பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு
எசா 49 : 3, 5 - 6: 1 கொரி 1 : 1 - 3: யோவா 1 : 29 - 34
ஒரு குத்து (Punch) வாக்கியம் :
‘மனிதருக்கு பயப்படுகிறவர்தான் கடவுளைத் தேடி போகனும். மனசாட்சிக்குப் பயப்படுகிறவரை அந்த கடவுளைத் தேடி வருவார்’.
இன்றைய நற்செய்தியில் இயேசுவிற்கு திருமுழுக்கு யோவானின் சாட்சியத்தைப் பற்றி பார்க்கிறோம். இயேசுவை, ‘உலகின் பாவம் போக்கும் ஆட்டுக்குட்டியாகவும்’, ‘தூய ஆவியாரை பெற்றவராகவும்’, ‘தூய ஆவியால் திருமுழுக்கு அளிப்பவராகவும்’ சாட்சியம் தருகிறார். ‘உலகின் பாவம் போக்கும் ஆட்டுக்குட்டி’ என்ற கருத்தில் எசா 53 : 4, 7, 12 என்ற துன்புறும் ஊழியரின் பாடலின் தாக்கத்தைக் காணமுடிகிறது.
“அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ... கத்தாத செம்மறி போல் வாயை திறவாதிருந்தார்” (எசா 53 : 7)
“பலரின் பாவத்தை சுமந்தார்” (எசா 53 : 12) “பவுல் அடிகளாரும் இயேசுவின் இறப்பினை, பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்” என்று விவரிக்கிறார் (1 கொரி 5 : 7)
திருமுழுக்கு யோவான் இயேசுவை தன் அனுபவத்தில் புரிந்துக் கொண்டு எழுதுகிறார். ஒத்தமைப்பு நற்செய்திகளில், இயேசு திருமுழுக்கு பெறும்போது, இயேசுவே தூய ஆவி அவர்மேல் எழுந்து வருவதைக் காண்கிறார். வானிலிருந்து ‘நீரே என் அன்பார்ந்த மகன்’ என்று குரல் ஒலிப்பதையும் கேட்கிறார். ஆனால் யோவான் நற்செய்தியாளர் திருமுழுக்கு யோவானே தூய ஆவியார் இயேசுவின் மீது இறங்கி வந்ததைக் கண்டதாகக் கூறுகிறார். இது திருமுழுக்கு யோவானின் உள்ளாந்திர அனுபவத்தைக் காட்டுகிறது. திருமுழுக்கு யோவான் இயேசுவை சரியாக அடையாளம் கண்டு கொண்டார். இயேசுவின் மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை என்றும் (யோவா 1 : 27), ‘இயேசு வளர வேண்டும், தான் குறைய வேண்டும்’ என்றும் (யோவா 3 : 30) இயேசுவின் நிலையில் தன் நிலையை ஒப்பிட்டு உண்மையை எடுத்துக் கூறுகிறார்.
முதல் வாசகத்தில் இறைவனுக்கும் துன்புறும் ஊழியருக்கும் இடையில் உரையாடல் நடக்கிறது.
இறைவன்: ‘நீரே என் ஊழியன்’, ‘உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்தினேன்’.
ஊழியர்: ‘கருப்பையிலிருந்தே ஆண்டவர் தம் ஊழியராக உருவாக்கினார்’, ‘ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்’ ‘என் கடவுளே என் ஆற்றல்’.
இந்த உரையாடல் ‘நான் உன் கடவுள், நீ என் மக்கள்’ என்ற உடன்படிக்கையின் வெளிப்பாடாகவே நாம் பார்க்கலாம். ஆக இறைவனின் செயல்பாட்டை தன்னிலேயே துன்புறும் ஊழியரும் காண்கிறார்.
இரண்டாம் வாசகத்தில், பவுலடிகளார் கொரிந்து நகர கிறிஸ்தவர்களின் ஆன்மீக அனுபவத்தை சுட்டிக்காட்டி எழுதுகிறார். ‘கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்று தூயவராக்கப்பட்டு, இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள்’. தூயவராக்கப்பட்டவர்கள் என்றால், இறைவனால் முன்குறித்து வைக்கப்பட்டவர்கள். எனவே தங்களின் மேன்மை நிலைக்கு ஏற்ப வாழ வேண்டியவர்கள்.
ஒருவர் ஒரு முனிவரிடம் சென்று, ‘நான் கடவுளைக் காண வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு முனிவர், ‘கடவுளைக் காண வேண்டுமென்றால் தவம் செய்ய வேண்டும். காட்டில் போய் தவம் செய்’ என்றார். அவனும் காட்டிற்கு சென்று தவம் செய்தான். கடவுளைக் காணவில்லை. அவன் தவம் செய்து கொண்டிருக்கும்போது, வேடன் ஒருவன் அங்கு வந்தான். தவம் செய்து கொண்டிருப்பவரைப் பார்த்து, ‘என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டான். அவர், ‘கடவுளைக் காண தவம் செய்து கொண்டிருக்கிறேன்’ என்றார். வேடன், ‘கடவுள் எப்படி இருப்பார்?’ என்றான். தவம் செய்தவருக்கு தூக்கி வாரி போட்டது. ஏதோ சொல்லிவைப்போம் என்று ‘மனித உடலோடும், சிங்கமுகத்தோடும் இருப்பார்’ என்றான். எனவே வேடன் அத்தகைய வேடம் கொண்ட கடவுளை தேட ஆரம்பித்தான். பல நாள்கள் தேடியும் அத்தகைய கடவுளைக் காண முடியவில்லை. எனவே தூக்குமாட்டிக் கொண்டு சாகப் போனான். அப்போது கடவுள், மனித உடலோடும் சிங்கமுகத்தோடும் தோன்றினார். உடனே அதனை இழுத்துக் கொண்டு தவம் செய்தவரிடம் வந்தான். கடவுளைப் பார்த்து தவம் செய்தவர், ‘ஏன் எனக்குத் தோன்றவில்லை? வேடனுக்கு மட்டும் தோன்றினீர்கள்?’ என்றான். ‘அவன் முழு மனதுடன் தேடினான், வந்தேன். நீ பெயருக்கு தவமிருந்தாய்’ என்றார் கடவுள்.
வரும் உலகிற்கு முன்னே நம் உள் உலகம் இருக்கிறது. இந்த உள் உலகத்தில் இறைவன் உலவுவதைக் காணலாம். உள் உலக அனுபவம் இறைவனை உணர்வதற்கும், மற்றவர்களிலும் இறைவனின் பிரசன்னத்தை உணர்வதற்கும் உதவியாக
விளங்கும். புனித திருமுழுக்கு யோவானைப் போல, மற்றவர்களின் நன்மைகளைக் கண்டு கொண்டு வாழ்வோம்.
No comments:
Post a Comment