Pages - Menu

Thursday, 6 April 2017

இரட்சணிய யாத்திரிகம், உயிர்த்தெழுந்த காட்சி


இரட்சணிய யாத்திரிகம்

உயிர்த்தெழுந்த காட்சி

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இல்லையயன்றால் கிறித்துவ சமயமே இல்லை. கிறிஸ்து சிலுவையில் அறைய பட்டதைக் கண்டு அஞ்சியோடிப் போனார்கள் சீடர்கள். அவரை மூன்று முறை மறுதலித்தவர் இராயப்பர். அவர் கரங்களிலும், விலாவில், கையை விட்டுப் பார்த்தாலொழிய நம்ப மாட்டேன் என்ற தோமா முதலியோர் அவரது உயிர்த்தெழுதலைக் கண்டு, விசுவாசித்து  ஊக்கம் பெற்று உலகெங்கும் போய் நற்செய்தியைப் பரப்பினார்கள். கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் காலையில்,  தாம் கூறிய வண்ணமே  உயிர்த்தெழுந்தார்.
இரட்சணிய யாத்திரிகம் உயிர்த்தெழும் காட்சியினை இலக்கிய நயத்துடன் புனைந்துள்ளது. கிறிஸ்து உயிர்த்தெழுந்த வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமையின் காலைப் பொழுதில்,இருள் விலகும் நேரமான வைகறையைப் பார்த்துத் திங்கள் (நிலா) ஒளி குன்றியது. அந்தச் செயல் உண்மையைக் கண்டவுடன், பொய் தோற்றுப் போனது போல இருந்தது. கையும் களவுமாய் பிடிக்கப்பட்ட கள்வனின் செல்வம் போல் விண்மீன்கள் மறைந்தன. பொய்யைக் கண்டு மருளும் நல்ல உள்ளங்களைப் போல்,தீபங்கள் ஒளி இழந்தன. இத்தகைய காலை நேரத்தில் உலகிற்கெல்லாம் மீட்பினைத் தமது சிலுவை மரணத்தால் சம்பாதித்து, யோக நித்திரையில் ஆழ்ந்தவர் துயில் நீங்கி எழுவது போல உன்னத தேவ மைந்தனாகிய கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என இரட்சணிய யாத்திரிகம் கீழ்க்காணும் பாடலில் கூறுகிறது.

“இன்னதோர் அமையந் தன்னில் இருநில உலகுக்கெல்லாம்
பன்னரு நலத்த ஆய பரகதிப்பயனை ஈட்டித்
துன்னிய சடவியோகத் துயிலுணர் சூழ்ச்சியே போல்
உன்னத தேவமைந்தன் உயிர்த்தெழுந்தருளிப் போந்தார்” (பா.304)

