Pages - Menu

Tuesday, 31 May 2016

திருப்பலி விளக்கம், 5. திருப்பீட முற்றமும், அதன் அமைப்பும், Sanctuary

திருப்பலி விளக்கம்
5. திருப்பீட முற்றமும், அதன் அமைப்பும்
Sanctuary
- அருள்பணி. எஸ்.அருள்சாமி, 
பெத்தானி இல்லம், கும்பகோணம்

முன்னுரை 
நற்கருணைக் கொண்டாட்டத்திற்காக இறைமக்கள் பொதுவாக கோவிலில் கூடுவார்கள்; கோவில்கள் இல்லாதபோது அல்லது அது மிகச் சிறியதாக இருக்கும்போது, மாண்பு மிகுந்த இம்மறை நிகழ்ச்சிக்குத் தகுதியான வேறொரு மதிப்புக்குரிய இடத்தில் கூடி நற்கருணைப் பலியைக் கொண்டாடலாம் (காண் பொது பாடம் எண் 288). நற்கருணைப் பலியைக் கொண்டாடும் கோவிலில் திருப்பீட முற்றம் (Sanctuary) முக்கிய இடம் வகிக்கிறது. எனவே இத்திருப்பீட முற்றத்தின் அமைப்புப் பற்றி ஈண்டு விளக்கம் காண்போம்.

1. திருப்பீட முற்றம் (Sanctuary) :

திருப்பீட முற்றம் கோவிலில் மக்கள் அமரும் இடத்தைவிடச் சிறிது உயர்ந்திருக்கும். அது தனிப்பட்ட வடிவமைப்புடன் அழகு செய்யப்பட்டு மற்ற இடத்தில் இருந்து வேறுபட்டிருக்கும். நற்கருணைக் கொண்டாட்டம் வசதியாக நடைபெறுவதற்கும், மக்கள் பார்ப்பதற்கும் ஏதுவாகப் பெரிதாக அமைந்திருக்கலாம் (காண்  inter oecumenici 26  செப்டம்பர்1964,no.91).).

இந்த திருப்பீட முற்றத்தில் முக்கியமாக அமைக்கப்பட வேண்டியவை திருப்பீடம், வாசக மேடை, திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளர்(கள்), இருக்கை(கள்) ஆகியவையாகும்.

2. பலிபீடம் (Altar) :

கோவிலில் அமைக்கப்படும் பலிபீடம் மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதே சமயம் மக்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து வெகுதூரத்திலும், அவர்கள் அணுகமுடியாத விதத்திலும் அமைக்கப்பட கூடாது.

பீடம் ஆண்டவரின் திருவிருந்து மேசையும், தம்மை அடையாளங்கள் வழியாகப் பலியாக ஒப்புக்கொடுக்கும் பலிபீடமும் ஆகும். இறைமகன் இயேசுகிறிஸ்து அடையாளங்கள் வழியாக இதில் தம்மை பலியாக்குவதால், தகுதிக்கேற்றாற்போல் திருப்பீடம் என்று அழைக்கப்படுகிறது. இதை விவரிக்கும் உரோமை திருநூலின் பொது பாடம் பின்வருமாறு குறிப்பிடுகிறது :    
       
“பீடத்தின்மீது அடையாளக்குறிகள் வழியாகச் சிலுவைப்பலி நிறைவேற்றப்படுகின்றது; பீடம் ஆண்டவரின் திருவிருந்து மேசையும் ஆகும். திருப்பலியில் பங்கேற்க இறைமக்கள் இந்த மேசையைச் சுற்றி ஒன்றுகூட்டப்படுகிறார்கள்; மேலும் நற்கருணை வழியாக நிகழும் நன்றியறிதலின் மையமாகவும் அது அமைகிறது” (எண் 296).ஒவ்வொரு கோவிலிலும் பலிபீடம் அசையா பீடமாக இருப்பது நல்லது. ஏனெனில் அது உயிருள்ள கல்லாகிய (1 பேது 2 : 4; காண்க எபே 2 : 20) இயேசு கிறிஸ்துவை மிகத் தெளிவாகவும், நிரந்தரமாகவும் குறிக்கின்றது. இந்த அசையா பீடத்தின் மேல் பாலம் (Slab) இயற்கைக் கல்லால் ஆனதாக இருக்க வேண்டும். பீடத்தின் தூண்களும், அவற்றின் ஆதாரங்களும் தகுதியும், உறுதியும் உள்ள எவ்வகைப் பொருளாலும் அமைக்கப்படலாம். இந்த அசையா பீடம் நேர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும்  (consecrated). .இந்தப் பீடம் பலி செலுத்தப்பட வேண்டிய இடமாக இருப்பதால், இது அளவுக்கு மிஞ்சி அலங்கரிக்கப்பட்டிராமல் இருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

புனிதர்களின் திருப்பண்டங்களை (Relics) நேர்ந்தளிக்கப் பெறும் பீடத்திற்கு அடியில் வைக்கும் வழக்கம் தொடர்ந்து நடைபெறும்; அப்பண்டங்கள் மறைச்சாட்சியருடையனவாய் இல்லாவிட்டாலும்கூட அவற்றின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். உண்மையாகவே புனிதர்களுடையனவாய் இருப்பதில் கவனமாய் இருக்க வேண்டும்.

