பட்டிமன்றம்
பொருள் : மக்கள், கிறிஸ்துமஸ் கொண்டாடுவதில் மிகுதியாக வெளிப்படுவது
ஆடம்பரங்களே - ஆன்மீகக் காரியங்களே
நடுவர் : பேராசிரியர் எஸ் சாமிமுத்து
சொற்போர் தொடுப்போர் : பேராசிரியர் எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ, பேராசிரியர் ஜி. இரவீந்திரன்
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கூறி, வணங்கி மகிழ்கின்றேன்.
மக்கள், கிறிஸ்துமஸ் விழாவினைக் கொண்டாடுவதில் ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்களா? அல்லது ஆன்மீகக் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்களா? என்று விவாதித்து, உண்மை காணும் நோக்கத்தில் அன்னையின் அருட்சுடர் இதழ் மூலம் இப்பட்டிமன்றம் நடக்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்நில உலகத்தில், குறிப்பாக பாலஸ்தீன் நாட்டில், பெத்லேகம் என்னும் தாவீது அரசன் நகரில், எல்லாம் வல்ல இறைவனின் திருமகனாகிய இயேசுகிறிஸ்து மனித உடலெடுத்து, தூய கன்னிமரியின் திருவயிற்றினின்று பிறந்த நாளை நினைத்துக் கொண்டாடி மகிழ்வதுதான் கிறிஸ்துமஸ் விழா என்பது. அனைத்து உலகிலும் உள்ள மக்கள், குறிப்பாகக் கிறித்தவர்கள் இவ்விழாவினை ஆண்டுதோறும் மிகப் பெரிய புனித விழாவாகக் கொண்டாடுகிறார்கள். இவ்விழா நிகழ்ச்சிகளில் மிகுதியும் இடம்பெறுவன ஆடம்பரங்களே என்று பேராசிரியர் எஸ்.பி.பெஞ்சமின் இளங்கோ அவர்கள் முதலில் தம் ஆழமான அறிவும் அனுபவ முதிர்வும் பளிச்சிட, சொற்போர் தொடுக்கின்றார்கள்.
பேரா. எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ
சான்றாண்மைமிக்க நடுவர் அவர்களே, மதிப்பிற்குரிய சகோதர சகோதரிகளே, இன்றைய உலகமே ஆடம்பர உலகமாக இருக்கின்றது. எந்த நாட்டினராயினும், எந்த சமயத்தவராயினும் விழாக்கள் கொண்டாடுகின்றபொழுது, எவ்வளவு வெளி ஆடம்பரத்தோடு கொண்டாட முடியுமோ அவ்வளவு வெளி ஆடம்பரத்தோடுதான் கொண்டாடுகின்றார்கள். கிறிஸ்துமஸ் விழா மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல.
