Pages - Menu

Saturday, 4 February 2017

நான் எழுத்தாளன் ஆனேன், 15. கவியரசு கண்ணதாசன் அறிமுகம்

நான் எழுத்தாளன் ஆனேன்

- லெயோ ஜோசப், திருச்சி

15. கவியரசு கண்ணதாசன் அறிமுகம்

29 காஸட்டுகள் போட்டோம். சென்னை அடையாறில், மான்போர்ட் சகோதரர்கள், வாய்ப் பேசா இளைஞர்களுக்காக ஓர் அச்சகம் நடத்துகிறார்கள். அங்குதான் பாடல் புத்தகம் அச்சானது. அயனாவரத்தில் உள்ள அக்காள் வீட்டிலிருந்து சாப்பாடு கட்டிக் கொண்டு, தினசரி காலை பேருந்தில் அடையாறு போவேன். பிழைதிருத்தம் செய்வேன். மாலையில் வீடு திரும்புவேன்.

ஆறு மாதங்கள் ஓடியது. அழகிய ‘இறைப்பணி பாடல்கள்’ என்ற புத்தகம் உருவானது. பாடல், பிழைதிருத்தம் எல்லாம் நான்தான். சகோதரர் ஜெபமாலை, ஒரு புத்தகத்தை ஃபாதர் ஜார்ஜிடம் கொண்டு போய் காண்பித்தார். ‘ஒரு பிழைகூட இல்லாமல் பார்த்திருக்கிறார்’ என்று கூறினார்.

கண்ணதாசன் குற்றாலத்தில் ‘இயேசு காவியம்’ எழுதத் தொடங்கியிருந்தார். அப்போது என்னை அழைத்துச் செல்லவில்லை. ஃபாதர் ஸ்தனிஸ்லாசும், ஃபாதர் ஜார்ஜ்‡ம் விவிலியத்தைப் படித்துச் சொல்ல, கண்ணதாசன் கூற, கண்ணப்பன் எழுதுவார். இப்படியாக இயேசு காவியம் 9 நாளில் உருவானது.

கண்ணதாசன் கவிதை சொல்லும்போது மடமடவென்று சொல்லுவார். வார்த்தைகள் சரளமாக வந்து விழும். சமயத்தில் தவறாக இருக்கும். அவர் சொல்லும் சரளம் கெட்டு விடுமே என்பதால், தவறாக இருந்தாலும் விட்டு விடுவார்கள். ஊருக்குத் திரும்பியதும் 8 குருக்கள் (எல்லோரும் இறையிலில் முனைவர் பட்டம் பெற்றவர்கள்) அமர்ந்து குறைகளைக் கண்டுபிடிப்பார்கள்.

நான் குமாஸ்தா. குருக்கள் கூறும் குறைகளைக் குறித்துக் கொண்டு, மீண்டும் நகலெடுத்து, செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரிக்குச் சென்று, புரொபசர் சாமிமுத்து  ஐயாவைப் பார்த்து, நகலெடுத்தவைக்கு அசை பிரித்து வாங்கி வந்து நகலெடுத்து, மீண்டும் படிக்கத் தயாராக வைக்க வேண்டும். இதற்காக எனக்கு ஒரு தனி அறை, ஒரு டைப்பிஸ்ட்.

இது வரை டிஸ்யூ பேப்பர் வைத்து நகலெடுத்து, ஜெம் கிளிப் குத்தி வைத்து விடுவார்கள். அதைத்தான் படித்துப் பார்க்க வேண்டும்.

நான் ஒரு காரியம் செய்தேன். சார்ட் அட்டை வாங்கி வந்து, 10 தனித் தனி புத்தகமாகத் தயாரித்தேன். அதைப் பார்த்ததும் குருக்கள், ‘இது யார் செய்தது?’ என்று கேட்டார்கள். ஃபாதர் ஜார்ஜ் என்னைக் காண்பித்தார். ‘வெரிகுட்’ என்றார்கள்.

நான் பாமரத்தனமாக விவிலியத்திலிருந்து சில சந்தேகங்களை எழுப்பினேன். ‘அட, இவர் நல்ல சந்தேகங்களை கேட்கிறாரே! நீங்க ஏன் தனியாக அங்க உட்காந்திருக்கீங்க? நாற்காலிய தூக்கிக்கிட்டு இங்க வாங்க’, என்று என்னையும் குழுவோடு சேர்த்துக் கொண்டார்கள். (இயேசு காவியத்தைப் பார்த்தீர்களானால், ஃபாதர்.ஸ்தனிஸ்லாஸ் எழுதிய முன்னுரையில், அறிஞர் வரிசையில் என் பெயர் இருக்கும்).

பிழை திருத்தினோம். கண்ணதாசனை அழைத்து, ஆனந்த் ஹோட்டலில் ரூம் போட்டு திருத்தும் பணியை மேற்கொண்டோம். கண்ணதாசன் கூடியவரையில் தத்துவங்களைக் கையாள்வார். யூத சட்டப்படி கசையடி என்றால் 40 அடிதான் அடிக்க வேண்டும். மேற்கொண்டு  ஓர் அடி அடித்தால், அடித்தவனுக்குக் கசையடி விழும். இதனால் 39  அடியுடன் நிறுத்திக் கொள்வார்கள். ஆனால், இயேசுவைப் பொருத்தவரை, அடித்துக் கொல்ல வேண்டும் என்ற நோக்கில் கணக்கின்றி அடித்தார்கள்.

இதைச் சொன்னோம். 8 வரிகளை மாற்ற வேண்டுமே என்று சற்றுத் தயங்கினார். பிறகு சொல்லத் தொடங்கினார்.

நாற்பதில் ஒன்றுகு றைத்துத்தான் - அடி
நல்குவ ராம்அந்த நாளிலே - வெற்று
ஆர்ப்பரிக் கும்அந்தக் கூட்டமோ - எண்ணி
ஆயிரம் நூறென ஆடிட்றாம் - முற்றும்
தோற்பவர் இப்படி ஆடுதல் - இந்தக்
தொல்புவி யில்உள்ள வேதமே - அதை
ஏற்றது நாயகன் மேனியே - இரத்தம்
இன்னொரு யூதர்கள் கேணியே
!
உடம்பு சிலிர்த்துப் போயிற்று. கவியரசு கண்ணதாசன் பற்றி நிறைய செய்திகள் உண்டு. 
(இன்னும் சொல்வேன்)

நறுக்கு வார்த்தைகளில் இறைவார்த்தை

நறுக்கு வார்த்தைகளில் இறைவார்த்தை

உன் பெயர் பேதுரு, இந்த பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் (மத் 16 : 13 - 19)

மணல் துளிகள்
சேர்ந்தது பாறை.
உணர்வுகளின்
ஒன்றித்த உறுதிப்பாடு
நம்பிக்கை.

ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியயடுத்து வைக்க நான் தகுதியற்றவன் (மத் 8 : 15 - 17)

மற்றவரை
வலிமை பெற்றவராக
உற்று நோக்குவதே
நம்பிக்கை.

கலப்பையில் கை வைத்தப்பின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்பட தகுதியுள்ளவர் அல்ல (லூக் 9 : 62).

பின்நோக்கிப்
பார்த்தல்
பலகீனத்தின் பண்பு.

நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு (மத் 8 : 20)

வீடில்லா பாதை
தொண்டர்களின் நாடு.
கரையில்லா உறவு
பணியாளரின் மரபு.

திருப்பலி விளக்கம், 12. வார்த்தை வழிபாடு (4)

திருப்பலி விளக்கம்

- அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானி இல்லம், கும்பகோணம்

12. வார்த்தை வழிபாடு (4)

மறையுரை

வார்த்தை வழிபாட்டில் மூன்று அல்லது இரண்டு வாசகங்கள் பறைசாற்றப்பட்டபின் மறையுரை வழங்கப்படுகிறது. மறையுரை எப்படி அமைந்திருக்க வேண்டும்? என்பது பற்றி இன்னும் சிலரிடையே சரியான புரிதல் கிடையாது. எனவே எனது விளக்கத்திற்குமுன் இதுபற்றிய ஒழுங்குமுறைகள் எவ்வாறு வகுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவுப்படுத்தும் முறையில் திருஅவையின் படிப்பினைகளைத் தருகிறோம்.

வாசகநூல் பொது முன்னுரை எண் 24

திருவழிபாட்டு ஆண்டின் போக்கில், இறைவார்த்தையின் அடிப்படையில் விசுவாச உண்மைகளுக்கும் கிறிஸ்தவ வாழ்க்கை முறைக்கும் விளக்கம் அளிக்கும் மறையுரை இறைவாக்கு வழிபாட்டின் ஒரு பகுதியாகும் (தி.வ.எண் 52; திருச்சடங்கு பேராயம், ணூஐமிer நுeஉற்துeஐஷ்உஷ், 26.09.1964, எண் 54 காண்க). சில வேளைகளில் அது கட்டாயம் என்று திருவழிபாடு பற்றிய கொள்ளை விளக்கம் ஆணையிட்டுள்ளது. திருப்பலியில் மறையுரை பெரும்பாலும் திருவழிபாட்டுத் தலைவரால் நிகழ்த்தப்பட வேண்டும். அதன் நோக்கம், அறிவிக்கப்பட்ட இறைவாக்கும் நற்கருணை வழிபாடும் “மீட்பின் வரலாற்றில் அல்லது கிறிஸ்துவின் மறைபொருளில் இடம்பெறும் இறைவனின் வியத்தகு செயல்களைப் பறைசாற்றுவதாகும்” (தி. வ. எண் 35)

மறையுரை வாசிக்கப்பட்ட விவிலிய வாக்கையோ அல்லது வேறு வழிபாட்டு பாடத்தையோ விளக்குவதாய் இருக்கும் ... 
மக்கள் கூட்டத்தோடு கொண்டாடப்படும் எல்லாத் திருப்பலிகளிலும் மறையுரை இடம்பெற வேண்டும்.
உரோமை திருப்பலி நூல் பொது போதனை எண் 65

மறையுரை திருவழிபாட்டின் ஒரு பகுதியாகும். அது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் கிறிஸ்தவ வாழ்வுக்கு ஊட்டமளிக்க அது தேவை. திருவிவிலிய வாசகங்களிலிருந்தோ, திருப்பலியின் பொதுப் பகுதி அல்லது சிறப்புப் பகுதியிலிருந்தோ தெரிவு செய்யப்பட்ட ஒரு பாடத்தின் சில கூறுகளை விளக்குவதாக மறையுரை அமைய வேண்டும்; கொண்டாடப் பெறும் மறை உண்மையையும் கேட்போரின் தனிப்பட்ட தேவைகளையும் மறையுரையாளர் கருத்தில் கொள்ள வேண்டும்.

திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளரே வழக்கமாக மறையுரை நிகழ்த்துவார்; அவ்வப்போது சூழ்நிலைகளுக்கேற்பத் திருத்தொண்டரிடம் இப்பணியை ஒப்படைக்கலாம். ஆனால் பொது நிலையினரிடம் இதனை ஒருபோதும் ஒப்படைக்கக் கூடாது. சிறப்பான நிகழ்வுகளில் தக்க காரணத்திற்காக, கூட்டுத் திருப்பலி நிகழ்த்தாமல் திருப்பலியில் மட்டும் பங்கேற்கும் ஓர் ஆயர் அல்லது ஓர் அருள்பணியாளர் மறையுரை நிகழ்த்தலாம் (எண் 66 / 1)

ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் கடன் திருநாள்களில் மக்கள் பங்கேற்கும் எல்லாத் திருப்பலிகளிலும் மறையுரை நிகழ்த்துவது கட்டாயமாகும்; தகுந்த காரணம் இருந்தாலன்றி, இதை விட்டுவிடக்கூடாது. பிற நாள்களில் குறிப்பாகத் திருவருகைக்காலம், தவக்காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றின் வாரநாள்களிலும் மக்கள் கோவிலுக்குத் திரளாக வந்து கூடும் திருநாள்களிலும், நிகழ்ச்சிகளிலும் மறையுரை நிகழ்த்துவது பரிந்துரைக்கப்படுகிறது (எண் 66 / 2)

திருவழிபாட்டு கொள்கை விளக்கம் எண் 52

மறையுரையைத் திருவழிபாட்டின் ஒரு பகுதியாக மிகவும் போற்ற வேண்டும். இம்மறையுரை திரு வழிபாட்டு ஆண்டு முழுவதிலும் விவிலியத்திலிருந்து  நம்பிக்கையின் மறைபொருளையும் கிறிஸ்தவ வாழ்க்கை நெறிகளையும் விளக்குகிறது. அன்றியும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடமைத் திருநாள்களிலும் மக்களோடு நிறைவேற்றப்படும் திருப்பலிகளில் கனமான காரணம் இல்லையயனில் மறையுரையை விட்டுவிடக்கூடாது.

