கிறிஸ்துமஸ் விழா
எசா 9 : 1 - 6; தீத் 2 : 11 - 14; லூக் 2 : 1 - 14
- அருள்பணி. பு. அமிர்தசாமி S.T.D,
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்த ஒரு சிறிய மலை கிராமத்தின் மீது, உலகின் பார்வை பட இறைவன் அருள் கூர்ந்த புனிதமான இரவு இந்த இரவு. உலகிற்கே மகிழ்ச்சியளிக்கும் நற்செய்தியை அறிவிக்கின்ற கிராமமாக மாறுகிறது பெத்லகேம். அன்றைய உலகின் மிகப் பெரிய, வலிமைமிக்க உரோமைப் பேரரசின் தலைநகர் உரோமையை இறைவன் தேர்ந்தெடுத்திருக்கலாம். அல்லது உலகிற்கே நாகரீகத் தொட்டிலாகத் திகழ்ந்த கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்ஸை தேர்ந்தெடுத்திருக்கலாம். இவ்விரு நகரங்களுக்குமுன் பாலஸ்தீனத்தின் குக்கிராமமான பெத்லகேம் ஒன்றுமில்லை. யாரும் தெரிந்திராத பெத்லகேமைத் தெரிவு செய்ததில் இறைவன், தான் எப்படிப்பட்டவர், தனது அன்பு எப்படிப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள செய்கிறார்.
வரலாற்று மனிதர் இயேசு ஏழைகளை கண்ணோக்குகின்றார்
இந்தப் புனித வழிபாட்டின் நற்செய்தி நமக்கு இரண்டு முக்கிய செய்திகளை சொல்கின்றது. 1. அகஸ்துஸ் சீசர் உரோமைப் பேரரசின் மக்கள் தொகை கணக்கு எடுப்பதுபற்றி கூறுவதன் வழியாக இயேசு மனித வரலாற்றில் பிறந்தவர் என்றும், அப்பிறப்பு மீட்பின் வரலாற்றில் உன்னதமான நிகழ்வு என்றும், உலகில் உள்ள எல்லா மக்களினத்தாருமான ஒரு நற்செய்தியாகவும் விளங்குகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது. 2. முதலில் இடையர்களுக்குத்தான் இயேசுவின் பிறப்பு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது என்பதிலிருந்து கடவுள் எல்லா காலத்திலும் ஏழைகளையும், தாழ்நிலையில் உள்ளவர்களையுமே கண்ணோக்குகின்றார், அவர்களைத் தேடிச் செல்கின்றார் என்ற செய்தி இரண்டாவது செய்தியாக அமைகின்றது.
காரிருளில் தவித்த மக்களுக்கு பேரொளி
‘காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் காண்பார்கள்’ என்ற மகிழ்ச்சியூட்டும் செய்தியை கிமு எட்டாம் நூற்றாண்டில் அசீரிய நாட்டின் ஆதிக்கத்தின்கீழ் துவண்டு கிடந்த இஸ்ராயேல் மக்களுக்கு இறைவன் எசாயா இறைவாக்கினர் வழியாகக் கூறுகின்றார். இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக இங்கே குறிப்பிடப்படுவது, பின்னர் வரவிருந்த அரசன் எசேக்கியாவைப் பற்றிதான் என்றாலும், இயேசுவின் பிறப்பை முன்னுணர்த்துவதாகவும் நாம் இதைப் பார்க்கலாம். அந்த அரசனைப் பற்றி சொல்லப்படுகின்ற அடைமொழிகளான, ‘வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்’ என்பவை இயேசுவுக்கும் பொருந்துவனவாக அமைந்துள்ளன. எசேக்கியா அரசர் வழியாக இருளின் பிடியில் இருந்த இஸ்ராயேல் மக்கள் மீது கருணை கூர்ந்து மீண்டும் புது வாழ்வை இறைவன் தந்தது வரலாற்று உண்மை. மாபரன் இயேசுவின் பிறப்பு, பாவம் என்னும் இருளில் சிக்கித் தவித்த உலகின் எல்லா மக்களுக்கும் மீட்பளிக்கும் நற்செய்தியாக அமைகிறது.
