Pages - Menu

Friday, 28 April 2017

பெண்ணியம் போற்றும் பாத்திமாக் காட்சிகள்

பெண்ணியம் போற்றும் பாத்திமாக் காட்சிகள்

(நாசரேத்தூர் நல்லாள் பாத்திமாவில் காட்சி தந்ததன் நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை)

- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

‘ஆகட்டும் ஆண்டவரே’ என்று சொல்லி  இறைத் திருவுளத்தினுக்கு முற்றும் பணிந்து வாழ்ந்தனாலேயே பெண்குலத்தோருள்  மாணிக்க மாகத் திகழ்கின்றார் மரியா. விண்நோக்கிப் பயணித்தன் விளைவாக இவரின் அனைத்துச் செயல்பாடுகளும் இறைச் செயல்பாடுகளாகத் திகழ்ந்தன. பாவச் சேற்றில் உழன்று கொண்டிருந்த  உலகோரினை விண்நோக்கி நடத்திச் செல்ல வேளாங்கண்ணி, லூர்து, லா சலேத்,   கோதலுப்பே போன்ற பல இடங்களில் காட்சி தந்து இறைத் திட்டத்தினைச் செயல்படுத்தி வருபவர் இறை அன்னை மரியா.

முதல் உலகப் போர் முழக்கம்:

1914 முதல் 1918 வரை உலக நாடுகள் இரு பிரிவாகப் பிரிந்து தங்களுக்குள் போரிட்டுக் கொண்டன. அழிவுச் சக்தியினை  உணவாக உட்கொண்டு மரணத்தினை நோக்கிப் பயணித்திட்ட இருள் சூழ்காலம் அது. இப்போரட்ட காலத்தில்தான் தன்னிலை விட்டெழுந்து தரணியர்  தழைத்திட பாத்திமா நகரில் காட்சி தந்து பல தந்த வாழ்வினாக்கி வழிகாட்டினார் நம் மரியன்னை.

பாத்திமா ஒரு வரலாற்றுப்  பின்னணி:

                    போர்த்துக்கல் நாட்டினருக்கும், இஸ்லாமியருக்கும் 12 ஆம் நூற்றாண்டில் பெரும்போர் ஒன்று நடைபெற்றது. போர்த்துக்கீசியர் வெற்றிக்கனியினை ஈட்டினர். இஸ்லாமியப் படைத்தளபதியின் மகள் பாத்திமா. போர்த்துக்கீசியரின் படைத்தளபதி கொன்சாலோ. இவர்கள் இருவருக்குமிடையே திருமணம் நடைபெறுகிறது. இவர்கள் வாழ்ந்திட்ட நிலப் பகுதி அவ்ராணா அவ்ரம்.  இவர்களுக்குப் பின் இந்த இடமே பாத்திமா நகராயிற்று. இப்பட்டணம் இன்று போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனிலிருந்து 144 கி.மீ. தொலைவில் உள்ளது. இதிலிருந்து 2 கி.மீ மேற்கே கோவாதா ஈரிய என்னும் மலைப் பாங்கான சமவெளிப் பகுதியே மாதா காட்சியளித்த மாண்புமிகு இடமாகும்.

காட்சி பெற்றோர்:

                லூசியா, பிரான்சிஸ், ஜெசிந்தா ஆகிய மூவரும் நெருங்கிய உறவினர். இவர்கள் முறையே 10,9,7 வயதினர். பக்திமிக்க பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்த இவர்கள் ஆன்மீகச் சிந்தை கொண்டோராவர். ஏழை, எளிய  மனங்கொண்ட இவர்களே மரியாவின் காட்சி காணும் பாக்கியம் பெற்றனர்.