நாம் மேலே மேற்கோளாக குறிப்பிட்ட மூன்று ஆவணங்களிலும் பளிச்சென வெளிப்படும் கருத்துகளாகப் பின்வருபவனவற்றைக் குறிப்பிடலாம்.

1. மறையுரை திருவழிபாட்டின் ஒரு பகுதியாகும்.

2. ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் திருப்பலியில் மறையுரை வழங்குவது கட்டாயமானதாகும்.

3. மற்றும் மக்கள் கூடிவரும் எல்லாத் திருப்பலிகளிலும் மறையுரை கொடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

4. அதைத் திருப்பலிக்குத் தலைமை ஏற்று நடத்துபவரே கொடுக்க வேண்டும்.

5. விசுவாச உண்மைகளுக்கும், கிறிஸ்தவ வாழ்க்கை முறைக்கும் விளக்கம் அளிக்கும் விதமாக அமைந்திருக்க வேண்டும்.

6. ஆனால் இது பறைசாற்றப்பட்ட இறைவார்த்தையின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.

7. அதோடு திருப்பலி வழிபாட்டின் வேறு பாடத்தையும், எடுத்துக்காட்டாக பதிலுரைப்பாடல், மன்றாட்டுக்கள் போன்றவற்றையும் அடிப்படையாக வைத்து அமைக்கலாம்.

8. சிறப்புக் காலங்களில் வார நாட்களிலும் மறையுரை பரிந்துரைக்கப்படுகிறது.

9. மேலும் வழிபாட்டில் கொண்டாடப்படும் புனிதர்கள் எவ்வாறு அன்று பறைசாற்றப்பட்ட இறைவார்த்தையை வாழ்வியலாக்கி வாழ்ந்தார்கள் என்று எடுத்துரைக்கக் கூடியதாக அமைந்திருக்க வேண்டும்.

10. பறைசாற்றப்பட்ட வாசகங்களோடும், கொண்டாடப்படும் மறை நிகழ்வுகளோடும், புனிதரோடும் தொடர்பற்ற சில புண்ணியங்களை, எடுத்துக்காட்டாக மகிழ்ச்சி, நம்பிக்கை போன்றவற்றை சில கட்டுக் கதைகளை சொல்லி விளக்குவதாக மறையுரையை அமைக்கக்கூடாது.

11. திருப்பலிக்குக் குழுமி வந்திருக்கும் மக்களின் தேவைகளையும், காலத்தின் அறிகுறிகளையும் மனதில் கொண்டிருக்க வேண்டும் மறையுரை.

இவற்றையயல்லாம் மனதில் கொள்ளாமல் ஏதோ ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் மறையுரையை அவ்வப்போது கதையை மட்டும் மாற்றி சொல்லிக் கொண்டு காலம் ஓட்டினால் அது திருப்பலியில் பங்குபெற வந்திருப்பவர்களின் தேவைகளின் அடிப்படையிலும் இருக்காது, பறைசாற்றப்பட்ட வாசகங்கள் கொண்டிருக்கும் விசுவாச கோட்பாடுகள் அடிப்படையிலும் இருக்காது, கொண்டாடப்படும் மறைநிகழ்ச்சிகள், ஒன்று சொல்லப்படுகின்ற கட்டுக்கதையின் நகைச்சுவையை ரசிப்பதினால் இருக்கலாம். மற்றொன்று தொடர்பற்ற கட்டுக் கதையைக் கேட்டு அதோடு உடன்பாடு இல்லாதபோது நகைப்புக்காகவும் சிரிக்கலாம். இதை உய்த்து அறியாமல், மறையுரையாளர், ‘நான் சொல்வது பிடிக்கவில்லை என்றால் ஒரு காதால் கேட்டு மறு காதால் விட்டு விடுங்கள்’ என்று சொல்லும் மறையுரையாளர் மக்களுடைய தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ‘நான் ரெடிமேடாக வைத்திருக்கும் மறையுரையைத்தான் வழங்குவேன்; கேட்டால் கேளுங்கள், கேட்காவிட்டால் போங்கள்’ என்று சொல்வது பொறுப்பற்ற மனநிலையைத்தான் காட்டுகிறது.

எனவே மறையுரையாளர் நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள கருத்துகளை மனதில் கொண்டு ஒவ்வொரு நாள் வாசகப் பகுதியை வாசித்து தியானித்து பறைசாற்றப்பெறும் மறை நிகழ்வுகளையும், கோட்பாடுகளையும் மனதில் கொண்டு, மறையுரையைக் கேட்பவர்களின் தேவையையும் கருத்தில் கொண்டு மறையுரையைத் தயார் செய்து வழங்க வேண்டும்.

விசுவாச அறிக்கை

தொடக்கச் சடங்கை ‘வார்த்தை வழிபாட்டிற்குத் தயாரிப்பு’ என்பதை போல், விசுவாச அறிக்கை, மன்றாட்டுகளை ‘வார்த்தை வழிபாட்டின் முடிவு’ என்று சொல்லலாம்.

பறைசாற்றப்பட்டு, மறையுரையில் விளக்கப்பெற்ற இறைவார்த்தைக்கு மக்கள் தரும் பதிலே விசுவாச அறிக்கையாக அமைந்துள்ளது. இந்த விசுவாச அறிக்கைக்கு இருவாய்ப்பாடுகள் (க்ஷூலிrதுற்யிழிவி) உண்டு. ஒன்று திருத்தூதர்களின் விசுவாச அறிக்கை (புஸ்ரீலிவிமியிeவி உreed), மற்றொன்று நிசேயா விசுவாச அறிக்கை (ஹிஷ்உeழிஐ உreed). முந்தியது  குறுகியது, தொன்மையானது; பிந்தியது மிக விரிவானது, இது நிசேயா பொதுசங்கத்தின் பெயரைக் கொண்டது. அதாவது இந்த விரிவான விசுவாச அறிக்கை அச்சங்கத்தில் உருவாக்கப்பட்டு, 4‡ஆம், 5‡ஆம் நூற்றாண்டுகளில் நடந்த மற்ற பொது சங்கங்களின் போதனைகளையும், திரிபு கொள்கைகளுக்கு எதிராகவும் மிகத் தெளிவான, நுட்பமான விசுவாச கோட்பாடுகளையும் கொண்டது. இரண்டிலும் இறைவன்மீதும், அவருடைய வார்த்தையான கிறிஸ்து மீதும், தூய ஆவியார் மீதும் மற்றும் இறைவெளிப்பாட்டினால் அறியப்படும் மறை உண்மைகள் மீதும் மக்கள் கொண்டுள்ள தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடுகின்றனர்.

