அன்னைக் காட்டும் வழி
அருட்பணி. ச.இ. அருள்சாமி
மே மாதம் அன்னை மரியாவை சிறப்பாக நினைவு கூறுகின்ற மாதமாக அமைந்திருக்கிறது. பங்குகளில் மே மாதத்தில் சிறப்பான மாதா வணக்க வழிபாடுகள் உண்டு. குடந்தை மறைமாவட்டத்தில் இறையடியார் லூர்து சேவியர் வளர்த்து தந்த அன்னை மரியாவின் வணக்கம், பூண்டி திருத்தலத்தில் தினமும் எதிரொலித்து வருகிறது.
அன்னை மரியா திருஅவையின் முன் அடையாளமாகவும் திரு அவையின் முதல் அங்கத்தினராகவும் திருஅவையின் தாயாகவும் விளங்குகிறார்கள். 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித பெர்நாத்து அவர்கள் கூறுவார். விவிலியத்தில் திருஅவையைப் பற்றி கூறுவதெல்லாம் அன்னை மரியாவுக்கும் பொருந்தும் என்கிறார். திருஅவையும் அன்னை மரியாவும் தாயானவர்கள். ஏனென்றால் இருவரும் இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணமானவர்கள். இருவரும் தந்தையாகிய இறைவனுக்கு பிள்ளைகளைப் பெற்றுத்தருபவர்கள். அன்னை மரியா திருஅவையின் தலையான இயேசுவை பெற்றுத்தந்தவர்கள். அதேபோன்று திருஅவை திருஅவையின் உடலை பெற்று தருகிறது.
திருவெளிபாடு 12 ஆம் இயலில் அரக்கபாம்பிற்கும் கருவுற்றிருந்த பெண்ணிற்கும் நடக்கும் போராட்டத்தைப் பார்க்கிறோம். அரக்கபாம்பு அப்பெண் தன் குழந்தையை பிறப்பிக்கும்போது அதனை விழுங்கிவிட காத்திருந்தது. (திவெ12.4). ஆனால் குழந்தை பிறந்ததும் குழந்தை கடவுளின் அரியணைக்குப் பறித்து செல்லப் பெற்றது. பெண் பாலைவனத்திற்கு ஓடி போனார். 260 நாள் அங்கு தங்கியிருந்தார். அங்கு கடவுள் அவரை பேணி பாதுகாத்தார் என்றும் பிறகு கடவுளின் தூதர் மிக்கேலுக்கும் அரக்கப் பாம்பின் துVதர்களுக்குமிடையே போர் உண்டானது. அதில் அரக்க பாம்பு தோல்விக் கண்டது (திவெ 12.4-8)
தமிழ்நாடு சென்ற மாதத்தில் போராட்டக் களமாகவே மாறிவிட்டது. உச்ச நீதிமன்றம் கட்டளையிட்ட‘ காவேரி மேலாண்மை வாரியத்தை’ மத்திய அரசு அமைக்காததை எதிர்த்து ஆளும் கட்சியும் எல்லா எதிர்கட்சிகளும் இணைந்து இரயில் மறியல் போராட்டம், அரசு அலுவலங்களில் முற்றுகையிடுதல் உண்ணா விரதப் போராட்டம் போன்ற போராட்டங்களை நடத்துகிறார்கள். இதனால் தமிழ்நாட்டிற்கு காவேரி நீர் உரிமையைத் தர வேண்டும் என்று உரத்தக் குரலெழுப்பி வருகிறார்கள். திருஅவையும் பல இடங்களில் இப்போராட்டத்தில் பங்குபெற்றிருக்கிறது. கேட்டால்தான் கிடைக்கும். குரல் கொடுக்கவில்லையயன்றால் உள்ளதையும் கொத்திக் கொண்டு சென்றுவிடுவார்கள்.
தூத்துக்குடியில் தாமிரம் தயாரிக்கும் ஸ்ரலைட் ஆலை அப்பகுதி மக்களின் உடல்நலத்தை அழிக்கிறது என்று அந்த ஆலையை மூட வேண்டும் என்ற போராட்டம்.
தேனியில் அமைக்க போகின்ற நியூட்ரோன் ஆய்வுக்கூடமும் இயற்கையை அழித்துவிடும் என்று அதற்கு எதிர்ப்பான போராட்டம்.
காஷ்மீரில் பழங்குடி சிறுமி ஆசிஃபா கோவிலில் பல நபர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதில் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க வைச் சேர்ந்தவர்கள் கைதானவர்களுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். உத்தரபிரதேசம் மற்ற பல இடங்களில் இளம் சிறுமிகளை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். மோகமென்ற உணர்வு மிருக நிலையை அடைந்தது போல நிகழ்வுகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. உணர்வுகளை ஒழுக்கத்துடன் பயன்படுத்துவதுதான் நாகரீகம்.
கர்நாடகாவில் தேர்தல் நடக்கப் போகிற இவ்வேளையில் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு, காவிரி நீர் பங்கீட்டு நீதியை செயல்படுத்தாமல் நாடகமாடி வருகிறது. காவிரியில் தண்ணீர் வரவில்லையயனில் தமிழ்நாடு பாலை வனமாகத் தான் மாறிவிடும். தமிழக மக்கள் ஒன்றிணைந்து உரிமையைப் பெற வேண்டும்.
அண்மையில் வாட்ஸ்அப்பில் குறிப்பிட்டி ருந்தார்கள். வருகிற மே 1 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் நடக்கும். அப்போது அந்தந்த கிராமத்திற்கு கொடுக்கப்படும் திட்டங்கள் என்ன? உதவிகள் என்ன? என்று அறிவிப்பார்கள். கிராமத்திலிருந்து ஒரு நூறு பேராவது அதில் கலந்துக் கொண்டால் கிராமத்திற்கு அளிக்கப்படும் முன்னேற்றத் திட்டங்களை அறிந்துக் கொண்டு உரிமைகளைப் பெறலாம் என்றார்கள். மக்கள் இதை போன்ற ஆக்கபூர்வமான நிகழ்வுகளில் பங்குபெற வேண்டும். மற்றொரு ஊக்கமளிக்கும் செய்தி. அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. தியாக ராஜன் அவர்கள்(69) அமெரிக்காவில் பணிபுரியும் தன் மகளின் உதவி கொண்டு சென்ற இரண்டு ஆண்டுகளாக இரண்டு ஏரிகளை 10 லட்ச ரூபாய் செலவு செய்து தூர் வாரியிருக்கிறார். இதனால் அவ்வூர் மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். இவரைப் போன்று மக்கள் ஒன்றித்து பொதுப் பணிகளைச் செய்யலாம். ஊழல் நிறைந்த நம் நாட்டில் இத்தகைய ஒளிவிளக்குகள் நாட்டிற்கு உயிரைத் தருகின்றன. அன்னை மரியாவின் பணிவு, பிறரன்பு நம்மில் ஒளிமயமாகட்டும்.
No comments:
Post a Comment