Pages - Menu

Monday, 2 May 2016

4. திருப்பலியில் ஆக்கப்பூர்வமான பங்கேற்பு

4. திருப்பலியில் ஆக்கப்பூர்வமான பங்கேற்பு
(Active Participation)

- அருள்பணி. எஸ். அருள்சாமி,
பெத்தானி இல்லம், கும்பகோணம்
முன்னுரை :


நமதாண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டு தம்மைப் பலியாக ஒப்புக்கொடுத்து, தந்தையாகிய கடவுளை வழிபட்டதை இன்று அப்ப ‡ இரச அடையாளங்கள் வழியாகப் பலிபீடத்தில் கொண்டாடுவதுதான் திருப்பலி என்று விளக்கினோம். அதே சமயத்தில் இயேசு கிறிஸ்து தமது இறுதி இராவுணவை உண்டபோது கல்வாரி சிலுவைப் பலியை அப்ப ‡ இரச அடையாளங்கள் வழியாக முன்கூட்டியே கொண்டாடினார் என்றும், இதுவே பலிபீடத்தில் கல்வாரி சிலுவைப் பலியை இன்று கொண்டாடுவதற்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் இருந்தது என்றும் எடுத்துரைத்தோம். எனவே இயேசு கிறிஸ்துவின் இறுதி இராவுணவு, கல்வாரி சிலுவைப் பலி, பீடத்தில் நிறைவேற்றப்படும் நற்கருணை பலி இவைகளுக்கிடையே நெருங்கியத் தொடர்புண்டு.

                   கல்வாரி பலி -    இறுதி இராவுணவு பீடப்பலி

இந்த மூன்றையும் செயலாற்றுபவர் இயேசு கிறிஸ்துவே என்றும், இன்று பீடத்தில் தமது சிலுவைப் பலியை கொண்டாடுவதற்கு அவர் திருஅவையை, அதாவது நம்பிக்கையாளர்களையும், அருள்பணியாளர்களையும் சார்ந்திருக்கிறார் என்றும் சொன்னோம். ஆகவே அருள்பணியாளர்களும், நம்பிக்கையாளர்களும் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு முறையில் தமக்குரிய செயலைப் புரிந்து திருப்பலியை ஒப்புக் கொடுக்கிறார்கள் என்றும் விளக்கினோம்.
இந்தச் செயலை பொருளுள்ள முறையிலும், பயனுள்ள விதத்திலும் கொண்டாட வேண்டுமானால் அருள்பணியாளர்களும், நம்பிக்கையாளர்களும் இதை செய்யும் போது ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். இதுவே செயல்முறை பங்கேற்பு (Active Participation) எனப்படுகிறது. இதை எப்படி செய்வது என விளக்குவதே இந்த சிந்தனையின் நோக்கமாகும்.

இந்த விளக்கம் ஏன் தேவைப்படுகிறது?

நம்பிக்கையாளர்களில் பெரும்பாலானோர் திருப்பலியில் வெறும் பார்வையாளர்களாகவே  (Spectators) இருக்கிறார்கள். இத்தகைய நிலையை “திருப்பலியை காண போக வேண்டும், போனோம்” என்று நாம் கேள்வியுறும் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. இது அவர்களது செயலற்ற நிலையை  (Passive Condition) வெளிப்படுத்துகிறது.
இதே மனப்பாங்கை ஒருசில சமயங்களில் அருள்பணியாளர்களிடமும் காணமுடிகிறது. மேலும் அருள்பணியாளர் திருப்பலியை ஒப்புக் கொடுக்கும்போது “இதைச் செய்யலாமா? அதைச் செய்யலாமா? எதைச் செய்யக்கூடாது?” போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதுபோன்ற மனநிலையைப் போக்கவும், ஐயங்களுக்கு விடையளிக்கவும் வேண்டியது அவசியமாக உள்ளது.

எதை செய்ய வேண்டும்?