அன்னையின் காட்சிகள்:
                முதல் உலகப் போரினால் மிரண்டிருந்த மக்களுக்கு ஆறுதலாக திருத்தந்தை 15‡ஆம் பெனடிக்ட் அமைதி காக்க வேண்டி உலகோருக்கு வேண்டுகோள் விடுத்தார். 1917 ஆம் ஆண்டு மே திங்கள் 13ஆம் நாள் நண்பகல் வேளை லூசியா, பிரான்சிஸ், ஜெசிந்தா என்னும் இவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டே மூவேளை செபம் சொல்கின்றனர். என்ன ஆச்சரியம். அதோ அங்கே அசின்ஹோர் மரத்தின் உச்சியில் ஓர் ஒளிமணடலம். அதன் நடுவில் வெண்ணிற ஆடை அணிந்து, புன்னகை தவழ்ந்திடும் முகத்தோடு குவிந்த  கரங்களில் செபமாலை ஏந்தி ஓர் அழகான பெண்மணி.

                 சிறு  குழந்தைகள் பயம் சூழ்ந்து விழிகள் கலங்கி நிற்கின்றனர். ‘ பிள்ளைகளே அஞ்சாதீர்கள் நான்தான் விண்ணிலிருந்து மண்ணகம் வந்துள்ள இயேசுவின் தாய். பாவத்தில்  ஊன்றி, பாவிகள் வெகுவாகி கடவுளை வேதனைப் படுத்துகின்றனர். பாவிகள் மனத்திரும்பிட உங்களின் துன்பங்களைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுங்கள். உலகில்  போர் நீங்கி, அமைதி நிலவிட தினசரி செபமாலை செபியுங்கள்’ எனறாள் அப்பெண்மளி..

              தாங்கள் காண்பது காட்சியா? பகல் கனவா? இல்லை. இல்லை. மாதா காட்சிதான் என்றறிந்து அவர்கள் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ததும்புகின்றது. வீட்டிற்குச் சென்று இதனைப் பகிர்ந்து கொண்ட போதோ. ஏளனம், பரிகாசம், எகத்தாளம். பெற்றோரே அந்த இடத்திற்குச் செல்லக் கூடாது எனத் தடை செய்தனர்.

தொடர் காட்சிகள்: 

               தொடர்ந்து வந்த  ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் காட்சிகள் நம்பத்தக்கதாகத் தோன்றிட மக்கள் எண்ணிக்கை பெருகியது. மாதாவின் காட்சியினை இம்மூவர் மட்டுமே பிரதிமாதம் 13 ஆம் நாள் காண முடிந்தது. இச்சகமாக பேச்சுகள், சக வயதினரின் கேலி, கிண்டல் ஆகியவை இந்த இளம் பிஞ்சுகளின் உள்ளத்தில் வேதனைகளை உருவாக்கின. ஆனால்  அவையனைத்தையும் இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தனர். மனத்திடம் பெற்று மரியன்னையின் பிள்ளைகளாக வீறு கொண்டு எழுந்தனர்.

காட்சிகளின் செய்தி:

               ‘ கேழ்வரகில் தேன் ஒழுகுகின்ற தென்றால் கேட்பவனுக்கு மதி எங்கே போச்சு?’ என்ற விவாதங்கள் ஆங்காங்கே எழுந்தன. ஆனால்  உண்மையினை உறங்க வைக்க முடியுமா? 

  இக்காட்சிகள் தந்த  செய்திகளில் முக்கியமானைவ:
 1. போர் முடிவுக்கு வந்து  உலகில் அமைதி நிலவிடல் வேண்டும்.
 2. ரஷ்யா மரியாவின் மாசற்ற திரு இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்படல் வேண்டும்.
 3. கிறிஸ்தவர்கள் அதிக வேதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக திருத்தந்தை ஒருவர்  கொடூரமாகத்  தாக்கப்படுவார்.
 4. பிரான்சிஸ், ஜெசிந்தா ஆகிய இருவரும் விரைவில் விண்ணகம் செல்வர். பாத்திமா ரகசியங்கள்  உலகெங்கும் பரவிட லூசியா நீண்ட காலம் வாழ்வார்.
      
