பாஸ்கா ஞாயிறு 16 - 4 - 2017
திப 10: 32 ,37 ‡ 43; கொலோ 3: 1 ‡4 ; யோவா 20 : 1 ‡9
-
பேறு பெற்ற நாள் இதுவே .......
உயிர்ப்பின் மகிழ்வு என்பது இயேசுவைத் தவிர வேறு எவரும் முன் பின் அறிந்திராத ஓர் அனுபவம். வார்த்தைகளால் விளக்கிச் சொல்ல இயலாத உணர்வு. இயேசு தன் பாடுகளையும் உயிர்ப்பையும் மும்முறை அறிவித்தபோது, சீடர்கள் அதனை கற்பனை செய்து கூடப் பார்த்தார்களா என்பது நமக்குத் தெரியாது. கொடூரமாகக் கொலை செய்து சிலுவையில் அறையப்பட்டவர் , மூன்றாம் நாள் உயிர்ப்பெற்று விட்டார் என்று கேள்விப்பட்டவுடன் , சிதைந்த முகமும், சிதறிய உடலுமே நினைவிற்கு வந்திருக்கும்.
“நடுங்க வைக்கும் இருள் நல்லிரவிற்கு மேல் தெரிவதில்லை , என்னும் கூற்று உயிர்ப்பு தரும் நம்பிக்கையை உணர வைக்கிறது. எல்லா நற்செய்திகளும் இயேசுவின் உடல் இல்லாத காலியான கல்லறையைத்தான் முதலில் குறிக்கப்பிடுகின்றன. (மத் 28:2 ; மாற் 16:5‡6 ; லூக் 24:2 ; யோவா 20: 1 ) எனவே தான் சாம் மோரிஸ் கூறுவார், இயேசுவின் கல்லறையின் வெறுமையினால்தான் அது பெறுமை பெற்றது” என்பார்.எனவே தான் பவுல் , “கிறிஸ்து உயிருடன் எழுப்பபடவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்” (1 கொரி 15:14). ஆங்காங்ககே ஓரிரு வீடுகள் இருந்த காலங்களில் உறவுகளில் நெருக்கம் இருந்ததை போல அருகருகே வீடுகள் நெருக்கமாக இருக்கும் இன்றைய காலங்களில் உறவுகளில் நெருக்கம் இல்லை. யாரும் யாரையும் பற்றிக் கவலை கொள்வதில்லை. பல்வேறு காரணங்களை முன் வைத்து உறவுகளும் விலகியிருக்கவே விரும்பும் இத்தகைய நிலையில், இயேசுவுக்கு நிகழ்ந்தவற்றில் உடனிருந்து , விடியற்காலையில் கல்லறையில் காத்திருந்து இழந்த இயேசுவை உயிரோடு கண்ட மதலேன் மரியாளும், சீடர்களும் மகிழ்ந்ததைப் போல , எப்போதெல்லாம் வலிகளைத் தொடர்ந்து உயிர்தரும் நிகழ்வுகளுடன் உலகம் கரம் சேர்க்கிறதோ, அங்கெல்லாம் இயேசுவின் உயிர்ப்பு நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.
அன்பு அச்சத்தைத் தகர்த்தெறியும் ஆக்கப்பூர்வமான சக்தி வாய்ந்தது. உலகத்தை இருளை நோக்கி இழுத்துச் செல்லும் இன்றைய சூழல்களிலும் மனித வாழ்வில் நம்பிக்கை தரும் நற்செய்திகளும் நம் செவிகளைத் தேடி வராமல் இல்லை.
இருண்ட மேகத்தைக் கடந்து வரும் விடியலும், வறட்சியைக் கடந்து வரும் வசந்தமும் வறுமையைத் துடைக்க நீளும் கரங்களும், துன்பத்தைக் கடந்து வரும் புன்னைகயும், நம்பிக்கை தரும் வார்த்தைகளும், உயிர்த்த இயேசுவின் வெற்றியின் அடையாளங்களாகத் திகழ்கின்றன.
இயேசுவின் அற்புதங்களும் அடையாளங்களும் அவருடைய மகிமை நிறைந்த வாழ்வைக் கண்முன் கொண்டதாகவே இருந்தன. எனவே உயிர்ப்பு என்பது எளிதாக அமைந்து விடவில்லை. மனித நிலையில் துன்பம் நிறைந்தாக தோன்றினாலும் , இறை விருப்பத்தோடு இணைந்து சென்றதால் மகிமைக்கு இட்டுச் செல்வதாக இருந்தது.
நமது புரிதலும் இறையனுபவமும் வளர வளர, துன்பங்கள் நமக்குப் பாரமாக அமைவதில்லை. இன்றைய புரிதலுடன் நேற்றைப் பிரச்சினையைப் பார்க்கும் போது, அவை பிரச்சனைகளே அல்ல என்பது புரிகிறது. உண்மைதான் . இயேசுவின் மகிமையான இறைநிலைக்கு முன் சிலுவைத் துன்பமும் , உயிரிழப்பும் வலிகளைக் கடந்து, பிறந்த குழந்தையின் வசந்தப் புன்கையே.
எனவேதான் பவுலடிகளார், நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள் (கொலோ 3:1) என்கிறார். நம்பிக்கை இருளான நிலையிலும் , நம்முயற்சிகள் தொடர்ந்தால் உயிர்ப்பின் வெற்றி நிச்சயமே.
உயிர்த்த யேசு நமது இல்லங்களில் வாழட்டும். உயிர்ப்பின் மகிமை நமது உள்ளங்களில் ஒளிரட்டும் பேறுபெற்ற நாளாக நமது வாழ்நாட்கள் மாறட்டும்.
No comments:
Post a Comment