சைக்கிள் சென்ற பாதை
ச.இ.அ.
குடந்தையைச் சேர்ந்த பாதர் எஸ்.ஐ. அருள்சாமி என்றால், என்னை அவசியமாக சைக்கிள் பயணத்துடன் இணைத்துப் பார்ப்பர். பெங்களூரிலிருந்து, கோவையிலிருந்து குடந்தைக்கு சைக்கிலிலேயே வந்தார் என்று மூக்குவாய் எல்லாம் வைத்து பல கதைகள் கூறுவார்கள். எனவே எனது சைக்கிள் கதையை பல கட்டுரைகளாக வடித்து விடுவதே நல்லது என நினைக்கிறேன்.
1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 29, அந்நாள் ஆயர் மேதகு பவுல் அருள்சாமி என்னை கூவத்தூர் பங்குதந்தையாக நியமித்தபோது, அவரே ஹம்பர் சைக்கிளை ரூ 1100க்கு வாங்கித் தந்தார். பிறகு அதன் தொகையையும் பெற்றுக் கொண்டார்.
அந்த சைக்கிள் அப்போதைக்கு உயர்ந்த சைக்கிள். அதனை வைத்தே, கிளை கிராமங்கள், பட்டணங்குறிச்சி, மேலநெடுவாய், குப்பம், அருளனாந்தபுரம், அக்னேஸ்புரம், வடுகப்பாளையம் ஆகிய ஊர்களுக்கெல்லாம் சென்று பணிசெய்தேன்.
1984 ஆம் ஆண்டு கூவத்தூரிலிருந்து பணிமாற்றம் பெற்று பெங்களூர் பேதுரு குருமடத்தில் னி.வீஜு என்ற மேற்படிப்பு படிக்கச் சென்றேன். அப்போது கூவத்தூரில் வைத்திருந்த சைக்கிளையும் இரயிலில் ஏற்றிக் கொண்டு சென்றேன். இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது. பெங்களூர் எஸ்வந்தப்பூர் இரயில் நிலையத்திலிருந்து அங்கி போட்டுக் கொண்டு, சைக்கிள் பின்னால் இரண்டு பெட்டிகளைக் கட்டிக்கொண்டு, பேதுரு குருமடத்திற்கு சைக்கிளைத் தள்ளிக் கொண்டே வந்தேன்.
அந்த சைக்கிளை பெங்களூரில் திருப்பலிக்கு செல்வதற்குப் பயன்படுத்தி வந்தேன். இராயபுரம் பங்கில் ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியை ஒவ்வொரு வாரமும் நிறைவேற்றக் கூறினார்கள். அப்போது ஆட்டோவுக்குரியத் தொகையை பயணப்படியாகக் கொடுப்பார்கள். நான் அத்தொகைகளை சேர்த்து வைத்து, இராயபுரம் கோவிலுக்கு கீபோர்டுடன் இணையும் கியூபை நன்கொடையாக வாங்கிக் கொடுத்தேன்.
நந்தி ஹில்ஸ் பயணம்: குடிசைவாழ் பகுதிகளுக்கு ஞாயிறு மாலை சென்று குருமட மாணவர்கள் பணி செய்வார்கள். சைக்கிள்தான் அங்கு செல்ல வாகனம். அந்த மாணவர்கள் சேர்ந்து பெங்களூரிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள நந்தி ஹில்ஸிக்குச் சென்றோம். அந்த குன்றுக்கு செல்லும் சுமார் 2 கி.மீ தூரம், செங்குத்தான சாலையில் செல்ல வேண்டும். எல்லோரும் அப்படி செல்வது கடினம் என்றனர். இருப்பினும் சவாலாக எடுத்துக் கொண்டு சைக்கிளிலேயே குன்றின் உயரத்திற்குச் சென்று கீழே இறங்கி வந்தோம்.
பெங்களூர் பேதுரு குருமடத்தில் M. Th. படித்து முடித்த பிறகு கோவை நல்லாயன் கல்லூரி பேராசிரியராக நியமிக்கப்பட்டேன். அப்போது பெங்களூரிலிருந்து கோவை வரும்போது அந்த பழைய சைக்கிளையும் இரயிலில் எடுத்து வந்துவிட்டேன். கோவையில் 1986 முதல் 1995 வரை அச்சைக்கிளை பயணத்திற்குப் பயன்படுத்தி வந்தேன். மயிலேறிபாளையத்திலிருந்து, போத்தனூர், கோவை, புதூர், ஒண்டிபுதூர் ஆகிய இடங்களுக்கு சைக்கிளிலேயே சென்றிருக்கிறேன். அப்போதுதான் கோவையிலிருந்து குடந்தை வரை நீண்ட சைக்கிள் பயணத்தை மேற்கொண்டேன்.
1987 மார்ச் 19 ஆம் தேதி கோவை நல்லாயன் கல்லூரியில் கோடை விடுமுறை ஆரம்பித்தது. காலை 10 மணியைப் போல் ஒரு வித்தியாசமான எண்ணம் எனக்குத் தோன்றியது. விடுமுறையில் ஏன் சைக்கிளிலேயே பயணம் செய்யக் கூடாது? என்ற எண்ணம். உடனே அந்த எண்ணத்தை செயல் வடிவமாக்கினேன். கோவை மயிலேறி பாளையத்திலிருந்து சைக்கிளை எடுத்து பல்லடம், கரூர், தோல்கேட், புள்ளம்பாடி, கீழமிக்கேல்பட்டி வழியாக குடந்தை செல்வது என்பது திட்டம்.