கீழிறங்கி வரும் இறைவன்
நம்மை மீட்க வந்த இறைவன் நம் மனித இயல்பை ஏற்றுக் கொண்டார். இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சி, இறைவனை நம்மை மீட்க எப்படிப்பட்ட நிலைக்கு தன்னைத் தாழ்த்திக் கொண்டார் என்பதை விளக்குகின்றது. ‘அவர்களுக்கு விடுதியில் இடமில்லை’ என்ற விவிலிய வார்த்தைகள் நமது மனித அன்புக்கு சவாலாகவும், கடவுள் நம்மீது கொண்ட நிறை அன்பின் அடையாளமாகவும் உள்ளன. இரவு நேரம், கடும் குளிர், பேறுகாலம் நெருங்கிய மனைவியோடு தஞ்சம் கேட்டு யோசேப்பு ஒவ்வொரு வீடாக கதவைத் தட்டுகின்றார். அக்காலத்தில் அந்நியருக்கும், வழிப்போக்கருக்கும் விருந்தோம்பல் அளிப்பதைக் கடமையாகக் கொண்டிருந்த யூத மக்கள், அவர்களுக்கு இடம் தர மறுக்கின்றனர். பேறுகால வேதனையில் துடிக்கின்றவருக்குக்கூட இரங்காத மனம் படைத்தவர்கள். ஆனால் இயேசுவை வரவேற்று அரவணைத்து, இதமான வெப்பத்தைக் கொடுத்து காப்பாற்றுகின்றன மற்ற உயிரினங்கள். இஸ்ராயேலின் அரசராகிய இயேசுவை அவருடைய மக்கள் அறியாமையினால் வரவேற்கவில்லை. ஆனால் அப்படிப்பட்ட இரவில்தான் கடவுளின் தூய அன்பு அவர்கள் மேல் ஒளிர்கின்றது. கடவுள் ஏன் இந்த அளவுக்கு தன் உன்னத நிலையிலிருந்து வரவேண்டும்? நம்மீதான அவரது அன்பு தான் காரணம். நம்மோடு நம்மைப் போன்றே பாவம் தவிர்த்து வாழ்ந்த ஏசுவைக் காண நாமும் நம் தற்பெருமை, ஆணவம், சுயநலம் போன்ற பாவநிலையிலிருந்து கீழிறங்கி வரவேண்டும். இன்னும் பெத்லகேமில் இயேசு பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள ஆலயத்தின் நுழைவாயில் கதவு நான்கே அடி உரயம் கொண்டதுதான். உள்ளே செல்பவர்கள் குனிந்துதான் செல்லவேண்டும். அதுவும் உள்ளே சென்று குழந்தை இயேசு பிறந்த குகை போன்ற இடத்தைப் பார்க்க வேண்டுமெனில் முழந்தாள்படியிட்டு குனிந்துதான் பார்க்க வேண்டும். இது எதைக் குறிக்கின்றது என்றால், நாமும் இயேசுவைப் போன்று தாழ்ச்சியில் மிளிர வேண்டும். கடவுள் தற்பெருமையை, அகங்காரத்தை வெறுக்கின்றார். நம்மை மீட்க கீழிறங்கி வந்த அவர், தடிகளோடும், கத்திகளோடும் வரவில்லை. மாறாக தாழ்ச்சியோடு வந்தார். இருளை இருளால் விரட்ட முடியாது. அது ஒளியால்தான் முடியும். பாவ இருளை அகற்ற ஒளியாக வந்த இறைவன் தனது வல்லமையை அதிசயங்களால் வெளிப்படுத்தவில்லை. மாறாக, அமைதியான, வன்முறை தெரியாத ஒரு குழந்தையின் நிலையை ஏற்றுக் கொண்டு வெளிப்படுத்தினார். இப்படிப்பட்ட ஒரு நிலையிலிருந்துதான் இன்று நம்மையும் அவரைப் போன்று ஒரு வளர்ந்த அன்பு நிலையில் வாழ அழைக்கின்றார் இயேசு.