இரண்டாவது வத்திக்கான் சங்கத்திற்குமுன் திருப்பலியில் நிசேயா விசுவாச அறிக்கையே மக்கள் அளிக்கும் பதிலுரைக்குப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்பொழுது இருவித விசுவாச அறிக்கைகளையும் பயன்படுத்தலாம். அந்தோ பரிதாபம்! எப்பொழுதுமே மிகக்குறுகிய திருத்தூதர்களின் விசுவாச அறிக்கையைப் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இது தவிர்க்கப்பட வேண்டும். விரிவான நிசேயா விசுவாச அறிக்கையையும் அவ்வப்போது பயன்படுத்துவது நல்லது.

இவற்றோடு ‘வானமும் பூமியும்’ என்று தொடங்கும் மற்றொரு விசுவாச அறிக்கை பெரும்பாலும் பாடப்படுவதைப் பார்க்கிறோம். ஆனால் எது எங்கிருந்து வந்தது? யார் இதற்கு அனுமதியளித்தது? என்று ஒன்றும் புரியவில்லை. இதுவே பெரும்பாலும் பாடப்படும் விசுவாச அறிக்கையாக அமைந்துவிட்டது! இது ஏற்புடையதா? என்று ஆயர் குழுமந்தான் பதில் அளிக்க வேண்டும்.

“மீட்பின் அருள் அடையாளம்”  (Sacramentum Redemptionis)  என்ற ஆவணத்தில் “திருப்பலியிலும் மற்ற திருவழிபாட்டு கொண்டாட்டங்களிலும் முறையாக அங்கீகரிக்கப்பட்ட திருவழிபாட்டு நூல்களில் இல்லாத விசுவாச அறிக்கையைப் பயன்படுத்தக்கூடாது” (எண் 69) என்று கூறப்பட்டுள்ளது  கவனிக்கத்தக்கது.

விசுவாச அறிக்கை ஞாயிற்றுக் கிழமை திருப்பலிகளிலும், பெருவிழாக்கள் திருப்பலிகளிலும் சொல்லப்படும் அல்லது பாடப்படும். ஆனால் விசுவாச அறிக்கை பறைசாற்றப்பட்ட இறைவாசகங்களுக்கும், விளக்கப்பட்ட மறையுரைக்கும் பதிலாக வருவது என்றால், ஏன் எல்லா திருப்பலிகளிலும் விசுவாச அறிக்கை இடம் பெறக்கூடாது என்ற ஒரு கேள்வி எழுகிறது. திருவழிபாட்டு ஒழுங்குமுறையைத் தவிர, இத்தகு வேறு காரணம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

பொது மன்றாட்டு

இது ‘நம்பிக்கையாளரின் மன்றாட்டு’ என்றும் அழைக்கப்படுகிறது. இது பற்றி பின்வருமாறு திருப்பலி நூலின் பொதுப் போதனையில் வாசிக்கிறோம்:

“பொது மன்றாட்டில் அல்லது நம்பிக்கையாளரின் மன்றாட்டில் மக்கள் நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்ட இறைவார்த்தைக்கு ஒருவகையில் பதில் அளிக்கிறார்கள். திருமுழுக்கில் தாங்கள் பெற்ற பொதுக் குருத்துவத் திருப்பணியை நிறைவேற்றி எல்லாருடைய மீட்புக்காவும் இறைவனுக்கு மன்றாட்டுகளை ஒப்புக் கொடுக்கின்றனர். மக்களோடு சேர்ந்து நிகழ்த்தும் திருப்பலிகளின் போது இத்தகைய மன்றாட்டு இடம் பெறுவது விரும்பத்தக்கது. இம்மன்றாட்டுகள் புனித திருஅவைக்காகவும், நம்மை ஆளும் அதிகாரிகளுக்காகவும், பற்பல தேவைகளில் உழல்வோருக்காகவும், மக்கள் எல்லாருக்காகவும், உலக முழுவதின் மீட்புக்காகவும் அமைந்திருக்க வேண்டும்” (எண் 69; வாசக நூல் பொது முன்னுரை எண் 30 ‡ 31 காண்க).

விசுவாச அறிக்கை வழியாக பறைசாற்றப்பட்ட இறைவார்த்தைக்கு பதில் அளித்ததோடு, இப்பொழுது மன்றாட்டுகள் வழியாகவும் பதில் அளிக்கிறார்கள். தங்களது பொதுக் குருத்துவப் பணியைச் செயலாக்கம் செய்யும் நேரங்களில் இதுவும் ஒன்று. மக்கள் கூடிவந்து  நிகழ்த்தப்படும் திருப்பலிகளில் எல்லாம் இம்மன்றாட்டுகள் இடம் பெறுவது நல்லது.

இம்மன்றாட்டுகள் திருஅவையின் தேவைக்காகவும், நாட்டு அதிகாரிகளுக்காகவும்,  அனைத்துலக மீட்புக்காவும், எல்லா வகையான இன்னல்களில் உழல்வோருக்காகவும், கூடிவந்துள்ள நம்பிக்கையாளர்களுக்காகவும் அமைந்திருக்க வேண்டும்.

இந்த மன்றாட்டுகள் கூடிய வரைக்கும் சுருக்கமாகவும் தெளிவாகவும் அமைக்கப்பட வேண்டும். ஐந்து மன்றாட்டுகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. எண்ணிக்கையில் அதிகரிக்கும் போது, இது நின்று கொண்டிருக்கும் மக்களுக்கு சலிப்பை உண்டாக்கும்.