கிறிஸ்துமஸ் விழாவிற்காக மக்கள், தங்கள் தங்கள் வீடுகளை அவரவர்களுடைய வசதிக்கேற்ப மலர், மணிமாலைச் சரங்களாலும், வண்ணமின் விளக்குகளாலும் அலங்கரிக்கின்றார்கள். இயேசுகிறிஸ்து பிறந்தது வறுமையில்; மாடுகள் தங்கும் மாட்டு கொட்டகையில். அந்தச் சிந்தனை பெரும்பாலான மக்களுக்கு வருவதில்லை. மக்கள், தங்களுடைய செல்வச் செழிப்பையும், வசதியான வாழ்வையும், தங்களுடைய கெளரவத்தையும் பிறர் அறியக்காட்டுவதற்காக ஏராளமான பொருட்செலவில் வீட்டையும், அலுவலகங்களையும் அலங்கரிக்கின்றார்கள். வீட்டை ஓரளவிற்கு அழகுபடுத்துவதில் குறையில்லை. பெரும் பொருளை அதில் செலவிடுவதற்குப் பதிலாக, ஏழை எளிய மக்களுக்கும், வசதியில்லாமல் வறுமையில் வாடுபவர்களுக்கும் பணமாக, புத்தாடைகளாக, உணவுப்பண்டங்களாகக் கொடுத்து உதவினால், அதுவே உண்மையான கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சியாக அமையும். இயேசுகிறிஸ்து மனிதர்களின் தூய உள்ளங்களில் பிறக்க வேண்டும். அதாவது, கிறிஸ்து உலகிற்குக் கொண்டுவந்த சமாதானம் மனிதர்களை ஆட்கொள்ள வேண்டும். அச்சமாதானத்தை மக்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். தான் படைத்த மனிதனை அதிகமாக நேசித்ததினால்தான் இறைவன் மனிதனாகப் பிறப்பெடுத்து, அவனோடு வாழ்ந்து, அவனை எல்லா அடிமைத்தனங்களிலிருந்தும் மீட்டார். எனவே, ஆடம்பரத்திற்கல்ல கிறிஸ்மஸ் விழா. இது அன்பின் விழா! சமாதானத்தின் விழா! மனித நேயத்தின் விழா! இறை அனுபவத்தின் விழா! இக்கூறுபாடுகளை மறந்த நிலையில் வீட்டை அலங்கரிப்பதிலும், கிறிஸ்துமஸ் குடில் அமைப்பதிலும், பல நட்சத்திரங்களைத் தொங்கவிடுவதிலும், புதிய துணிமணிகள் அணிவதிலும், கேக்குகள் பலகாரங்கள் செய்வதிலும், பிரியாணி விருந்துகள் நடத்துவதிலும், விலையுயர்ந்த வாழ்த்து கார்டுகள் அனுப்புவதிலும், கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்குவதிலும், பட்டாசு, மின்விளக்குகளிலும் மக்கள் கவனம் செலுத்தி, கிறிஸ்துமஸ் விழாவின் உண்மைத் தன்மையை மறந்து விடுகின்றார்கள். கிறிஸ்துமஸ் விழாவில் மக்கள் ஆன்மீக நோக்கத்திற்கு மதிப்பளிக்கின்றார்களா என்பதுவே இன்றைய வாழ்க்கையில் ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது நடுவர் அவர்களே!
நடுவர்
பேராசிரியர் ஜி. இரவீந்திரன் அவர்களே! இதற்கு உங்கள் வலுவான, நடைமுறை வாழ்வில் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய பதிலை இந்த மன்றம் எதிர்பார்க்கின்றது.
பேராசிரியர் ஜி. இரவீந்திரன்
மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே, உங்கள் முன்னிலையிலேயே, பேராசிரியர் எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ அவர்கள் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் வைத்து மறைக்கப்பார்க்கிறார். கிறிஸ்துமஸ் விழாவில் மக்கள் ஆன்மீகத்திற்குச் சிறப்பிடம் அளிப்பதில்லை, ஆடம்பரத்திற்குத்தான் முக்கியத்துவம் அளிக்கின்றார்கள் என்பதை நான் மறுக்கின்றேன்.
