பணிவு என்னும் இனிய பாதை
- அருள்பணி. மகுழன்,
பூண்டி மாதா தியான மையம்.
2. பணிவின் அடித்தளம் இறைநம்பிக்கை
அரசர் ஒருவர் இருந்தார். அவர் மக்களுக்கு நன்மைகள் செய்தார். வீடுகள் கட்டிக் கொடுத்தார்; அணைகளைக் கட்டினார்; மருத்துவமனைகளை எழுப்பினார்; சாலைகளை அமைத்தார். அந்த நல்ல மனிதரிடத்தில் ஒரு சிறிய குறை இருந்தது. மக்கள் அனைவரும் அவரை ‘தெய்வீகப் பிறவியே’ என்று அழைக்க வேண்டுமென்று விரும்பினார். அதனை ஒரு கட்டளையாகவே பிறப்பித்து இருந்தார்.
அந்த நாட்டில் முதியவர் ஒருவர் இருந்தார். ஒரு நாள் அவர் அரசரைக் காணச் சென்றார். அரசரைக் கண்டு ’ ‘வணக்கம் அரசே’’ என்று வணங்கினார். அரசருக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே அவர் “‘என்னை ‘தெய்வீகப் பிறவியே’ என்று அழைக்காமல் ‘அரசே’ என்று அழைத்ததால் இவனை ஓராண்டு சிறையில் அடையுங்கள்’” என்று கட்டளை பிறப்பித்தார்.
ஓராண்டு சிறைவாசத்திற்கு பிறகு விடுதலைப் பெற்றார் முதியவர். விடுதலை அடைந்தபின் முதல் வேலையாக அரசரை சந்தித்து, ‘‘நன்றி அரசே’’ என்றார். மீண்டும் அரசருக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘தெய்வீகப்பிறவியே’ என்று என்னை அழைக்காத இந்த கிழவரை மீண்டும் ஓராண்டு சிறையில் அடையுங்கள்’ என்று ஆணையிட்டார்.
ஓராண்டிற்குப் பிறகு விடுதலைப் பெஅவ்வாறு அழைக்க என் மனம் மறுக்கிறது’” என்றார் முதியவர். வேறு வழியின்றி முதியவரை விடுவித்தார் அரசர். மேலும் அவரைப்பற்றி அறிந்து கொள்வதற்காக அரசர் மாறுவேடத்தில் அந்த முதியவரைப் பின் தொடர்ந்தார். அந்த முதியவர் நகரைக் கடந்து ஒரு கிராமத்திற்குச் சென்றார். கிராமத்தின் எல்லையில் இருந்த குடிசைக்குச் சென்றார். அவருடைய மனைவி அன்போடு அவரை வரவேற்று இவ்வளவு நாட்கள் எங்கு சென்றீர்கள்? என்று கேட்டார். முதியவர் தனக்கு நடந்ததை எல்லாம் சொன்னார். அவரின் மனைவி கோபமடைந்து அரசரைத் திட்டினார். அப்போது அந்த முதியவர் தன் மனைவியை கடிந்து கொண்டு, “‘நம் அரசர் நமக்கு எவ்வளவோ நன்மைகளைச் செய்கிறார். வீடுகள் கட்டித் தருகிறார்; அணைகளை கட்டுகிறார்; மருத்துவமனைகளை ஏற்படுத்துகிறார்; சாலைகளை அமைக்கிறார்; அவருடைய இந்த சிறியக் குறையை நாம் கண்டு கொள்ளக் கூடாது’ என்று அறிவுறுத்தினார். மறைந்திருந்த அரசர் வெளியே வந்து ‘நல்லவரான உங்களை கொடுமைப்படுத்தி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என்று காலில் விழுந்தார். அப்போது அந்தப் பெரியவர் ‘எங்கள் இல்லத்திற்கு வாருங்கள் தெய்வீகப்பிறவியே’ என்றார். ‘என்ன சொன்னீர்கள்?’ என்று ஆச்சரியத்தோடு கேட்டார் அரசர். பெரியவர் சொன்னார், “‘ஆமாம் அரசே, நீங்கள் எவ்வளவுதான் நன்மைகள் செய்தாலும் சாதாரண மனிதர் தான். ஆனால் எப்போது நீங்கள் பணிவோடு மன்னிப்பு கேட்டீர்களோ அப்போது தெய்வீகப் பிறவி ஆகிவிட்டீர்கள்’ என்றார்.
பணிவின் அடித்தளம், நம்மைவிடப் பெரியவர் ஒருவர் இருக்கிறார், அவர்தான் நம்மை படைத்தவர், அவர்தான் நம்மைக் காப்பவர். அவர்தான் நம்மை வழிநடத்துபவர் என்ற இறைநம்பிக்கைத்தான். நாம் எவ்வளவு தான் நல்லவராக இருந்தாலும்கூட, நாம் எவ்வளவுதான் வல்லவராக இருந்தாலும்கூட இறைவனின் இடத்தை நாம் பிடிக்க முடியாது.
நாம் குழந்தைகளாக இருந்தபோது ஒரு விளையாட்டு விளையாடி இருப்போம். பெரியவர்களைப் போல வேட்டி, சட்டை அல்லது சேலை அணிந்து மகிழ்ந்து இருப்போம். அதாவது, நாம் குழந்தைகளாக இருந்தாலும் பெரியவர்களாக விரைவில் ஆக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. (இப்போது வயது குறைந்தால் நன்றாக இருக்கும் என்றுத் தோன்றுகிறது!) இதேப் பிரச்சனை மனிதனுக்கு தொடக்க முதல் இருந்து கொண்டு வருகிறது. விலக்கப்பட்ட கனியைத் தின்றால் கடவுளைப் போல நன்மை, தீமையை அறிந்துக் கொள்ளலாம் என்று எண்ணித்தான் மனிதன் அதனைத் தின்றான்.
யோபுவை பார்த்து இறைவன் கேட்ட சில கேள்விகளை நம்மைப் பார்த்தும் எழுப்புகிறார்.
‘இனி முகில்கள் எவ்வாறு மிதக்கின்றன என உமக்குத் தெரியுமா?’ (யோபு 37:16)
‘மண்ணகத்திற்கு நான் கால்கோள் இடும்போது நீ எங்கு இருந்தாய்?’ (யோபு 38:4)
‘புறப்படுக என மின்னலுக்கு ஆணையிடுவாயோ? இதோ உள்ளோம் என அவை உனக்கு இயம்புமோ? ’
(யோபு 38:35)
‘உன் அறிவினாலா வல்லூறு பாய்ந்து இறங்குகின்றது? தெற்கு நோக்கி இறக்கையை விரிக்கின்றது ’ (யோபு 39:26)
எல்லாவற்றையும் உருவாக்கியவர், எல்லாவற்றையும் அறிந்தவர், எல்லாவற்றிற்கும் பலம் அளிப்பவர், எக்காலத்திலும் மாறாதவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் இறைவன். அவரோடு இருந்தால் மட்டுமே நமக்கு பலம். அவரோடு இருந்தால் மட்டுமே நமக்கு இனிமை. அந்த இறைவனிடம் நம் பணிவை எவ்வாறு எளிதாக வெளிப்படுத்தலாம் என்று அடுத்த இதழில் பார்ப்போமா? (தொடரும்)
No comments:
Post a Comment