பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு
எசா 9 : 1 - 4: 1 கொரி 1 : 10 - 13 - 17; மத் 4 : 12 - 13
மனமாற்றம் மாட்சியின் வழி
சில ஆண்டுகளுக்கு முன்பாக விடாத மின் வெட்டால் தமிழகத்தில் ஆட்சியே மாறியது. மின்சாரம் இல்லாத வேளையில் வாழ்வே இருண்டு போகிறது. மின்சார விளக்குகள், சமைக்கும் கருவிகள், தண்ணீர் ஏற்றும் மோட்டார் அனைத்தும் மின்சாரத்தின் உதவியால் இயங்குகின்றன.
பலருடைய வாழ்வு, இயங்காத இருளான நிலையைப் பார்த்தோம். அங்கு வாழ்வைத் தரக்கூடிய சக்தி இடம் பெறவில்லை. இன்றைய நற்செய்தி பகுதி, நம் வாழ்வை வெளிச்சமாக்கும் சக்தியைப்பற்றி விளக்கிக் கூறுகிறது. மனிதரின் மனமாற்றம் தான் ஒருவரின் வாழ்வை ஒளிரச் செய்யும்.
இயேசு தன் பணியைத் தொடங்குகின்ற போது முதல் வார்த்தையாக, ‘மனம் மாறுங்கள்: ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்து விட்டது’ என்கிறார். விண்ணரசு நம்மில் வரவேண்டுமென்றால், முதலில் மனமாற்றம் வரவேண்டும். நம்மில் இருக்கும் இருளை அகற்றுவது மனமாற்றம். நம் முயற்சியை முன்வைத்துத்தான் இறைவன் நம்மில் செயலாற்ற வருகிறார்.
திருமுழுக்கு யோவான் கைது செய்யப்பட்ட பிறகு தனது பணியை துவங்குகிறார். ‘திருமுழுக்கு யோவான் கைது செய்யப்பட்டார்’ என்றால் அதில் அவருடைய இறப்பும் உள்ளடங்கும். இயேசு கலிலேயா பகுதிக்கு வருகிறார். ஏரோது அரசனிடமிருந்து இயேசுவுக்கும் ஆபத்து காத்திருக்கலாம். எனவே ஒரு மறைவான பாதுகாப்பான இடத்திற்கு இயேசு செல்கிறார் என்று அறிஞர்கள் விளக்குவர். ‘கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு வீட்டை தனதாகப் பெற்று அங்கு வாழ்ந்திருக்கிறார். ‘செபுலோன் நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. செபுலோன், நப்தலி என்பவை யாக்கோபின் பிள்ளைகளின் (12 பேரில் இருவர்) பெயர்கள்.
இவர்களின் வழிமரபினருக்கு யோசுவா நாடுகளை பிரித்துக் கொடுத்தார் (யோசு 19: 10 16; 24 - 31). கப்பர்நாகும் நகர் நப்தலி பிரிவினருக்குக் கொடுக்கப்பட்ட பகுதியில் உள்ளது. ‘பிற இனத்தவர் வாழும் கலிலேய பகுதியே’ என்று கூறப்பட்டுள்ளது. பிற இனத்தவர்களால் சூழப்பட்ட கலிலேயப் பகுதியே என்று எபிரேய மூலத்தில் உள்ளது. இயேசு வாழ்ந்த காலத்தில் கலிலேயப் பகுதியில் கிரேக்க மொழியையும் அரமேய மொழியையும் பேசி வந்தனர். ஆக இயேசு தனது மனந்திரும்புதல் நற்செய்தியை யூதர்களையும், பிற இனத்தவரையும் இணைத்து பொதுமைப்படுத்திக் கூறுகிறார்.
இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார், கொரிந்து நகர மக்களில் விளங்கும் பிரிவினையை நீக்கி ஒற்றுமையுடன் வாழுங்கள் என்று அழைப்புக் கொடுக்கிறார். ‘பிளவுகள் வேண்டாம், ஒரே மனமும், ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்’ என்று துவக்கத் திருச்சபையில் விளங்கிய அதே அனுபவத்தை இங்கு நினைவுபடுத்துகிறார் (திப 4 : 32).
மனமாற்றம் தன்நலத்தை உடைக்கிறது.
மனமாற்றம் தன்நலத்தை உடைக்கிறது.
தீய சார்புகளை நன்மை வாய்க்காலாக மாற்றுகிறது.
எம்.ஸ்காட் பெக் என்பவர் கூறுவார்,
‘ஒருவரின் தனிப்பட்ட மனமாற்றத்தால், உலக வரலாறே மாறியிருக்கிறது. உலகில் நன்மை தீமைகளின் வெற்றி, தோல்வி தனிப்பட்ட ஒருவரின் உள்ளத்தில் நடக்கும் போராட்டத்தில் நடக்கும் முடிவாகும்’ என்பார்.
‘இறைவன் உன் சிக்கலான சூழ்நிலையை மாற்றாது இருக்கலாம், ஏனென்றால் இறைவன் முதலில் உன் மனதை மாற்ற முயல்கிறார்’. இன்றைய நற்செய்திப் பகுதியில் இயேசு முதல் நான்கு சீடர்களை அழைத்த நிகழ்ச்சியையும் காண்கின்றோம். இறைவன் கொடுக்கும் அழைத்தலிலெல்லாம் பெரிய அழைத்தல், மனமாற்றத்திற்கான அழைத்தல். மனமாற்றம் என்பது, தீய வழியை நல்வழியாக தலைகீழாக மாற்றுவது.
ஒருவர் தன் மனைவியையும், பிள்ளைகளையும் பிரிந்து வாழ்ந்தார். மனைவி மேல் அவருக்கு சந்தேகம். யார் சொல்லியும் மனைவியோடு சேர்ந்து வாழ மறுத்து விட்டார். ஒரு நாள் கோவிலில் ஜெபிக்கும்போது, அவர் மனதை ஏதோ உருத்தியிருக்கிறது. அடுத்த நாளே மனைவியையும், பிள்ளைகளையும் அழைத்து வந்து சமாதானமாக வாழ்ந்தார். மனமாற்றத்தால் எல்லோருக்கும் அளவில்லா மகிழ்வு பிறந்தது.
No comments:
Post a Comment