எத்தனையோ மக்கள், கிறிஸ்துமஸ் விழா சமயத்தில் பக்திமுயற்சிகளில் ஈடுபடுவதை நாம் பார்க்கின்றோம். விரதம் இருக்கின்றார்கள், தியானம் செய்கின்றார்கள், திருத்தலங்களுக்குத் திருப்பயணம் மேற்கொள்கின்றார்கள், கோவில் திருவழிபாடுகளில் கலந்துகொண்டு மனத்தூய்மை பெறுகின்றார்கள். கிறிஸ்துமஸ் பாடல் குழுவினர் பக்திப்பாடல்கள் பாடி, மக்களைக் கிறிஸ்துமஸ் விழாவிற்கு ஆன்மீக முறையில் தயார் பண்ணுகின்றார்கள். நன்கொடை வசூலித்து ஏழை, எளிய மக்களுக்கு உணவுக்கும் உடைக்கும் பொருளுதவி செய்கின்றார்கள். பொதுநலப்பணிக் குழுக்கள், பக்த சபைகள் வசதி படைத்தவர்களிடமிருந்து அன்பளிப்புகள் வாங்கி ஆதரவற்றோர், ஊனமுற்றோர், நோயாளிகள், முதியோர்கள், குழந்தைகள் முதலியோர்களுக்கு அவரவர்கள் தேவைக்கேற்ப உதவுகின்றார்கள். இன்னும் சிலர் சிறை கைதிகளைச் சந்தித்து ஆறுதல் கூறி அன்பளிப்புத் தந்து சமாதானம் அளிக்கின்றார்கள். கலைநிகழ்ச்சிகள் மூலமும், விளையாட்டு நிகழ்ச்சிகள் மூலமும், பக்திச் சொற்பொழிவுகளின் மூலமும் பல்வேறு மக்களை ஒன்று திரட்டுகின்றார்கள். சகோதர பாசத்தோடு பழகி, ஒருவருக்கொருவர் உறவு பாராட்டி அன்பு செலுத்துகின்றார்கள். இவையும், இவை போன்ற பிறவும் மக்கள் உள்ளங்களில் இறை நேயத்தையும், மனிதநேயத்தையும் சாதி, சமயம், மொழி கடந்து வளர்க்கின்றன என்பதை நாம் மறுக்க முடியுமா?
மக்கள் கிறிஸ்துமஸ் விழா எடுக்கும்போது, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக, வீட்டை அலங்கரிப்பதும், புத்தாடை உடுத்துவதும், உணவுப்பண்டங்கள் தயாரிப்பதும் ஆடம்பரம் என்றால், குடும்ப உறவுகளில், சமுதாய வாழ்க்கை முறைகளால் வேறு எப்படித்தான் கிறிஸ்துமஸ் விழாவை மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடுவது? இவற்றையயல்லாம் மறந்துவிட்டு, பேராசிரியர் பெஞ்சமின் அவர்கள் உண்மைக்குப் புறம்பாகப் பேசுகிறார். கிறிஸ்துமஸ் விழாவில் மக்கள் முறையாகச் செய்வதைக்கூட குறைகண்டு பேசுவதை நான் மறுக்கின்றேன்.
கிறிஸ்துமஸ் குடில் அமைப்பதும், நட்சத்திரம் கட்டுவதும், கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி அனுப்புவதும் கிறிஸ்து பிறப்பு விழாவை நினைவுபடுத்துவதற்குரிய தேவையான வெளி அடையாளங்கள் ஆகும். ஆகவே, மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதில் ஆடம்பரங்களே மிகுதியாக வெளிப்படுகின்றன என்றும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதுவும் சரியில்லை என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானதாகும். ஊன்றி நோக்கினால் கிறிஸ்துமஸ் விழாக் கொண்டாட்டங்களில் ஆன்மீகக் காரியங்களே மிகுதியாக வெளிப்படுகின்றன என்பதுவே மறுக்கமுடியாத உண்மையும் என் கருத்துமாகும்.
பேரா. எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ
நீங்கள் கூறுவது, என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாதது இன்றைய வாழ்க்கையில் மக்களின் போக்கைப் புரியாமல் பேசுவதாக, உண்மைக்குப் புறம்பான செய்தியாக இருக்கிறது. கிறிஸ்துமஸ் விழாவில் ஆன்மீகக் காரியங்கள் மிகுதியும் வெளிப்படுகின்றனவென்றால், குடித்ததுக் கும்மாளம் போடுவதும் ஆன்மீகக் காரியமா? செல்வம் இருக்கிறது என்பதற்காக, தங்களோடு வாழ்கின்ற ஏழை, எளிய மக்களை அவர்களின் வறுமையை, வாட்டத்தை இம்மியளவும் எண்ணிப் பார்க்காமல் கொடுங்கள், கொடுக்கப்படும் என்னும் கிறிஸ்துவின் நற்செய்தியையும் நினைத்துப் பார்க்காமல், பட்டாடைகள் பளபளக்க, நகை நட்டுகள் ஜொலி, ஜொலிக்க, செல்வந்தர்கள் பலர் கோலாகலமாக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுகின்றார்களே, இதற்கு என்ன பதில் சொல்லுகின்றீர்கள்?
