திருப்பலி விளக்கம்
- அருள்பணி. எஸ். அருள்சாமி,
பெத்தானியா இல்லம், கும்பகோணம்
21. பலவகை நற்கருணை மன்றாட்டுகளின் இயல்பும் சிறப்பும் ( 2 )
2. இரண்டாவது நற்கருணை மன்றாட்டு
இந்த நற்கருணை மன்றாட்டு மிகவும் தொன்மையான ஹிப்போலிட்ஸின் ‘அனாபோரா’ (Anaphora) வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிலிருந்து சில காரியங்களில் இது வேறுபட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஹிப்போலிட்டஸின் ‘அனாபோரா’வில் இல்லாத தொடக்கவுரையை இந்த இரண்டாவது நற்கருணை மன்றாட்டில் காணமுடிகிறது. இந்த தொடக்கவுரை கடவுளின் மீட்பு செயல்களை முன்வைத்து புகழுரைக்கிறது.
அடுத்து ஒரு சுருக்கமான இடமாற்ற (Transition) செபம் காணிக்கைகளை அர்ப்பணிக்கும் செயலை நோக்கி (Consecratory Epiclesis) நகர்கிறது. பின் நற்கருணையை ஏற்படுத்திய விரிவுரை இடம் பெறுகிறது. இந்த விரிவுரை மற்ற நற்கருணை மன்றாட்டுகளில் இருக்கும் விரிவுரையைப் பின்பற்றுகிறது. நினைவு ஆர்ப்பரிப்பு மற்ற நற்கருணை மன்றாட்டுகளுடன் ஒத்துப்போகிறது.
அப்ப - இரச வசீகரங்களுக்குப் பின் முதல் நற்கருணை மன்றாட்டில் காணப்படுவது போல், ஒப்புக்கொடுக்கும் செபம், தூய ஆவியார் திருகுழுமத்தின் மீது இறங்கி வந்து ஒருங்கிணைக்கும் செபம் (Communion Epiclesis), திரு அவைக்கும், திருதந்தைக்கும், இறந்த ஆன்மாக்களுக்கும், திருப்பலிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் பரிந்துரை செபங்கள் இடம் பெறுகின்றன. புனிதர்களில் அன்னை மரியாவும், யோசேப்பும் திருத்தூதர்கள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றனர். அடுத்து இறுதி புகழுரையுடன் முடிவடைகிறது.
ஹிப்போலிட்டஸின் ‘அனாபோரா’ தந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனால் ஓரளவு மட்டும் இதில் வெற்றி பெறுகிறது. இரண்டாவது நற்கருணை மன்றாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தொடக்கவுரை படைப்பில் தொடங்கி மீட்பின் வரலாற்று நிகழ்வுகளை சுருக்கமாக குறிப்பிட்டு நன்றி செலுத்துகிறது. ஆனால் பழைய ஏற்பாட்டு மக்களை யாவே கடவுள் வழிநடத்தியமுறை இதில் இடம்பெறவில்லை. இந்த தொடக்கவுரை புதிய ஏற்பாட்டின் விசுவாச அறிக்கை போல் உள்ளது. இதனால்தான் இது ஞாயிற்று திருப்பலிக்கு உகந்ததன்று என சொல்லப்படுகிறது. ஏனெனில் ஞாயிற்று கிழமை திருப்பலியில் வார்த்தை வழிபாட்டின் இறுதியில் விசுவாச அறிக்கை வருகிறது. ஆதலால் இந்த நற்கருணை மன்றாட்டை வார நாள்களிலும் அல்லது தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கும் பயன்படுத்தலாம். இம்மன்றாட்டுக்கு உரிய தனிப்பட்ட தொடக்கவுரை இருந்தாலும். மற்ற தொடக்கவுரைகளைச் சிறப்பாக அவை மீட்புத் திட்டத்தை எடுத்துரைக்கும்போது அவற்றைப் பயன்படுத்தலாம்.
இரண்டாவது நற்கருணை மன்றாட்டின் மையம் கிறிஸ்து. தொடக்கவுரை கூட கிறிஸ்துவை மீட்பராக அனுப்பியதற்காக இறைதந்தைக்கு நன்றி நவில்கின்றது. மக்களை தந்தையிடம் கொண்டு சேர்க்க அவர் மனமுவந்து பாடுகளை ஏற்று தம்மை பலியாக்கினார். இவ்வாறாக கிறிஸ்து முக்கியத்துவம் பெறுகிறார்.
3. மூன்றாவது நற்கருணை மன்றாட்டு
இந்த நற்கருணை மன்றாட்டு தொன்மையான எந்தவொரு நற்கருணை மன்றாட்டையும் தழுவி அமைக்கப்பட்டதன்று . இது ஒரு புதிய படைப்பு. இருந்தாலும் உரோமை நற்கருணை மன்றாட்டின் கூர்மதியை உடைத்ததாக உள்ளது; அதனுடைய அமைப்பு முறையையும் கொண்டுள்ளது. கல்லிக்கன் வழிபாட்டு முறையின் சில தனிமத்தை இதில் காணலாம்.
முதல் நற்கருணை மன்றாட்டைப்போல், இதற்கும் உரித்தான தொடக்கவுரை கிடையாது. எனவே இதை எந்த தொடக்கவுரையுடனும் பயன்படுத்தலாம். ஞாயிற்றுக் கிழமைகளிலும் விழாக்களிலும் பயன்படுத்த இது மிகப் பொருத்தமானது. தொடக்கவுரையிலிருந்து ஒரு இணக்கமான நிலைபெயர்பை இதில் காணலாம். “ ஆண்டவரே நீர் மெய்யாகவே தூயவர்” என்று தொடங்கும் மன்றாட்டு தொடக்கவுரையில் குறிப்பிப்பட்ட ஆண்டவரின் மீட்புச் செயல்களின் சுருக்கமான தொகுப்பாக அமைந்துள்ளது.
