Pages - Menu

Tuesday, 31 May 2016

வெற்றி உங்கள் கையில் ...

வெற்றி உங்கள் கையில் ... 

- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,

ஒரு குழந்தை பிறக்கும்போது அந்த வீடு மகிழ்ச்சியால் நிரம்பும். குடும்பத்தினர் அனைவரும் அந்தக் குழந்தையை எடுத்துக் கொஞ்சுவர். அந்தக் குழந்தையை தரையில் விடாமல் பார்த்துக் கொள்வர். இரண்டு அல்லது மூன்று வயதுவரை பொத்திப் பொத்தி வளர்ப்பார்கள். ஆனால், ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது.ஒட்டகச்சிவிங்கி நின்றுகொண்டு குட்டிபோடும் பழக்கமுடையது. சுமார் எட்டு அடி உயரத்தில் இருந்து குட்டியானது பூமியில் விழும்போதே பலமான அடிபட்டுக் கொண்டுதான் தன் வாழ்க்கையை துவங்குகிறது. நம்மைவிட உயரமான இடத்திலிருந்து ஒரு குட்டி ஒட்டகச்சிவிங்கி தன் தாயின் கருவரையிலிருந்து வெளிவரும்போதே கீழே விழந்து அடிபடுவதை யோசித்துப் பாருங்கள். இதைவிட கொடுமையான வி­யம் என்னவென்றால், தாய் ஒட்டகச்சிவிங்கி தன் குட்டியின் கழுத்தை ஒரு சில நிமிடங்கள் மெதுவாக முத்தமிடும். நாவால் நக்கிவிடும். பின்பு தன் நீண்டகால்களால் குட்டியை ஓங்கி உதைக்கும். குட்டியானது காற்றில் பறந்து சற்று தள்ளிப் போய் விழும். வலியோடு தடுமாறி அது எழுந்துநிற்க முயற்சி செய்யும். ஆனாலும், மீண்டும் தடுமாறி கீழே விழந்துவிடும். மீண்டும் தாய் உதைக்கும். குட்டி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனால் மீண்டும் விழுந்து விடும். குட்டி சுயமாக சொந்த காலில் எழும்பி நிற்கும் வரை தாய் உதைத்துக் கொண்டே இருக்கும்.

காட்டில் உலவும் சிங்கம், புலி, ஓநாய் போன்ற விலங்குகளுக்கு ஒட்டகச்சிவிங்கியின் மாமிசம்மீது அலாதி பிரியம். நடக்கத் தெரியாத குட்டியாக இருந்தால் இவை அந்த விலங்குகளுக்கு இரையாகிவிடும் என்று பயப்படும் தாய், தன் குட்டியை உதைத்து நடக்க கற்றுத் தருகிறது. ஓரிரு நாட்களில் குட்டி ஒட்டகச்சிவிங்கி எழுந்து நடந்துவிடுகிறது. இந்த உலகில் மற்ற உயிர்களோடு உயிர்வாழ வேண்டுமென்றால் வலியை தாங்கிக் கொண்டு போராட வேண்டும் என்ற உண்மையை பிறந்த முதல் நாளிலேயே தன் குட்டிகளுக்கு ஒட்டகச்சிவிங்கி கற்றுக் கொடுக்கிறது. குட்டி ஒட்டகச்சிவிங்கி கீழே விழுந்ததால் ஏற்பட்ட வலி தீரும்வரை ஓய்வெடுத்திருந்தால் மற்ற காட்டு விலங்குகளுக்கு இரையாகிவிடும். ஆனால், அதன் தாய், வலியைத் தாண்டி வெற்றியைப் பெறும் சூட்சமத்தை சொல்லிக்கொடுத்து சூழ்நிலைக்கேற்ற வாழ்க்கையைக் கற்பதற்கு உதவி செய்கிறது. தற்காலத்தில் பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளையும், ஆசிரியர்கள் அளிக்கும் வழிகாட்டுதலையும் துன்பமாக நினைத்து ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். சிலசவால்களை சந்திக்க பயந்து தோல்விகளை கண்டு துவண்டு தற்கொலையும் செய்துக் கொள்கிறார்கள். முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி பெற செய்துவிட்டு ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் தோல்வியடையும் போது, வலிகளை தாங்க மறுக்கிறார்கள். அனைவரையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற கல்வித்திட்டம், பல மாணவ, மாணவியர்களுக்கு சவால்களை சந்திக்க தடை போடுகிறது. மேலும் வலிகளை தாங்க தயங்குகிறது என்பதை கல்வியாளர்கள் பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். நவீன உலகில் படித்து முடித்தவுடன் கடினமான சூழ்நிலையை சந்திக்காமல், உடனே உயர்ந்த வேலை கிடைக்க வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும். சந்தோ­மாக வாழவேண்டும் என்ற எண்ணம் பல இளைஞர், இளம்பெண்கள் உள்ளத்தில் உதித்திருக்கிறது. சில சமயங்களில் இலவசமாக பல பொருள்களை பெற்றுக் கொள்ளும் அமைப்பு முறைகள்கூட மக்களின் மனதில் உழைக்கும் எண்ணத்தை விரட்டி விடுகிறது என்று சமூக ஆர்வலர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். ஆகவே மாணவ ‡ மாணவியர்களே! இளைஞர், இளம்பெண்களே! பெற்றோர், பெரியோர்களே! ஒட்டகச்சிவிங்கியைப் போல வலிகளை ஏற்போம். வலிகளை வெற்றிகளாக்கும் சூட்சமங்களை கற்றுக் கொள்வோம். வெற்றி வீரர்களாக வலம் வருவோம். 

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

No comments:

Post a Comment

Ads Inside Post