பேரா. ஜி.இரவீந்திரன்
குடித்துக் கும்மாளம் போட்டு கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுவது அறிவீனம் என்று நானும் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால், இப்படிப்பட்டவர்கள் ஒரு சிலரே, மேலும், செல்வந்தர்கள் பலர் ஏழைகளை முற்றிலும் மறந்துவிட்டுக் கிறிஸ்துமஸ் விழாவைத் தங்கள் குடும்பப் பெருமைக்காக ஆடம்பரத்துடன் கொண்டாடுகின்றார்கள் என்பதிலும் ஓரளவு உண்மையே இருக்கின்றது. பணக்காரர்களிலும் ஈவு, இரக்கம் கொண்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். வறுமையில் உள்ளவர்களுக்கு நேரடியாகவும், பிறர் மூலமாகவும் கிறிஸ்துமஸ் விழா சமயத்தில் பல உதவிகள் செய்வதை நாம் பார்க்கின்றோம். எனவே, கிறிஸ்துமஸ் விழா மனித நேய விழாவாகவும் கொண்டாடப்படுவதை நாம் மறுக்க முடியாது.
நடுவர் முடிவுரை
அன்பர்களே, இப்பட்டிமன்றத்தில், பேராசிரியர்கள் இருவரும் மிகச் சிறந்த முறையில் கிறிஸ்துமஸ் விழா பற்றிய சிந்தனைகள் பலவற்றையும் நாம் அறிந்து பயனடையுமாறு வழங்கியுள்ளார்கள்.
மக்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழாவில் மிகுதியும் வெளிப்படுவது ஆடம்பரமா? ஆன்மீகமா? என்று ஆராய்ந்து பார்க்கும்போது ஒரு புறத்தில் ஆடம்பரம் பளிச்சிடுகின்றது. மற்றொரு புறத்தில் ஆன்மீகம் தலைதூக்கி நிற்கின்றது.
கிறிஸ்து பிறப்பு விழாவை ஏன் நாம் இன்று கொண்டாடுகிறோம்? அன்று, பெத்லேகம் மாடடைகுடிலில் இயேசுகிறிஸ்து பிறந்தபோது அங்கே தேவதூதர்கள் சூழ்ந்து, ‘உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக, உலகிலே அவர் தயவு பெற்றவர்க்கு அமைதி ஆகுக’ என்று பாடி மகிழ்ந்தனர். கிறிஸ்து பிறப்பிலே விண்ணகத் தந்தையாகிய இறைவனுக்குப் பெருமையும் அவர் அருள்பெற்ற மண்ணக மனிதர்களுக்கு அமைதியும் உண்டாகின்றன. இந்த உண்மை அன்றோடு முடிந்த ஒன்றல்ல. இது ஒரு தொடர்கதை. தூய அருளப்பர் சொல்லுகின்றார், வாக்கு மனுவுருவானார், நம்மிடையே குடிகொண்டார். ஆம், ஆதியிலே வாக்காக ‡ வார்த்தையாக இருந்த இறைவன்தான், காலம் கனிந்து வந்தபோது, மனித உருவெடுத்து, இவ்வுலகில் பிறந்து, நம்மோடு குடிகொண்டிருக்கின்றார். இறைவனின் அருளும் உண்மையும் இயேசுகிறிஸ்து வழியாக இவ்வுகிற்கு வந்தன, வந்துகொண்டே இருக்கின்றன.
