பணிவு என்னும் இனிய பாதை
அருள்பணி. மகுழன்,
பூண்டி மாதா தியான மையம்
17. உறவுகளே வாழ்வின் வேர்கள்
அவர் ஒரு சிறந்த ஆசிரியர். அவர் தன் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தோடு வாழ்க்கைப் பாடத்தையும் சொல்லித் தருவது வழக்கம். அதைப்போல அன்று ஒரு நல்ல வாழ்க்கைப் பாடத்தை சொல்லித் தந்தார். அன்று வகுப்பிற்கு ஒரு பெரியக் கண்ணாடிக்குடுவையை எடுத்துவந்து மாணவர்களுக்கு முன் வைத்தார். பிறகு ஒரு பையிலிருந்து பெரிய பெரிய கற்களை எடுத்து வந்து அந்தக் கண்ணாடிக் குடுவையின் விளிம்பு வரை போட்டுவிட்டு, இப்போது இந்தக் கண்ணாடிக் குடுவை நிரம்பியிருக்கிறதா? என்றுக் கேட்டார். மாணவர்கள், ஆம் என்றார்கள். அப்போது ஆசிரியர் நீங்கள் சொல்வது தவறு. இந்தக் கண்ணாடி குடுவையில் உள்ள கற்களுக்கும் இடையே இடைவெளி இருக்கிறது என்று சொல்லிவிட்டு இன்னொரு பையிலிருந்து கூழாங்கற்களை எடுத்து விளிம்புவரை நிரம்பினார். பிறகு மாணவர்களிடம் கேட்டார். இப்போது மாணவர்கள் விழித்துக் கொண்டார்கள். இல்லை சார், கூழாங்கற்களுக்கு இடையே இடைவெளி இருக்கிறது என்றார்கள். ஆசிரியர் இன்னொரு பையைத் திறந்து அதிலிருந்த மணலை குடுவையில் கொட்டி நிரப்பிவிட்டு, இப்போது குடுவை நிரம்பி இருக்கிறதா? என்று கேட்டார். மாணவர்கள் நிரம்பி இருக்கிறது சார், என்றார்கள். அப்போது ஆசிரியர் நீங்கள் சொல்வது தவறு. இன்னும் மணல்களுக்கு இடையே இடைவெளி இருக்கிறது என்று சொல்லிவிட்டு கண்ணாடிக் குடுவையின் விளிம்பு வரை தண்ணீர் ஊற்றினார். பிறகு மாணவர்களைப் பார்த்து சொன்னார். இப்போதுதான் இந்தக் குடுவை நிரம்பி இருக்கிறது.
பிறகு வாழ்க்கைப் பாடத்தை ஆரம்பித்தார். இதைப்போன்றுதான் நம் வாழ்க்கை. நம் வாழ்க்கையின் வேர்கள்தான் உறவுகள். உறவுகள் இல்லாமல் நம் வாழ்வு என்றும் வளர முடியாது. கனி தர முடியாது. நிழல் தர முடியாது. நம் வாழ்வின் ஆணிவேரைப் போன்றது நம் இறை உறவு. தண்ணீரைப் போன்றது இறை உறவு. தண்ணீரைப் போல இருக்கும் இறைவனை நாம் பார்க்க முடியாது. ஆனால் அந்த தண்ணீரைப் போல இறைபிரசன்னம் இல்லாத இடமே இல்லை. மேலும் அந்தத் தண்ணீரைப் போல எல்லா உறவுகளையும் இணைப்பதும் இறைவன்தான். எவ்வாறு தண்ணீர் இல்லாமல் அந்த கண்ணாடிக்குடுவை நிறைவுப் பெறாதா அதைப்போலவே இறைவன் இல்லாமல் நம் வாழ்வும் நிறைவு அடையாது.
அந்தக் குடுவையில் உள்ள மணலைப் போன்றதுதான் நம் குடும்ப உறவுகள். கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர், முதியவர்கள் அனைவருக்கும் நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள். நாம் எப்படி குடும்பத்தில் இருக்கிறோமோ அதைப் போன்றுதான் நம் வாழ்க்கையிலும் இருப்போம். நம் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருந்தால் நம் வாழ்விலும் மகிழ்ச்சியாக இருப்போம். நம்குடும்பத்தில் அமைதியின்றி இருந்தால் நம் வாழ்க்கை முழுவதும் அமைதியின்றி இருப்போம். எனவே நம் குடும்பத்தின் மீது நாம் அக்கறை காட்ட வேண்டும். நம் குடும்பத்தின் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும். நம் குடும்பத்தில் மனவருத்தம் ஏற்படுவது இயல்பு. ஆனால் அந்த மனவருத்தத்தை எவ்வளவு சீக்கிரமாக களைகிறோமோ அவ்வளவு மகிழ்ச்சி மிக்கதாக நம் குடும்பம் மாறும். அதே வேளையில் நம் குடும்பத்தின் மீது அதீத அன்பு காட்டக்கூடாது. நம் குடும்பத்தின் மீதான அதீத அன்பு மற்ற உறவுகளைச் சிதைத்து விடும். இறைவனுக்கு மேலாக குடும்பத்தை அன்பு செய்யத் தொடங்கும்போது செபம் அர்த்தமற்றதாகி, பொழுதுபோக்கு, தொழில் முதலியவை முன்னிலை வகிக்கின்றன. குடும்ப உறவு மட்டுமே போதும், சமூக நலன் வேண்டாம் என்று நினைப்பவர்கள்தான் ஊழல், இலஞ்சம், ஏமாற்று வேலைகள் போன்றவை உலகில் நிஜம் பெறுகின்றன. அவ்வாறு அந்தக் கண்ணாடிக் குடுவையில் மணலோடு சேர்ந்து தண்ணீர், கூழாங்கற்கள், பெரிய கற்கள் இடம் பெற்றனவோ அதைப்போலவே நம் வாழ்விலும் குடும்ப உறவைத் தாண்டி இறை உறவும், பிறர் உறவும் இடம் பெற ¼ண்டும்.