அசையா பீடம் அமைக்க முடியாத கோவில்களில், அசையும், அதாவது வேறொரு இடத்திற்கு நகர்த்தக்கூடிய பீடத்தைப் பயன்படுத்தலாம். இதைப் புனிதப்படுத்தினால் மட்டும் போதும் (Simple Blessing).

இது பலிபீடமாகையால் காணிக்கைகளை ஒப்புக்கொடுப்பது முதல் நற்கருணையை உட்கொள்ளும் வரையுள்ள திருநிகழ்ச்சிகள் மட்டும் இதில் நடைபெற வேண்டும். தொடக்கச் சடங்குகளும், திருப்பலியை முடித்து வைக்கும் இறுதி சடங்குகளும், பலி பீடத்தில் நிகழ்த்துவதைத் தவிர்க்க வேண்டும். இது மறையுரை ஆற்றும் இடமும் அல்ல.

பீடத்தின் மீது பீடத்துகிலும், திருமேனித் துகிலும் மெழுகுதிரிகளும் வைக்கப்பட வேண்டும். பலி பீடத்திற்குப் பின்பகுதி சுவரில் பெரிய பாடுபட்ட சிலுவை இல்லையயனில், சிறிய பாடுபட்ட சிலுவையை பீடத்தின் மீது வைக்க வேண்டும்.

திருப்பலியில் பங்குபெற குழுமியிருக்கும் நம்பிக்கையாளர்கள் பலிபீடத்தில் இருப்பனவற்றையும், நிகழ்வனவற்றையும் எளிதில் பார்க்கத் தடை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே எவையயல்லாம் இதற்கு இடையூறாக இருக்கின்றனவோ ‡ எடுத்துக்காட்டாக மலர் ஜாடிகள், மெழுகுதிரி தண்டுகள், போன்றவை ‡ அவற்றையயல்லாம் பலிபீடத்திற்கு வெளியே அதன் வலது, இடது புறங்களில் வைக்க வேண்டும்.வெளியே அதன் வலது, இடது புறங்களில் வைக்க வேண்டும்.

3. வாசக மேடை (Lectern) :

திருப்பலி பீடத்திற்குக் கொடுக்கப்படும் கவனமும், முக்கியத்துவமும் வாசக மேடைக்கும் கொடுக்கப்படுகிறது. இறைவார்த்தையின் மாண்புக்கு ஏற்ப அதைப் பறைசாற்ற பொருத்தமான இடம் திருப்பீடமுற்றத்தில் அமைய வேண்டும். வார்த்தை வழிபாட்டின்போது நம்பிக்கையாளரின் கவனத்தை இயல்பாகவே ஈர்க்கும் வண்ணம் வாசக மேடை அமைய வேண்டும்.

பீடத்தின் வலப்புறம் சற்றுமுன் தள்ளி வாசக மேடையை அமைப்பது நல்லது. புதிதாக கோவில் கட்டி திருப்பீட முற்றத்தை அமைக்கும் போது வாசக மேடையின் இடம் மிக கவனத்தோடு தேர்வு செய்யப்பட வேண்டும். வாசக மேடைக்கு ஏற்ற இடத்தைத் தேர்வு செய்யும்போது கட்டிட கலைஞரோடு, திருவழிபாட்டு வல்லுநருடைய ஈடுபாடும் இருந்தால் அமைப்பு சரியானதாக இருக்கும்.

திருப்பீடம் எவ்வாறு அசையாததாக இருக்க வேண்டுமோ, அதே போல் வாசக மேடையும் அசையாததாக இருக்க வேண்டும். அது இடம் பெயரக் கூடிய புத்தகத்தாங்கி மட்டும் அல்ல. இது அமைக்கப்படுகிற இடம் நம்பிக்கையாளர் எளிதாகப் பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

வாசக மேடையிலிருந்து மட்டும் வாசகங்களும், பதிலுரைத் திருப்பாடலும், பாஸ்கா அறிக்கையும் பறைசாற்றப்படும். இங்கிருந்தே மறையுரை ஆற்றப்படும். பொது மன்றாட்டின் கருத்துக்கள் அறிவிக்கப்படும். வாசக பணியாளர் மட்டும் வாசக மேடையில் ஏறுவது அதன் மாண்பை நிலைநிறுத்தும் (காண் பொது பாடம் எண் 309).

