பெருமை நிறைந்த முதுமை
- நல்லை இ. ஆனந்தன், வேதியர்
முதுமை ஒரு சாபமல்ல. அது ஒரு வரம். ஏனெனில் அது சில பேருக்குக் கிடைப்பதில்லை. ஆனால் பெருகி வருகின்ற முதியோர் இல்லங்கள் நாட்டிற்கு அவமானங்கள். கொடுமையான நாகரீக வளர்ச்சியின் கொடூர முகங்கள். கடந்த நூற்றாண்டில் முதியோர்கள், வீட்டில், ஊரில், நாட்டில் தலைவர்களாக, நடுவர்களாக, வழிகாட்டிகளாக மதிக்கப்பட்டனர். பெருமை மிகுந்த அந்த முதுமை இந்த நூற்றாண்டின்தான் பெரிய பிரச்சனைக்குரியதாக மாறிப் போனது. உலக சுகாதார நிறுவனம் 2020ல் உலகில் ஆயிரம் மில்லியன் முதியோர்கள் இருப்பார்கள் என்று கணக்கிட்டுள்ளது. அதில் 142 மில்லியன் முதியோர்கள் இந்தியாவில் மட்டும் இருப்பார்கள் என்றும், அவர்களைப் பேணிகாப்பது பிரச்சனையாகும் என்றும் கவலை தெரிவித்துள்ளது.
முதியோர் இல்லத்திற்கு வந்த ஒரு தாத்தாவிடம் அதன் பொறுப்பாளர், இந்த இல்லத்தை உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாரம். உடனே அந்த தாத்தா கோபத்துடன் வெளியேறினாராம். பொறுப்பாளர் பதறிப்போய் விபரம் கேட்டபோது, வீட்டை மறக்கத்தான் இந்த இல்லம் வந்தேன் என்று கண்ணீருடன் பதில் கூறினாராம். சிரிக்காதீர்கள். இது நகைச்சுவை அல்ல! அவலச் சுவை.
உங்கள் இல்லத்தின் முதிர்யோர்களை எங்களிடம் அனுப்புங்கள். நாங்கள் அனைத்தையும் பார்த்துக்கொள்கிறோம். பணம் மட்டும் மாதாமாதம் நீங்கள் அனுப்பினால் போதும். சிறிதளவு பணத்தில் முதியோர்க்கு பாதுகாப்பு. உங்களுக்கும் விடுதலை என்ற விளம்பரங்கள் கட்டிடத்தின் படத்துடன், கலரில் நாலு தாத்தாபாட்டி சிரித்தபடி இருக்கும் புகைப்படத்துடன் விளம்பரங்கள் ஊடகங்களில் வெளியாவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இன்றைய முதியோர்கள் நேற்றைய இளைஞர்கள். முந்தா நாள் சிறுவர்கள். அவர்களை கவனியாது விடுவது, கரித்துக் கொட்டுவது வார்த்தைகளால் நிந்திப்பது. பட்டினி போட்டு வதைப்பது, பாசம் காட்ட மறுப்பது, நடுத்தெருவில் அலைய விடுவது எல்லாமே கடவுளே சகிக்க முடியாத கொடூரங்கள்.
இது வேகமான உலகம். வீட்டிலுள்ள அனைவரும் ஓடிஓடி சம்பாதிக்க வேண்டிய நெருக்கடியான காலகட்டம். எனவேதான் முதியோர்களை கைகழுவும் பழக்கம் உருவாகிவிட்டது. உடல்தளர்ச்சி, ஞாபக மறதி, கண்பார்வைக் குறைவு, பக்கவாதம், மூட்டுவலி, நரம்புத் தளர்ச்சி, செரிமானமின்மை, கூன் விழுதல், நடக்க முடியாத நிலை என்று முதியோர்கள் சுமக்கும் சிலுவைகள் ஏராளம்.
இது நமது நாட்டில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் பரவி வருகின்ற அநாகரிக கலாச்சாரமாகி விட்டது. இன்னும் பத்து வருடங்களில் சீனாவில் இளையோரைப் போல இருமடங்கு முதியோர்கள் இருப்பார்கள் என்று கணக்கிட்டு, அவர்களுக்கான வழிமுறைகளை ஆய்வுகள் வழியாக ஆலோசித்து வருகின்றது. ஆக, இது இனி உலகபிரச்சனையாக உருவெடுக்கப் போகின்றது.
பணம் இல்லாததால் முதியோர்கள் காப்பகத்திற்கு வருகிறார்கள் என்று எண்ணமுடியாது. நான் சந்தித்த தாத்தா ஒருவர், மாதம் நாற்பதாயிரம் பென்சன் வாங்குகிற ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. அவருக்கு மூன்று பிள்ளைகள். பென்சன் வந்ததும் ஆளுக்கு பத்தாயிரம் பிரித்துக் கொடுத்துவிட்டு தனது பத்தாயிரத்துடன் முதியோர் இல்லம் வருகிறார். அவர் கூறியது, மூன்று பிள்ளைகளுமே பாசமானவர்கள். மொத்தப் பணத்தையும் தன்னிடம் கொடுத்துவிட்டு சுகமாக இருங்கள் என்று ஒவ்வொருவருமே அழைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை நான் ஓர் ஏடி.எம் இயந்திரம். அது எனக்கு உடன்பாடில்லததால் நான் முதியோர் இல்லத்தில் இருக்கிறேன் என்றார்.
