தூய ஆவியார் பெருவிழா
15 - 5 - 2016
தி ப 2 : 1 - 11, உரோ 8 : 8 - 17, யோவா 14 : 15 - 16, 23 - 26
- அருள்பணி ச. இ. அருள்சாமி
தூய ஆவியின் அனுபவத்தில் செயல்படுவோம்
வாகனங்களில் மிகவும் அவசியமானது எரிபொருள். தண்ணீர் போன்ற திரவம், சக்கரங்களை சுழல செய்கிறது. இது புதுமையான செயல். இயேசு, தன் சீடர்கள் தன் வழியில் இயங்க, வியக்கத்தக்க எரிபொருளைப் போன்று தூய ஆவியை நமக்குக் கொடுத்திருக்கிறார். அவர் ‘துணையாளர்’ என்றும் (யோவா 14 : 16 - 26) ‘உண்மையை வெளிப்படுத்தும் ஆவியானவர்’ என்றும் (யோவா 14 : 17) இன்றைய நற்செய்தி பகுதியில் குறிப்பிடப்படுகிறது. அவர் அனைத்தையும் கற்றுதருவார் என்றும், அனைத்தையும் நினைவுபடுத்துவார் என்றும் (யோவா 14 : 26) கூறப்பட்டுள்ளது. கற்றுத் தருவார் என்பதும், நினைவுபடுத்துவார் என்பதுதான் பொருள். (யோவா 2 : 22 இயேசு கோவிலை தூய்மை செய்தபோது இக்கோவிலை இடித்துவிடுங்கள், மூன்று நாளில் இதை கட்டி எழுப்புவேன் என்று இயேசு சொன்னதை நினைவு கூர்ந்தனர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது புரிந்துக் கொண்டனர் என்பது பொருள்). துணையாளர் என்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்கச் சொல் பாரா களேத்தோஸ் என்பது, ‘பாரா களேத்தோஸ்’ என்றால் ‘அருகிலிருந்து கூப்பிட்டுக் கொண்டிருப்பவர்’ என்று பொருள். ‘உண்மையை வெளிப்படுத்தும் ஆவியார்’ என்றாலும், ‘புரிய வைத்தல்’ என்றுதான் பொருள். மத்தேயு நற்செய்தியில் நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் ஒன்றுக்கு நூறாக பலன் தந்தது. இறை வார்த்தைகளைக் கேட்டு புரிந்துக் கொண்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது (மத் 13 : 23).
பிரட் இ ஒயிட் என்பவர் கூறுகிறார், கடவுளின் ஆவி நேர்மறையான மன தூண்டுதலைத் தருகிறது. ஆனால் மனித மனம் தற்பெருமையைத் தூண்டுகிறது என்கிறார். கேரி ஹேப்பிஸ் என்பவர், உன் சுய பெருமையை கட்டவீழ்த்துவிட்டால், தூய ஆவியாருக்கு செவிமடுக்கும் திறனை அது குறைத்து விடும் என்கிறார். தூய ஆவியின் வல்லமையுள்ள செயல்பாட்டை லூக்கா நற்செய்தியாளர், தன் நற்செய்தியிலும், திருத்தூதர்பணிகளிலும் விவரித்துக் கூறுகிறார். முதல் திருச்சபையில் ஏற்பட்ட நற்செய்தி அறிவிப்பு பணியில் திருப்பு முனைகளிலெல்லாம் தூய ஆவியின் செயல்பாட்டை லூக்கா குறிப்பிடுகிறார் (தி ப 2 : 1 - 4 ; 4 : 31; 8 : 17 - 18; 9 : 17 - 18; 10 : 44 - 11: 15; 19 : 6).
முதல் வாசகத்தில், திருத்தூதர்கள் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, வெவ்வேறான மொழிகளில் பேசுகிறார்கள். கூடியிருந்த மக்கள் தங்கள் சொந்த மொழியில் கேட்டு புரிந்துக் கொள்கிறார்கள்.
இரண்டாம் வாசகத்தில், கடவுளின் ஆவியால் நாம் இயக்கப்பட வேண்டும், ஊனியல்பின் ஆவியால் இயக்கப்படக் கூடாது என்கிறார்.
ஒவ்வொரு நாளும் தூய ஆவியுடன் நாம் அனுபவத்தில் வாழ்ந்திட வேண்டும். நம் வாழ்வு நற்செய்தியை விளம்பரப்படுத்தும் விதத்தில் அமைந்தால், அங்கு தூய ஆவி செயல்படுவார். 10ஆம் வகுப்பில் ஒரு மாணவர் முதல் மார்க் பெற்றதற்காக 15,000 ரூபாய் பரிசாக கொடுத்தார்கள். ‘நீ இந்த பணத்தை என்ன செய்வாய்?’ என்று அப்பையனைக் கேட்டார்கள். ‘என்னோடு படிக்கும் பல மாணவ, மாணவிகள் கிழிந்த உடையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல உடை வாங்கி தருவேன்’ என்றான். இதுதான் தூய ஆவியின் தூண்டுதல். நமக்கு துரோகம் செய்தவர்களை பழிவாங்குதல், பொருள் சேர்க்கும் வெறி ஆகியவை ஊனியல்பின் செயல்கள்.
“அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள (குறள் 241)”
No comments:
Post a Comment