இயேசுகிறிஸ்து நம்மோடு இருக்கின்றார், இருக்கின்ற கிறிஸ்துவை - அருளும் உண்மையுமாக இருக்கின்ற கிறிஸ்துவை ‡ உலகத்தின் ஒளியும் வாழ்க்கையின் வழியுமாக இருக்கின்ற கிறிஸ்துவை கிறிஸ்துமஸ் விழாவிலே, ஊனக் கண்ணால் முடியாவிட்டாலும் ஞானக்கண்ணால் பார்க்க வேண்டும். உருவில்லான் உருவாகி ஒப்பற்ற கன்னிமரியின் திருவயிற்றில் கருவாகி இவ்வுலகில் உதித்த உண்மையைக் காணவேண்டும்.
கிறிஸ்துவுக்காக வீட்டை அலங்கரிப்பது, கிறிஸ்துவுக்காக குடில் அமைத்து, நட்சத்திரம் வைத்து, புத்தாடைகள் உடுத்தி மகிழ்வது போன்றவையயல்லாம் நாம் கிறிஸ்துவின்பால் கொண்ட அன்பை வெளிப்படுத்திக் காட்டுபைவதாம். அனால், குளிக்கப்போன ஒருவன், சேற்றைப் பூசிக்கொண்டு திரும்பிய கதையாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இருந்துவிடக்கூடாது.
கிறிஸ்துமஸ் விழாவில் செய்கின்ற ஒவ்வொரு செயலும் நம்முடைய கெளரவத்தை வெளிப்படுத்துவதற்காகவோ, நம்முடைய செல்வச் செருக்கையும் பெருமையையும் பிறர் அறியவேண்டும் என்பதற்காகவோ இருந்தால் அது வெற்று ஆடம்பரந்தான். அதற்கு மாறாக, இயேசு கிறிஸ்துவின்மீது ‡ இறைவன்மீது நாம் கொண்டுள்ள ஆழ்ந்த பற்று வெளிப்படுவதற்காக, நம்மோடு வாழ்கின்ற பிற மக்கள்மீது நாம் கொண்டுள்ள பிறர் சிநேகம் - மனித நேயம் தெற்றெனப் புலப்படுவதற்காக கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகள் பயன்படும் என்றால் அவை போற்றத்தக்கன.
கனிக்குச் சுவையும், மலருக்கு மணமும் இருந்தால்தான் அவற்றிற்குச் சிறப்புண்டு. அவ்வாறே கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் மனிதனின் ஆன்மீக வாழ்வைத் தொடவில்லை என்றால், அந்த நிகழ்ச்சிகளுக்கு சிறப்பில்லை.
கிறிஸ்துமஸ் விழாவில் நாம் ஒருவரையயாருவர் சந்தித்து, வாழ்த்துக் கூறுவதில் உண்மையான மனிதநேயம் வெளிப்படவேண்டும். அவ்வாறே, நாம் பிறர்க்குச் செய்யும் உதவிகளில் உண்மையான பிறர்நலத் தொண்டு ‡ பிறர்சிநேகம் வெளிப்பட வேண்டும். இல்லையயன்றால் அவையயல்லாம் வீணான ஆடம்பரங்களே.
எனவே, மக்கள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதில் ஆடம்பரங்கள் அர்த்தமுள்ளவையாக, இறையன்பையும் பிறரன்பையும் வெளிப்படுத்துவனவாக அமைந்து, அவையனைத்தும் மனிதனுடைய ஆன்மீக வாழ்வை வளர்ப்பனவாக, வளப்படுத்துவனவாக இருக்கவேண்டும். அவ்வாறு அமையும் கிறிஸ்துவின் விழா நிகழ்ச்சிகளே வரவேற்கத்தக்கனவென்று கூறி, அனைவர்க்கும் மீண்டும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்து தெரிவித்து முடிக்கின்றேன். நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment