பணிவு என்னும் இனிய பாதை
22. தொண்டர்களுக்கும் வேண்டும் பணிவு...
அருள்பணி. மகுழன்,
பூண்டி மாதா தியான மையம்
கடந்த இரண்டு மாதங்களாக தலைவருக்குத் தேவையான பணிவையும் தாழ்ச்சியையும் சிந்தித்தோம். தலைவருக்கு மட்டுமல்ல தலைவருக்குக் கீழே இருக்கின்ற உறுப்பினர்களுக்கும் தொண்டர்களுக்கும் பணிவு அடிப்படையானது என்று சிந்திக்க அன்புடன் அழைக்கின்றேன்.
2013 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டும் வரை அமெரிக்காவில் பார்லின் என்ற பங்கில் பணியாற்றினேன். நான் உதவிப் பங்குத்தந்தை. பங்குத் தந்தை மிகவும் நல்லவர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 93 வயதாகும் அவருடைய தாய், அருகிலிருக்கும் தன் இடத்திலிருந்து விருந்துண்ணுவதற்காக வருவார். பாதர் என்னையும் அழைப்பார். பாதர்தான் சமைப்பார். நன்றாகவே சமைப்பார். ஒருமுறை சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது பாதரின் தாய் பாதரிடம் ‘ஜேம்ஸ் அந்த கரண்டியை எடு’ என்றார். பாதர்க்கு கோபம் வந்துவிட்டது. ‘தயவு செய்து’ என்று சொல்லுங்கள் என்றார். அவரும் அவ்வாறு சொல்ல பின்னர்தான் கரண்டியை எடுத்துக் கொடுத்தார். அந்த அம்மா அதைப்பற்றி கொஞ்சமும் வருத்தப்படவில்லை. தமக்கு வயதாகிவிட்டது. அதனால் மறந்து விடுகிறது. என் மகன் அதனை நினைவுப்படுத்துகிறான். என்னிடம் தவறு இருக்கும்போது நான் அதைத்திருத்திக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையே அவரிடம் மேலோங்கி இருந்ததைப் பார்க்க முடிந்தது.
தலைவர்களுக்கு நிச்சயம் தேவை பணிவு. பணிவு இல்லாமல் ஒரு தலைவர் புரியும் அனைத்து நல்லக் காரியங்களுக்கும் முகவரி இருக்காது. ஒரு தலைவருக்கு மட்டுமல்ல தொண்டர்களுக்கும் பணிவுத் தேவை. தொண்டர்களுக்குத் தேவையான பணிவை பின்வரும் விவிலிய வரிகள் சுட்டிக் காட்டுவதைப் பார்க்கலாம்.
(1 தெச 5.12-13) ‘சகோதர சகோதரிகளே உங்களிடையே உழைத்து ஆண்டவர் பெயரால் உங்களை வழிநடத்தி உங்களுக்கு அறிவு புகட்டுவோரை மதித்து நடக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் பணியின் பொருட்டு அவர்களை உயர்வாகவும் அன்புடனும் கருதுங்கள்.’ (எபிரே 13.17) ‘உங்கள் தலைவர்களுக்குக் கீழ்படியுங்கள். அவர்களுக்கு பணிந்திருங்கள். அவர்கள் உங்களைப் பற்றி கணக்கு கொடுக்க வேண்டியிருப்பதால் உங்கள் நலனில் விழிப்பா யிருக்கிறார்கள். இப்பணி அவர்களுக்கு மகிழ்ச்சியு ள்ளதாய் இருக்கும்படி நடந்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு மனத்துயர் தராதீர்கள். அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது.’ சரிங்க உங்கள் தலைவர்களுக்கு எப்படி உங்கள் பணிவைக் காட்டுவது என்று தானே கேட்கிறீர்கள்? அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
1.உங்கள் தலைவருக்கு மதிப்பளியுங்கள்.
