இளம் உள்ளங்களின் மரியாள் ஆன்மீகம்
அருட் சகோ. முனைவர் விமலி, FIHM
தமிழ்த்துறைப் பேராசிரியர்,இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்.
இன்றைய உலகிலும் இளம் உள்ளங்கள் தங்களின் அனுதின வாழ்வில் அன்னை மரியாவின் உடனிருப்பையும், உயர்வான மகத்துவத்தையும் அனுபவமாக உணர்கின்றனர். கல்லூரி மாணவி கள் சிலரின் மரியாவின் துணையின் சாட்சியத்தை இங்கு பதிவு செய்கிறோம்.
‘இந்த அகிலத்தில் இறைவனின் குரலுக்கு உடனே செவிசாய்த்து, தன்னை முழுவதும் அர்ப்பணித்த முதல் பெண் மரியா. ஒரு பெண் எப்படியயல்லாம் வாழவேண்டும் என்று இறைவன் விரும்பியதை தன் வாழ்வால் வாழ்ந்து காட்டிய முதல் சரித்திரப் பெண். இவளின் புனிதமிகு வாழ்வு பல துறவிகளைப் புனித வாழ்வுக்கு உயர்த்த வேண்டும். ஒரு குழந்தை கேட்டவுடன் தாயானவள் வாரி வழங்குவது போல் இவள் என் வாழ்வில் பல புதுமைகளைச் செய்து என்னைக் காத்துவருகிறாள். எனவே அவளைப் பின்பற்றி அவளின் அன்பு பிள்ளையாய் என்றும் வாழ்வேன்’. ( ர. இலாவண்யா, கெங்கவல்லி, கன்னியர் பயிற்சி, விருப்பநிலை).
‘அள்ளி கொடுப்பவள் அன்னை அல்ல அனைத்தையும் அப்படியே கொடுப்பவள்தான் அன்னை’ என்பதற்கேற்ப தன்னிடம் உள்ள அனைத்தையுமே அதுவும் தன் மகன் இயேசுவையும் முழுமையாக தந்துவிட்டார். நான் எட்டாம் வகுப்பு படித்தேன். அப்போது எனது தாய், மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தார்கள். ஒரு நாள் திடீரென்று காணாமல் போய்விட்டார்கள். நான் அன்னை மரியாவிடம் கண்ணீரோடு வேண்டிக் கொண்டேன்.எனது அம்மாவையும் கண்டுபிடித்தேன். அவருக்கு பூரண சுகம் தந்து காத்தார். இத்தகைய பெரும் அற்புதங்களைச் செய்து வருகின்ற எனது இரக்க அன்னை என்றும் வாழ்க. ( செ. எலிசபெத் ராணி, கடலூர், கன்னியர் பயிற்சி, விருப்பநிலை)
மாதா என் வாழ்வின் நம்பிக்கையின் உரு என்று சொல்லலாம். என் குடும்பத்தினர் குடியிருக்க ஓரு வீட்டைக் கட்ட உதவியவர் அவர். அத்தோடு திடீர் விபத்திலிருந்து என்னையும், என் குடும்பத்தில் உள்ளவர்களையும் காப்பாற்றியவர். எந்த ஒரு செயலையும் நம்பி கேட்குற போது வெற்றியாக செய்து முடித்துள்ளார்கள். என்றும் அவருக்கு நன்றி உள்ளவளாக இருப்பேன். (அ. ஸ்டேசிதெபோரா, வெங்கமேடு, முதுகலை கணிதவியல் படிக்கும் மாணவி)
எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட துன்பமான, தோல்வியான சூழலில்தான், எங்களோடு அன்னை நடந்தார்கள். அனைத்து உறவுகளும் கைவிட்ட தருணத்தில்தான் அன்னை மரியாள் எங்களுக்கு ஆறுதலையும், உறுதுணையும் அளித்து காத்து வருகின்றார்கள். எனவே என்றும் அவள் புகழ் சிறக்க, தொடர்ந்து வாழ்த்தி செபிக்கின்றேன். (எஸ். ஜீலி ஜென்சியா, விரியூர், தமிழ் இளநிலை முதலாமாண்டு மாணவி)
அன்னை மரியாள் பெண்களுக்குள் சிறந்தவர், பாவமாசு அற்றவர், உலக மீட்பரின் தாய். எங்கள் குடும்பத்திற்கு தந்தையின் இறப்பால் ஏற்பட்ட தனிமையை, என் தாய் உணராத வகையில், ஆறுதலும், ஆற்றலும், பாதுகாப்பும் தந்து, என் தாய்க்கு அரசு வேலையில் நிரந்தரத்தைத் கொடுத்து காத்து வருகின்றார். ( சூ.ரேமிஜியுஸ் மேரி, காட்டுக்கூனங்குறிச்சி, இயற்பியல் இளநிலை முதலாமாண்டு மாணவி)
திருமணத்திற்குப் பிறகு பத்து ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பாக்கியத்தை அளித்து எனது தாய்க்கு தாய்மையை அளித்தவர். நன்றி அன்னையே! நீவீர் வாழ்க. ( ஏ. பிரின்சியா, கனிணி முதுகலை இரண்டாமாண்டு மாணவி)
இந்த மனித சமூகத்திற்கு நாம் ஏதாவது தர வேண்டும் என்று நினைத்தால் அது நம்பிக்கையாகத்தான் இருக்க வேண்டும்.இவ்வாறுதான் நமது அன்னை மரியாளும் இவ்வுள்ளங்களுக்கு பரிசாகப் பல நன்மைகளை அளித்துள்ளாள் என்பதை இவண் கண்டோம். எனவே இந்த மனுக்குலத்தை வாழ்வின் பாதைக்கு அழைத்து வரும் மாபெரும் திட்டத்திலே அன்னை மரியாள் அற்புதமாய்த் தன் பங்கை முழுமையாக செய்து வருகின்றாள். தாய்மை தாங்கிக்கொள்ளும். இதுதான் உண்மையான தாய்மை. இத்தாயானவள் தன்னுடைய துன்பத்தை மட்டும் சுமப்பவள் அல்ல. மாறாக தன் துன்பத்தோடு தன் பிள்ளைகளின் துன்பத்தையும் சேர்த்தே சுமப்பவள். அதைத்தான் நமது அன்னை கன்னிமரியும் நமக்கு நாள்தோறும் செய்து கொண்டே வருகின்றாள்.
