணர இருந்த இறையாட்சியின் தாயாக மரியா உயர்த்தப்படுகின்றார்.

மரியாவின் மகன் என்றும் நிலைத்திருக்கும் ஓர் அரசின் மன்னவர் என்றால் அவருடைய தாய் அரசரின் அன்னையல்லவா! டாக்டர் மாற்கு மிரவல் என்னும் இறையியலாரின் கூற்றுப்படி,  ‘இஸ்ரயேலரின் மன்னர்கள் பல மனைவியரைக் கொண்டிருந்தனர். இவர்களை விட, மன்னர்களின் அன்னையரே அரசியராக அமர்த்தப்பட்டனர். ஏனென்றால் தாய்மைப் பேற்றின் வழியாக மன்னரின் ஒற்றைக் குடும்பப உறவு மேன்மைப்படுத்தப்பட்டது. இதன் காரணமாகவே அன்னையும், அரசியுமாகத் தாய் திகழ்ந்தார் )’ காண்க. 1 அரச 2 : 19, 1 அரச 15 :9 ‡ 13, 2 அரச 11 : 3, எரே 13 : 16 ‡ 20). இத்தகு உயர்ந்த அந்தஸ்து அரசரின் மிகச் சிறந்த ஆலோசகராகவும், சர்வ சக்தி மிக்க அரசியாகவும் மன்னரின் அன்னையைச் செயல்பட வைத்தது. அரசரை ஈன்றெடுத்ததன் காரணமாகவே இவள் அரசியாயினாள். எனவே இவள் அரச மகத்துவ அன்னையாகத் திகழ்ந்தார். அரசின் அன்றாட நிர்வாகச் செயல்பாடுகளில் அரசரின் முதன்மை ஆலோசகராகவும் செயல்பட்டார்.
(காண்க . நீமொ 31 : 1 ‡ 9, 2 குறி 22 : 1 ‡ 12).

இறை இரக்கத்தின் அரசி :

இத்தகு வரலாற்றுப் பின்னணியில், நாம் இரக்கமிகு விண்ணகத் தந்தையின் காணுகின்ற முகமாகி இயேசுவின் தாய் மரியாவையும் உற்று நோக்கிட வேண்டும். முதல் ஏற்பாட்டின் அரச அன்னையை போன்றே நாசரேத்தூர் கன்னியும், இரண்டாம் ஏற்பாட்டின் கதாநாயகியுமான மரியாவும் இயேசு நிறுவிய இரக்க அரசின் அரசியாகத் திகழ்கின்றார்.

‘அம்மா இவரே  உம் மகன் ... இவரே உம் தாய்’ (யோவான் 19 : 25 ‡ 27) என்ற வார்த்தைகள் மூலம் கல்வாரி ‘அம்மா இவரே  உம் மகன் ... இவரே உம் தாய்’ (யோவான் 19 : 25 ‡ 27) என்ற வார்த்தைகள் மூலம் கல்வாரி மலையின் சிலுவையடியில் நின்றிருந்த தமது தாயினை மனித குலத்தின் தாயாக இயேசு விட்டுச் சென்றுள்ளார். இளந்திருச்சபை தந்தையின் கூற்றுப்படியும், நம்பிக்கையாளர்களின் அறிக்கையின்படியும், நாசரேத்தூர் பெண்மணி இரக்கத்தின் அரசியாகத் திகழ்கின்றார். மண்ணுலக வேதனைகளிலிருந்து நாம் விடுபட நமது பரிந்துரையாளராக இந்த மரியன்னை திகழ்கின்றார். அரசர் என்பவர் ஆட்சி, அதிகாரம் செலுத்துபவர். அரசி என்பவரோ தாய்மைப் பண்பின் (மலட்டினால் துன்புறுவோரின் கண்ணீர் துடைக்கும் இரக்கம் மிக்கவர்). எனவே தான் இவர் இரக்கத்தின் அரசியாகத்  திகழ்கின்றார்.

உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல், நீங்களும் இரக்கம் உள்ளவராய் இருங்கள் (லூக் 6 : 36) என்றுரைக்கும் கிறிஸ்துவே, விண்ணகத் தந்தையின் இரக்கத்தின் செயல்பாட்டாளராகத் திகழ்கின்றார். கொடூர வேதனைகளை 
அனுபவித்து, வேதனைகளின் உச்சத்தில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையிலும் தந்தையே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை (லூக் 23 : 34) என்று விண்ணகத் தந்தையின் இரக்கத்தினை வெளிப்படுத்துகின்றார். எனவே தான், இந்த இயேசுவை விண்ணகத் தந்தையின் காணுகின்ற முகமாகிய இயேசு, மாபெரும் இரக்கத்தின் அரசர். இவருடைய தாய் மரியா, இரக்கத்தின் தாய், இரக்கத்தின் அரசி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இரக்கமிகு அரசியின் பரிந்துரையினால் நம்மீது பொழியப்படும் கொடைகள் அனைத்தும் விண்ணகத் தந்தையின் இரக்கமிகு கொடைகளே. விண்ணகத் தந்தையின் அருள்வெள்ளம் நம்மீது பாய்ச்சப்படும் ஓர் அருட்கருவியாக இரக்கத்தின் அரசி மரியா திகழ்கின்றார்.

புனித பவுஸ்தினம்மாளின் வாழ்வில் இறை இரக்க அரசியின் செயல்பாடு :

இறை இரக்கத்தின் திருத்தூதர் எனப்படும் போலந்து நாட்டின் அருட்சகோதரி புனித பவுஸ்தீனம்மாள், இறை இரக்க அரசி தனது வாழ்வில் புரிந்திட்ட அருஞ்செயல்களை தனது குறிப்பேட்டில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்கின்றார். அருள் மிகப் பெற்றவரே! என்று நாம் இறை இரக்க அரசி மரியாவை அழைப்பது மிகவும் சரியான ஒன்றே. மகளே! நான் இறையன்னை என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளேன். ஆனால் நான் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். எனது இதயத்தை ஏழு வாள்கள் ஊடுருவின (பவுஸ்தினாவின் குறிப்பு எண் : 786). நான் துன்புற்ற வேளையில், மகளே! நீ எத்தகைய துன்பத்தில் சிக்கித் தவிக்கிறாய் என்பதை நான் நன்கறிவேன். அஞ்சாதே  உனது துன்பங்களோடு  என்னை நான் இணைத்துக் கொள்கின்றேன். உனது  உணர்வுகளோடு நானும் ஒன்றித்துள்ளேன் (பவுஸ்தினாவின் குறிப்பு எண் : 75).

ஓ! மரியே! என் அன்னையே! எனது ஆன்மா, எனது உடல், எனது வாழ்வு, எனது மரணம் ஆகிய அனைத்தையும் உமது கரங்களில் ஒப்படைக்கின்றேன் (பவுஸ்தினாவின் குறிப்பு எண் : 79).

புனித பவுஸ்தினம்மாளின் வாழ்வு இறுதியில் மரியாவின் இரக்கத்தில் குழந்தைக்குரிய நம்பிக்கை கொண்டிருந்தார். என் மகளே! கடவுளின் ஆணைப்படி நான் உனக்கு மிகவும் நெருக்கமான முறையிலும், சிறப்பான விதத்திலும் உனக்கு அன்னையாக உள்ளேன். நீ எனது பாசமிகு குழந்தையாக வாழ நான் ஆசிக்கின்றேன் (பவுஸ்தினாவின் குறிப்பு எண் : 1414).

இறையன்னையே! மாபெரும் கசப்புக் கடலில் உமது ஆன்மா அமிழ்ந்திருந்தது. உமது குழந்தையாகிய என்மீது கருணை கூர்ந்தருளும். துன்பப்படவும், துன்பத்தை அன்பு செய்யவும், எனக்குக் கற்றுத் தாரும். வேதனை என்னை பிரிக்காதிருக்க எனது ஆன்மாவைப் பாதுகாத்தருளும். அருளின் அன்னையே! நான் இறை விருப்பத்தின்படி வாழ என்னைப் பயிற்றுவித்தருளும் (பவுஸ்தினாவின் குறிப்பு எண் : 315).

இறை இரக்கத்தின் அழைப்பு :

‘இதோ, நான் கதவருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கின்றேன். யாராவது எனது குரலைக் கேட்டுத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்’ (திவெ 3 : 20) என்கிறார் ஆண்டவர். நாம் நமது இதயக் கதவைத் திறந்து வைத்து இயேசு நம்மோடு உணவருந்த அனுமதிக்கின்றோமா? நாம் நற்கருணை வடிவில் இயேசுவை  உட்கொள்கிறோம். உண்மைதான். ஆனால் நமது உள்ளத்தை தற்பெருமை, ஆணவம், கவலை, பயம் போன்ற தீய ஆவியின் செயல்பாடுகளால் நிரப்பி வைத்துள்ளோம். இப்படியிருக்கையில் இயேசு எப்படி நம்முள் வாசம் செய்வார்?

இறை இரக்க அரசியின் தாய்மைப் பண்பு :

மிகவும் இரக்கம் மிகுந்த கன்னித்தாய், நமது  இதயக் கதவுகளை நாம் திறந்து வைத்து, இயேசுவை நம்மில் வாழவைத்திட நமது  உதவியாக  நிற்கின்றார். நாம் பாவத்தில் உழன்று கொண்டிருந்தாலும் தண்டிக்கும் தாயாக அல்ல, மன்னிக்கும் தாயாகத் தான் இருக்கின்றார். காயம்பட்ட நமது மனங்களைக் குணமாக்கும் அன்னையாக இரக்கமிகு அரசி நமக்காகக் காத்து நிற்கின்றார்.

இவர் ‘இரக்கம்மிக்க தாய்’ காரணம், இரக்கம்மிகு விண்ணகத் தந்தையினால் அமல உற்பவியாக மண்ணில் மரியா உதயமானவர். இயேசுவின் மானுடலேற்பில் இரக்கமே மனிதரானது. மனுவுருவான இரக்கத்தினை உலகிற்குக் கொணர்ந்தவர் மரியாவே. கிறிஸ்துவ சீடத்துவத்தின் மாண்பாளராக, முழுமையாளராகத் திகழ்பவர் இவர். நாம் இறக்கின்ற வரையில் நமது உடல், உள்ள, ஆன்மீக வாழ்வின் கண்காணிப்பாளராக இருந்து நமது தேவைகளை நிறைவேற்றி வருகிறவர் இவரே. மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை (லூக் 23 : 34) என்று விண்ணகத் தந்தையின் இரக்கத்தினை வெளிப்படுத்துகின்றார். எனவே தான், இந்த இயேசுவை விண்ணகத் தந்தையின் காணுகின்ற முகமாகிய இயேசு, மாபெரும் இரக்கத்தின் அரசர். இவருடைய தாய் மரியா, இரக்கத்தின் தாய், இரக்கத்தின் அரசி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இரக்கமிகு அரசியின் பரிந்துரையினால் நம்மீது பொழியப்படும் கொடைகள் அனைத்தும் விண்ணகத் தந்தையின் இரக்கமிகு கொடைகளே. விண்ணகத் தந்தையின் அருள்வெள்ளம் நம்மீது பாய்ச்சப்படும் ஓர் அருட்கருவியாக இரக்கத்தின் அரசி மரியா திகழ்கின்றார்.

திருச்சபையின் வரலாற்றுத் திருப்பு முனைகளில் எல்லாம் மனிதத் தவறுகளை மன்னித்து இரக்கத்தைப் பொழிந்து வழிநடத்தும் அரசியாக திகழ்பவர் இவரே. இவர் ஆற்றிய அரும்பெரும் செயல்களே மே வணக்க மாத நாட்களில் வாசிக்கப்பட்டு வருகின்றது. இந்த வரலாற்றுப் பதிவுகளை நமது வாழ்வாக்கி இறை இரக்க அரசியின் பிள்ளைகளாக வாழ்வோம்.  
$$$$$$

No comments:

Post a Comment

Ads Inside Post