செப வலிமை
மனிதர் உணர்வுகள் நிறைந்தவர். உணர்வுகளை நாம் ஆளுமை செய்ய வேண்டும். மனித ஆளுமைக்கு உட்படாத உணர்வுகள் காட்டு நீரைப்போல கட்டுக்கடங்காது. பயனற்று தீமைகளைத் தரக்கூடியதாயும் ஆகிவிடும். நம் உணர்வுகளை நம் ஆளுமைக்குள் கொண்டுவருவதற்கு உதவும் பெரிய வழி செபம்.
அவிலா தெரசம்மாள் ‘செபம் என்றால் இறைவனுடன் நாம் கொள்ளும் நட்புறவு’ என்கிறார். மரியாவின் வில்லியம்சன் கூறுகிறார், ‘செபம் புதுமைகளின் ஊடகம்’ என்கிறார். காந்தி அடிகள், ‘செபம் என்பது நமது ஆன்மாவின் ஏக்கம்’ என்கிறார்.
அக்டோபர் மாதத்தில் ஜெபமாலை மாதாவை நாம் நினைவு கூர்ந்து, ஜெபமாலை செபிக்கும் வழக்கினை புதுபிக்கும் நாள்களாக நாம் பயன்படுத்துகிறோம். எனவே இம்மாத இதழில் ஜெபமாலையைப் பற்றியும், பொதுவாக ஜெபத்தினைப் பற்றியும் பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. செபத்திற்காகவே தங்களின் வாழ்வை அர்ப்பணித்திருக்கிற கார்மேல் சபைக் கன்னியர்களின் நேர்காணலின் விளக்கம் சுருக்கமாக இடம் பெற்றுள்ளது. எப்போதுமே செபிப்பது ஓர் சோர்வைத் தருவதில்லையா? என்று கன்னியரிடம் கேட்டதற்கு மீனுக்கு கடல் அதனின் வீடுதானே என்று பதிலளித்தார்கள்.
செபத்தால் மன அமைதியும் உள்ளொளியும் கிடைக்கும். இப்போது அருங்கொடை இயக்க செபத்தில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். பாடல்கள் பாடியும், சப்தமாக செபித்தும் செப அனுபவத்தைக் காட்டுகிறார்கள். ‘வார்த்தைகளை அடுக்கி செபிப்பதை விட அமைதியான செபம் வல்லமையுள்ளது’ என்கிறார் காந்தியடிகள். இயேசுவும் வார்த்தை அடுக்கி சப்தமிட்டு செபிப்பது வெளிவேட செயல் என்கிறார் (மத் 6:7‡9).
செபம், வாழ்விற்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஜெபமாலை என்பது இந்திய பாரம்பரிய பஜன் பாடலைப் போன்றது. ஒரே செபத்தைத் திரும்ப திரும்ப சொல்கின்ற வேளையில் மனம் இறைவன் உறவில் ஒன்றாக செய்யும் ஆன்மீக அனுபவம்.
தமிழ்நாட்டில் அரசியல் குழப்பம் உச்சக்கட்டதை அடைந்திருக்கிறது. அ.தி.மு.க. மூன்றாகப் பிரித்து இப்போது இரண்டு அணியாக மாறி, ஒருவருக்கொருவர் மண்ணை வாரி இரைத்துக் கொண்டுள்ளார்கள். அவர்கள் செய்த மோசடிகள் ஒவ்வொன்றாக வெளிவந்துக் கொண்டுள்ளன. எல்லாம், மக்களின் பணத்தை, மக்களின் இரத்த வியர்வையை கொள்ளையடித்து, சொகுசு வாழ்வு வாழ, செய்த கபடு நாடகங்கள் வெளிவந்துக் கொண்டுள்ளன. இந்நாள்களில் சமானியர்கள், எப்படி விழிப்புணர்வுடன் இந்த அரசியல் கொள்ளைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
குழுமூரை சேர்ந்த அனிதா +2வில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வில், தகுதி பெற முடியாமல், தற்கொலை செய்துக் கொண்டது. கல்வியில் நிலவும் அநீதி அமைப்பினை படம் பிடித்துக் காட்டுகிறது. கிராமங்களில் வாழும் ஏழை எளியவர்கள், அறிவுத் தகுதியைப் பெற்றிருந்தாலும், உயர்கல்வியை பெற முடியாத நிலையைத்தான் அனிதாவின் சோகக் கதை எடுத்துக் காட்டுகிறது. நாடு வளர்கிறது. சூழல்கள் வேகமாக மாறுகின்றன. விழித்திருந்து வாழ்வை பெற வேண்டும் என்பதுதான் இன்றைய சூழல் நமக்குத் தரும் பெரும் பாடம்.
செப சுரங்கங்கள்
தமிழகத்தில் செபத்திற்கென்று தங்களைத் தனித்துக் கொண்டு வாழுகின்ற குழுமம் ஒன்று உண்டு. அது கார்மேல் கன்னியர் குழுமம். இவர்கள், குடந்தை, தஞ்சை, கோவை, ஏற்காடு, பாண்டி, திருச்சி, சிவகங்கை, தூத்துக்குடி, சென்பகனூர், சென்னை என்று பத்து இடங்களில் மடங்களில் வாழ்கிறார்கள். இந்தியாவில் மொத்தம் 34 இத்தகைய மடங்கள் உள்ளன. இவர்கள் வெளி உலகிற்கு வருவதில்லை. 8 மணிநேரம் செபம், 8 மணி நேரம் உடல் உழைப்பு, 8 மணி நேரம் ஓய்வென்று வாழ்கிறவர்கள். இவர்களை பார்க்க செல்லும்போது கம்பிகளால் தடுக்கப்பட்ட உள் அறையில் அவர்கள் நிற்க நாம் வெளியினின்று தான் பார்க்க முடியும். 1936 இல் குடந்தையில் உள்ள கார்மேல் கன்னியர்மடம் செப ஆதார கூடமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆயரும், குருக்களும், இறை மக்களும் தங்களின் தேவைகளை கன்னியர்களிடம் தெரிவித்து செபிக்கக் கேட்பர்.
சென்ற செப்டம்பர் 16ஆம் தேதி குடந்தை கார்மேல் சபை கன்னியரிடம் ஒரு நேர்க்காணல் செய்த்தோம். 14 பேர் அங்கு உள்ளனர். செபம் என்பது இறைவனுடன் கொள்ளும் ஓர் உறவு என்று செபத்திற்கு விளக்கமளித்தார். வெளி உலகிற்கு வராமல் செபத்திலேயே நேரத்தை செலவிடுதல். ஒரு மகிழ்வான அனுபவம் என்றும். இதில் ஒளி இருள் அனுபவங்களும் உண்டு என்றனர். மீனுக்கு கடல் வீடாகும். அதேபோல எங்களுக்கு செபம். எங்களின் தனி மகிழ்வான அனுபவம் என்றனர்.
No comments:
Post a Comment