கனவுகளைத் தகர்த்த காலன் நீட்
பேராசிரியர், முனைவர் எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ னி. M.A., B.L.,M.Phil., Ph.D
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூர் காலணியில் பிறந்து வளர்ந்த, தாழ்த்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த அறிவார்ந்த மாணவி அனிதா (வயது 17), தனது பிளஸ்‡2 தேர்வில் 1200க்கு 1176 மதிப் பெண் களைப் பெற்றும். ‘நீட்’ (NEET - The National Eligibility cum Entrance Exam) தேர்வில் 700க்கு 86 மதிப்பெண்களைப் பெற்றதால் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்குபெறும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை.
அனிதாவின் தந்தை திரு.சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரது தாயார் ஆனந்தி சில ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையயய்திய துன்பச்சூழலில் ‘நீட்’ தேர்வை இரத்து செய்துவிட்டு பிளஸ்‡2 மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த வேண்டுமெனக்கோரி அனிதாவும் மற்றும் சில மாணவ மாணவியரும் சென்னை உயர்நீதி மன்றத்திலும், டெல்லி உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருந்தனர். தீர்ப்பு சாதகமாக இல்லாததால் மனமுடைந்த அன்புச்சகோதரி அனிதா தனது நான்கு சகோதர்கள், தந்தை, பாட்டி ஆகிய யாரும் வீட்டில் இல்லாத போது தூக்கிட்டுத் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.
மாநில அரசு இந்த ஓராண்டுக்கு விலக்கு அளிக்கக்கோரி மத்திய அரசுக்கு அனுப்பிய சட்ட வரைவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்காததாலும், உச்சநீதி மன்றத்தின் ஆனையாலும் ‘நீட்’ தேர்வு கட்டாயமானது. இந்தப் பேரிடியைத் தாங்கமுடியாத அனிதா விரக்தியின் உச்சக் கட்டத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கூட்டாட்சித் தத்துவத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காணச்செய்துள்ளது.
அனிதாவின் தற்கொலை தமிழகத்தை மட்டுமல்ல, மனசாட்சியுள்ள அனைவரையும் ஒட்டுமொத்தமாக உலுக்கியது. விளைவு, அரசியலில் எதிர்கட்சியினரும், அனைத்துக் கல்லூரிகளின் மாணவச் சமுதாயமும் இந்தச் சமூக அநீதியை அறவே ஒழிக்க அறப்போராட்டங்களை நடத்திவரும் வேளையில் உச்சநீதிமன்றம் ‘நீட்’ தேர்வை எதிர்த்து சட்டம் ஒழுங்கு கெடும் அளவிற்கு மறியலோ, ஆர்ப்பாட்டங்களோ நடத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளது.
வேலூரில் 1918ல் தொடங்கப்பட்ட உலகப் புகழ்வாய்ந்த மருத்துவக் கல்லூரியான வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி, தனது கொள்கையாக, சமூக அக்கறையுடன் குழுக்களாகப் பணியாற்றும், தன்னலமற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர் கிராமங்களில் சேவை செய்யும் வேட்கையுடன் மருத்துவப் பணியைத் தொடரத் தனியாக தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்த அனுமதிகோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். ஆகவே இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையைத் தற்காலிமாக நிறுத்தி வைத்து, அடுத்த மாதம் (அக்டோபர்) 11ந் தேதி உச்சநீதிமன்றத்தில் தாங்கள் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கில் வரவுள்ள தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
உலகிலேயே மிகச்சிறந்த மருத்துவர்களை உருவாக்கிய, தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் இருப்பது தமிழகத்தில்தான். மாவட்டந்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு அதிக அளவில் மருத்துவக் கல்விக்கான இடங்களைக் கொண்டதும் தமிழகம்தான்.