அந்தக் குடுவையில் உள்ள கூழாங்கற்களைப் போன்றவர்கள் நம் பணித் தளத்தில் இருப்பவர்கள் மற்றும் நண்பர்கள். எவ்வாறு கண்ணாடி குடுவையை கூழாங்கற்கள் பெரிதும் ஆக்கிரமித்துள்ளதோ அதைப் போன்றே பணித்தள நபர்களும், நண்பர்களும் நாம் வாழ்வை பெரிதும் ஆக்கிரத்திருப்பதை நாம் உணரலாம்.
நண்பர்களோடு பொழுது போக்குவது நம் வாழ்வில் மறக்க முடியாத இனிய நினைவுகளைத் தரும். பள்ளிப்பருவ நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் நம் வாழ்வின் பக்கத்தை பெரிதும் நிரப்பி உள்ளார்கள் என்பதை நாம் அறிவோம். அண்டை வீட்டாரோடு நல்ல உறவு, தொழில் புரியும்போது உண்மை, அன்பு,கருணை முதலிய பண்புகளை நாம் கடைபிடிக்கும் போது இந்த உறவுநிலைகள் சிறப்பாக இருக்கும்.
அந்தக் குடுவையில் உள்ள பெரியக் கற்களை போன்றதுதான் நாம் வாழும் இந்த பூமி மற்றும் நாம் சார்ந்து வாழுகின்ற சமூகம். பல சமயங்களில் நம்மீது நாம் காட்டுகின்ற அன்பில் நூறில் ஒரு பகுதியைக் கூட நாம் சமூகத்திற்கு காட்டுவதில்லை. நம் குடும்பத்தின் மீது நாம் காட்டுகின்ற அன்பில் பத்தில் ஒரு பகுதியைக் கூட நம் சமூகத்திற்குக் காட்டுவதில்லை. நம் அனைவருக்கும் இன்றும் கொஞ்சம் அதிகமாக சமூக அக்கறையும், சமூக பொறுப்பும் இருக்க வேண்டும் என அண்மைக் காலமாக அதிகமாக உணர்கிறேன். இந்த பூமி என்பது நம் பெரியக் குடும்பம். நம் சமூகம் அல்லது ஊர் (பங்கு) என்பது கொஞ்சம் சிறியக் குடும்பம். இப்பதிலே மிகவும் குட்டியான குடும்பம்தான். நம் மனைவி, மக்கள். எனவே பெரியக்குடும்பங்களையும், நம் குட்டிக் குடும்பம் போன்று பாவித்து அன்பு செய்ய வேண்டும். நம் வீட்டில் குப்பை இருந்தால் நாம் வெறுக்கிறோம். அதே நேரத்தில் நம் ஊரில் குப்பை இருந்தால் அதனை சரி செய்கிறோமா? நம் வீட்டில் யாருக்கும் உடல்நிலை சரியில்லை என்றால் வருந்துகிறோம். நம் தமிழகத்தில் டெங்குக் காய்ச்சலால் பலியானவர்களுக்காக போராட தயாராக இருக்கிறோமா?
சரிங்க, இந்த கண்ணாடிக் குடுவை உவமையினால் நான் சொல்ல வருவது என்னவென்றால் நம் வாழ்வில் உறவுகள் தான் அடிப்படை. உறவுகள் சிறப்பாக இருந்தால் வாழ்வு சிறப்பாக இருக்கும். உறவுகளின் ஊற்றுக்கண். அன்பு நம் அன்பு எப்போதும் பலமடங்கு அதிகமாக பலனளிக்கும். அதற்கு என் வாழ்விலிருந்தே ஒரு உதாரணம் தருகிறேன். எனக்கு ஒருவரை மிகவும் பிடிக்கும். அவரும் என்னை அன்பு செய்கிறார். நான் அவரை அன்பு செய்வதைப் போல 4 மடங்கு அதிகமாக அவர் என்னை அன்பு செய்கிறார். அவர் பெயர் ரோசி. என்னாங்க, ரொம்ப யோசிக்காதீங்க. அவர்தான் நான் வளர்க்கும் என் செல்ல நாய்க்குட்டி. எனவே அன்பு செய்வோம். உறவை வளர்ப்போம். அப்போது வாழ்வு இனிமை பெறும். - (தொடரும்...)
No comments:
Post a Comment