சில நேரங்களில் மன்றாட்டுகளுக்கு இசையமைத்து பாடுவதைப் பார்க்கிறோம். வரவேற்கத்தக்கது. ஆனால்  சில வேளைளில் இசை ஓங்கியிருக்கும்போது வார்த்தைகள் மூழ்கி போய்விடுகின்றன. அதனால் மன்றாட்டுகளே மக்களுக்குப் புரியாமல் போய்விட வாய்ப்புண்டு. பாடும்போது  இது நேரிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொது மன்றாட்டுகள் இறைவார்த்தை வழிபாட்டை முடித்து வைக்கும் ஓர் அமைப்புக்கூறு. இதைக் காணிக்கைகளைக் கொண்டுவரும் போது சொல்லப்படுகின்ற விளக்கங்களோடு இணைத்து செபிப்பது பெரும் தவறு.  இது தவிர்க்கப்பட வேண்டும். திருப்பலிக்குத் தலைமை தாங்குபவரே வாசக மேடையில் இருந்தோ அல்லது தமக்குரிய இருக்கையிலிருந்தோ முன்னுரை கூறி நம்பிக்கையாளர்களைச் செபிக்க அழைப்பார். இறுதியில் எடுத்துரைக்கப்பட்ட மன்றாட்டுகளை ஏற்றருளும்படி சுருக்கமான செபத்துடன் முடிப்பார்.

முடிவுரை

வார்த்தை வழிபாட்டின் எல்லா அமைப்புக் கூறுகளும் தொடக்கத்திலிருந்து  இறுதிவரை சரியாக அமைக்கப்பட்டு செயலாக்கம் பெற்றால் வழிபாடு பொருளுள்ளதாகவும், பலன் உள்ளதாகவும் அமைந்திடும்.

அச்சமின்றி திரைப்பட விமர்சனம்

அச்சமின்றி
திரைப்பட விமர்சனம்

கல்வித்துறையில் நடக்கும் ஊழலை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் அருமையான படம் இது. தனியார் பள்ளிகளின் முதல் மார்க் கனவுக்காக கல்வித்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் காவல்துறையினரிடையே நிலவும் ஊழலை அட்டகாசமாக தோலுருத்துக் காட்டும் அற்புதமான படம்.

ஹீரோவாக வரும் விஜய் வசந்த் பிட்பாக்கெட் திருடன். அவரை போலீஸ் என்று நம்பி காதலிக்கும் இளம் பெண் சிருஷ்டி டாங்கே. அவள் ஒரு வேலைக்காரியின் மகள். அவளின் தேர்வு மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த ஹீரோவை  கொல்லமுயல்வது படத்திற்கு விறு விறுப்பை கூட்டுகிறது.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக சமுத்திர கனி வருகிறார். அவரின் காதலி வித்யாவும், காதலியின் தம்பியும் பள்ளிக்கூடத்தில் மர்மமான முறையில் இறப்பது என்று நிறைய முடிச்சுக்களை போட்டு, சிக்கல் இல்லாமல் அவிழ்ப்பது செம விறுவிறுப்பு.

கல்வித்தாயாக வந்து தன்னால் வில்லி கேரக்டரிலும் முத்திரை பதிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் சரண்யா பொன்வண்ணன். கல்வி அமைச்சருக்கான கெட்டப்பில் மிளிர்கிறார் ராதாரவி.

சமுத்திர கனியின் காதலி வித்யாவாக வருபவர், வாய் பேசாதவராக சைகை பாஷையில் பேசி நடிப்பது மனதைத் தொடுகிறது.

பிக்பாக்கெட் கும்பலில் தேவதர்´ணி, கருணாஸ், சண்முகசுந்தரம் நடிப்பு நம்மை நன்கு சிரிக்க வைக்கிறது.

இன்று கல்வித்துறையில் நடக்கும் அவலங்களைச் சொல்லும் ‘அச்சமின்றி’ படத்தை நாம் அனைவரும் தயக்கமின்றி பார்க்கலாம்.

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில் 

 இசையை தன் வசமாக மாற்றிய ராசா

 அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

அவர் பெயர் ராசய்யா. ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரைதான் படித்தார். நன்றாகப் பாடுவார். மெட்டெடுத்துப் பாடுவதில் வல்லவர். அதற்கு ஒரு  உதாரணம் :

“குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
 குடியிருக்க நான் வரவேண்டும்
 குடியிருக்க நான் வருவதென்றால்
 வாடகை என்ன தர வேண்டும்”. 

இது ஒரு பிரபலமான திரைப்பட பாடல். அதை ராசய்யா பழனி முருகன் பக்தர்களிடம் இவ்வாறு பாடினார்.

“முருகப்பெருமான் கோயிலிலே
 முடியயடுக்க நான் வரவேண்டும்
 முடி எடுக்க நான் வருவதென்றால்
 காணிக்கை என்ன தரவேண்டும்?”

பொதுவுடைமைப் பாடல்களை கச்சேரிகளில் பாட வாய்ப்பு கிடைத்தது. கச்சேரியில் பாடி கலக்கினார். டேய், ராசய்யா உம் பாட்டு அருமையாக உள்ளது. நீ சினிமாவில் பாடு, சென்னைக்குப் போ என்று பலர் அவரிடம் சொன்னார்கள். ராசய்ய சென்னைக்குச் சென்றார். வீதி வீதியாய் அலைந்தார். எட்டு வருடம் கடந்துவிட்டது. பட்டினி, பழக்கப்பட்ட ஒன்றாயிற்று. ஆனால் அவர் மனம் உடைந்து போகவில்லை. மெல்லிய காற்று அவர் மீது வீசியது. ஆம் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அழைத்து அவரது இசைக்குழுவில் இசைக்கருவிகளை வாசிக்க வாய்ப்புக் கொடுத்தார். ஆரம்பத்தில் ராசய்யாவிற்கு நாட்டுப்புற இசை மட்டுமே தெரியும். பின்னர் கர்நாடக சங்கீதம். அதன்பின் மேற்கத்திய இசை, இந்துஸ்தானி இவ்வாறு இசைத்துறையில் கற்று தேர்ந்தார். பிறகு, சினிமா துறையில் தனி இடம் பிடித்தார். இந்தியாவில் ஸ்டீரியோ போனிக் இசையை முதன்முதலில் புகுத்தியது ராசய்யா தான்.