இந்த வாசக மேடையைப் பயன்படுத்துமுன் உரோமைத் திருச்சடங்கு நூலில் விவரித்துள்ளபடி புனிதப்படுத்துதல் ஏற்புடையதாகும்.

4. அருள்பணியாளர் இருக்கை (President Chair) :

இந்த இருக்கை திருப்பலியைக் கொண்டாடும் அருள்பணியாளரின் தலைமைத்துவத்தை உணர்த்துவதாக அமைக்கப்பட வேண்டும் என்றாலும் இது ஓர் அரச சிம்மாசனத்தைப் போல் தோற்றம் அளிக்கக்கூடாது. தர்பார் இருக்கையை பயன்படுத்துவது நல்லதல்ல. இந்த இருக்கை பலிபீடத்திற்குப் பின்னால், நற்கருணை பேழைக்கு முன் நடுவில் அமையலாம். இதுவே மிகப் பொருத்தமான இடம். அதே சமயம் இங்கிருந்து செயல்படும் தலைமை அருள்பணியாளரை மக்கள் எளிதில் பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும்; அருள்பணியாளருக்கும், மக்கள் குழுமத்திற்கும் இடையே உள்ளத் தொடர்புக்கு இடையூறாக உள்ள அதிக தூரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைக்க முடியாத கோவில்களில் இந்த இருக்கை பீடத்தின் இடது புறம் சிறிது பீடத்திற்கு முன்பாக அமைக்கப்படலாம். இவ்வாறு இருக்கை அமைக்கப்பட்டால் இது வாசக மேடைக்கு இணையயாத்த முறையில் (ஸ்ரீழிrழியியிeயி) அமையும். இந்த இருக்கையிலிருந்துதான் திருப்பலியின் தொடக்கச் சடங்கும், முடிவு சடங்கும் இடம் பெற வேண்டும்.

கூட்டுத்திருப்பலி அருள்பணியாளர்களுக்கு திருப்பீட முற்றத்திலேயே பீடத்தின் வலது, இடது புறங்களில் இருக்கைகள் அமைக்க வேண்டும். போதிய இடம் இல்லையயன்றால் பீடமுற்றத்திற்கு வெளியேயும் இவ்விருக்கைகளை அமைக்கலாம். ஆனால் கூட்டுத்திருப்பலியின் அருள்பணியாளர்களுடைய இருக்கைகள் மற்ற நம்பிக்கையாளர்களின் இருக்கைகளிலிருந்து தெளிவாக வேறுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.

5. அறிக்கை மேடை :

வாசக மேடையில் வாசகப் பணியாளர் மட்டும் ஏறுவது அதன் மாணபை நிலைநிறுத்தும் என மேலே குறிப்பிட்டோம். அப்படியானால், விளக்கவுரையாளர்களின் இடம் எது? திருப்பலி இறுதியில் எங்கிருந்து அருள்பணியாளர் அறிக்கைகளை வாசிப்பார்? போன்ற கேள்விகள் எழுகின்றன.

இதுபற்றி அதிகாரபூர்வமான எந்த அறிவுரையும் இல்லை என்றாலும், திருவழிபாட்டு விளக்கவுரையை பீடத்தின் இடது புறம் மற்றொரு மேடையை அமைத்து அதிலிருந்து வழங்கலாம். இதே மேடையிலிருந்து திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளரோ அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட வேறொருவரோ நம்பிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டிய தகவல்களையும், திருமண அறிக்கையையும் வழங்கலாம். இது சாத்தியமாகாது என்றால் திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளரின் இருக்கையிலிருந்து வழங்கலாம்.

முடிவுரை :

வழிபாடு என்பது ஒரு கொண்டாட்டம். இது அழகுர அமைய வேண்டுமானால் ஒவ்வொரு செயலுக்காக குறிப்பிடப்பட்ட இடத்தை பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் கொண்டாட்டம் அழகுணர்ச்சி (aesthetic) உடையதாக அமையும். வழிபாட்டின் பயனையும் துய்க்க முடியும். எனவே பங்கு அருள்பணியாளர்கள் வழிபாட்டு கொண்டாட்டத்திற்கான ஒழுங்கு முறைகளை சரிவர கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும். இது அவர்களது கடமையாகும்.
தொடரும்

No comments:

Post a Comment

Ads Inside Post