ஆசிரியர் பேனா
அருட்பணி. ச.இ. அருள்சாமி
1996 இல் என் அன்னை இறந்தபோது, அவர் கடைசி மூச்சுவிடும் காட்சிக்கு சாட்சியாக நின்றேன். அந்நிகழ்ச்சி என் வாழ்வில் பெரிய தாக்கத்தை தந்தது. வாழ்வு எவ்வளவு நிலையற்றது. வாழ்வு இவ்வுலகில் நிரந்தரமல்ல என்ற கருத்துகளை ஆழ்ந்து என் மனத்தில் ஒரு தழும்பை ஏற்படுத்தியது. அவர்கள் இறந்தது 82 வது வயதில். ஆனால் அவர்கள் மறைந்த பிறகு ஒரு வெற்றிடத்தை என்னில் உணர முடிந்தது.
கவிக்கோ அப்துல் ரகுமான் கூறுகிறார், கொஞ்சம் கொஞ்சமாய் இறப்பதற்குப் பெயர்தான் வாழ்க்கை என்கிறார்.
ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல (குறள் 337) என்கிறார் வள்ளுவர்.
நவம்பர் இரண்டாம் நாள் நம்மை விட்டு பிரிந்த சகோதர சகோதரிகளை உருக்கமுடன் நினைவு கூறுகிறோம். நம் உறவுகள் உலகில் வாழ்ந்தபோது நாம் காட்டிய பாசத்தை விட அவர்கள் மறைந்த பிறகு அவர்கள்மீது நாம் காட்டும் பாசம் பெரிதாக விளங்குகிறது. ஓர் அம்மையார், தன் கணவர் பெரிய குடிக்காரராக விளங்கி குடும்பத்தை கொடுமைப்படுத்தியதால் விம் வைத்து கொன்று விட்டார்கள். ஆனால் வருடா வருடம் ஆடம்பரத்துடன் தன் கணவரை நினைவு கூர்ந்து திவசம் வைப்பார்கள்.
நவம்பர் இரண்டில் இறந்த நம் உறவுகளை உருக்கமுடன் நினைவு கூறுகின்ற வேளையில், நம் வாழ்வின் ஒப்பற்ற பெருமையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்கிறார் ஒளவைப் பாட்டி. தற்கொலை செய்து கொள்வது, குடித்து வாழ்வை சீரழிப்பது, குடும்பங்களில் கணவன் மனைவி பிரிந்து வாழ்வது ஆகியவை மனித வாழ்வின் மாண்பை உணர்ந்து வாழாத நிலை எனலாம்.
ஒருவர் விடாமல் புகைப் பிடித்துக் கொண்டிருந்தார்.ஒரு நாளைக்கு 3 பாக்கெட் சிகரெட் ஊதிக்கொண்டிருந்தார். பழக்கமாகி விட்டது, விடமுடியவில்லை என்பது அவரது வாதம் இருமல் வந்தது. மருத்துவர், புகைப்பிடிப்பதை நிறுத்தாவிட்டால் மூன்றே மாதத்தில் இறந்து விடுவீர்கள் என்றார். அப்போதே சிகரட்டை விட்டெறிந்தார். மரணத்தை நினைப்பவர், தீயபழக்கங்களை அகற்றுவார், வாழ்வின் குறுகிய காலத்தைக் கருதி, பொருளுடன், மகிழ்வுடன் வாழ்வார்.
இவ்வாண்டு அன்னையின் அருட்சுடரின் பொன்விழா ஆண்டு 1967இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்விதழை குடந்தை மறைமாவட்ட குருக்கள், குடந்தை மறைமாவட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரிய பெருமக்கள், இவ்விதழுக்கு அடிப்படை ஆதரவாக நிற்கின்றனர். சந்தாதாரர்களும் பக்கபலமாய் நிற்கின்றனர். ஆனால் பொருளாதார அளவில் இன்னும் அதிக உதவி தேவைப்படுகிறது. தற்போது அன்னையின் அருட்சுடர் புதுபொழிவு பெற்று வருகிறது என்று பலர் சொல்ல கேட்கும்போது மகிழ்ச்சியாய் இருக்கிறது. கல்லக்குடி ஆரோக்கியமேரி, ஜெயங்கொண்டம் ஆரோக்கியமேரி, லால்குடி அக்ஸிலியா ஆகியோர் புதிய சந்தாதாரர்களை சேர்க்கவும், விளம்பரங்கள் பெற்றுதரவும் தற்போது பெரிதும் உதவுகிறார்கள். இவர்களைப் போல மற்றவர்களும் உதவி செய்தால், சிறப்பாக அன்னையின் அருட்சுடர் வளர்ச்சி பெறும். பொன்விழா ஆண்டின் நினைவாக, பொன்விழா நினைவுமலர் வருகிற மே மாதம் 100 பக்க அளவில் வெளியிடலாம் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் படைப்புகளையும் விளம்பரங்களையும் கொடுத்து உதவலாம்.
தமிழ்நாட்டில் இவ்வாண்டு நல்லமழை பொழிந்துள்ளது. இறைவனுக்கு நன்றி கூறுவோம். மரங்களை வளர்த்தால் இன்னும் நிறைய மழை பெறுவோம். டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர், சுமார் 10,000 க்கும் அதிகமாக பாதிக்ப்பட்டிருக்கிறார்கள். கொசுவினால் உண்டாகும் இக்கொடிய நோயை அகற்ற, அரசுடன் நாமும் முயல வேண்டும். சுற்றுபுறங்களை சுத்தமாக வைத்தால் கொசுக்கள் வளரும் வாய்ப்புக் குறையும். தமிழ்நாட்டு அரசியல் சூழல், ஆளும் கட்சியில் தண்ணீரில் ஏற்படும் நீர் சுழற்சியை போல் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியின் தளர்ச்சியால் தமிழ்நாட்டின் வளர்ச்சி தூக்க நிலையில் உள்ளது.
மெர்சல் படத்தைப் பற்றி விவாதம் நடக்கிறது. பி.ஜே.பி. மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி பற்றி பொய்யான தகவல்களை தந்திருக்கிறார்கள் என்று மெர்சல் பட குழுவினரை வசைபாடி வருகிறார்கள். ஊடகத் துறையினர், எதிர்க்கட்சியினர், கருத்து சுதந்திரத்தில் மத்தியில் ஆளும் கட்சியை கை வைக்கப் பார்க்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். பி.ஜே.பி. கட்சியினர் இப்பிரச்சனையில் மதசாயத்தை பூசி மக்களிடம் பிரிவு உணர்வை உட்புகுத்தவும் பார்க்கின்றனர். ஜோசப்விஜய் என்றும் சிமியோன் சீமோன் என்றும் மத வேற்றுமைகளைக் காட்டி தங்களின் அடிப்படை வாதத்தை நுழைக்கப் பார்க்கின்றனர். ஜி.எஸ்.டியும், ரு500,1000 பண மதிப்புக் குறைப்பும் மக்களின் பொருளாதார சூழலை பெரிதும் பாதித்துள்ளது. எனக்குத் தெரிந்த பலர் வேலையின்றி சுற்றி வருவதை காணமுடிகிறது. இன்றைய சூழ்நிலை, இன்றும் அதிகமாக அரசியல் விழிப்புணர்வுடனும், ஒற்றுமையுடனும் நாட்டிற்காக தியாக சிந்தனையுடனும் வாழ நம்மை அழைக்கிறது.
No comments:
Post a Comment