ஆனால் சாமிமுத்துவின் கதை வேறு. அவருக்கு எட்டுப் பிள்ளைகள். ஆனால் அவர் ஊரின் நாடகமேடையில் படுத்திருந்தார். பேசியபோது, எட்டுப்பிள்ளைகளுக்கும் வீடு கட்டிக் கொடுத்து, திருமணம் செய்து வைத்து, என் கடமைகளை நிறைவேற்றி விட்டேன். மனைவி போயிட்டாள். ஆனால் பிள்ளைகள் அங்கே போ.. இங்கே போ.. என்று விரட்டுகிறார்கள். ஞாயித்துக் கிழமை பூசைக்குக்கூடப் போகாமல் ஆடிஓடி சம்பாதிச்சேன். என்ன புண்ணியம்? நடுத்தெருவுல நிக்கறேன். நான் என்னப்பா தப்பு செய்தேன்? என்றார்.
நீங்கள் செய்த தப்பு எது தெரியுமா தாத்தா? ஞாயிறு பூசைக்குப் போகாததுதான். நீங்கள் போயிருந்தால் பிள்ளைகளும் வந்திருப்பார்கள். மறையுரை, மறைக்கல்வி கேட்டிருப்பார்கள். இயேசு வேணாம். காசு வேணும்னு ஓடினீங்க. காசு கைவிட்டிருச்சு. ஞாயிற்றுக்கிழமை பூசைக்குப் போகாதவன் நடுத்தெருவுலதான் நிப்பான். இனியாவது இயேசுகிட்ட வாங்க அவர் கைவிடமாட்டார் என்றேன்.
அன்புமிகுந்த தாத்தா பாட்டிகளே, அறிவுரையாக இல்லாமல் ஆலோசனையாக பின்வருபவற்றைக் கேளுங்கள். முதலில் உங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள். உடல்நலம் கெடும்போது, உங்கள் பிள்ளைகள் உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அவர்களின் வேலை பாதிக்கப்படும். வருமானம் போய்விடும். எனவே உடல்நலனை கவனிக்கவும், பேரன் பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகளோடு நீங்கள் மகிழ்ந்திருக்க உங்கள் உடல்நலனை கவனியுங்கள். எச்சரிக்கையின்றி கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்படுத்தி, அன்பு முறிவுக்கு அடிகோலாதீர்க ள். நேரம் போகவில்லை என்று வருந்த வேண்டாம். செபம், அன்பியம், திருப்பலி, பக்த சபைகள், யோகா, தியானங்கள் என்று பல்வேறு வழிகள் உள்ளன. இவை உடல்நலம் மட்டுமல்ல மனநலத்திற்கும் வழிவக்கும். பிறகு நேரம் போதவில்லை என்பீர்கள்.
குடும்ப உறவுகளைக் கொச்சைப்படுத்தும், குடும்ப உறுப்பினர்கள் சிலரின் அற்பபுத்திகளை வெளிப்படுத்தும் தொலைக்காட்சித் தொடர்கள், உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கிவிடும். எனவே அத்தகைய தொலைக்காட்சித் தொடர்புகளைப் புறக்கணியுங்கள்.
உங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை நல்ல நிறுவனங்களில் படிக்க வையுங்கள். கத்தோலிக்க நிறுவனங்கள் நடத்தும் கல்விக்கூடங்களில் மறைக்கல்வி நன்னெறி வகுப்புகள் நடைபெறுவதால் உங்கள் சந்ததி ஒளிமிக்கதாய் உலகில் வாழும்.
நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். எளிதான உடற்பயிற்சி அது. ஏராளமான வியாதிகளை விரட்டியடிக்கும் சக்தி அதற்கு இருக்கிறது. அவநம்பிக்கை ஆட்கொள்ளும் நேரம் இது. மரணபயம் அசைத்துப் பார்க்கும் நேரம் இது. கடவுளை நம்புங்கள். இறைநம்பிக்கையும் தன்னம்பிக்கையும் உங்கள் வாழ்வை உயர்த்தும். கடவுளுக்கு அஞ்சி வாழுங்கள். அவர் தமக்கு அஞ்சுவோர்க்கு ஆயிரம் தலைமுறைகள் நன்மை செய்யக்கூடியவர். மனித பலவீனத்தில் தவறுகள், குடி, புகைப்பழக்கம் ஆளாகுதல் போன்ற தீமைகளிலிருந்து விலகி இருங்கள். ஏனெனில் கடவுளுக்கு எதிராகச் செயல்படுவோரை அவர் நான்காம் தலைமுறைவரை கணக்கு கேட்பார் என்கிறது திருவிவிலியம். கடவுளின் பேரன்பை நினைத்துப் பாருங்கள். தண்டனை நான்கு தலைமுறைகளுக்கு. ஆசீரோ ஆயிரம் தலைமுறைகளுக்கு. திருவிவிலியத்தில் நீதிமொழிகள் புத்தகத்தை ஒருமுறை வாசித்துப் பாருங்கள் உண்மை புரியும். உலகம் தெரியும். வாழ்க்கை வளமாகும். எனவே அன்பான முதியோரே, முதுமையிலே சிறுமையடைவதையும் அதனால் மனம் வெறுமை அடைவதையும் தவிர்த்து முதுமை ஒரு பெருமை என்பதை வாழ்ந்து காட்ட வாருங்கள். இளையோரே... மண்ணுலகில் நெடுங்காலம் வாழ உங்கள் பெற்றோரை, பெரியோரை தயவு செய்து மதிக்க ஆரம்பியுங்கள். ஏனெனில் கடவுளின் கட்டளைகளில் நான்காவது உன் பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக. கடவுளே, பலவிதங்களில் முதியவர்கள் வாழ்வில் அற்புதங்கள் செய்தார் என்கிறது விவிலியம்.
முதியோரே, இளையோரே ! இதைச் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?...
No comments:
Post a Comment