கிறிஸ்து பிறப்பு விழா
- அருள்பணி. ச. இ. அருள்சாமி,
ஒருவர் படித்துவிட்டு பல ஆண்டுகள் வேலை தேடிவந்தார். ஆசிரியர் வேலைக்குப் படித்துவிட்டு கூலி வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தார். இறுதியாக அரசு வேலைக் கிடைத்தது. மிக்க மிகிழ்ச்சியடைந்தார். அவர் வாழ்வில் புதிய ஒளிக் கிடைத்தாக உணர்ந்தார். புதிய வேலையினால் கிடைத்த நல்ல ஊதியத்தை பொறுப்புடன் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்தார். இயேசுவின் பிறப்பு மானிடத்திற்கு புதிய ஒளியைத் தந்தது என்பதுதான் கிறிஸ்து பிறப்பு விழாவின் பொருள்.
இயேசுவின் பிறப்பு விழாவை மகிழ்வுடன் கொண்டாடுகிறோம். மேல் நாடுகளில் பாரம்பரியம் ஆடம்பர நாளாக ஆகிவிட்டது. புத்தாடைகள், பரிசுகள், கொண்டாட்ட விருந்துகள், கேளிக்கைகள் என்றாகிவிட்டது. இயேசுவின் பிறப்பு விழாவைத் தொடர்ந்து புத்தாண்டு 2017இன் தொடக்கத்தையும் கொண்டாட இருக்கிறோம்.
கிறிஸ்து பிறப்பு விழா நமக்கு அளிக்கும் பெரிய பாடம். இறைப்பண்பில் பொதிந்திருக்கும் எளிமை. ரிச்சர்ட் பாக் என்பவர் கூறுகிறார், எளிமையில்தான் உண்மைகள் புதைந்திருக்கின்றன என்கிறார். The Simplest things are truest’ எளிமை என்பது நம்மை பகிர்தலுக்கு இழுத்துச் செல்லும் கருவி. வீட்டுக்கு மேல் வீடு, ஆடம்பரத்திற்கு மேல் ஆடம்பரம். உயிருள்ள மனிதர் உயிரற்ற பொருள்களுடன் இணைந்து, இதயமற்ற மனிதர்களாக மாறுகிறார். கிறிஸ்து பிறப்பு பொருளிலல்ல, ஆடம்பரத்திலல்ல. எளிமையில் நுழைந்து பகிர்தலில் வாழ்வை காண்க என்கிறது.
அன்மையில் நவம்பர் 8இல் நமது மத்திய அரசு எடுத்த பொருளாதார நடவடிக்கையில், சாமானியர்கள் பல சங்கடங்களுக்கு ஆளாகிவிட்டார்கள். பயணம் செய்ய சில்லறையில்லை, திருமணத்திற்கும், முக்கிய செலவுகளுக்கும் சேர்த்துவைத்த பணத்தை முறைபடுத்த பல குட்டிகரணங்கள் போட வேண்டியதாயிற்று. கருப்புப் பணத்தையும், ஊழலையும் அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்று மத்திய அரசு கூறுகிறது. எந்த அளவிற்கு இந்த செயல்பாடு, கருப்பு பணத்தை அழிக்கப் பயன்பட்டுள்ளது என்பது கேள்வியாகிறது. பெரும் கோடீஸ்வர்களில் விளையாட்டும் கருப்பு பணத்தைப் பிடிக்க சாமானியர்கள் வீண் சுமைகளைத் தாங்க வேண்டியிருந்தது. இன்னும் சற்று கவனமாக இத்திட்டத்தில் இறங்கியிருக்க வேண்டும் என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள்.
மத்திய பாஜக அரசு, தங்களின் பழமைவாத கொள்கைகளை செயல்படுத்துவதிலேயே தந்திரமாக செயல்பட்டு வருகிறது. மத சுதந்திரத்தை அழிப்பது, பொது அரசியல் சட்டம் என்று சிறுபான்மையினரின் உரிமைகளை அழிப்பது, புதிய கல்வி கொள்கை என்று இந்துத்துவ கொள்கைகளை திணிப்பது போன்ற செயல்களில் ஆர்வம் காட்டி வருகிறது. இப்போது 500, 1000 ரூபாய் நோட்டுகளை சரியாக முறைபடுத்தாமல் முடக்கி, பல இன்னல்களுக்கு மக்களை ஆளாக்கியிருக்கிறது.
இப்போது காவிரி பிரச்சனை அடங்கி போய்விட்டது. ஆனால் காவிரி ஆற்றின் கடைமடை பகுதியில், பயிர்கள் காயும் நிலைமையைப் பார்த்து விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அம்மா அவர்கள் மருத்துவம் பெற்று வரும் வேளையில் அரசு பணிகள் அடங்கி போயிருக்கின்றன. தலைமைத்துவம் ஒருவர மையப்படுத்தி இல்லாமல், பரவலாக்கப்பட்டு பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். பள்ளிகளில் மறைக்கல்வி, நன்னெறி வகுப்புகளை ஆய்வு செய்யும் வேளையில், குழந்தைகளை (10 - 12 வகுப்பு) ‘நம் நாட்டில் உயிருள்ள நல்ல தலைவர்கள் யார்?’ என்று கேட்டால், ‘ஒருவருமில்லை’ என்று பதில் தருகிறார்கள். ‘இதனை மாற்ற என்ன செய்யலாம்?’ என்றால் ‘நாமே நல்ல தலைவர்களாக வளர வேண்டும்’ என்றார்கள்.
புதிய ஆண்டில் எல்லா நலன்களும் எல்லாருக்கும் கிடைக்க, அன்னையின் அருட்சுடர் வாழ்த்துகிறது. நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்க, கல்வி உயர்ந்து, தொழில் வளம் பெருக இறைவன் ஆசீர் வழங்கி நம்மை வழிநடத்தட்டும்.
No comments:
Post a Comment