நீங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆசரியர் ஒரு மாணவனை மாணவர் தலைவனுக்காக நியமிக்கிறார். அப்பொழுது உங்கள் இயல்பான நடவடிக்கை அவருக்கு எதிராக பேசுவதும் இருப்பதும் ஆகும். ஒரு சில நேரங்களில் மேலே இருப்பவர்களுக்கு மதிப்பளிப்பது எளிதானக் காரியமாக இருக்கலாம். அப்பொழுதுதான் நம் வாழ்க்கையில் சிக்கல் இருக்காது. (குருமடங்களில் குருக்களுக்கு குருமாணவர்கள் பயந்து நடப்பது). சிலர் வேலை போய்விடக் கூடாது அல்லது பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக மேலே இருப்பவர்களுக்கு மதிப்பளிப்பார்கள். உண்மையான தாழ்ச்சி நிறைந்தவர்கள் எந்த விதமான பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் பதவியில் உள்ளவர்களுக்கு மதிப்பு அளிப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் தலைவர்கள் குறைகளே இல்லாமல் இருந்ததால்தான் அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்றில்லை. இந்த உலகில் குற்றம் குறைகள் இல்லாதவர்கள் யார்? தலைவர்களின் குறைகளோடு அவர்களுக்கு மதிப்பளிக்கும்போது நம் பணிவு முழுமை பெறுகிறது.
2. உங்கள் தலைவரை பின்பற்றுங்கள்.
பொதுவாக சொல்லுவார்கள் ‘நாம் நாமாக இருக்க வேண்டும். யாரையும் பார்த்து நாம் மாறத் தேவையில்லை.’ ஒரு விதத்தில் பார்த்தால் அது உண்மைதான். ஆனால் இன்னொன்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நம் தலைவர்களிடத்தில் இருக்கின்ற நற்பண்புகளை நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்ற முன்வர வேண்டும். ஒருவரை தலைவராக நியமித்து இருக்கிறார்கள் என்றால் அவருடைய உயர்ந்த பண்புகள் திறமைகள் அடிப்படையில் தான் நியமித்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல ஒவ்வொருவரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வியங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஒரு குருவானவர் நன்றாக திருப்பலி வைப்பதை பின்பற்றலாம். (சில குருவானவர்கள் எப்படி திருப்பலி வைக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்கள்). எப்படி பாடம் நடத்த வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கலாம். எப்படி பொறுமை காக்க வேண்டும் என்பதற்கு சிலர் உதாரணமாக இருக்கலாம். எப்படி பிள்ளைகளை வளர்ப்பது என்பதற்கு சிலர் உதாரணமாக இருக்கலாம். காலம் தவறாமையை கடைபிடித்து சிலர் நமக்கு உதாரணமாக இருக்கலாம். நமக்கு மேலே இருப்பவர்களிடம் மட்டுமல்ல. நமக்கு கீழே இருப்பவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள ஆயிரம் வியங்கள் உண்டு என்பதையும் மனதில் கொள்வோம்.
3. உங்கள் தலைவருக்குக் கீழ்ப்படியுங்கள்
அண்மைக் காலமாக திருச்சபைத் தலைவர்களிடத்தில் ஓர் அருமையான மாற்றத்தைப் பார்க்கிறேன். அவர்கள் சில முயற்சிகளை மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட குருக்களையும் கன்னியர்களையும் பொதுநிலையினரையும் கலந்தா லோசிக்கிறார்கள். முன்னொரு காலத்தில் எந்த விபரமும் சொல்லாமல் கீழ்ப்படிய வேண்டும் என்று திருச்சபைத் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். நம் மூளையின் பலம் அபாரமானது. ஆனால் அது காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டது. இந்த உலகில் உள்ள அனைத்தும் குறையுள்ளது. எனவே நம் மூளையும் குறையுள்ளது. நம் தலைவர்களின் சூழ்நிலைகள் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நாம் அறிந்து கொள்ள முடியாது.
கீழ்ப்படிதல் என்று சொல்லும் போது இரண்டு விதத்தில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். ஒன்று தலைவர் விரும்புவதைச் செய்வது. இரண்டு தலைவர் எடுக்கும் காரியங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பது. ஒரு தலைவர் குறிப்பிட்ட கருத்தோடு குறிப்பிட்ட திட்டத்தையும் முன்மொழிந்தால் அந்த தலைவரின் மனப்பான்மையோடு ஒன்றிணைந்து செயல்படுத்துவதற்கு முன் வர வேண்டும்.
அது சரிங்க ஒரு தலைவர் தவறு செய்ய சொன்னால் செய்யலாமா? என்று தானே கேட்கிறீர்கள். உங்கள் தலைவர்க்கு தகுந்த விதத்தில் தகுந்த மரியாதையோடு உண்மையை எடுத்துரைக்க வேண்டும். கீழ்ப்படிவதில் மட்டுமல்ல உண்மை நிலையை எல்லோருக்கும் எடுத்துரைப்பதிலும் நம் பணிவையும் தாழ்ச்சியையும் எடுத்தியம்ப முடியும். (தொடரும்...)
No comments:
Post a Comment