அன்னை மரியாள் இறைவனின் தாய் - புத்தாண்டு பெருவிழா
01 - 01 - 2017
,
இறைமையும், மனிதமும் இணைந்தது மரியில் - இதனால்
மாண்பும், புனிதமும் மலர்ந்தது மனிதரில்
பிறந்துள்ள புத்தாண்டில், புது வாழ்வு சிறக்கட்டும்
அல்லவை நீங்கட்டும், நல்லவை நடக்கட்டும்
இயற்கை செழிக்கட்டும், இனிமை பொங்கட்டும்
மதவெறி மடியட்டும், மனித நேயம் மலரட்டும்
அன்பு பெருகட்டும், அருள் பொழியட்டும்
உறவுகள் சூழட்டும், உண்மைகள் நிலைக்கட்டும்
இறைவனின் அன்னை பெருநாளில் இனியவை பூக்கட்டும்
உலகம் இன்று புத்தாண்டு விழாவை சிறப்பித்து கொண்டாடும் வேளையில், நம் திருஅவை அன்னை மரியா, இறைவனின் தாய் என்ற பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றது. காரணம், அன்னை மரியா இயேசுவைச் சுமந்த ஆலயம். அகிலத்தை காப்பவரை, தன் உதிரத்தில் காத்தவர். சர்ப்பத்தால் வந்த சாபத்தை தனது கர்ப்பத்தால் தீர்த்தவர். காலங்களை கடந்தவர் காலம் நிறைவுற்ற போது, காலத்தில் கரையவும், மனிதத்தில் கலக்கவும், தன் நிலைத் துறந்து, நம் நிலை ஏற்க விரும்பிய போது (கலா 4 : 5) “நிகழட்டும்” என்றார், நம் அன்னை, (லூக் 1 : 38). தன் உடலை உருக்கி, உணவாக்கி, ஒன்பது மாதமளவு உன்னத இறைவனின் உடலை வளர்த்து 57 டெல் யூனிட் வலியுடன் (பிரசவத்தின் போது, ஒரு தாய் படும் வலியின் அளவு, மற்றும் ஒரே நேரத்தில் 200 எலும்புகள் முறியும் அளவுக்கு வேதனை) இப்புவிக்கு இறைவனை கொணர்ந்தாள். பத்து நிமிடங்கள், நாம் எதையும் சுமந்தால், நம் தோல் வலிக்கின்றது. ஆனால் பத்து மாதங்கள் தன் கருவறையில், குழந்தையை சுமக்கும் தாய்க்கு மட்டும் எப்படி இனிக்கிறது? இறைவனை தன் உதிரத்தில் மட்டுமல்ல, தன் உள்ளத்தில் சுமந்தவர் அன்னை மரியா. எனவே! இறைவனுக்கும், அன்னை மரியாவுக்கும் இடையேயான உறவு, சந்தித்தலில் பூத்ததல்ல, இரத்தத்தில் பூத்தது. தாய்மை என்பது கருவின் சரித்திரம், உயிரின் பிறப்பிடம், ஒப்பிட முடியா அழகு, வர்ணிக்க முடியா அன்பு. இத்தகைய அன்னையை புறந்தள்ளிப் போகின்றவர்களும், புறங்கூறிப் பேசுகின்றவர்களும் அதிகரித்து வருகின்ற சூழலில் தான் நம் திருத்தந்தை பிரான்சிஸ், தன்னுடைய டிவுட்டர் வலை தளத்தில் “அன்னை மரியாவை தன் தாயாக உணராத கிறிஸ்தவர்கள் அனாதைகள்” என்று குறிப்பிடுகிறார். (02, செப்.2014) மரியன்னைக்கும், இறைவனுக்குமான உறவை புரிந்துக் கொள்ளாமல் வாதம் பண்ணுபவர்கள் (திப 20 : 28 அடிப்படையில்) இன்று மட்டுமல்ல, தொடக்க திருஅவையின் காலத்திலேயிருந்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இறைவனின் மீட்பு திட்டத்தில் அன்னை மரியா ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில்தான் திருஅவை ஆண்டின் முதல் நாளே, அன்னை மரியாவை சிறப்பிக்கின்றது.