திருப்பலியில் பங்கு பெறும் நம்பிக்கையாளர்களாக இருந்தாலும் சரி, மக்களுக்காகத் திருப்பலியைத் தனியாகவோ, கூட்டு செயலாகவோ ஒப்புக்கொடுக்கும் அருள்பணியாளர்களாகவோ இருந்தாலும் சரி, எல்லோரும் சில ஒழுங்கு விதியைக் கடைப்பிடிக்க வேண்டும். திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம் குறிப்பிடுவது இங்கு கவனிக்கத்தக்கது. “திருவழிபாட்டின் இயல்புக்கேற்ப நம்பிக்கை கொண்டோர் அனைவரும் திருவழிப்பாட்டுக் கொண்டாட்டங்களில் முழுமையாகவும் (full), உணர்ந்தும் (conscious), செயல்முறையிலும் (Active)  பங்கு கொள்ள (participate) அவர்களை இட்டுச் செல்ல வேண்டும்” (தி.வ.14). வழிபாடு கொண்டாட்டம் பற்றி பொதுவாக இருக்கவேண்டிய பண்புகள், சிறப்பாகத் திருப்பலி கொண்டாட்டத்திற்கும் பொருந்தும். இங்கு இப்பண்புகள் பற்றிய விளக்கம் காண்போம்.

1. முழுமையாக (Full) :


திருப்பலியில் பங்கு பெறும் நம்பிக்கையாளர்களும் திருப்பலியை நிறைவேற்றும் அருள்பணியாளர்களும் திருப்பலி கொண்டாட்டத்தில் தொடக்கம் முதல், இறுதி பிரியாவிடை பகுதி முடியும் வரையிலும் பிரசன்னமாக இருக்க வேண்டும். இப்பிரசன்னம் உடல்சார் பிரசன்னமாக (Physical presence) இருக்கவேண்டும்.

அருள்பணியாளர்களைப் பொருத்தமட்டில் எந்தெந்த செயல் இதற்கு இடையூறாக இருக்கின்றதோ, அந்த செயல் தவிர்க்கப்பட வேண்டும். காலதாமதமாக வந்து கூட்டுத் திருப்பலி கொண்டாட்டத்தில் பங்குபெறுவது (பொது படிப்பினை GIRM எண் 206 காண்க), திருப்பலி முடிவதற்கு முன் வெளியேறுவது, கேமரா அல்லது கைபேசியில் போட்டோக்கள் எடுப்பது,   திருப்பலி முடிவதற்கு முன் வெளியேறுவது, கேமரா அல்லது கைபேசியில் போட்டோக்கள் எடுப்பது, ஒலிப்பெருக்கியை சரிசெய்ய செல்வது, அடிக்கடி பலி பீடத்தை விட்டு விலகி திருப்பொருள் அறைக்குச் செல்வது (Sacristy), அருள்பணியாளர் திருவுடை அணிந்து கொண்டு கேசியோ வாசிப்பது, பாடல் குழுவை நெறிப்படுத்துவது போன்றவைகள் திருப்பலியை முழுமையாக ஒப்புக்கொடுக்கவும், பங்குபெறவும் இடையூறுகளாக இருப்பவை எனக் குறிப்பிடலாம்.

2. உணர்ந்து (Conscious) :


வழிபாட்டில் உள்ளரங்கமாகவும், வெளியரங்கமாகவும் பங்குகொள்ள வேண்டும் என திருவழிபாட்டு கொள்கை விளக்கம் குறிப்பிடுகிறது (தி. வ. எண் 19 காண்க). அதாவது திருப்பலியில் நாம் உச்சரிக்கும் வார்த்தைகளும் (செபங்களும்), உள்ளமும் இணைந்திருக்க வேண்டும். திருப்பலியில் சொல்லப்படுகின்ற செபங்களையும் பாடுகின்ற பாடல்களையும் நமது நாவு உச்சரித்தாலும், நமது உள்ளம் சில சமயங்களில் வேறு உலகில் வலம் வந்துக் கொண்டிருக்கும். இதனால் உச்சரிக்கும் வார்த்தைகளின் உட்பொருளை உணர்ந்து சொல்லாமல், வாடிக்கையாக கிளிப்பிள்ளைப் பாடமாக சொல்லும்போது எந்த பயனும் கிட்டாது. அது திருவழிபாடாகவோ, செபமாகவோ அமையாமல் வெறும் மந்திரம் ஓதும் செயலாக அமைந்துவிடும். அகமும், புறமும் இணைந்து போகும் வழிபாடாக அமையாது (தி. வ. எண் 114. காண்க). எனவே பலிபீடத்தில் நிற்கும் அருள்பணியாளரும், கூட்டுத் திருப்பலியில் திருப்பீட முற்றம் (Sanctuary) அல்லது கூட்டுத் திருப்பலியில் பங்கு பெறும் பணியாளர்களுக்கென குறிக்கப்பட்ட இடங்களில் இருந்துக் கொண்டு, அவர்கள் பராக்குகளுக்கு இடம் கொடுப்பதும், தகாத உரையாடல்களுக்கு (Conversation) இடம் கொடுப்பதும் திருப்பலியைச் சாராத காரியங்கள் பற்றி பேசிக் கொண்டிருப்பதும் திருப்பலியை உணர்ந்து ஒப்புக் கொடுப்பதற்கு இடையூறானவை. இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

