இரட்சணிய யாத்திரிகம்
- எம்.சி.குமார், எம்.ஏ., எம்.பில்., பி.எட்.,
விரகாலூர்
கிறித்துவின் பிறப்பு
தமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள் உலக மீட்பராம் கிறித்து பிறந்த காட்சியினைச் சிறப்பாகப் பாடியுள்ளன. கிறித்தவக் காப்பியங்களில் ஒன்றான இரட்சணிய யாத்திரிகம் கன்னிபாலானாய்க் காசினியில் அவதரித்த கிறிஸ்துவின் பிறப்பை மிகுந்த பக்தியுணர்வோடு பாடியுள்ளதை அதன் பாடல்கள் மூலம் உணர்ந்து கொள்ள முடிகின்றது.
கிறித்துவின் பிறப்பு பேய்களுக்கு எல்லாம் தலைவனான சாத்தானுடைய கைகால்களை விலவிலக்கச் செய்கின்றது. அவனது உள்ளம் திகிலுற்றுப் பயத்தினால் பறையறைகின்றது. அவனது ஆருயிர் நடுங்குகின்றது. அவனது கருமையான முகம் குப்புறவிழுந்து கவிழ்கின்றது. அவனது கொடிய வினைகளெல்லாம் பயந்து ஓடுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் பாவ இருள் கலைந்தோட ஞானசூரியன் உதயஞ்செய்வது போல் கிறிஸ்து பிறந்தார் என்று கூறியுள்ளது. மேலும் இந்த அகிலத்தை, மண்ணை, விண்ணை, சூரியனை, திங்களை, விண்மீன்களை, விரிகடலை, மழையை, முகிலைத் தமது ஒரு வார்த்தையால் படைத்த அச்சுதன் கடவுள், ஊனுருக் கொண்டு, மனித குமாரனாய் இந்த உலகமெல்லாம் மகிழ்ச்சியடையுமாறு பிறந்தார் எனக் கிறித்துவின் பிறப்புக் காட்சியை இரட்சணிய யாத்திரிகம் பாடியுள்ளது. பக்திச்சுவை நனிசொட்டச் சொட்ட அப்பாடல்கள் உருவெடுத்துள்ளன.
கள்ளம்புரி அலகைக்குஇறை கைகால் விலவிலக்க
உள்ளம்பறை யறையத் திகில் உற்று ஆர்உயிர் நடுக்கம்
கொள்ளக் கரிமுகம் குப்புறக் கொடுந்தீவினை குலைய
அள்ளிக் கதிர்வீசும் சுடர் அருணோதயம் இதுஎன
வானோமகி தலமோசுடர் மதியோவயங்கொளிர்வான்
மீனோவிரி கடலோமழை முகிலோ ஒருவிதியில்
ஆனாநெறி அமைத்தாக்கிய அகிலாண்ட அச்சுதன்ஓர்
ஊனாடிய திருமேனி கொண்டு உதித்தார் உலகு உவப்ப
என அப்பாடல்கள் வந்துள்ளன.
இங்கு இவ்விரட்சணிய யாத்திரிகப் பாடல் கம்பன் கவிதையோடு ஒப்புநோக்கி மகிழ இடந்தருகின்றது. இராமன், சீதையோடு காட்டிற்கு செல்லும்போது அவனது அழகினைக் கம்பன்,
வெய்யோன் ஒளிதன்மேனியின் விரிசோதியின் மறைய
பொய்யோ! எனும் இடையாளொடும் இளையாளொடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ! இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையான்
எனப் பாடியுள்ளார். தேம்பாவணிக் கவிஞரான வீரமாமுனிவர் கிறித்துவின் பிறப்பினை உலகங்கள், காலங்கள் முதலானவற்றுளுள்ளும் உவமை கூறுதற்கியலாத குற்றமில்லாத கன்னியாகிய மரியன்னை, அளவிடற்கியலாத பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்றனுள் நடுவில் விளங்குபவரும், மூச்சுடர்களைக் காட்டிலும், ஒளிமிகுந்தவராகத் திகழும் திருக்குமாரனை, பளிங்கு எவ்வாறு தனக்குச் சிறிதுச் சேதமும் இல்லாது தன்னிடத்துப் படியும் ஒளியினை வெளியிடுகின்றதோ அதுபோலத் தன்கன்னித்தன்மை சேதமுறாது அளவற்ற வல்லமையுடைய அமலனாகிய இயேசு பிரானைப் பெற்றுத் தந்தனள் எனக் கூறியுள்ளார்.
கிறித்துவின் பிறப்பைக் கூறும் தேம்பாவணி, கிறிஸ்து தமிழ் மாதமாகிய மார்கழி மாதம், இருபத்தைந்தாம் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு பதினைந்தாம் நாழிகையில் பிறந்தார் எனக் கூறியுள்ளது. தேம்பாவணி கிறிஸ்து பிறந்த மாதத்தினை டிசம்பர் எனச் சொல்லாது மார்கழி மாதம் எனக் குறிப்பிட்டது தமிழக மரபிற் கேற்ப அதனை அமைத்தல் வேண்டும் என்பதற்காகவே என்று கூறலாம். தேம்பாவணியில்,
மாதம் மார்கழி வைகல் ஐயைந்தாய்
ஏதிலா நிசிக்கு இருத்தை மூலைந்தாய்
ஆதி நாளென ஆதி நாதனை
காதல் நாயகி களிப்பின் நல்கினாள்
என வந்துள்ளது.
