ஆண்டவரின் விண்ணேற்றம்
13-05-2018
திப 1: 1-11; எபே 4:1-13; மாற் 16:15-20
ச.இ.அ.
ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்காக அல்லது பணிக்காக, படிப்புக்காக வெளியிடங்களுக்குச் செல்லும்போது, எப்போது நம் வீட்டிற்குத் திரும்புவோம் என்ற ஏக்கம், நமக்கு உண்டாகும். பணிகள் முடிந்து திரும்புகிற வேளையில், தனிப்பட்ட நன்றி செபம் சொல்வேன். நாம் துவங்கிய பணி நிறைவாக நடந்தது. இடையில் எவ்வித தடங்கள், இடையூறுகள் இன்றி நிறைவுகண்டதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகின்ற வேளையில், அந்நிகழ்ச்சி முழுமையான தன் அடிப்படையில் ஒருமன நிறைவு ஏற்படும்.
இயேசு விண்ணகம் சென்ற விழாவை கொண்டாடுகிறோம். இன்றைய முதல் வாசகம் இயேசு விண்ணகம் சென்ற நிகழ்ச்சியை விளக்குகிறது. இறைவாக்கினர் எலியா, எலிசா கண்முன்பாக, நெருப்புப் தேரும், நெருப்புக் குதிரைகளும் தோன்ற, சுழற்காற்றில் விண்ணகத்துச் சென்றார் என்று வாசிக்கிறோம் (2 அரச 2:11). இயேசு உயிர்த்த பின்பு நாற்பது நாள்கள் திருத்தூதர்களுக்கு காட்சியளித்து, அவர்களை உலகெங்கும் தனது சாட்சிகளாக விளங்கக் கூறின பிறகு, விண்ணகம் எடுத்துக் கொள்ளப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது (திப 1:8).
இயேசு பிறந்தபோது, அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிட்டார்கள். எம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு என்று பொருள். இயேசு இவ்வுலகை விட்டுப் பிரிந்து விண்ணகம் செல்லும்போது சீடர்களுக்கு அவர்தந்த வாக்குறுதி உலகமுடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் (மத் 28:20) என்பதாகும். எனவே அவரது பிரசன்னம் என்றுமுள்ளதாகிறது.
இயேசு இவ்வுலகில் இருக்கும் போது தன் விண்ணகத் தந்தையுடன் ஒன்றித்திருந்தார் (யோவா 17:22). அதே போல இயேசு விண்ணகம் சென்ற பிறகு தன் சீடர்களுடன் ஒன்றித்திருக்கிறார். அவ்வாறு அவர் தன் சீடர்களுடன் ஒன்றித்திருப்பதற்கு தூய ஆவியை சீடர்களுக்கு அனுப்புகிறார் (யோ14:26). இவ்வாறு தொடர்ந்து சீடர்களுடன் ஒன்றித்திருந்து செயல்படுகிறார். அவர்கள் அரும்அடையாளங்கள் செய்ய வேண்டிய வல்லமையைத் தருகிறார் (மாற் 16:20).
நமது பணி விண்ணகத்தைப் பார்த்து நிற்பதல்ல. இயேசு செய்தது போல, தீமைகளை அகற்றுவதும், நோய்களை குணமாக்குவதும், எல்லோரோடும் ஒன்றித்து வாழ்வதுமாகும்.
ஒரு முனிவர், தான் இறப்பதற்கு முன் தன் சீடர்களை அருகில் அழைத்தார். ‘என்னுடைய சிறிய துன்ப வாழக்கை நிறைவுறப் போகிறது. நான் ஒரு சந்தைக்குச் செல்கிறேன். என்னிடம் கொஞ்சம் பணம்தான் இருக்கிறது. ஆனால் அதைக்கொண்டு அளவில்லாமல் நிறைய வாங்குவேன். உலகில் சிறிதுதான் துன்புற்றேன். ஆனால் பெரிய ஒப்பற்ற செல்வத்தைப் பெறப் போகிறேன். அதுதான் விண்ணகம்’ என்றார்.
ஒருவர் விண்ணகத்தைப் பற்றி விளக்கிக் கொண்டிரு ந்தார். கேள்வி நேரத்தில் ஒருவர், ‘நான் விண்ணகம் செல்லும்போது துதர்களுக்கு உள்ளதுபோல இறக்கைகள் இருக்கும். அதில் எப்படி என்சட்டையை மாட்டுவது என்பது பிரச்சனையாய் இருக்காதா’ என்றார். பேச்சாளர், ‘உங்களுக்கு இறக்கைகள் இருக்காது. வால்தான் இருக்கும். வாலில் எப்படி உங்களின் கால் சட்டையை பொருத்துவது என்பதுதான் பிரச்சனையாக இருக்கும்’ என்றார்.
‘எலியாவின் விண்ணேற்றம் ஒரு பறவை பறந்து செல்வது போன்றது. நாம் அதனை பின்பற்ற முடியாது. இயேசுவின் விண்ணேற்றம் விண்ணையும் உலகையும் இணைக்கும் பாலம் போன்றது. இதனால் அவரின் சீடர்கள் அவரை சென்றடைய முடியும்’. - பாம் கார்ட்டன்
No comments:
Post a Comment