வெற்றி உங்கள் கையில்
- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்
சிறுபிள்ளையாக இருக்கும் போது நமது தாத்தா, பாட்டியிடம் இந்தக் கதையை நாம் கேட்டு இருப்போம். என்ன கதை அது? பாட்டி வடை சுட்ட போது காகம் வடையைத் திருடிய கதை. பாட்டி மரத்தடியில் வடை சுட்டார். காகத்திற்கு பயங்கர பசி. மரத்தின் மேலே அமர்ந்திருந்த அந்த காகம் பாட்டி சுட்ட வடையைத் திருடியது. அப்பொழுது அதன் வழியே வந்த நரி காகத்திடமிருந்து வடையைப் பெற ஆசைப்பட்டது. நரி அதனிடம் “நீ ரொம்ப அழகா இருக்க. ஒரு பாட்டு பாடேன்” என்றது காகம் “கா கா” என்று கத்தியது. வாயிலிருந்து வடை கீழே விழுந்தது. நரி அதை எடுத்து ஓடியது. இது ஒரு நீதிக் கதை. மற்றவர்கள் புகழ்வதைக் கண்டு ஏமாறாதே, ஏமாற்றாதே ஏமாந்து விடுவாய் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தாலும் அதில் சில எதிர்மறை எண்ணங்கள் விதைக்கப்படுகிறது. பசி - திருட்டு - பொய் - ஏமாற்றுதல் - ஏமாந்துபோதல் இவைகளை இக்கதை சொல்கிறது. காகம் வடையைத் திருடுகிறது. நரி அதை ஏமாற்றுகிறது. ஏமாற்றிய நரிக்கு என்ன தண்டனை?
ஆனால், இதே கதையை சீனாவில் எவ்வாறு சொல்லிக் கொடுக்கிறார்கள் தெரியுமா? பல கருத்துகளை உள்வாங்கும் வகையில் மாற்றி தருகிறார்கள். பாட்டி வடை சுட்டுக்கொண்டு இருக்கிறார். காகம் அங்கு வருகிறது. அது பாட்டியிடம் “பசிக்கிறது வடை கொடு” என்று கேட்கிறது.
பாட்டி : விறகு ஈரமாக இருப்பதால் அடுப்பு எரியவில்லை. பொருத்திரு தருகிறேன்.
காகம் : ( பறந்து சென்று ) தான் கட்டிய கூட்டிலிருந்து காய்ந்த குச்சிகளை எடுத்துவந்து பாட்டியிடம் தருகிறது. (உழைப்பு)
பாட்டி வடையைச் சுட்ட பிறகு காக்கைக்கு கொடுக்க மறந்து விட்டார். (முதலாளித்துவம்)
காகம் : பாட்டி! பாட்டி! நான் உழைத்த உழைப்பிற்கு கூலி கொடு. முதலில் நான் கேட்டது பிச்சை. இப்போது நான் கேட்பது கூலி. கொடு! (தொழிலாளர் உரிமை)
பாட்டி : மன்னித்துக்கொள் ( வடையைக் கொடுக்கிறார்)
காகம் வடையை எடுத்துக்கொண்டு தன் உழைப்பின் பலனை அனுபவித்துக்கொண்டே பறந்தது. ஒரு மரத்தில் அமர்ந்தது.
நரி: (எல்லா நாடுகளிலும் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் அல்லவா)
காக்கா! காக்கா! நீ அழகா இருக்கிறாய், பாட்டு ஒன்று பாடு. காகம் மயங்கி பாட்டு பாடியது (தொழிலாளர் பலவீனம்). வடை கீழே விழுந்தது. நரி வடையை கவ்வியது.
இந்த கதையை இத்தோடு முடிக்கவில்லை. இங்கு தான் முக்கியமான செய்தியை சொல்றாங்க. காகம் சத்தமாக கத்தியது. (தொழிலாளர் விழிப்புணர்வு) சத்தத்தைக் கேட்டவுடன் ஓராயிரம் காகங்கள் ஒன்றுக்கூடியது. (தொழிலாளர் சங்கம்) வடை திரும்ப பெறப்பட்டது. வடையைத் திருடிய நரி காகங்களுக்கு இரையானது. இவ்வாறு பல கருத்துக்களையும், பாடங்களையும் உள்ளடக்கி கதையை திருத்தி தந்திருக்கிறார்கள்.
பசி - உழைப்பு - தொழிலாளர் உரிமை - ஏமாற்றுதல் - தொழிலாளர் விழிப்புணர்வு ஆகிய ஆழ்ந்த கருத்துக்கள், கதையை கேட்கும் பிள்ளைகளுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. தற்போது க்ஷுலிற் மிற்ணுe ல் Vஷ்rழியி ஆக பரவிவரும் வீடியோ ‘ஜிமிக்கி கம்மல்’ என்ற மலையாளப்பாடல். இதன் அர்த்தம் “அம்மாவுடையை ஜிமிக்கி கம்மலை எடுத்துக் கொண்டுப்போய் விற்று அப்பா சரக்கு வாங்கி வருகிறார். அந்த சரக்கை அம்மா குடித்துவிடுகிறார்”. இந்த வீடியோ ஒரு கோடிக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கிறது. இதை பாப்புலராக்கியது நம் தமிழர்கள்தானாம்.
இந்தப் பாடல் மக்களின் மனதில் எதிர்மறை சிந்தனைகளை விதைக்கிறது. செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைத்தளங்கள் போன்ற சமூகத் தொடர்பு சாதனங்கள் பல நேரங்களில் எதிர்மறை எண்ணங்களையும், தீய செயல்பாடுகளையும் விதைக்கிறது. வியாபாரத்திற்காக நல்ல செய்திகளையும், நேர்மறை எண்ணங்கள் கொண்ட நிகழ்ச்சிகளையும், நல்ல விழுமியங்களை எடுத்துரைத்து வாழ்ந்து காட்டுகின்ற மனிதர்களையும் பதிவு செய்ய மறுக்கிறது, மறக்கிறது, இருட்டடிப்பு செய்கிறது. இந்தச் செய்திகளையும், பாடல்களையும் நிகழ்ச்சிகளையும் பார்க்கும் சிறுவர், சிறுமியர், இளைஞர், இளம்பெண்கள், பெரியவர்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரம் இது.
நண்பர்களே! நமது சிந்தனையில் நேர்மறை எண்ணங்கள் வெளிப்படுத்தப்படட்டும், நமது பார்வையில், சொல்லில், செயலில் நல்ல விழுமியங்கள் செயல்படுத்தப்படட்டும். நமது உள்ளத்தில் நல்ல நீதிக்கதைகள் பதிவு செய்யப்படட்டும். அப்போது தனி ஒருவனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே வெற்றி உண்டு! வெற்றி உண்டு! வெற்றி உண்டு!
“வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே,
என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்,
செய்வதை விரும்பிச் செய்,
செய்வதை நம்பிக்கையோடு செய்”. -
- Will Rogers
No comments:
Post a Comment