தமிழ்க் கிறித்தவக் கவிஞருள் ஒருவராகிய தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் தன் திருஅவதாரம் என்ற நூலில் கிறித்துவின் பிறப்பை வியந்து பாடியுள்ள பாடல் வரிகளும் இத்துடன் எண்ணத்தக்கனவாகும்.
வானம் பூமியோ பராபரன் மானிடர் ஆனாரோ - ஆ! என்னவிது
வானம் பூமியோ பராபரன் மானிடர் ஆனாரோ
- மறைதிரு மாணிக்க ஆசிர்வாதம் (1865 - 1948)
அக்கவிஞருக்கு இறைவன் இம்மண்ணில் மனித குமாரானப் பிறந்தது பேரதிசயமாக பேரற்புதமாகக் காணப்பட்டது.
எனவே அவர் அதனை,
என்னனோஇவ் வற்புதம்பார் ஈசனிங்கே வந்தார் புவியி
என்னவோஇவ் வற்புதம்பார் இந்நிலைமை யாளரே
என்னோஇவ் வற்புதத்தை எப்படி மறப்பாய் பாவி
என மிக இனிய எளிய சொற்களால் பாடியுள்ளார்.
கவி ஆரோக்கியசாமி, சுடர்மணி என்னும் தம் காப்பியத்தில், கிறிஸ்துவின் பிறப்புக் காட்சியைச் சந்தேக நயத்துடன் இசைத்துள்ளார்.
நடுநிசி தன்னில் ஆங்கோர் நல்லொளி தோன்ற மேலே
திடமுளவால்மீன் தோன்றித் திக்கெட்டு மொளி பரப்பப்
படும் வலியேதும் இன்றிப் பாவையும் மகவையீன
மடை திறந்தனைய தேவதூதரும் மல்கி நின்றார்
என்பது சுடர்மணிப் பாடலாகும். அன்னை மரியாள் கன்னித்தாய், பிரசவ வலி எதுவுமில்லாமல் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு ஈன்றளித்தாள் என அப்பாடல் கூறுவதுடன், கிறிஸ்து பிறந்த சூழலை விவரித்துள்ளது. நடுநிசிநேர ஒரு நட்சத்திரம் வானில் நல்லொளி பரப்பிக் கொண்டுள்ளது. கிறிஸ்தவின் பிறப்பை அவனிக்கெல்லாம் அறிவிக்கும் நட்சத்திரம் அது. அதன் அரிய ஒளி திக்கெட்டும் ஒளி பரப்புகின்றது. அது கிறிஸ்துவின் அருள் ஒளி உலகெங்கும் வீசபோவதை முன்னறிவிப்பது போலுள்ளது. இச்சூழல் அன்னை மரி எவ்விதத் துன்பமும் இல்லாமல் வள்ளல் இயேசுவை, கிறிஸ்துவைப் பெற்றுத்தந்தாள். தேவதூதர்களில் மடைதிறந்தாற் போலப் பாலனைச் சூழ்ந்து நின்றனர் என அக்காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.
கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியத்திலும் கிறிஸ்துவின் பிறப்புக் காட்சி இடம் பெறுகின்றது. குழந்தையாய்ப் பிறந்த கிறிஸ்துவைக் கண்ணால் கண்டு மகிழ்ந்த இடையர்களை அவர்தம் உணர்வுநிலையில் நின்று கவிஞர் போற்றியுள்ளார். இதனை,
ஆயர் மக்கள் அனைவரும் ஒன்றாய்
ஆநிரைத் தொழுவினை அறிய நடந்தனர்
தேவதூ தன் செப்பிய படியே
பொன்னொளி மாலைப் புகழுடம் பணிந்து
மின்னலின் பிழம்பாய் மேனி வடித்துத்
தண்ணொளி பரப்பும் தகைசால் மைந்தனைக்
கண்ணால் கண்டு களித்தனர் ஆயரே
என்ற அவரது பாடல் சுட்டுகின்றதாக உள்ளது. இயேசு என்னும் பாலகனது பிறப்புச் செய்தியைத் தேவதூதர்கள் அறிவித்தவுடனே, ஆயர்கள் அனைவரும் அவ்வற்புதக் காட்சியைக் காணப் புறப்பட்டுச் செல்லுகின்றனர். அங்கு தேவதூதர்களின் சொல்லுக்கிணங்க மாட்டுக் கொட்டிலில், பொன்னார்மேனியுடன், மின்னலின் பிழம்பாய் மேனிதுலங்க, குளிர்ந்த ஒளி பரப்பும் மதியயன விளங்கும் இயேசுபாலனைத் தமது கண்களால் கண்டு களித்தனர்.
இரட்சணிய யாத்திரிகத்தில் பாடப்பட்ட கிறிஸ்துவின் பிறப்புக் காட்சி வேறு பல தமிழ்க் கிறித்தவ நூல்களிலும் பாடப்பட்டுள்ளன. கிறித்தவத் திருமறைக்கிணங்க, சிறிதும் வேறுபாடில்லாது அவை பாடப்பட்டுள்ளன என்பதை உணரும்பொழுது இந்நூல்களின் பெருமையை, குறிப்பாக இரட்சணிய யாத்திரிகத்தின் சிறப்பினை அறிந்து போற்ற முடிகின்றது. (தொடரும்).
No comments:
Post a Comment