Pages - Menu

Sunday 1 October 2017

இயேசுவின் புனித முகம் காட்டும் திருச்செபமாலை

இயேசுவின் புனித முகம் காட்டும்  திருச்செபமாலை

 அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

கத்தோலிக்கத் திருச்சபையில் பல பக்தி முயற்சிகள் உள்ளன. இவற்றுள் காலத்தால் முந்தையதும், எளிதில் அனைவராலும் சொல்லக் கூடிய செபமாகவும் திகழ்வது செபமாலை. இதுவே இறை - மனித ஒன்றிப்பின் அடையாளமான அருள் மாலை. இது நமது பாரம்பரியச் சொத்து. பாமரர் முதல் படிக்காதவர் வரை அனைவரையும் ஒருங்கிணைக்கும் எளிய வழியிலான தியானமுறை. நமக்கே உரித்தான தனி அடையாளமே செபமாலைதான். 

 செபமாலையின் வரலாறும், வளர்ச்சியும்: 

இன்று நம் கரங்களில் தவழ்ந்து செபிக்கத் தூண்டும் செபமாலை தனக்கேயுரிய வரலாற்றுப் பின்னணியினைக் கொண்டதாகும்.

 கொலோசியம் மறைசாட்சியர்: 

  உரோமைக்குச் செல்வோர் அனைவரின் சிந்தை கவர்வதும் இளந்திருச்சபை அனுபவித்த  கொடூரமான வேதனைகளை நம் கண்முன் கொண்டு வருவதன் சின்னமாகத் திகழ்வது கொலோசியம் என்ற விளையாட்டு  அரங்கம். சிறுவர், இளையோர், முதியோர் என எல்லாப் பருவத்தினரும் கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக வன விலங்குகளுக்கு இரையாக்கப்பட்டனர். இவர்களின் வேதனைகளைக் கண்டு இன்ப ரசனையில் ஈடுபட்டது அன்றைய ஆட்சியாளர் கூட்டம்.
இத்தகைய வேதனைகளை அனுபவித்து இயேசுவுக்காய் இன்னுயிரைத் தந்த இந்த மறைச்சாட்சியர் தங்களது தலைகளில் ரோசாக் கீரிடம் சூட்டிக் கொண்டு மகிழ்ச்சி கீதம் இசைத்துக் கொண்டு வன விலங்குகள் முன் வீரத்தோடு துள்ளிக் குதித்து மகிழ்ந்தனர். மரித்த இவர்களின் மலர்க்கிரீடங்களை பொறுக்கி வந்து விசுவாசிகள் மாலைகளாகக் கோர்த்து இறைப்புகழ்ச்சிப் பாடல்களைப் பாடினர். இதுவே செபமாலை தோற்றத்தின் முதல் படி எனலாம். 

பாலைவனத் தந்தையர்:

எகிப்தின் பாலைவனத்தில் தவ வாழ்வு வாழ்ந்து வந்த புனித வனத்து அந்தோணியார், புனித வனத்து சின்னப்பர் போன்ற பலரை நாம் பாலைவனத் தந்தையர் என்கிறோம். இவர்கள் தங்களுக்குக் கிடைத்த கூழாங்கற்கள் அல்லது தானியங்களை 150 எண்ணிக்கையில் சேர்த்து திருப்பாடல்களைப் பாடி வந்தனர். 

பாமரர் வாழ்வில் ...

இவர்களைத் தரிசித்து இவர்களின் ஆலோசனையின்படி படிப்பறியா பாமரர்களும் 150 முறை மிகவும் எளிமையாக மங்கள வார்த்தை செபம் சொல்லிச் செபித்து வந்தனர்.

