பொதுக்காலம் நான்காம் ஞாயிறு
செப் 2 : 3; 3 : 12 - 13; 1 கொரி 1 : 26 - 31; மத் 5 : 1 - 12
வள்ளுவர் கூறுவார் :
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை (குறள் 985)
ஒருவர் செய்யும் சாதனைகளில் பெரிது, பணிவு என்ற பண்பினை பெற்றிருத்தல். இப்பண்பினை பெரியவர்கள், பகைவர்களை வெல்வதற்கு பயன்படுத்தும் படை அணி என்கிறார்.
விவிலியத்தில் ‘அனாவிம் யாவே’ என்ற ஒரு குறிப்பு உண்டு. அதாவது ‘யாவே இறைவனின் ஏழைகள்’. இவர்கள் உலக செல்வங்கள், வசதிகள் இல்லாதவர்கள். சமுதாயத்தில் கடைநிலையில் உள்ளவர்கள். இவர்கள் சார்பில்தான் இறைவன் செயல்படுகிறார் என்பது கருத்து.
இன்றைய நற்செய்தி பகுதியில், இயேசு செய்த மலைப்பொழிவின் முதல் பகுதியான, பேறுபெற்றோர் என்ற தொகுதியைப் பார்க்கிறோம். ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது என்று முதல் பேறு சொல்கிறது. தொடர்ந்து எட்டு பேறுகள் கொடுக்கப்பட்டுள்ளன. துயருறுவோர், கனிவுடையோர், நீதி நிலைநாட்டும் வேட்கைக் கொண்டோர், ‘இரக்கமுடையோர், தூய்மையான உள்ளத்தோர், அமைதி ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர், என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்தல்’ ஆகிய நிலைகள் பேறுகளாகவும், அதற்கேற்ற வாழ்வின் பயன்களும் அங்கு தரப்பட்டுள்ளன. லூக்கா நற்செய்தியாளர் இதே பகுதியை தரும்போது, ‘ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர், இறையாட்சி உங்களுக்கு உரியது என்றும், பட்டினியாய் இருப்போர், அழுதுகொண்டிருப்பவர், மானிட மகன் பொருட்டு மக்கள் வெறுப்பதையும்’ குறிப்பிடுகிறது (லூக் 6 : 20 - 26).
லூக்கா நற்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ளதுதான், இயேசு சொல்லியிருக்கக் கூடிய வார்த்தைகள் என்றும், மத்தேயு இதன் கருத்துக்களை, யூத சமுதாயத்திற்கேற்ப பழைய ஏற்பாட்டு வார்த்தைகளுடன் பின்னி தருகிறார் என்று அறிஞர்கள் விளக்குவர்.
உதாரணமாக, ‘கனிவுடையவர் நாட்டை உரிமை சொத்தாக்கி கொள்வர்’ என்பது திபா 37 : 11ஐ பிரதிபலிக்கிறது. ‘தூய்மையான உள்ளத்தோர்’ என்பது திபா 24 : 4; 51இல் குறிப்புக் காணப்படுகிறது.
இரக்கமுடையோர் என்ற கருத்து மத்தேயு நற்செய்தியில் அதிகமாகக் காணப்படுகிறது. இரக்கமுடையோர் என்பவர் மற்றவரை மன்னிப்பவர் (மத் 6 : 12, 14 - 15; 18 : 35).
முதல் வாசகத்தில், ‘எளியோரே ... ஆண்டவரைத் தேடுங்கள், நேர்மையை நாடுங்கள்’, மனதாழ்மையை நாடுங்கள் என்று செப்பனியா இறைவாக்கினர் அறிவுறுத்துகிறார். செப்பானியா கி.மு.ஏழாம் நூற்றாண்டில் யோசியா அரசன் காலத்தில் இறைவாக்கினராக செயல்பட்டவர். யோசியா அரசன் காலத்தில் இவருக்கு முன்பிருந்த அரசன் மனாசே செய்த தவறுகளையயல்லாம் களையப்பட்டு, சீர்திருத்தங்கள் நடந்தன. இச்சூழ்நிலையில்தான், இறைவன் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் தங்களின் நம்பிக்கையை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்.
இப்போதெல்லாம் ஏழையர் உள்ளத்தினைப் பெற்ற எளிமை மக்களால் விரும்பப்படுவதில்லை. மாறாக ஆடம்பரத்தினைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். அன்மையில் பெங்களூரில், கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனம் ரெட்டி அவர்களின் மகளின் திருமணம் நடந்தது. 650 கோடி ரூபாய் செலவில் மெகா ஆடம்பரத்துடன் அது நடந்திருக்கிறது. மணமகளின் புடவை 17 கோடி ரூபாய். அவர்களுக்கு நகை 90 கோடி ரூபாய். தங்க முலாம் பூசப்பட்ட அழைப்பிதழ். சிறப்பு விருந்தினர் வந்திரங்க 15 தற்காலிக ஹலிபேட். பிரேசில் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட நடனகுழுவினர். ஆடம்பரத்தால் தற்காலிக பெருமையை, மகிழ்ச்சியைப் பெறலாம். எளிமையால், இறைவனின் அருள் வலிமையில் நுழைகிறோம். காந்தி அடிகள் ஏழை மக்கள் அணிந்திருந்த வேஷ்டி துண்டினைத்தான் அணிந்திருந்தார். அதன் வல்லமையால்தான் வல்லரசான இங்கிலாந்தை இந்தியாவிலிருந்து அகற்றினார்.
‘உயர செல்ல வேண்டுமா? கீழே செல்வதுதான் அதன் துவக்கம். வான்முட்டும் கோபுரம் கட்ட விரும்புகிறாயா? அதற்கு எளிமை, பணிவு என்ற அடிதளத்தை முதலில் இடு’ என்கிறார், புனித அகுஸ்தினார்.
‘பணிவு என்பது நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் கொண்ட பண்பு’ - சார்லி சாப்லின்
‘பணிவு என்பது, நான் தவறியிருக்கக் கூடும் என்று ஏற்றுக்கொள்ளும் ஞானம்’ - ரிச்சர்ட் பால் எவான்ஸ்
No comments:
Post a Comment