1983ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்று  உலகப்புகழ் பெற்ற மெல்லிசை அரசர் பால்மரியாவை சந்திக்க வாய்ப்பு கேட்டார். பால்மரியாவும் அவருக்கு ஐந்து நிமிடம் மட்டுமே ஒதுக்கினார். கர்நாடகா சங்கீதத்தையும், மேற்கத்திய இசையையும் ஒருங்கிணைத்து அமைத்த இசைப்பேழையை பால்மரியாவுக்கு இசைத்துக் காண்பித்தார். இரண்டு மணிநேரம் கடந்தது. இது இந்திய சங்கீதமல்ல, சர்வதேச சங்கீதம் என்று பால்மரியா புகழ்ந்தார். லண்டனில் உள்ள இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்குச் சொந்தமான ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவிடம் இருந்து ராசய்யாவுக்கு அழைப்பு வந்தது. ஜான் ஸ்காட் தலைமையில் 81 இசைக்கலைஞர்கள் இசைக் கருவிகளை இசைத்தனர். அதில் ராசய்யாவின் சிம்பொனி இசை மட்டுமே முழுமையாக இசைக்கப்பட்டது. அந்த இசைக்கலைஞர்கள் அனைவரும் இசைக்கருவியை கீழே வைத்துவிட்டு கைதட்டி வாழ்த்துக் கூறினர். ராசய்யாவுக்கு மேஸ்ட்ரோ பட்டம் வழங்கப்பட்டது.

என்னங்க, ராசய்யா யாருன்னு நீங்களே கண்டுபிடிச்சிருப்பீங்களே!!! ஆமாங்க அந்த ராசய்யா தான் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படத்திற்கு வாயால் பாடி, கையால் மேசையில் தாளம்போட்டு பஞ்சு அருணாசலத்திடம் வாய்ப்பு கேட்டவர். இன்றைக்கு அவருடைய வளர்ச்சியைப் பார்த்தீர்களா? கிடைத்த  வாய்ப்புக்களை வெற்றிப் படிக்கட்டுகளாக்கி தன்னிடம் இருந்த அறிவையும், திறமையையும் அகலப்படுத்தி, ஆழப்படுத்தி இந்த அகிலத்தையும் தன்வசமாக்கிய இசைஞானியின் வாழ்வு நமக்கும் பாடமாக அமையட்டும். வாய்ப்புக்கள் நம்மைத் தேடி வந்து கதவைத் தட்டாது. நாம் தான் வாய்ப்புக்களைத் தேடி ஓட வேண்டும். அப்போது ஏற்படும் ஏமாற்றங்களை ஏணிப்படிகளாக மாற்றி, துன்பங்களை துரத்திவிட்டு, வேதனைகளை வேரெடுத்து, சங்கடங்களுக்கு சவுக்கடி கொடுத்து, தோல்விகளைத் தோற்கடித்து, சவால்களை சந்தோ­மாய் சந்தித்து சக்திமானாய் மாறுவோம். வெற்றியாளர்களாக வலம் வருவோம்.

வியர்வைத் துளிகளும்
கண்ணீர் துளிகளும்
உப்பாக இருக்கலாம்.
ஆனால், அவை தான்
வாழ்வை  சுவையாக மாற்றும்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறை இரக்க ஆண்டு பற்றிய சிறப்புத் திருமடல் MISERICORDIA ET MISERA (MERCY AND MISERY)

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறை இரக்க ஆண்டு பற்றிய சிறப்புத் திருமடல்
MISERICORDIA ET MISERA (MERCY AND MISERY)

- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

இரக்கமும், அவல நிலையும்

இறை இரக்க ஆண்டு 2015 டிசம்பர் 8 முதல் 2016 நவம்பர் 20 வரை நடைபெற்றது. இந்த யூபிலி ஆண்டின் நிறைவு விழா 2016 நவம்பர் 20 அன்று உரோமை, புனித பேதுரு பேராலயப் பெருங்கதவு மூடப்பட்டு நிறைவுக்கு வந்தது. நடந்து முடிந்த யூபிலி ஆண்டின் சிந்தனைகளை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்திட திருத்தந்தை அவர்களால் நவம்பர் 20, 2016 அன்று சிறப்புத் திருமடல் வெளியிடப்பட்டது. இதன் முக்கியக் கருத்துக்கள் இந்தக் கட்டுரையில் தொகுத்து அளிக்கப்படுகிறது.

1. திருமடலின் ‘இரக்கமும், அவல நிலையும்’ என்னும் இந்தத் தலைப்பிற்கான காரணம்:

யோவான் 8 : 1 ‡ 11 வரையுள்ள பகுதியில் விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணும், இயேசுவும் சந்திக்கும் நிகழ்வு பதிவு செய்யப்படுகிறது. இதனை புனித அகுஸ்தினார் ‘இரக்கத்தின் முன், அவல நிலை’ என்றுரைக்கின்றார். ‘நானும் தீர்ப்பளிக்கவில்லை ; இனி பாவம் செய்யாதீர்’ (யோவான் 8 : 11) என்ற இயேசுவின் இரக்கமிகு கனிவான வார்த்தைகள் இந்தப் பெண் பழைய பாவ வழியகற்றிப் புதிய புனித வாழ்வினை வாழத் தூண்டுகிறது. இதன் மூலம் இந்தப் பெண் விண்ணக வாழ்விற்கான கதவினைத் தட்டுகின்றார்.

2. கண்ணீரால் இயேசுவின் பாதங்களைக் கழுவி கூந்தலால் துடைத்து முத்தமிட்டு, பரிமளத்தைலம் பூசிய பாவியான பெண்:

பரிசேயரின் வீட்டில் உணவருந்தச் சென்ற போது இயேசுவும், பாவியான பெண்ணும் சந்தித்த நிகழ்வு லூக் 7 : 36 ‡ 50 வரை மேற்காணும் நிகழ்ச்சியினை விவரிக்கின்றது. மிகுதியான அன்பினை வெளிப்படுத்திய பாவியான பெண்ணின் மிகுதியான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. தனது துன்பத்தின் உச்ச வேளையிலும், தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை (லூக் 23 : 34) என்ற வார்த்தைகள் இயேசுவின் மன்னிக்கும் மாண்பினை உலகறியக் காட்டுகின்றது. மன்னிப்பின் மகிழ்ச்சி ஓர் இறையனுபவம். இதனை வார்த்தைகளில் வடிக்க முடியாது.
கடவுள் நம்மைத் தேடி வந்து, தமது இரக்கத்தினைப் பொழிந்து, தந்தை தம் பிள்ளைகள் மீது இரக்கம் காட்டுவது போல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இறங்குகின்றார் (தி பா 103 : 13) என்னும் இறைவாக்கின் உண்மைப் பொருளை வாழ்வாக்குகின்றார்.