 துறவிகள்: 

  9,10,11,12 ஆகிய நூற்றாண்டுகளில் ஆங்காங்கே உலக இன்பத்தினை வெறுத்து இறைவனையே தங்களது வாழ்வின்  ஒரே சொந்தமெனக் கருதிய பலர் பல குழுக்களாகத் துறவு மடங்களை நிறுவிச் செயல்பட்டனர். இவர்கள் 50 முறை கர்த்தர் கற்பித்த செபம், 50  முறை மங்கள வார்த்தை செபம் சொல்லிச் செபித்தனர். தங்களின் கவனம் சிதறாமல் இருப்பதற்காக கம்பி இழைகளில் மணிகள் போல் கோர்த்துப் பயன்படுத்தி வந்தனர்.

அல்பீஜியன்ஸ் தப்பறையாளர்களும், புனித தோமினிக்குவும்:

பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் அல்பி என்ற அல்பீஜியன்ஸ் என்னும் புதிய கொள்கை உருவாகிறது. அவர்களின் முக்கிய தவறான போதனைகள்: இயேசு உண்மையான மனித உடலில் தோன்றவில்லை. உலகில் கானும்படி மட்டும் தோன்றினார். எனவே உடலின் உயிர்ப்பு இல்லை. திருவருட்சாதனங்கள் இல்லை. திருமணம் செய்துக்கொள்வதை எதிர்த்தனர். 12,13 ஆம் நூற்றாண்டுகளில்  உருவான  இந்தத் தப்பறைக் கொள்கையினால் ஐரோப்பியத் திருச்சபை ஆட்டம் கண்டது. குருக்களும், துறவிகளும் பெரும் நெடிக்கடிக்கு உள்ளாயினர். எங்கும் கலகங்களும், குழப்பங்களுமே மிகுந்திருந்தன. கத்தோலிக்க  தேவாலயங்களும், பரிசுத்த பொருட்களும் அவசங்கைக்குள்ளாயின. திருச்சபை அழிக்கப்பட்டு வருமோ என்ற அச்சமும், கவலையும் எளிய நம்பிக்கையாளர்களின் மனதினை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. இந்த இக்கட்டான நேரத்தில்தான் ஆண்டவர் தோமினிக்கு என்னும் கர்த்தூசியன் சபைக் குருவை வல்லமையாகப் பயன்படுத்தினார். இவர் அன்பீஜென்ஸ் கொள்கை கொண்டோரை மனம் மாற்ற பத்தாண்டுகள் கடுமையாகக் போராடினார். இந்த இழிநிலை மாறிட அன்னை மரியாவை நோக்கிக் கண்ணீரோடு செபித்தார்.

செபமாலையினைக் கரங்களில் ஏந்திய மாதாக் காட்சி:
1208 ஆம் ஆண்டு அன்றொரு நாள் டோமினுக் ப்ருயில்லே என்னும் ஆலயத்தில் காதலாகி, கசிந்துருகி செபித்துக் கொண்டிருந்தார். இதோ! ஆங்கே கரங்களில் ஜெபமாலை ஏந்தியபடி கண்ணைப் பறிக்கும் அன்னை மரியா. ஒளியுடன் டோமினுக்குவை நோக்கி வந்தார். இந்த உலகின் எல்லாப் பாவங்களுக்கும் பரிகாரமாகக் கபிரியேல் வானத்தூதரின் வாழ்த்துச் செய்தியோடு செபியுங்கள். எனது மகனின் பிறப்பு, வாழ்வு, மரணம், உயிர்ப்பு என்னும் மறைபொருள்களைத் தியானியுங்கள் என்று சொல்லி மறைந்தார். இவ்வாறு செபமாலை பக்தி பரவுவதற்கு டோமினிக்குவே முதல் கருவியாகத் தெரிந்து கொள்ளப்பட்டார்.