 திருச்சபையின் பதில்:

மனிதர் எப்போதெல்லாம் தடம் மாறித் தவறுகளில் வீழ்ந்து செயல்படுகின்றார்களோ அப்போதெல்லாம் தடுமாற்றம் போக்கிட  மாதா பல்வேறு இடங்களில் காட்சி மூலம் இறைத் திருவுளத்தினை வெளிப்படுத்தியதனை வரலாறு பதிவு செய்துள்ளது. பாத்திமாக் காட்சிகளும் அப்படியே. ஆனால் விசுவாசக் கண் கொண்டு மட்டும் இவற்றினை நோக்காது. அறிவியல் ரீதியாகவும்  திருச்சபை இதனை அணுகியுள்ளது.

இறைவெளிப்பாட்டுக் கூறுகள்:

அன்பின் வெளிப்பாட்டு சமூக அமைப்பினை உருவாக்குதலே திருச்சபையின் முக்கியப் பணி. எனவே கிறிஸ்தவம் அன்பினை அடித்தளமாகக் கொண்ட சமயம். இச்சமயம் தழைத்திட விவிலிய நூல்களிலும் பல இறை வெளிப்பாட்டு நிகழ்ச்சிகளைக் காணுகின்றோம். இவை பொது வெளிப்பாடு ( Pற்ணுயிஷ்உ யூeஸeயிழிமிஷ்லிஐ), தனி வெளிப்பாடு ( Prஷ்ஸழிமிe யூeஸeயிழிமிஷ்லிஐ), எனப்படுகின்றன.

இந்த  வெளிப்பாடு, மனித மீட்பின் வெளிப்பாடாக  விவிலிய நூல்களில் துவங்கி, கிறிஸ்துவில் முழுமையடைந்து திருச்சபையின் திருவருட்சாதனங்களின் வழியாக மக்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும் மனிதர் கிறிஸ்து அளித்த மீட்பினை  உணர்ந்து, அனுபவித்து ஏற்றுக் கொள்ள திருச்சபையின் அருளடையாளங் களோடு  அவரைப் பயிற்றுவித்து, விசுவாசத்தில் உறுதியோடு நிலைத்து நிற்கச் செய்யப் பாத்திமாக் காட்சிகளும் அவை தரும் செய்திகளும் உதவியாகத் திகழ்கின்றன.

பாத்திமா இரகசியங்கள்:

பாத்திமாவில் நடைபெற்ற பொதுக் காட்சிகள் மூலம் வெளிப்பட்டவை ஒரு சிலவே. தனிக்காட்சிகள் மூலம் இம்மூவராலும்  பெற்ற வெளிப்பாடுகள் இரகசியமாகக் காக்கப்பட்டன. அவை மூன்று  இரகசியங்கள் எனப்படுகின்றன.

 அ. நரகம்:

           1941 ஆம் ஆண்டு லூசியா எழுதிய ‘தனது நினைவுகள்’ என்னும் குறிப்பேட்டில் 1917 ஜீலை 13‡இல் மாதா கீழ்க்கண்ட காட்சியினை தங்களுக்கு வெளிப்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றார். பூமிக்கடியில் தீச்சூளையில் வெந்து மடியும் மனித ஆன்மாக்களைக் கண்டோம். அதில் கொத்துக் கொத்தாக மனிதர்கள் விழுந்து கொண்டிருந்தார்கள்.

 ஆ. இரண்டாம் உலகப்போர்:

              உலகப் போரினால் சீரழிக்கப்பட்டிருந்தாலும், உலகம் இன்னொரு அழிவினைச் சந்திக்கும். அதுவே இரண்டாம் உலகப் போர்.  இது ஒரு பகுதியாகும். இரண்டாம் பகுதியில் கம்யூனிசக் கொள்கையினால் கடவுள் மறுப்புத் தத்துவம் கொண்டுள்ள ரஷ்யா மனம் திரும்பிட வேண்டும். இதற்காக மரியாவின் மாசற்ற திரு இருதயத்தினுக்கு ரஷ்யா அர்ப்பணிக்கப்பட வேண்டும்.