கார்மேல் சகோதரி மரிதோமினிக் பிலய் கூறுகிறார்,
‘ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்ற மனித ஆன்மா எது? தனது ஆன்மீக ஆற்றல் அனைத்தையும் இறைவனின் தொண்டுக்காகவும், அவரது புகழ்ச்சிக்காகவும் அர்ப்பணிக்கின்ற ஆன்மாதான். எனவே அத்தகைய ஆன்மா இறை கட்டளை அனைத்தையும் உறுதியுடன் கடைபிடித்து இறைவனின் மகத்துவத்தையும் அவரது வல்லமையையும் எப்போதும் கண்முன் நிறுத்தும். இவ்வகையில் மரியன்னையும் வாழ்ந்தாள். தமக்கு வரும் மேன்மையும், அனைத்து ஆற்றல்களும் வல்லமையே உருவான இயேசுவின் வழியாக வருகின்றது என்று உணர்ந்திருந்தாள்’ என்கிறார்
கன்னி மரியாவின் இதயம் இறைவனின் வளம் நிறைந்த இறை அன்பைக் கொண்டுள்ளது. கடவுள் மனிதனோடு செய்து கொள்ள விரும்பிய உடன்படிக்கையின் நிறைவே மரியாவின் தெய்வீகத் தாய்மையாகும். மனித மீட்பின் ஊற்றாக, தெய்வீக தாய்மை விளங்குகிறது. ஒரு குழந்தை யின் உயிருக்கு ஊற்றாக விளங்குபவர் தாய்தான். பல நேரங்களில் புண்ணிய வாழ்வு வாழ இயலாத பாவப்பட்ட மனிதர்கள் அருகிலும் மரியா இருப்பது நமக்கு வியப்பூட்டுகிறது. அன்னை மரியாள் வரங்களின் இடை நிலையாளராக இருக்கின்றார். இடைநின்றுப் பரிந்துரைக்கும் தமது பணியில் மரியா, தூய ஆவியோடு மிகவும் நெருக்கமாய் இணைந்திருக்கின்றார்.
மனிதர்களின் துன்பங்களை மரியாள் புரிந்துகொண்டு, அவற்றைத் தன் இதயத்தில் ஏற்று, இறைவனிடம் ஒப்படைப்பதே மரியாவின் இடைநிலையாளர்ப் பணியாகும். மரியா உயிர் தரும் தாயாக விளங்குவதே அவரது இடைநிலையாளர் பணியின் இரண்டாவது அம்சமாகும். மூன்றாவதாக, மரியா போராடும் தாயாக இருக்கின்றார். மரியா தன் வாழ்வு முழுவதும் மிக ஆபத்தானதும், வேதனைக்குரியதும், கடுமை யானதுமான சூழ்நிலைகளையே ஏற்றுக் கொண்டார். ஏனெனில், மாபெரும் போராட்டத்தின் மத்தியில்தான் மரியா நம்மை ஈன்றெடுத்தார். மிக உச்சக் கட்ட போராட்டம் சிலுவைப் போராட்டமாகும். ஒப்புயர்வற்ற இரக்கத்தாலும், அன்பாலும் இடைநிலையாளராதல் அவரது, அன்பின் மனநிலையை வெளிப்படுத்து கிறது. கிறிஸ்தவ வாழ்வின் இன்பங்களையும், துன்பங்களையும், போராட்டங்களையும், மகிமை யையும் முழுமையாக வாழ அவர் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார்.
யாரேனும்ஒருவர் என்னிடம் உதவி கேட்கிறார் என்று சொன்னால், இன்னும் நான் இந்த உலகத்திற்கு பயன்படுகிறவனாக இருக்கிறேன் என்று பொருள்.
(பெளலோ கோயயல்லோ)
நான் தோற்றால் நாம் வாழ்வோம். என்பதை அன்னை வாழ்வாக்கியவர். அன்பு வாழ்வில் தோற்கத் தெரிந்த இதயம்தான் ஜெயிக்கத் தெரிந்த இதயம். அதுதான் நம் அன்னை மரியாள். தான் தோற்றத்தின் ( தன் மகனை இழந்து) மூலம் இவ்வுலகையே வெற்றி காணச் செய்தவள். நாமும் இவ்வுலக வாழ்வில் தோற்று பிறர் வாழ்வை வெற்றி காணச்செய்வோம்.
விண்ணுலகின் தேவதையாய்
மண்ணுலகின் அரசியாய்
மலரும் பூக்களின் இதழாய்
வானில் ஒளிரும் நிலவாய்
அன்றும் இன்றும் என்றும் அன்னையாய்
விளங்குவாள் என் அன்னை மரியாள்.
No comments:
Post a Comment