Pages - Menu

Thursday 2 November 2017

பொதுக்காலம் 33ம் ஞாயிறு

பொதுக்காலம் 33ம் ஞாயிறு
அருட்பணி. மரிய அந்தோணி ஜேம்ஸ்,
                                                                    குடந்தை. 
 நீ.மொ 31: 10-13, 19-20,30-31;  1 தெச 5: 1 - 6;      மத் 25: 14-30

உழைப்பின்  உயர்வு

  வாழ்க்கை வாழ்வதற்கே! வெற்றி நிச்சயம் நமக்கே! என்று சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைகாட்சிப் பெட்டியிலே ஒளிப்பரப்பபட்ட  விளம்பரங்களின் பாடல் நினைவுக்கு வருகிறது. வாழ்வை வாழ வேண்டுமென்றால், அவ்வாழ்விலே  ஆர்வமும், பிடிப்பும் இருக்க வேண்டும். அப்பிடிப்பு இருக்க வேண்டுமெனில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை வேண்டும். அவ்வாசையானது  உழைப்பாக உருவெடுக்கையிலே உயர்வு தானாகவே தேடி வந்துவிடும். திருவழிபாட்டின் பொதுகாலத்தின் 33‡ம் ஞாயிறில், இறைவன் நம்மை சிந்திக்க அழைப்பு விடுப்பது யாதெனில், உழைப்பே ஒருவரின் உயர்வுக்கு அஸ்திவரமாக அமைகிறது.

சிறுவயதிலே, பள்ளிப்பருவங்களில், நீ என்னவாக எதிர்காலத்தில் உருவாக விரும்புகிறாய் என்றால் பவ்வேறு விதமான பதில்களை மாணவர்கள் கூறுவார்கள். அவ்வார்த்தைகள் அனைத்தும் முழுமையடைந்து வெற்றிப் பெருநல் என்பது  அவர்களது எண்ணத்திலும், உழைப்பிலுமே அடங்கியுள்ளது.

பட்டுப்புழு ஒன்று தனது பட்டுநூலை கட்டிக்கொண்டிருந்தது அதைக் கண்ட சிலந்தி பூச்சி சொன்னது, நீ மட்டும்தான் நூல் கட்டுவாயா நானும் கட்டுவேன் என்று விறுவிறுவென, தனது சிலந்தி கூட்டினை கட்டியதும், அந்த கூட்டிற்கு  வீட்டின் விலாசத்தையும் சேர்த்து எழுதியது. பின்பு நக்கலாக, என்ன பட்டு புழுவாரே  நான் எனது கூட்டை கட்டி முடித்துவிட்டேன். நீ எப்போது  முடிப்பாய் என்றது. அதற்கு பட்டு பூச்சி சொன்னது. உன் வலையும், என் வலையும் ஒன்றல்ல, உன் கூடானது பூச்சிகளை பிடிக்கவே, மக்களும் உன்னை நூலாம்படை எனச்சொல்லி விளக்கமாத்தால் அடித்துக் களைப்பார்கள் ஆனால் என் நூலையோ பத்திரப்படுத்தி வைத்து அணிந்துக்கொள்வார்கள். நூல் ஒன்றாக இருப்பது போல் தோன்றினாலும், என் உழைப்பே எனக்கு உயர்வையும் மதிப்பையும் கொண்டு வருகிறது என்றதாம்.

ஆம், அன்பு மக்களே, நாமும் நமது வாழ்விலே பல்லேறு விதங்களில் தேவையின் அர்த்தம்  அறியாமல் உழைக்கின்றோம். இன்றைய நற்செய்தியிலும் இயேசு கூறுகின்ற உவமைகளில் நாம் காண்பதும் அதுவே. வெளியே பயணம் மேற்கொண்ட தலைவர், தன் பணியாட்களுக்கு ஐந்து, மூன்று, ஒன்றென தாலந்துகளை கொடுக்க, அவர்களுள் சிலர் அந்த தாலந்துகளின் மதிப்பினை கூட்டுகின்றனர். சிலர் உழைக்கின்றனர். ஆனால் உழைப்பின் பயனேதும் இல்லாமல் சிலந்தி  தான் எடுத்த வாந்தியால் கட்டிய கூட்டை போன்று ,  வெளிப்புறத் தோற்றம் அழகு நிறைந்திருப்பினும்  தன் வாழ்வால் உயர்வு பெறாமல் அழிந்து,  பிறர் வாழ்வு அழிகின்ற பணியாளனின்  நிலையை நாம் வாசகத்தின் வழியாக கேட்டறிகின்றோம்.