 இ. கிறிஸ்தவர்களின் வேதனை:

இந்த மூன்றாவது இரகசியத்தினை  லூசியா வெளிப்படுத்த விரும்பவில்லை. தனது மறைமாவட்ட ஆயர் சில்வா அவர்களின்  ஆணையின் படியே வெளியிட்டார். இதன்படி கிறிஸ்தவர்கள் அதிகத் துன்பத்தினுக்கு உட்படுத்தப்படுவர். ரஷ்யாவிலும், பிறநாடுகளிலும் கடவுள் மறுப்புக் கொள்கை வேரூன்றும். திருத்தந்தை ஒருவர் மரணவாயில் வரை சென்று  திரும்புவார். முதல் சனிக்கிழமை பக்தி அவசியம் அனுச்சரிக்கப்பட வேண்டும்.

பாத்திமாக் காட்சிகளின் உண்மைத் தன்மை:

பாத்திமாக் காட்சிகள் அனைத்தும் இறைவெளிப்பாட்டின்  அடையாளங்களே. இவற்றிற்கான  வரலாற்று நிகழ்வுகளின் ஆதாரங்கள்.
   1. இரண்டாம் காட்சியில் கூறப்பட்டுள்ளவாறு பிரான்சிஸ், ஜெசிந்தா இருவரும் முறையே 1919, 1920 இல் விண்ணகம் சென்றனர்.
   2. லூசியா கார்மேல் சபையின் துறவு வாழ்வு  பூண்டு தனது 97 ஆம் வயதில் விண்ணகம் சென்றார்.
   3. திருத்தந்தை ஜான்பால் 1981 மே 13ல் அலி அக்கார் என்னும் இளைஞரால் சுடப்பட்டார். தனக்கு மறுபிறவி கிடைத்ததும் 
       தனது நன்றிக் காணிக்கையாக தன் உடலில் பாய்ந்த இரவைக் குண்டினை பாத்திமா மாதாவின் கீரிடத்தில் பதித்து வைத்தார்.      

   4. 1991 ல் சோவியத் யூனியன் பிளவுப்பட்டு ரஷ்யா என்ற தனி நாடாகியது.
  5. ‘ஓ  என் இயேசுவே எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். சகல ஆத்துமாக்களையும் 
       சிறப்பாக  உமது இரக்கம் யார், யாருக்குத் தேவையோ அவர்களையும் மோட்சத்தில் சேர்த்தருளும்’ என்னும் செபம் செபமாலையோடு
       இணைந்து செபிக்கும் பழக்கம் நடைமுறையாகியது.
  6. முதல் சனிக்கிழமை பக்தி பாத்திமா மாதா பக்தியாக வளர்ச்சி கண்டு கொண்டிருக்கிறது.

 பெண்ணியத்தின் மேன்மை:

              ஆணாதிக்கச் சமூகத்தில், பெண்களுக்கு அளிக்கப்பட்ட காட்சிகள் அவனியயங்கும் பரவி பெருமை படுத்தப்படுகின்றது. பெண்ணியலை ஐந்து பிரிவுகளாகப் பார்க்கலாம்.
 1. ஏற்பு நிலைப் பெண்ணியல்
 2. ஒதுக்கு நிலைப் பெண்ணியல்
 3. மறுபார்வைப் பெண்ணியல்
 4. பெண்தன்மையை உணர்த்தும் பெண்ணியல் 
 5. விடுதலைப் பெண்ணியல்

               பெண்மையின் தூய்மையே தாய்மை. தன்னலங் கருதாது பிள்ளை நலம் பேணுதலே தாய்ம்மை போற்றின்  சீரிய பண்பு. இப்பண்பின் வெளிப்பாடுகளே பாத்திமாக் காட்சிகள். இக்காட்சிகள் கூறும் செய்தியினை வாழ்வாக்கினால் வையகம் வாழ்வாங்கு வாழ்ந்திடும்.

No comments:

Post a Comment

Ads Inside Post