பொதுக்காலம் 31 ஆம் ஞாயிறு
( 05 - 11 - 2017)
மலாக் 1:14 -2: 1-2, 3-10; 1 தெச 2: 7-9, 13; மத் 23: 1 - 12
ஒரு நடிகையை பெரிய நகைக் கடைத் திறப்பு விழாவிற்கு அழைத்திருந்தார்களாம். விமானத்தில் நடிகை வந்து விட்டார். ஆனால் விமான நிலையத்திலிருந்து கடைக்கு அழைத்துவர ஏ.சி. கார் வந்தால்தான் வருவேன் என்று அடம்பிடித்தார் நடிகை. புதிதாக ஏ.சி. கார் ஏற்பாடு செய்ய சில மணி நேரங்கள் ஆனதாம். இப்போது பந்தாவிற்குதான் மரியாதை. எளிமைக்கு அவமரியாதை தான். பந்தா என்ற மதிப்பினைப் பயன்படுத்தி பலர் மக்களை ஏமாற்றி விடுகின்றனர். வருமான வரி அலுவலர் என்று ஆடம்பரமாக வந்து, வீட்டினை சோதனை செய்யும் நேரத்தில், வீட்டினருக்கு சந்தேகம் எழ, அதிகாரிகளுக்குத் தெரிவிக்க, அவர்களின் வெளிவேடம் தெரிய வர, வேடமிட்டு வந்தவர்கள் பயங்கரமாக அடி வாங்கினார்கள்.
விழாக்களில் போட்டிப் போட்டுக் கொண்டு ஆடம்பர அலங்காரங்கள், வேடிக்கைகள், கேளிக்கைகள் நடைபெறுகின்றன. ஒரு பெரிய பணக்கார வீட்டுத் திருமணம். பல அருள்பணியாளர்கள் திருப்பலியில் பங்குப் பெற்றனர். பிரபலப் பாடகரின் கச்சேரி, குதிரை சரட்டு வண்டியில் ஊர்வலம், ஒருவருக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள உணவின் விருந்து. இப்படியாக எல்லோரும் வியக்கும் வண்ணம் பெருமையுடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு ஒரே வாரத்தில் மணமக்கள் பிரிந்து விட்டனர். வரதட்சணைப் பொருள்களையயல்லாம் எடுத்து சென்று விட்டனர். ஆடம்பரத்தின் பயன் என்ன?
பரிசேயரும் மறைநூல் அறிஞரும் கற்றறிந்த சமயத் தலைவர்களும் மக்களுக்கு அறநெறிகளைப் போதிப்பவர்கள். சிறப்பாக அவர்கள் போதிக்கும் பணியை செய்து வந்தார்கள். இயேசு, திருமுழுக்கு யோவனைப் போல பயப்படாமல், அந்த தலைவர்களின் வெளிவேட வாழ்க்கையை கண்டித்துப் பேசுகிறார். அவர்கள் போதித்ததைப் போல வாழ்வதில்லை. இறைவனின் சவாலான வழியை மக்களுக்குக் காட்டிவிட்டு, அதிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறார்கள். மக்கள்மீது சுமைகளை கட்டி விடுகிறார்கள். விரலால் கூடத் தொட முன் வரமாட்டார்கள் என்கிறார் இயேசு. இரண்டாவது, மனிதர்களின் கவனத்தைப் பெற நெற்றியிலும் கையிலும் கட்டிக் கொள்கின்ற பட்டயங்களையும், அங்கிகளின் இறுதியில் சேர்க்கப்படும் குஞ்சங்களையும், மக்களின் கண்களில் நன்கு படும்படி பெரிதாக்கிக் கொள்கிறார்கள். மூன்றாவதாக, மனிதர் தரும் பெருமையை, பொது இடங்களில் (விருந்து, தொழுகைக் கூடங்கள்) விரும்பிப் பெறுகிறார்கள். நான்காவதாக, தங்களைப் பெருமையுடன் மற்றவர்கள், ரபி, தந்தை, ஆசிரியர் என்று அழைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தாங்கள் செய்ய வேண்டியத் தொண்டினை மறந்து பெருமையை மட்டும் விரும்பி தேடினார்கள்.
மத் 23: 1-36 என்ற பகுதி இயேசு பரிசேயர்களைக் கண்டிப்பதைக் காட்டுகிறது. பரிசேயர்கள், ரபி, தந்தை, ஆசிரியர் என்று அழைக்க விரும்பினர். ஆனால் அவர்கள் வெளிவேடக்காரர் (5 முறை), குருட்டு வழிக்காட்டிகள் (2 முறை), குருடர், குருட்டுமடையர், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள், பாம்புகள், விரியன் பாம்புக் குட்டிகள் என்று மிகக் கடினமாக அவர்களைச் சாடுகிறார்.
முதல் வாசகத்தில், ‘நீங்கள் செவிசாய்க்காவிடில் உங்கள்மேல் சாபத்தை அனுப்புவேன். நான் செய்த உடன்படிக்கையை பாழாக்கி விட்டீர்கள். ஆதலால் நானும் உங்களை மக்கள் அனைவர் முன்னிலையில் இழிவுக்கும் தாழ்வுக்கும் ஆளாக்குவேன்’ என்ற வாக்கியங்களைக் கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.
இரண்டாம் வாசகத்தில், ‘நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக் கொண்டீர்கள்’ என்று பவுல் தெசலோனிக்க மக்களைப் பாராட்டுகிறார். 1 சாமு16:7இல் ‘மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்’ என்று கூறப்பட்டுள்ளது. மனிதர் முன், பெருமையை, மனிதரை ஏமாற்றும் கருவியாக மனிதர் பயன்படுத்துகின்றனர். மனிதர் தரும் பெருமை கானல் நீர் போன்றது. தற்போது, வெளித்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேல்நாட்டு நாகரீகத்தைப் பின்பற்றி, விதவிதமான ஆடைகளை அணிகிறார்கள். பெண்களுக்கு நகையின் மீது மோகம், உள்ளாந்திர உறவுகள் குறைகின்றன. நாகரீகம் வளர வளர, உள்ளந்திறந்த உரையாடல்கள், பகிர்தல் ஆகியவை குறைகின்றன. தங்களின் வாழ்வை இரகசியமாக வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். நம் குடும்ப சிக்கல்கள் மற்றவர்களுக்குத் தெரிந்தால் நம் மானம் மரியாதை என்னாவது? என்று மிகவும் கவனமாயிருப்பார்கள். ஒரு நகைச்சுவையில், பெண் பார்க்கப் போகிறார்கள். பெண் நன்கு அலங்கரித்து வருகிறாள். மாப்பிள்ளையின் நண்பன் கூறுகிறான். இப்போது டபுள்கோட் அடித்து வந்திருப்பாள், மேக்கப்பை களைந்து வழக்கமான நைட்டியுடன் வரச்சொல் என்கிறான். மாப்பிள்ளையும் அப்படியே கூறுகிறான். பெண்பார்க்கும் நிகழ்வு சண்டையின் நிகழ்வாக மாறுகிறது.
நகைச் சுவையின் உணவு வெளிவேடம் - மோரோக்கா.
No comments:
Post a Comment