வள்ளல் இயேசு உயிர்த்தெழுந்ததைக் கண்டு,உலகில் வாழும் அளவில்லாத அனைத்து  உயிர்களும் மகிழ்ந்தன. செடிகளும், கொடிகளும் மலர்களைப் பூத்து மகிழ்ந்தன. நீங்குதற்குரிய துன்பம் நீங்கி உண்மையான இன்பம், உண்மை ஒளி போன்றவை மனங்களில் நிறைந்தன. உலகம் முழுவதும் இருள் நீங்க, ஞாயிறு உதயம் செய்தது. பறவை இனங்கள் இன்னிசைக் கீதங்கள் எழுப்பிப் போற்றின. கிறிஸ்து பெருமான் உயிர்த்தெழுந்த காட்சி மானிடமே புதிய உயிர்பெற்று விட்டதைப் போல் தோன்றிற்று.
இரட்சணிய யாத்திரிகம் மீட்பின் சரித்திரத்தைச் சொல்லி முடிக்கும் ஒரு முத்தாய்ப்பான பாடல் ஒன்றைக் கீழே காண்போம்.
“சிந்திக்க நெஞ்சடியேன் சென்னியிரைஞ்சக் கரங்கள்
வந்திக எஞ்ஞான்றும் வாழ்த்துவாய் ‡ 
புந்திக்குள் வீற்றிருக்கும் சேசுவீரை மலர்பூஞ்  சேவடிக்கே ஆற்றுக மெய் அன்பின் பணி”
 (பா. 496)
மூன்றாம் நாள் காலையில் கல்லறையைக் காண வந்த மகதலேன் மரியாள் முதலிய பெண்கள்,கல்லறை வெறுமையாய் உள்ளதைக் கண்டு திகைத்தனர். இறைதூதன் அவர்களுக்கு கிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தியை அறிவித்தான். கிறிஸ்து தாமே தோன்றி அப்பெண்களுக்கும், எம்மாவூருக்கு வழிப்பயணம் செய்து கொண்டிருந்த சீடர்களுக்கும், யூதர்களுக்கு அஞ்சி ஒளிந்து கொண்டிருந்த பதினொரு சீடர்களுக்கும் காட்சி தந்தார். உயிர்த்தெழுந்த பின் நாற்பது நாள் சஞ்சரித்தார். பின் விண்ணகத்திற்கு எழுந்தருளி பிதாவின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். நமக்காக பிதாவிடம் பரிந்து பேசுவதே அவரது கருணை செயலாக உள்ளது.
வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி, கிறிஸ்து உயிர்த்தேழுந்த காட்சியினை, பகைவர் தந்த துன்பத்தினால் கிறிஸ்து  தமது  உயிரை அளித்த பின், அந்துன்பமெல்லாம் நீங்கப் பெற்று, உலகத்தினை மீட்டல் என்னும் இறைவனது குறிக்கோள் நிறைவேறுமாறு, தனது விலா, இரண்டு கை, தாள்பட்ட (இரண்டு பாதம்) ஐங்காய அடையாளங்களோடு ஒளிவீச உயிர்தெழுந்தார் எனப் பாடியுள்ளது. 
மறைதிரு ஆசீர்வாதம் எழுதிய திருஅவதாரத்தில் கிறிஸ்து  உயிர்த்தெழுந்த மாண்பினை ஜெயகாண்டம் என்ற பகுதியில் வினாக்கள் சிலவற்றையயழுப்பி அவைகளுக்கு விடைகளை உய்த்துணர்ந்து கொள்ளுமாறு வெளிப்படுத்தியுள்ளது. இதனை
“மண்ணவர்க் கெனவுயி ரீந்தவரை மரணமே தடைசெயக் கூடியதோ
அண்ணலா ருடலையே கல்லறையுள் ளடக்கிவைத் திருப்பதுங் கூடியதோ
கண்ணயர் கிறிஸ்துவே யயழும்புவதைத் தடைசெய்ய முடியுமோ கல்லினாலே
விண்ணவர் மகிபனே உயிர்தெழுந்தார் வெளிப்பாடு மொரு ஜெயவேந்த னென”

என வந்துள்ளதை திரு அவதாரப் பாடல் வழி அறிய முடிகின்றது.
ஆசுகவி ஆரோக்கியசாமி இயற்றிய சுடர்மணி என்னும் நூலில் இக்காட்சியினை,

“அடக்கம் செய்த மூன்றாம்நா ளவரே சொன்ன முன்னுரைபோல்
தொடங்குங்காலை விண்ணவர்கள் தோன்றிக் கல்லைப் புரட்டிவிட
அடங்கா வொளியி லாண்டவரு மழகே யுருவாய் வெளியேற
குடலே நடுங்கக் காவலர்கள் குருவிடமோடிச் செப்பினரே”
எனப் புகன்றுள்ளது.

கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியம், இயேசு உயிர்த்தெழுந்த காட்சியை மகிமை எனத் தலைப்பிட்டுக் கூறியுள்ளது. இயேசு காவியம் கிறிஸ்து  உயிர்த்தெழுந்த மகிமையினை,

“வெள்ளியன்று பிற்பகலில் மரித்த இயேசு
வேதமுறை மாலையிலே அடக்கமானார்
கள்ளர்களும் ஓய்வெடுப்பார் சனியில் அன்று
கட்டாய விடுமுறைநாள் யூதருக்கு,
பிள்ளைகளும் பெரியோரும் மாதர் தாமும்
பேதலித்து சனிமுழுதும் ஓய்ந்திருந்தார்!
வெள்ளிமுளைத் தேஎழுந்து ஞாயிறன்று
விடிகின்ற போதினிலே குறியித்தெழுந்தார்”

என இயேசு காவியம் கூறுகிறது.
கிறிஸ்துவ  சமயத்தின் வாழ்வும், வரலாறும், வளர்ச்சியும், நம்பிக்கையும் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்ற அடிப்படை கோட்பாட்டைத் , தமிழ் கிறிஸ்துவ இலக்கியங்களில் கற்பவர் நெஞ்சைக் கனிந்து உருகச் செய்கின்ற பான்மையில் பாடப்பட்டுள்ளன. இவ்வாறு வாழ்வளிக்கும் வள்ளல் இயேசுவின் வாழ்வுக் காட்சிகள் பலவற்றையும் அறிந்து  இன்புறுதல் சாலப் பயனளிப்பதாகும்.

No comments:

Post a Comment

Ads Inside Post