3. இறை மன்னிப்புக் கொண்டாட்டம் :

நாளைய நாட்களிலும் இறை இரக்கமும், மன்னிப்பும் தொடர்ந்திடும்போது  இது நமது வாழ்வுக் கொண்டாட்டமாக அமைந்து விடுகிறது. மேய்ப்புப் பணி மாற்றங்களினால் கீழ்க்காணும் செயல்பாட்டுக் கூறுகளின் மூலம் திருச்சபை புனிதம் பெற்றிட அழைக்கப்படுகின்றது.

அ. குணமளிக்கும் அருட்சாதனங்கள் :

இறை இரக்கப் பதிவுகளே திருவிவிலிய நிகழ்வுகள். மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. ‘அது கற்பிப்பதற்கும், கண்டிப்பதற்கும், சீராக்குவதற்கும், நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது’ (2 திமோ 3 : 16). நமது உடல், உள்ள ஆன்மீகப் பிணி போக்கும் அருட்சாதனங்களாக ஒப்புரவு மற்றும் நோயில்பூசுதல் போன்றவை அமைந்துள்ளன. திருப்பலி அனைத்து அருட்சாதனங்களின் குணமளிக்கும் வாழ்வுக் கொண்டாட்டமாகும்.

ஆ. அன்பு திரளான பாவங்களைப் போக்கும் (1 பேதுரு 4 : 8) : 

பாவி தனது நிலையுணர்ந்து இறைவன்மீது அளவில்லா  அன்பு கொண்டு, அவரின் இரக்கத்தில் நம்பிக்கை வைத்து செயல்படும்போது புனிதம் கமழ்கின்றது. தன்னுள் உள்ள பிளவுபட்ட தன்மையின் காரணமாகப் பாவச் சார்பு நிலை மிகுந்துள்ளது (காண்க உரோ 7 : 14 ‡ 17). அனைத்தையும் பொறுத்துக் கொள்வதே அன்பு (1 கொரி 13 : 7). எனவே இறையருள் பாவத்தைவிட பலம் மிகுந்து தீயனவற்றின் மீது வெற்றி காணச் செய்கின்றது.

. அருள் பணியாளர்களுக்கான அறிவுறுத்தல்:

‘பாவிகளுள் முதன்மைப் பாவியான நான், நிலை வாழ்வடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள இருப்போருக்கு நான் மாதிரியாய் விளங்க வேண்டும் என்பதற்காக என்னிடம் தம் முழுப்பொறுமையைக் காட்டினார் ’ (1 திமோ 1 : 15, 16) என்ற பவுல் அடியார் போன்று, ஒவ்வொரு குருவும் தனது பாவ நிலையினை உணர்ந்து, ஒப்புரவு அருள்சாதனம் அளிக்கத் தயாராயிருத்தல் வேண்டும். ஏனெனில் விண்ணகத் தந்தையின் அன்பினை வெளிப்படுத்துவதே இந்த அருட்சாதனம். ஏனெனில் இவர்களே இரக்கத்தின் திருத்தூதர்களாய்த் திகழ்கின்றனர்.

4. குருக்களுக்கான சிறப்பு அதிகாரம் :

கருக்கலைப்பு மற்றும் சிசுக் கொலை புரிவோருக்கு மன்னிப்பளிக்கும் அதிகாரம் இதுவரையில் மறைமாவட்ட ஆயர்களுக்கு உரிய தனி உரிமையாக இருந்தது. இப்போது இந்த அதிகாரம் அனைத்து குருக்களுக்கும் அளிக்கப்படுகிறது.

5. தாய் திருச்சபை மன்னித்து ஏற்றுக் கொள்வதின் அடையாளம் :

இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ளாது எதிர்ப்பாளராய் வாழ்ந்த பேராயர் லெபபர் (புrஉஜுணுஷ்விஜுலிஸ்ரீ ஸிசிய்சியUயூசி) திருத்தந்தை ஜான்பால் அவர்களால் திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டார். இவரும், இவர் ஏற்படுத்திய பத்தாம் பத்திநாதர் குருக்கள் சபையும், தாய் திருச்சபைக்கும் புறம்பாக்கப்பட்டனர். இறை யூபிலி  ஆண்டில் இவர்கள் மன்னிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டனர். இவர்கள் தொடர்ந்து தாய் திருச்சபையில் இணைந்து செயல்பட அனுமதிக்கப்படுகின்றனர்.

6. இரக்கத்தின் இன்னொரு முகம் ஆறுதல் :

ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள் (எசாயா 40 : 1) என்றுரைக்கின்றார் ஆண்டவர். உயிர்த்த ஆண்டவரில் நம்பிக்கை வைத்து வாழ்வோர், துன்பங்களிலும், வேதனை, நோய் நொடிகளிலும் சிக்கித் தவிக்கின்ற போது, இவர்களுக்கு மனப்பாரம் குறைத்திடும் ஆறுதல் அதிகம் தேவை. இதனால் இன்சொல் இறைநெருக்கத்தினை உணர்ந்து வாழ்வில் அவர்களை மகிழ்ந்திருக்கச் செய்யும்.

7. இனிய இல்லறமே திருச்சபையின் மகிழ்ச்சி :

குடும்பம் என்பது குட்டித் திருச்சபை. பெற்றோர், பிள்ளைகள் மத்தியில் இறையிரக்கத்தின் செயல்பாடுகள் மிகுந்திருக்கும்போது, மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் மிகுந்த புரிதல் உண்டாகும். இதனால் நீதி, அன்பு, மன்னிப்பு, இரக்கம் போன்ற இறையரசுக் கனிகள் அங்கு பூத்துக் குலுங்கிடும்.

8. இறப்பின் சோகத்தில் ஆழ்ந்திருப்போருக்கு ....

விண்ணக வாழ்வுக்கான பிறப்பு, மண்ணக வாழ்வின் இறப்பு என்பதன் பொருளை இறப்பின் சோகத்தில் ஆழ்ந்திருப்போர் உணரச் 

செல்லார். ஏனெனில் இரக்கம் நம்மைப் புதுப்பிக்கிறது;. நம்மை மீட்கிறது. இதுவே இறை ‡ மனிதச் சங்கமம்.