சி.பி.எஸ்.இ. அமைப்பால் நடத்தப்படும் ‘நீட்’ மருத்துவக்கல்லூரி நுழைவுத்தேர்வு, தமிழகத்தைப் பொறுத்த வரையில், தமிழ்வழிக் கல்வி, மற்றும் தமிழகப் பாடத்திட்டம், மேலும் மெட்ரிக்குலேசன் பள்ளிப்பாடத் திட்டங்களுக்குக் கீழே படிக்கும் அறிவார்ந்த தமிழக மாணவச் சமுதாயத்தின் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் எப்படியும் தமிழக அரசும் இந்த வருடம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்குப் பெற்றுத் தந்துவிடும் என்ற நம்பிக்கையும், அனிதா உட்பட ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் வஞ்சக வலையில் வீழ்த்தியுள்ளது. திடுமென வந்த சுனாமிப் பேரலை உயிர்களைக் காவு வாங்கியதுபோல ‘நீட்’ தேர்வு முடிவுகள், தமிழகத்திலுள்ள மாணவ மாணவியர், ஆசிரியர் சமுதாயம், பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆகிய அனைவரின் நெஞ்சங்களையும் சுக்குநூறாக்கி விட்டது.
பதவி பறிபோகும் பயத்துடன், துணிச்சலற்ற, ஏனோதானோ அலட்சியப் போக்குக்கொண்ட மாநில அரசும், அதிகார மமதையோடு, மாநில அரசை அடிபணியவைக்கும் நோக்கோடு ஒவ்வொரு காயையும் நகர்த்தும் மத்திய அரசும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆணிவேரான கூட்டாச்சித் தத்துவத்தையே கூறுபோட்டுள்ளன.
‘வடக்கு வாழ்கிறது ! தெற்குத் தேய்கிறது’ என்ற பேரறிஞர் அண்ணாவின் கூற்றை மத்திய மாநில அரசுகளின் மெத்தனச் செயல்பாடுகள் மெய்ப்பிக்கின்றன. பெரியார், அண்ணா, காமராசர் அமைத்த சமதர்ம பூமியில் இடஒதுக்கீட்டுக் கொள்கை திட்டமிட்டுத் தவிடுபொடியாக்கப்பட்டு வருகின்றதோ என்ற பெருங்கவலை சமுதாய நலச் சிந்தனையாளர்களை ஆட்கொண்டுள்ளது.
‘நீட்’ தேர்வால் விளையும் நன்மைகள் ஏராளம் என்று எக்காளமிடுவோர், இந்தியா பல்வேறு மொழிகள், கலாச்சாரம், சமயங்கள், சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உள்ளடக்கிய பன்முகத் தன்மைக்கொண்ட நாடு என்பதை எள்ளளவும் மறந்து விடக் கூடாது. அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள தமிழகத்தில், நம் தமிழக கிராமப்புற ஏழை மாண மாணவியர். அதிகளவில் தலைசிறந்த மருத்துவர்களாகும் அரிய வாய்ப்புகளைப் பிற மாநிலத்தவர்க்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் அரசியல் சூழ்ச்சியாக ‘நீட்’ அமைந்து விட்டது. தமிழகத்தின் தலைவிதி ! ‘நீட்’ தேர்வுக்கு கோச்சிங் என்ற பெயரில் கல்வி வியாபாரிகள் பல லட்சங்களைக் கல்லாக் கட்ட சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ‘ஏழைசொல் அம்பலம் ஏறாது’ என்ற சூழ்நிலையில் பல்லாயிரக்கணக்கான கிராமப்புற முதல் தலைமுறை மாணவர், மாணவியரின் M.B.B.S., BDS மருத்துவப்படிப்பு எட்டாக்கனியாகிவிடும். தமிழகத் திலுள்ள பணமில்லாத, ஆனால் திறமை மட்டும் உள்ள ஏழை மாணவ மாணவியர் மருத்துவர்களாக முடியாத நிலை நிரந்தரமாகும் அபாயத்தைத் தமிழகம் எதிர்நோக்கியுள்ளது !