நம் இதயக் கதவைத் தட்டுகிறார் இயேசு
யோசேப்பு போன்று இன்று இயேசு நம் இதயக் கதவுகளைத் தட்டுகின்றார். ‘நான் கதவருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கின்றேன். யாராவது என் குரலைக் கேட்டு கதவைத் திறந்தால் நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன். அவர்களும் என்னோடு உணவு அருந்துவர்’ (திவெ.3 : 20). ஒவ்வொரு கிறிஸ்து பிறப்பு விழாவும் கிறிஸ்து நமக்கு விடுக்கும் அழைப்பு இதுதான். இந்த ஆண்டும் கிறிஸ்மஸ் வழியாக நம் இதயக் கதவுகளைத் தட்டுகின்றார் இயேசு. எசாயா காலத்து மக்களைப் போன்று இன்றைய நம் சமுதாய மக்களும் காரிருளில்தான் நடக்கின்றனர். ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், அரசின் அதேச்சதிகாரம், கருவறையிலேயே பாதுகாப்பில்லாத குழந்தைகள். வறுமை, உணவில்லா, உறைவிடமில்லா நிலையை அனுபவிக்கும் குழந்தைகள், ஆகிய இருள் மேகங்களின் நடுவே வாழ்கிற மக்கள் நிரம்பிய சமூகம் நம் சமூகம்.
சில நாட்களுக்குமுன் மும்பையில் ஒரு சாதாரண குடும்பத் தம்பதியருக்குக் குழந்தை பிறந்தது. பிறந்தவுடன் குழந்தைக்கு சுகவீனம். உடனே ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஆனால் குழந்தையை அனுமதிக்க மறுக்கின்றனர். ஏனெனில் அவர்களிடம் பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்கள்தான் இருந்தன. நிர்வாகத்தோடு போராடினர், வாக்குவாதம் செய்தனர். இந்த நிலையில் குழந்தை இறந்து போகிறது. மனித உயிருக்கு மதிப்பில்லா சமூகம் நம் சமூகம். நாம் இன்னும் காரிருளில்தானே உள்ளோம்? இந்த நிலையில்தான் நம் இதயக் கதவுகளைத் தட்டுகிறார். நாம் இயேசுவுக்கு இடம் கொடுப்போமா?
இயேசுவின் அழைப்பை ஏற்போமா?
உலகினை மீட்க பெத்லகேமைத் தேர்ந்தெடுத்த இறைவன், மனித நிலையை ஏற்று கீழிறங்கி வந்த இறைவன், ஏழைகளோடு ஏழையாக வாழ்ந்த இறைவன், தன் உயிரைக் கொடுத்து நம்மை மீட்ட இறைவன், இன்னும் நம்மைக் கைவிடவில்லை, நம்மோடுதான் இருக்கின்றார் என்பதை, அவரது மக்களாகிய நம் வழியாக பிறருக்கு ஒளியாக இருக்க விரும்புகிறார் என்பதை ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்மஸ் நமக்கு நினைவுபடுத்துகின்றது. தனது அன்பை நமக்கு, இயேசுவில் முழுமையாக வெளிப்படுத்திய இறைவன், நமது அன்பை பதிலாக எதிர்பார்க்கின்றார் இறைவன்.
மனிதனுக்குக் கடினமானது மனிதனாக இருப்பதுதான் என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். உண்மையான முழு மனிதனாக எப்படி வாழ வேண்டும், வாழ முடியும் என்று அழைக்கின்றது. இவ்வழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்போமா?
No comments:
Post a Comment