குடும்பம் சமுதாயத்தின் உயிர்நிலை
புதுமையான தாய்மை
புலவர் இ. அந்தோணி, ஆசிரியர் (ஓய்வு)
ஆண்டவனின் ஒப்பற்ற புதுமைப் படைப்பு தாய்மை இதயம். ஒரு பெண் பிள்ளையை பெறும்போது இயல்பாக உதயமாகும் பேராறு அது. எனவேதான் அன்னையை புகழாத அறிஞர்கள் இல்லை, கவிஞர்கள் இல்லை. ‘அன்னையின் இதயத்துடிப்பு மனிதனை மயக்கும் முதல் கவிதை’ என்கிறது ஒரு புதுக்கவிதை. ‘அம்மாவுக்கு என்று தனியாக கவிதை வேண்டாம். அன்பாக பழகிப்பார், அம்மாவே கவிதைதான்’ என்கிறது மற்றொரு கவிதை. பட்டினத்தார் என்ற சித்தர், இல்லாமையைப் பற்றி பாடுகிறவர் அவர் தன் தாயின் பிரிவை உள்ளுருகிப் பாடுகிறார். ‘பட்டியிலும், தொட்டியிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து ‡ முட்டச் சிறகிலிட்டு காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டு தீ மூட்டுவேன்?’
விவாகரத்து பெற்று விட்ட அன்னையர், பெறும் பெரிய மன உளைச்சல், பெற்ற தன் பிள்ளையை பிரிந்து வாழ்கின்ற கொடுமைதான். எனவேதான், மேல்நாடுகளில், விவாகரத்து பெருகிவிட்ட நிலையில், அன்னையர் பெரும்பாலும் பெரிய மன நோய்களுக்கு உள்ளாகிறார்கள். வெள்ளமாக ஓடிவரும் தாய்பாசத்தை கணவன் - மனைவி பிரிவு என்ற வித்தால் உருவமற்றதாக மாற்றி விடுகிறார்கள். பாரதிதாசன் அவர்களும் தாயின் அன்பை உருக்கமுடன் பாடுகிறார்.
ஒப்புரைக்க முடியாத அன்னை என்னை
ஒருக்கணித்து மார்பணைத்து மேனியயல்லாம்
கைபுறத்தில் ஆம்படிக்குத் தழுவி என்றன்
கண் மறைக்கும் கரிகுழலை மேலொ துக்கி
மலர் வாயால் குளிர் தமிழால் கண்ணே
என்று செப்பி முத்தமிட்டாளே
அன்புள்ளாளின் செந்தாமரை
முகத்தை மறப்பேனோ நான்
என்கிறார்.
அன்னையின் பாசம் காயப்படுத்தப்படும் காலமும் உண்டு. பிள்ளைகள் வளர்ந்த பின்பும், அவர்கள் தனி குடும்பமாக மாறிய பின்பும், தாயின் அன்பு மாறுவதில்லை. முதியவர் இல்லத்தில் தாய் தள்ளப்படும்போதும், பெற்ற பிள்ளைகள், வளர்ந்த வயதில் தன்னை கண்டுக்கொள்ளாத போதும், அன்னையரின் பாசம் காயப்படுத்தப்படுகிறது. பிள்ளைகளை வளர்த்து, அவர்களைத் தனித்துவிட்டு அவர்கள் சிறப்பாக வாழ்வதைப் பார்த்து மகிழ்ந்திருப்பதுதான் சிறப்பு. தாயிடம் ஏன் இத்தகைய அன்பு ஏற்படுகிறது என்று கேட்டால், அது தொப்புள் கொடி உறவு. தாயின் இரத்தம்தான் பிள்ளையிடம் முதலில் ஓடியது. அதனின் வளர்ச்சிதான் இப்போது இருப்பது. சனோபர்கான் என்பவர் கூறுகிறார். ‘என் அன்னை ஒளிதரும் கதிரவன். அந்த சூரியனை, நான், தீய்ந்துபோகாமல் தொட முடியும், முத்தமிட முடியும்’ என்கிறார். கபியாரினிமனா என்பவர் கூறுகிறார் ‘அன்னையின் இதயத்தைப் போன்ற விண்ணகம் ஒன்று இல்லை’ என்கிறார். ஓர் அன்னையிடமிருந்து பிறந்தவர்தாம் நாம் அனைவரும். வானத்திலிருந்து நேரடியாக குதித்தவர்கள் அல்ல. நம் அன்னையை வணங்குவோம், அன்பு வழியும் அன்னையின் இதயத்தை போல், நம் உள்ளங்களையும் அன்பாலும், தியாகத்தாலும் நிரப்புவோம்.
No comments:
Post a Comment