C.B.S.E. (Central Board of Secondary Education) பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ மாணவியர் ‘நீட்’ தேர்வில் அதிக அளவில் தேர்ச்சிபெற்று அதிக மருத்துவக்கல்லூரி இடங்களைக் கைப்பற்றியதும், திடீரென்று தாங்கள் பார்த்திராத, படித்திராத C.B.S.E.. பாடத்திட்ட அடிப்படையில் கேட்கப்பட்ட ‘நீட்’ கேள்விகள், தமிழக மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த ஏழை மற்றும் நடுத்தர தமிழக மாணவர் மாணவியருக்கு எதிர்பாராத ஏமாற்றங்களை அளித்ததற்குத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறையும், பாடத்திட்டக் குழுவும், தமிழக அரசுமே தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். பல ஆண்டுகளாகப் பள்ளிப் பாடத்திட்டம் C.B.S.E.. பாடத்திட்டத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் மாற்றப்படாதது வேதனைக்குரியது. இனியாவது உலகத்தரம் வாய்ந்த, C.B.S.E.. பாடத்திட்டத்தையும் விஞ்சும் அளவுக்குத் தமிழக மாநிலப் பாடத்திட்டம், தொடக்க நிலையிலிருந்து தரம் உயர்த்தப்பட வேண்டும், ‘நீட்’ தேர்வு வினாக்கள் மாநில மொழிகளில் ஒரே மாதிரியாகக் கேட்கபடவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆகவே 2018ல் ஒரே மாதிரியான வினாத்தாள் இந்தியா முழுவதும் அந்தந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு ‘நீட்’ தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி, வைக்க ஏழை எளிய மாணவச்சமுதாயம் சமூகநீதிபெற, காந்தி, அம்பேத்கார், பெரியார், காமராசர், அண்ணா ஆகிய உத்தமர்களின் உண்மையான உழைப்பு, தியாகம், வீண்போகாமல் பலனிக்க, கல்வியை மத்திய அரசின் பட்டியலிருந்து முன்பு போலவே மாநில அரசுகளின் பட்டியலுக்கு மாற்றுவதே இந்திய ஜனநாயகக் கூட்டாச்சிக்குப் பொருந்தி வலுசேர்ப்பதாகும்.
கல்லூரி உதவிப்பேராசிரியர் பதவி நியமன தகுதித்தேர்வான (SET - State Eligibility Test) தேர்வைத் தமிழக அரசே நடத்தி வருகின்றது. ‘நீட்’ தேர்வை மட்டும் சி.பி.எஸ்.இ. நடத்துவது திட்டமிட்ட சதியாகத்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மீண்டும் தமிழக ஏழை கிராமப்புற மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட ‘நீட்’ தேர்வுமுறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி மத்தியில் கூட்டாச்சியும், மாநிலத்தில் சுயாட்சியும் பாதுகாக்கப்பட்டு ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்ற சமதர்ம சமூகநீதி உயிர்வாழும்.
‘நீட்’ தேர்வு நடந்த தேர்வு மையங்களில், கண்காணிப்பாளர்களின் மிரட்டல் தொனியும், கனிவற்ற போக்கும் இளவயது பள்ளி மாணவ மாணவியரைப் பெரும் அச்ச உணர்வோடு தேர்வை எதிர்நோக்க வைத்ததால் மிரட்சியுற்ற அனிதா போன்ற அறிவார்ந்த மாணவ மாணவியர் கூட ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற இயலாமல் போனது மிகப்பெரிய கொடுமை. பெரும்பாலும் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் உயர்தர அரசு மருத்துவக் கல்லூரிகளின் பெரும்பாலான மருத்துவ இடங்கள் வேற்று மாநில மாணவ மாணவியருக்குப் போவதற்குத் தமிழக மக்கள், ஏன் செலவழிக்க வேண்டுமென்ற நியாயமான சமூகநீதிக் கேள்வியையும் மேனாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பியுள்ளது பெரிதும் சிந்திக்கத்தக்கது. எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் ஏழை, நடுத்தர தமிழக மாணவ மாணவியர்க்கு ‘நீட்’ தேர்வு எமனாகவே அமைந்துள்ளது.