அல்பீஜினியர்களின் மனமாற்றம்:

அன்னை மரியாவின் காட்சியினால் உற்சாகம் அடைந்த தோமினிக்கு துலூஸ் மாநகர் சென்றார். ஆலயக் கதவுகள்  தாமாகவே திறக்கின்றன. ஆலயமணிகள் தாமாகவே ஒலியயழுப்புகின்றன. மக்கள் கூட்டம் ஆலயத்துள் நிறைகின்றது. மாதாவின் காட்சி பற்றியும், அவர் தந்த செய்தி பற்றியும் எடுத்துரைக்கின்றார் தோமினுக்கு. ஆனால் இவரின் பேச்சினை நம்பாத அல்பீஜினியர்கள் ஆலயத்தினை விட்டு வெளியேற முனைகின்றனர். ஆனால் என்ன ஆச்சரியம். வானம் திறந்து இடி, மின்னலோடு கூடிய மழை, கடும் பனி போன்றவை திடீரென எழும்பி இவர்களைத் தடுத்து நிறுத்துகிறது. அக்கனமே மனம் மாறிச் செபமாலை செபிக்க ஆரம்பிக்கின்றனர். வாழ்விலும் மாற்றம் காணுகின்றனர்.

அக்டோபர் மாதம் செபமாலை மாதம் எனப்படுவதன் வரலாற்று நிகழ்வு:

16  ஆம் நூற்றாண்டில் முஸ்ஸீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் பெரும் போர் மூண்டது. திருத்தந்தை 5 ஆம் பத்திநாதர் ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய புனிதக் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்கி போருக்கு ஆயத்தப்படுத்துகின்றார். கடும்போர் நடைபெறுகிறது. திருத்தந்தை மக்களோடு இணைந்து திருச்செபமாலையினைக் கரங்களில் ஏந்தி பக்திப் பரவசத்தோடு  செபிக்கின்றார். என்னே ஆச்சரியம். அன்னையின் பேருதவியினால் எதிரிப்படைகள் மீது கிறிஸ்தவர்கள் வெற்றிக் கொள்கின்றனர். அந்த நாள் 1571 ஆம் ஆண்டு அக்டோபர் 07. போரில் வெற்றிப் பெற்ற இடம் லெபாண்டோ. இறைமக்களோடு இணைந்து ஒரு நாள் முழுவதும்  திருத்தந்தை செபித்த ஆலயம் சாந்தா மரியா மஜியோரே. எனவேதான் இந்த நாள் செபமாலை மாதா திருவிழாவாகவும், அக்டோபர் மாதம் செபமாலை மாதா மாதமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நற்செய்தியின் சாரம் ஜெபமாலை:

மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவின் வாழ்வினைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதனை மையமாகக் கொண்டே செபமாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு, பிறப்பு, வளர்ப்பு, புதுமைகள், போதனைகள், பாடுகள், மரணம், உயிர்ப்பு, போன்றவற்றினையே நாம் செபமாலையில்  தியானித்துச் செபிக்கின்றோம். மகிழ்வின் மறை உண்மைகள், ஒளியின் மறை உண்மைகள், துயரின் மறை உண்மைகள், மற்றும்  மகிமையின் மறை உண்மைகள்,  போன்ற நான்கு தலைப்புகளில் இருபது மறை உண்மைகளை தியானித்துச் செபிக்கின்றோம். எனவே செபமாலை என்பது நற்செய்தியின் சாரம் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

இயேசுவின் புனித முகம் காட்டும் திருச்ஜெபமாலை:

இயேசுவின் வாழ்க்கை வரலாற்றினையும், போதனைகளையும் மட்டும் தியானிக்கச் செய்வது ஜெபமாலை அல்ல. மாறாக இறைவனின் மீட்புத் திட்டத்தில் அன்னை மரியாவின் பங்களிப்பு, இறைமகன் இயேசுவின் மீட்புச் செயல் பங்களிப்பு, இறைமகன் இயேசுவின் மீட்புச்செயல்பாடுகள் ஆகியவற்றையும் நாம் தியானிக்கின்றோம். அன்னை மரியா தந்த ஜெபமாலை அமலன் இயேசுவின் புனித முகம் காட்டும் அருள்மாலை. எனவே தினமும் ஜெபமாலை செபிப்போம். இயேசுவின் முகம் காண்போம். இறை மீட்புத் திட்டத்தில் நம்மையும் இணைத்துக் கொண்டு உலகின் ஈடேற்றத்திற்காக உழைப்போம்

No comments:

Post a Comment

Ads Inside Post