சைக்கிள் பின்னால் கருப்பு நிறத்தினாலான சூட்கேஸ் பெட்டியை கட்டிக் கொண்டு சென்றேன். வழியில் வினோதமாக சில பெண்கள் வழிமறித்தார்கள். சைக்கிளை நிறுத்தினேன். பெட்டியில் வளையல் தானே வைத்திருக்கிறீர்கள்? திறந்து காட்டுங்கள் என்று நான் வளையல் விற்பவன் என்று கேட்டார்கள். ‘ஐயோ, நான் வளையல் விற்பவனில்லை’ என்று கூறிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தேன்.
பல்லடம் சென்று கரூர் நோக்கி சைக்கிளை ஓட்டினேன். கரூர் அருகே வந்ததும், இருட்டாகி விட்டது. மழை வருவது போல் கருக்கலாகவும் இருந்தது. எனவே ஒரு லாரியில் சைக்கிளை ஏற்றிக் கொண்டு கரூர் வந்து, புனித குழந்தை இயேசு தெரசம்மாள் கோவிலுக்கு வந்து சேர்ந்தேன். பங்கு தந்தை இல்லை. எனவே களைப்பாக கோவிலின் முன்னால் துண்டு விரித்து போட்டு, சூட்கேஸை தலையில் வைத்து படுத்திருந்தேன். உபதேசியார் நான் பூசை உடுப்பு விற்பவர் என்று நினைத்து நல்ல பூசை உடுப்பு வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டார். நான் பங்குத்தந்தையை பார்க்க வேண்டும் என்றேன். சற்று நேரம் கழித்து பங்குத்தந்தை வந்தார். அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் மிகவும் வியந்து போய் பல அறிவுரைகள் சொன்னார். அங்கியில்லாமல் நீங்கள் வரவே கூடாது. இங்கிருந்து நாளை செல்லும் போது அங்கி போட்டுக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்றார். நான் வெயிலில் வந்திருந்ததால் எழும்பிச்சைப்பழம் பிழிந்து குடிக்கக் கொடுத்தார்.
அவர் பெயர் மறந்துவிட்டது. அவர், கோவைபுலியகுளம் அந்தோணியார் திருத்தலம் பங்குகுருவாக இருந்தவர். நிறைய சுருட்டுக் குடிப்பார். அவரைப் பற்றி ஒருநகைச்சுவை சொல்வார்கள். ஒரு திருமணத்தில் அவர் இப்படி மறையுரை ஆற்றினாராம். இன்று இரவு நீங்கள் இருவரும் முக்கியமான வேலை செய்யப் போகிறீர்கள். எல்லோரும் ஆச்சரியமாக என்ன சொல்ல போகிறார் என்று வியப்பாக கேட்கத் தயாராயிருந்தார்கள். அவர் மணமக்களைப் பார்த்து, ‘இன்று இரவு, நீங்கள் இருவரும் சேர்ந்து முழந்தாளிலிருந்து செபமாலை சொல்லப் போகிறீர்கள்’ என்றாராம்.
அடுத்த நாள் காலையில் அவர் கேட்டுக் கொண்டபடியே அங்கிப் போட்டுக் கொண்டு சைக்கிளில் சென்றேன். கரூரைத் தாண்டி செல்கையில் ஓர் இளம்பெண் என்னைப் பார்த்து, ‘ஓர் ஆள் பாவாடைக்கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டுகிறான் பாருங்கள்’ என்று கத்தினாள். மதியம் ஒரு மணியைப் போல டோல் கேட்டை வந்து சேர்ந்தேன். எனவே ஒரு சிறிய ஓட்டலுக்குச் சென்று உணவருந்த சென்றேன். சாப்பாடு சாப்பிட்டேன். அதற்கான பணத்தை முதலாளியிடம் கொடுக்கச் சென்றேன். அங்கியிலேயே இருந்தேன். அப்போது ஒரு குடிகாரர் வந்து, ‘சுவாமி, நீங்கள் கொடுக்காதீர்கள். நான்தான் கொடுப்பேன்’ என்றார். அவர் நிலையைப் புரிந்து கொண்டு பரவாயில்லை. ‘உங்கள் தாராள மனதிற்கு நன்றி. நானே பணம் கட்டிவிடுகிறேன்’ என்றேன். ‘இல்லையில்லை நான்தான் கொடுப்பேன்’ என்று கூறினார். கடைமுதலாளி, ‘நீங்கள் போங்கள் பாதர். அவனிடம் பணம் வாங்கிக் கொள்கிறோம்’ என்றார். குருக்களுக்கு மக்களிடம் எவ்வளவு மரியாதை என்று மகிழ்ந்து அவ்விடம் விட்டு நகர்ந்தேன். அங்கிருந்து புள்ளம்பாடி நோக்கி பயணத்தைத் தொடர்ந்தேன்......
( பயணம் தொடரும்)
No comments:
Post a Comment