அன்னை மரியா இறைவனின் தாய் என்று இவ்விழா கோட்பாடு இறையியல் அடிப்படையில் ஆழமான கிறிஸ்தவியல் சிந்தனைகளைக் கொண்டது. மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளாகிய இறைமகன் இயேசுவின் இறைத்தன்மையும், மனிதத்தன்மையும் குறித்த மறையுண்மைகயை சீரணிக்கின்ற விழா இது. ஒரு சாதாரண நாசரேத்து பெண், எவ்வாறு இறைவனுக்கு தாயாக முடியும்? அப்படியானால் இறைவனால் படைக்கப்பட்ட அன்னை மரியா, இறைவனைவிட வல்லமை கொண்டவரா அல்லது ஆயர் நெஸ்டோரியசின் தப்பரைக் கோட்பாட்டின் படி, இயேசுவின் மனித இயல்புக்கு மட்டும் தாயா அல்லது இறைத்தன்மை அவர் பிறந்த பின் வந்து ஒட்டிக்கொண்டதா போன்ற கேள்விகள் தொடக்க திருஅவையிலும் இருந்தது. கி.பி.431இல் கூடிய எபேசு மாமன்றம் இத்தகைய குழப்பங்களுக்கு தெளிவான விளக்கமளித்து, கோட்பாட்டைப் பிரகடனப்படுத்தியது. அதனடிப்படையில் ஆண்டவர் இயேசு கடவுளும், மனிதனுமானவர், அவரில் இரண்டு இயல்புகளும், மனுவுரு எடுத்த நொடிப்பொழுதில் இணைந்தன என்றும், அதனால் அன்னை மரியா, தன் உதிரத்தில் சுமந்த, இறை மனித இயல்புகளைக் கொண்ட இறைமகன் இயேசு என்றும், இதனால் இறைவனை தன் கருவறையில் வைத்து வளர்த்த, அன்னை மரியா இறைவனின் தாய் அல்லது இறைவனை சுமப்பவர் என்றும் அறிதியிட்டு கூறியது. இறைமகன் இயேசுவின் இறைத்தன்மையும், மனித தன்மையையும் இவ்விழா விளக்குகிறது எனலாம். ஆண்டவர் இயேசு, தன் தாயிடமிருந்துதான் தன் மனித தன்மையை சாதாரண எந்த மனிதரைப் போலவும் பெறுகின்றார். அன்னை மரியாவைப் போல, வேறு எந்த மனிதரும் இந்த அளவுக்கு, இறைவனோடு இரத்த உறவுடன் இருந்திருக்க முடியாது. இறைவனின் மனுவுரு எடுத்தலில் அன்னை மரியாவின் “ஆகட்டும்” மிக முக்கியமான ஒன்று. அதே வேளையில் மனித குல மீட்புக்காக இதை முன்னெடுத்தது இறைவனே அன்றி, மரியா அல்ல.
அன்னை மரியாவின் பெருவிழா நாளில் பிறக்கின்ற இப்புத்தாண்டு சிறக்கட்டும், இனியவை நடக்கட்டும், ஈகை பெருகட்டும். இன்றைய முதல் வாசகத்தில் (எண் 6 : 22 - 27) ஆண்டவர் மோசே வழியாக, ஆரோனுக்கு கொடுத்த இறையாசீர், இப்புத்தாண்டில் நிறைவாய் நமக்கும் கிடைக்கட்டும். இறைவன் எல்லா தீங்குகளிலிருந்தும் காப்பாராக. அவரது திருமுகத்தை நம்மீது திருப்பி அருள் பொழிவாராக, அவரது அக்கரையையும், கரிசனையையும் நமக்கு காட்டுவாராக. அமைதியை அருளி, நம்மை அவருக்கு உரியவர்கள் ஆக்குவாராக. “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” என்ற எலிசபெத்தின் வாழ்த்துகளின்படி, ஆண்டவரை சுமந்த அன்னை மரியாவை பின்பற்றி, நாமும், ஆண்டவரை நம் இதயத்தில் சுமப்பவர்கள் ஆவோம்.
No comments:
Post a Comment