இங்கே தாலந்து என்று குறிப்பிடப்படுவது இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் திறமைகளும் கொடைகளும் 1கொரி 12:4‡11 புனித பவுல் அடிகளார் குறிப்பிடுவது போன்று  நமக்கு இறைவன் பல்வேறு விதமான கொடைகளையும், திறமைகளையும் வழங்கியுள்ளார். சிலருக்கு நல்ல ஞானத்தையும், சிலருக்கு நன்கு பேசும் திறமையும் என தூய ஆவியாரின் சிறப்பு கொடைகளான தனது கடிதத்தில் பட்டியலிடுகிறார்.

நற்செய்தியில் ஐந்து தாலந்து பெற்ற மனிதர் தாலந்தின் மதிப்பை உணர்ந்து,  தனக்கு கொடுத்த வாய்ப்பினை பயன்படுத்தி தன் தலைவரிடம் மதிப்பு பெற வேண்டுமென உணர்ந்து,  அதற்கு உழைப்பே சிறந்ததென்று மேலும் ஐந்து தாலந்தை சம்பாதித்தான். மூன்று தாலந்து வாங்கியவனும் அவ்வாறே செய்தான். ஆனால் ஒரு தாலந்து வாங்கியவனோ,  எப்படியயன்றால், சில நண்பர்கள் நடு இரவு வரை நன்றாக குடித்து கும்மாளமிட்டுவிட்டு நதியின் அக்கரையில் இருந்து துடுப்பு போடுகிறார்கள். அதிகாலை வந்துவிட்டது காலை வெளிச்சத்தில் பார்க்கிறார்கள் படகு அதே நங்கூரத்தில் கட்டிய கயிற்றை அவர்கள் அவிழ்க்கவில்லை. இரவு முழுவதும் துடுப்பு போட்டும் ஒரு பயனும் இல்லை, எல்லாம் வீண் அநேகர் நிலைமை இவ்வாறே உள்ளது. பத்து வருடம் கழித்து நண்பர் பார்த்து, எப்படி இருக்கிறாய்? என்றால் அப்படியே இருக்கிறேன் என்பார். அதாவது அதே இடத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், வயது மட்டும்தான் கூடுதலாகும். அதுபோன்று தான் அவனுடைய செயல்பாடுகளும் தனக்குக் கொடுத்த வாய்ப்பினை பயன்படுத்தாமல் எதற்கும் பயனில்லாமல் நேரத்தையும் வீணடித்து தன் தலைவரின் குணம் இவ்வாறு எனத் தெரிந்தும் உழைத்து முன்னேறாமல் சோம்பேறியாய் இருக்கின்றான்.

உலக வாழ்விலே உழைத்து முன்னேறிய தலைவர்கள் பலர். ஆங்கில இலக்கியம் போற்றும் ஷேக்ஸ்பியர் குதிரை லாயத்தில் குதிரை சாணம் அள்ளிக் கொண்டிருந்தவர். அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் சட்டம் படிக்க புத்தகங்களை வாங்க பணமில்லாமல் கடன் வாங்கி படித்தவர். புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்த நியூட்டன் சிறுவயதில் மாடு மேய்த்தவர். இவ்வாறாக நாம் வியக்கின்ற மாபெரும் மனிதர்கள் தங்கள் உழைப்பினால் உயர்ந்து வரலாற்றில் தடம் பதித்துள்ளார்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

இன்றைய திருவழிபாடும் நமக்கு உணர்த்துவதும் அதனையே. தாலந்து என்னும் திறமை எல்லோருக்கும் புதைந்திருக்கிறது. திறமைகளில்லாத மனிதர்கள் இல்லை. ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள தன் திறமையை பயன்படுத்தி உழைத்து தனது முன்னேற்றத்தை தீர்மானிக்கவும்,  தாலந்து ஒப்படைத்து சென்று மீண்டும் திரும்பி வந்து கேட்ட நேரத்தில் எதிர்பார்க்காத பணியாளனைப் போல் அல்லாமல்,  எந்த நேரத்திலும் இறைவனை சந்திக்க தயாரோடு  நாம் இருக்கவும், திருமுழுக்கினால் பெற்ற இறைவிசுவாசத்தை தனது திறமைகளையும், கொடைகளையும் பயன்படுத்தி, உழைப்பினால் உயர்வு பெறவுமே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இறைவன் தனக்கு அளித்துள்ள சிறப்பு கொடைகள் யாது, அவற்றின் மூலம் எனது பயன் என்ன என்றெல்லாம் அறிந்து, நமது உழைப்பால் நாமும்  உயர்ந்து, பிறரையும் வாழ வைக்கின்ற மனிதர்களாய் வாழ்ந்திட  இறைவனின் அருள் வேண்டுவோம். உழைப்பால் உயர்வு பெற்றிட நம்மையே இறைவன் பாதத்தில் அர்ப்பணிப்போம்.

No comments:

Post a Comment

Ads Inside Post