3. செயல்முறையில் (Active):

சில நம்பிக்கையாளர் ஆலயத்திற்கு வெளியே நின்றுக்கொண்டு அரட்டையடித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் மக்கள் பகுதியில் வரும் ஆர்ப்பரிப்பு, உரையாடல், பதில் உரையாடல் எதையும் சொல்லாமல் இருப்பதால் திருப்பலியில் செயல்முறையில் பங்கு பெற்றார்கள் என்று சொல்லமுடியாது.  மக்களுக்காகத் தனியாகத் திருப்பலியை நிறைவேற்றும் அருள்பணியாளர் தொடக்கம் முதல் இறுதி வரைச் சொல்ல வேண்டிய செபங்களைச் சொல்லியும், செய்ய வேண்டிய செயல்களைச் செய்தும் ஈடுபாட்டோடு திருப்பலியை ஒப்புக்கொடுக்க வேண்டும். மேலும் அனுசரிக்க வேண்டிய உடல்நிலைகளை (நிற்றல், அமர்தல், வணங்குதல், முழுங்கால்படி இடுதல்) மேற்கொள்ள வேண்டும். இதேபோல் கூட்டுத் திருப்பலியில் பங்குபெறும் அருள்பணியாளர்கள் தங்களுக்கென்று குறிக்கப்பட்ட செபங்களைச் செபிப்பதினாலும் செயல்முறையில் பங்குபெற முடியும். திருப்பலிக்கு தலைமை ஏற்று செயல்படும் அருள்பணியாளருடைய (Principal Celebrant ) செபங்களை மற்ற பணியாளர்கள் சொல்லவோ, பாடவோ கூடாது. அப்பமும், இரசமும் வசீகரம் செய்யப்பட்ட பின் அவற்றை சற்று உயர்த்தி மக்களுக்குக் காட்டும் செயலைக் கூட்டுத் திருப்பணியாளர் செய்யக் கூடாது. இதேபோல் திருப்பலியின் தொடக்கவுரையை (Preface) கூட்டுத் திருப்பலியில் பங்கு பெறும் அருள்பணியாளர் பாடக்கூடாது (பொது படிப்பினை எண் 216 காண்க). தலைமை ஏற்கும் அருள்பணியாளரால் பாட முடியாவிட்டால், வசிப்பது மட்டும் போதும்.

முடிவுரை :
இந்த பண்புகளை திருப்பலியில் பங்கேற்போர் கடைபிடித்து சொல்லப்பட வேண்டுமானால், திருப்பலியின் ஒவ்வொரு பகுதியையும் அவர்களுக்கு விளக்க வேண்டும். முந்திய பகுதி எவ்வாறு அடுத்தப் பகுதியோடு தொடர்புக் கொண்டுள்ளது என்று காட்டப்பட வேண்டும். ஒவ்வொரு பகுதியில் இடம் பெறும் செயல்கள், செபங்களுக்கு தகுந்த விளக்கம் கொடுக்கப்பட வேண்டும். இப்பணி இனிவரும் சிந்தனைகளில் இடம் பெறும்.

தொடரும்

No comments:

Post a Comment

Ads Inside Post