இந்த நற்கருணை மன்றாட்டின் சிறப்பு அம்சம் தூய ஆவியாருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவமாகும். இதே தூய ஆவியார் தான் மக்கள் கொண்டு வந்த காணிக்கைகளை புனிதபடுத்தி பலிபொருளாகும் தகுதியை அளிக்கின்றார். கிறிஸ்துவ சமூகத்தை இறைவனுக்கு ‘தூய காணிக்கையை ஒப்புக்கொடுக்குமாறு’ ஒன்று கூட்டுகிறார். மேலும் இந்த பலியில் பங்கு பெறு வோரையும் புனிதப்படுத்துகிறார். நற்கருணையில் பங்கு பெறுவதின் வழியாக கிறிஸ்துவின் மறையுடலாக மாறும் ஆற்றலை அளிக்கின்றார்; அவர்கள் தூய ஆவியின் ஆலயமாகின்றார்கள்.
இதில் இறந்தோருக்கான மன்றாட்டை அதற்குரிய இடத்தில், அதாவது “இரக்கமுள்ள தந்தையே, எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய பிள்ளைகளைக் கனிவுடன் உம்மோடு சேர்த்துக் கொள்ளும்” எனும் சொற்களுக்குப் பின் பயன் படுத்தலாம்.
4. நான்காவது நற்கருணை மன்றாட்டு
புதிய நற்கருணை மன்றாட்டுகளில் இது மிகவும் பாராட்டுக்குரியது என்றால் அது மிகையாகாது. உரோமை மரபிலிருந்து விலகி அந்தியோக்கியன் மரபை நெருங்கியுள்ளது. அதாவது அந்தியோக்கியன் “திருத்தூதர்களின் விதி தொகுப்பின்” (Constitutiones Apostolorum) சாராம்சத்தைச் சார்ந்துள்ளது.
இந்த நற்கருணை மன்றாட்டின் முதல் பாதிபகுதி தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவதாக அமைந்துள்ளது. அதாவது (1) அவருடைய கடவுள் தன்மைக்கும் (2) படைப்புக்கும், சிறப்பாக மனிதனின் படைப்புக்கும், அவன் தவறினாலும் அவனை மீட்க வகுத்தத் திட்டத்திற்கும் (3 ) மனிதராகி, மெசியாவை அவர் வெளிப்படுத்தவும், பாடுகளை அனுபவித்து மரித்து உயிர்த்தெழவும் அவரை இவ்வுலகிற்கு அனுப்பியதற்கும், மற்றும் கிறிஸ்துவின் பாஸ்கா மறை பொருளில் பங்கு பெற்று அருள் அடையாள வாழ்வை வாழ்வதற்கு வாய்ப்பு அளித்தமைக்கும் நன்றி கூறப்படுகிறது. இந்நற்கருணை மன்றாட்டின் இரண்டாவது பகுதி மற்ற இரு புதிய நற்கருணை மன்றாட்டுகளோடு அமைப்பில் ஒத்துப்போகிறது. இருந்தாலும் பரிந்துரை மன்றாட்டுகளின் வரிசைக் கிரமத்தில் சிறிது வேறுபடுகிறது.
இந்த நற்கருணை மன்றாட்டில் தூய ஆவியார் காணிக்கைகளை அர்ச்சிக்கவும் (Consecretory Epiclesis) (“அதே தூய ஆவியார் இக்காணிக் கைகளை புனிதப்படுத்தியருள... ” ), மக்களை ஒன்று சேர்க்கவும் (Communion Epiclesis) - (“இந்த ஒரே அப்பத்திலும் கிண்ணத்திலும் பங்கு பெறும் அனைவரும் தூய ஆவியாரால் ஒரே உடலாக கூட்டிச் சேர்க்கப்பட்டு....”) வேண்டிய மன்றாட்டுகள் இடம் பெற்றுள்ளன. இந்த வகையில் மற்ற இரு (2+3) நற்கருணை மன்றாட்டுகளோடு ஒத்துப் போகிறது. இந்த ஒன்றிப்பு மன்றாட்டு இயல்பாக பரிந்துரைகளுக்கு நகர்வதைப் பார்க்கிறோம். அதாவது திருத்தந்தை, ஆயர்கள், திருநிலையினர் (Clergy), இறைமக்கள், நேர்மை உள்ளத்தோடு இறைவனை தேடுவோர் ஆகியவர்களின் ஒன்றிப்புக்காக பரிந்துரை மன்றாட்டுகள் இடம் பெற்றுள்ளன. மீட்பின் செயல் முழுவதிலும் தந்தையாம் கடவுள் செயல் முதல்வராகக் (Main Agent of Actor) காட்டப்பட்டுள்ளார். அதாவது தந்தையாகிய கடவுள் முக்கிய, மையமான இடம் வகிக்கிறார்.
இந்த நான்காவது நற்கருணை மன்றாட்டு மாற்ற முடியாத தொடக்கவுரையைக் கொண்டுள்ளது. திருப்பலிக்கென்று தனிப்பட்ட தொடக்கவுரை இல்லாத போதும், ஆண்டின் பொதுக்கால ஞாயிற்று கிழமைகளிலும் இதைப் பயன்படுத்தலாம். இதன் அமைப்பின் காரணத்தால் இதில் இறந்தோருக்கான சிறப்பு மன்றாட்டை இடையில் சேர்க்க முடியாது. ( காண் GIRM 365 ஈ). (தொடரும்...)
No comments:
Post a Comment