10. இரக்கக் கலாச்சாரம் :

இரக்கத்தின் காலம் இதுவே. இந்நாட்களில் இரக்கக் கலாச்சாரத்தை உருவாக்குவோம். முன்பு இரக்கம் பெறாதவர்களாய் இருந்தீர்கள்; இப்பொழுதோ இரக்கம் பெற்றுள்ளீர்கள் (1 பேதுரு 2 : 10) என்னும் பேதுருவின் வார்த்தைகள் நமதாகட்டும். இறை இரக்க வெள்ளிக்கிழமைகள் மூலம், இறை நெருக்கத்தில் வளர்வோம். மேலும் ஏழை ‡ செல்வந்தர்களிடையே நிலவிடும் வேறுபாட்டினைக் களைந்திட காலத்திற்கேற்ற புதுப்புது இரக்கச் செயல்கள் புரிவோம். அப்போது நாம் பகிர்தலின் மகிழ்வையும், ஒருமைப்பாட்டுணர்வின் அழகையும் வாழ்வில் கண்டுணர்வோம்.

11. ஏழையரின் ஞாயிறு :

பொதுக்காலத்தின் 34ஆம் ஞாயிறு கிறிஸ்து அரசர் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு முந்தைய ஞாயிறு உலகெங்கும் பரவியுள்ள ஏழையரை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இரக்கச் செயல்கள் புரிந்து வாழ வேண்டும் என்பதன் அடையாளமாக ஆண்டின் முப்பத்து மூன்றாம் ஞாயிறினை ஏழையரின் ஞாயிறாகக் கொண்டாடுதல் மிக்கப் பொருள் பொதிந்ததாகத் திகழும்.

12. இறை இரக்கத்தின் அரசி :
இரக்கமிகு பண்புகளின் இலக்கணமாகவும், அன்பினுக்குச் சான்று பகர்வோரின் அடையாளமாகவும் திகழ்பவர் அன்னை மரியா. அவரின் தாய்மைப் பராமரிப்பிலும், வழிகாட்டுதலிலும் இறைவனின் இரக்கத்தினை அன்றாடம் அனுபவித்து அகிலத்தோர் அனுபவிக்கச் செய்வோம். ஒவ்வொரு நாளும் அதுவே அகிலத்தின் புரட்சியாகும்

Friday, 3 February 2017

இலக்கியத் திங்கள்

இலக்கியத் திங்கள்
இலக்கியம் என்பது மனித இலக்கினை விளக்குவது. வாழ்வின் நுட்பங்களை ஆய்ந்து காட்டுவது. வாழ்வின் உண்மைகளை சுவையாகத் தருவது. மனிதர் உறவாடி வளர்வதன் அடிப்படையில்தான் இலக்கியம் தோன்றியது. இலக்கியம் மனிதரை வளர்க்கும், உயர்த்தும். இலக்கியம் பலவடிவம் கொண்டது. எழுத்தோவியங்கள், இசை, நடனம், மற்ற கலைகள். பிப்ரவரி மாதம் இலக்கிய மாதம். நவீன உலகில் இலக்கியங்கள் புதுவடிவங்களைப் பெற்றுள்ளன. தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவை இலக்கியங்களைத் தாங்கிவரும் வாகனங்களாக வலம் வருகின்றன. ஆனால் இவை தோன்றி மறையும் இயல்புடையன. அச்சு வடிவங்களான புத்தகங்கள், சிற்றிதழ்கள் நிலைத்தன்மை உடைத்தன.

இலக்கியங்களுடன் நாம் உறவு கொள்ளுதல், நம் வாழ்வை இனிமையானதாக்கும், எளியதாக்கும். இலக்கியங்களை உருவாக்கும் வரம் கொண்டவர்கள் உண்டு. கிரேக்கத்தில் சாக்ரடீஸ், லத்தினில் சிசரோ, ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் தமிழில், தொல்காப்பியர், வள்ளுவர், கம்பர், பாரதியார், பாரதிதாசன், கவிஞர் வைரமுத்து போன்றோர் மொழியியல் வல்லுனர்களாக கருத்துக்களை எழிலாக இனிதாக மக்கள்முன் படைத்திருக்கின்றனர்.

அன்னையின் அருட்சுடர் சென்ற ஐம்பது ஆண்டுகளாக அச்சு ஊடகத்தால் ஆன்றோரின் சிந்தனைகளை உலகிற்குத் தந்திருக்கிறது. தற்போதும் அப்பணியைத் தொடர்கிறது. இணையதளத்திலும் அன்னையின் அருட்சுடர் இணைந்திருக்கிறது. ஸ்ரீழிவிமிலிrழியிஉeஐமிer.ணுயிலிஆவிஸ்ரீலிமி.ஷ்ஐ  என்ற குறியீட்டில் அன்னையின் அருட்சுடரை இணையதளத்தில் காணலாம். இதுவரை 7000 பேர் வாசித்து பயனடைந்திருக்கிறார்கள். ர´யா, வெனின் சுலா, பெரு போன்ற சுமார் 20 நாடுகளிலிருந்து வாசித்திருக்கிறார்கள். இலக்கியத்தில் இணைவோம், வாழ்வில் மலர்வோம். 

சென்ற இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் பெரிய நிகழ்வுகள் இடம்பிடித்திருக்கின்றன. டிசம்பர் 5இல் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா மறைந்தார். டிசம்பர் 12இல் வர்தா புயல் சென்னை மாநகரைத் தாக்கி ஒரு லட்சம் மரங்களை சாய்த்தது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொன்னதால் தங்கள் பணத்தை எடுத்து செலவு செய்ய முடியாமல் மக்கள் தடுமாற்றத்திற்கு உள்ளானார்கள். பருவமழை பொய்த்தும், காவிரி நீர் தரப்படாமல் தடுக்கப்பட்டும், தமிழகம் வறட்சிக்கு உள்ளானது. நட்ட பயிர்கள் செத்து மடிவதைக் கண்ட விவசாயிகள் பயிர்களுடன் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். 1876க்கு பிறகு வரும் கொடுமையான வறட்சி நிலை இது. பழைய ஏற்பாட்டில் யோசேப்பு, எகிப்தில் பஞ்சத்தை ஞானத்துடன் சந்தித்ததுபோல, நம் அரசினர், மக்களை வழிநடத்த வேண்டும். தமிழகத்தின் அரசியல் சூழல் குழம்பிய குட்டையாக உள்ளது. சிறந்த தலைவர்கள் நம்மிடையே வெளிவர வேண்டும். ஜல்லிகட்டு விளையாட்டிற்கு அனுமதி கேட்டு தமிழகம் போராடி வருகிறது. தற்போது  தமிழக மக்கள், தங்களின் ஒற்றுமையையும், அறிவாற்றலையும் காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

- அருள்பணி. ச. இ. அருள்சாமி

Ads Inside Post