பொதுக்காலம் 28 ஆம் ஞாயிறு A
15 - 10 - 2017
எசா 25: 6 -10; பிலி 4: 12 ‡ 14, 19 - 20; மத் 22: 1-14
திருமண நிகழ்ச்சி, அது உறவின் நிகழ்ச்சி. எல்லா நாடுகளிலும், எல்லா கலாச்சாரத்திலும் திருமணம் சிறப்பாக, மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு பெரிய அச்சகம். அதில் அழைப்பிதழ் அச்சடிப்பதே முக்கிய வேலையாக உள்ளது. அழைப்பிதழ்கள் தயாரிப்பதற் கென்றே பல பெரிய நிறுவனங்கள் உள்ளன. அழைப்பிதழில் உறவினர்கள், நண்பர்கள் என்று நூற்றுக்கணக்கான பெயர்களை அச்சடிக்கிறார்கள். கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அழைப்புக் கொடுப்பார்கள். இன்னும் நெருங்கிய உறவினர்களுக்கு பணம்பாக்கு என்று அழைப்புக் கொடுப்பார்கள். திருமணத்தில் உறவின் அடையாளமாக விருந்து தருகிறார்கள்.
இன்றைய நற்செய்தியில், இயேசு விண்ணரசை, ஓர் அரசர் மகனின் திருமண நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம் என்று விளக்கம் அளிக்கிறார். திருமணத்தில் விருந்திற்கு பலரை அழைக்கிறார் அரசர். அழைக்கப்பட்டவர்கள் திருமணத்திற்கு வரவில்லை. எனவே மீண்டும் பணியாளர்களை அழைக்கப்பட்டவர்களை அழைத்துவர அனுப்புகிறார். அழைக்கப் பெற்றவர்கள், அழைக்கச் சென்ற பணியாளர்களை பொருட்படுத்தவில்லை. தங்கள் வேலைகளை அவர்கள் கவனிக்க சென்று விடுகிறார்கள். சிலர் சென்ற பணியாளர்களை பிடித்து, இழிவு படுத்தி கொலையும் செய்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி நடக்குமா என்று நமக்குத் தோன்றலாம். இந்த உவமை இஸ்ரயேல் மக்களின் வரலாற்றையே எடுத்துக்காட்டுகிறது. இறைவன் இஸ்ரயேல் மக்களைத் தேர்ந்தெடுத்தார். தன் உறவில் பங்குக் கொள்ள அழைத்தார். ஆனால் இறைவனின் உறவை பொருட்படுத்தவில்லை. இறைவனின் அன்பை அவர்கள் மனதில் நிறுத்தவில்லை. பவுல் அடிகளார் இஸ்ரயேல் மக்கள் இறைவனை புறக்கணித்ததால்தான் பிற இனத்தவரையும் தன் அன்பு வலையில் அழைத்துக் கொண்டார் என்கிறார் (உரோ 9:4).
முதல் வாசகத்தில் இறைவன் சுவையான விருந்தினை அனைத்து மக்களுக்கும் தந்து, அவர்களின் துன்பங்களை நீக்குவார் என்றும், அவர்களின் கண்ணீரைத் துடைப்பார் என்றும் நிந்தையை அகற்றுவார் என்றும் எசாயா எடுத்துக் கூறுகிறார். ஆகவே இறைவனை நெருங்குவோருக்கு துன்பங்கள் நொருங்கிப் போகின்றன. விருந்தின் மகிழ்ச்சியும், நிறைவும் அவர்களில் இடம் பெறுகின்றன என்பது கருத்தாக நிற்கிறது. இது எசாயாவின் எதிர்கால எதிர்பார்ப்பாகும்.
இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளாரின் அருமையான நம்பிக்கையின் வார்த்தைகளைக் கேட்கிறோம். ‘எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைக்கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு’ (பிலி 4:13).
நம் பணிகள், கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற அழைப்பு என்று சொல்லலாம். நம் பணிகளில் முழு ஈடுபாடு கடவுள் கொடுக்கும் விருந்தில் பங்குக் கொள்ளுதல் போலாகும். துறவற அழைத்தல் என்கிறோம். அதேபோல நம் வாழ்வின் எந்நிலையும் இறைவன் தந்துள்ள அழைப்பாகும், அதனை ஏற்றுக்கொண்டு ஈடுபாட்டுடன் அதில் வாழ வேண்டும். நம் வாழ்வின் நிலைகளில் நாம் சுமத்திக் கொள்ளும் சலிப்புகள், கடவுள் தந்துள்ள அழைப்பினை கொச்சைப்படுத்துவதாகும். பணிகளை ஏனோதானோ என்று செய்வதும் கடவுள் கொடுத்துள்ள அழைப்பினை மறுத்து செயல்படுவதாகும்.
‘ஒருவரின் சிறப்பு அவர்தம் பணிகளில் காட்டும் முனைப்பில்தான் வெளிப்படும்’
- வின்ஸி லம்பார்டி.
‘ஒருவரின் பணிகளில் ஈடுபாடு இல்லையயன்றால், பணிகள் பலன் தராத மரங்களைப் போன்றதாகி விடும்’ . - பீட்டர் டிரக்கர்.
No comments:
Post a Comment