Pages - Menu

Monday, 2 May 2016

திவெ 5 : 12, விவிலிய விளக்கம்

திவெ 5 : 12, விவிலிய விளக்கம்

திவெ 5 : 12இல் கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியைப் போற்றி ஒரு வாக்கியம் வருகிறது. “கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும், செல்வமும், ஞானமும், ஆற்றலும், மாண்பும், பெருமையும், புகழ்ச்சியும் பெற தகுதி பெற்றது” என்பது அந்த வாக்கியம். இதில் ஏழு பண்புகள் கொடுக்கபட்டுள்ளன. இதனின் பின்னனி என்ன என்று புரியாத புதிராயிருக்கும். இந்த ஏழு புகழ்ச்சி வார்த்தைகளும் அக்காலத்தில், உரோமைய அரசர்களை சந்திக்கும் போது சொல்லப்படும் வார்த்தைகள். அரசருக்குரிய பெருமையை தன் தியாகத்தினால் உலகிற்கு வாழ்வு தந்த இயேசுவிற்கு திருவெளிப்பாடு நூல் பொறுத்தி காட்டுகிறது. இந்த வாழ்த்தொளி, அக்காலத்தில் இயேசுவை புகழ்ந்து வழிபாட்டிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளின் பின்னணியை காணலாம்.

1. வல்லமை :

‘துனாமிஸ்’ என்ற கிரேக்க வார்த்தைத்தான் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘டைனமோ’ என்ற ஆங்கில வார்த்தையும் இதிலிருந்து பிறந்ததுதான். ‘துனாமிஸ்’ என்ற வார்த்தைக்கு நேரடி பொருள் சக்தி, ‘செய்ய முடியும்’ என்ற திறமை என்பதாகும். இறைவன் வல்லமையுடையவர் என்று பல குறிப்புகளில் காண்கின்றோம் (மத் 22 : 29, உரோ 1 : 16). இயேசுவின் புதுமைகளை குறிக்கவும் இவ்வார்த்தைப் பயன்படுத்தப்பட்டது (மத் 7 : 22, 11 : 20).

2. செல்வம் :

‘புளுதோஸ்’ என்ற கிரேக்க வார்த்தைதான் ‘செல்வம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலக செல்வங்கள் நிறைந்த நிலையைத்தான் இச்சொல் குறிக்கும் (உ.ம் மத் 13 : 22)

3. ஞானம் :

‘சோபியா’ என்ற கிரேக்க வார்த்தைத்தான் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகு சார்ந்த ஞானம் (உ.ம் 2 கொரி 1 : 12), கடவுளின் ஞானம் (உ.ம் 1 கொரி 1 : 21) என்ற வேறுபாடு உண்டு. இறைவன் தன் ஞானத்தை, தான் விரும்புபவருக்கு அளிக்கிறார் (மத் 12 : 42

4. ஆற்றல் :

‘இஸ்குஸ்’ என்ற கிரேக்க வார்த்தை  பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரிவினை சபையினரின் மொழிபெயர்ப்பில் ‘பெலம்’ என்று கொடுக்கப்பட்டுள்ளது. மனிதரின் சொந்த பலம் என்றும் (உ.ம் மாற் 12 : 30, 33), இறைவனின் ஆற்றல் என்றும் (உம் எபே 1 : 19) வேறுபடுத்தி காண்பிக்கப்படுகிறது. திவெ 5 : 12இல் இறைவனின் ஆற்றல் குறப்பிடப்படுகிறது.

5. மாண்பு :

‘திமே’ என்ற கிரேக்க வார்த்தை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரின் மதிப்பு, பெருமை ஆகியவைகளை இவ்வார்த்தை குறிப்பிடுகிறது. பிரிவினை சபையினர் மொழி பெயர்ப்பில் ‘கனம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

6. பெருமை :

‘தொக்ஸா’ என்ற கிரேக்க வார்த்தைத்தான் ‘பெருமை’ என்று இங்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ‘தொக்ஸா’ என்றால் பேரொளியைக் குறிக்கும். புனிதர்களைச் சுற்றி வரையப்படும் கதிரொளியை குறித்துக் காட்டும். பிரிவினை சபையினரின் மொழிபெயர்ப்பில் ‘மகிமை’ என்று குறித்துள்ளார்கள்.

7. புகழ்ச்சி :

‘யுலோகியா’ என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரின் உயர்வைப் பற்றி பேசுவதையும், இறைவனின் ஆசீரை ஒருவர்மேல் எழுந்துவர வாழ்த்துவதையும் இச்சொல் குறிக்கும்.
எனவே இயேசுவின் தியாகம், வல்லமையுள்ளது, ஆற்றலுள்ளது, பெருமைக்குரியது. அதுவே ஒருவர் தேடவேண்டிய செல்வம், அறிவின் உச்சக்கட்டம்  என்று  இவ்வாழ்த்தொலி தெரிவிக்கிறது. தியாகம் ஏமாந்தவர்களின் செயல் என்றும், அதனால் பயன் வராது என்றும் மனிதர் கருதுகின்றனர். ஆனால் தியாகம் தெய்வீகம் என்பதைத் தான் திவெ 5 : 12 தெளிவுபடுத்துகின்றது. தியாகத்தை ஏற்போர் தெய்வீக ஒளிவீசுவர்.

No comments:

Post a Comment

Ads Inside Post