Pages - Menu

Friday, 13 April 2018

உயிர்ப்பு வெற்றி (வாழ்வு) க்கான நிறைவு

உயிர்ப்பு வெற்றி (வாழ்வு) க்கான நிறைவு

சகோ. விமலி FIHM. இதயா கல்லுVரி, குடந்தை
முன்னுரை

‘ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? ’ (மத் 16, 26)
வாழ்க்கையில் நேற்றைய தினம் முடிந்துவிட்டது. நாளைய தினம் நிச்சயமில்லை. இன்று மட்டும் வாழ்ந்துவிடு என்பதற்காக பொறுப்பில்லாமல் உண்டு, குடித்து, கூத்தாடி, வீணே செலவழிப்பது பொருத்தமுள்ள மானிட வாழ்வா? ஒரு மனிதர் பிறந்து, வளர்ந்து, நிறைவான முதுமை அடையும் வரைக்கும் தோற்றத்தில், எண்ணத்தில், உணர்வுகளில், பேச்சில், செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பே. மாற்றங்கள் இல்லையேல் வாழ்வில் இனிமை ஏது? புதுமை ஏது? நிறைவு ஏது? வெற்றி ஏது?

வெற்றிக்கான மானிட வாழ்வின் உயர் நெறியே அன்புதான். அது நிலையானதாக, நிரந்தரமானதாக, நிறைவானதாக இருந்து உயர் நெறியில் வாழும் ஒருவரின் முன்னேற்றம் அடைவது கண்டு பொறாமை கொள்ளாது, பிறர் நலம் நாடும் தியாகம் வளர்கிறது. அன்பு தியாகமாக வளருகின்ற பொழுது பிறருக்காக தன் உயிரையும் இழக்கும். பகையை நீக்கிப் பாசத்தைப் பெருக்கும். வேற்றுமையை விலக்கி ஒற்றுமையை வளர்க்கும். நீதிக்குத் தலைவணங்கி எளியோரின் துயர்துடைக்கும். தன் பிழை கண்டு மனம் திரும்பும். ஆன்றோரின் வழி காட்டுதலை நாடும். வாழ்வில் வரும் சிலுவைகளை ஏற்கவும் துணிந்து நிற்கும். இதனைத்தான் இறைமகன் இயேசு வாழ்ந்து காட்டி உயிர்ப்பின் வழி வெற்றிவாழ்வைத் தந்தார். 

‘சிறப்பானவற்றை வாழ்வில் நீ தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால் மோசமானவை ஒரு போதும் நிகழாது.’ -  போர்ப்ஸ்.

‘தன்னைத் தாண்டும் அன்பு வாழ்வுக்கு, விண்ணைத் தாண்டியும் கை நீளும்.’ இயற்கை கொடுத்து மகிழ்கிறது. எடுக்க எடுக்க கடல்தாய் கொடுத்துக் கொண்டே இருக்கின்றாள். அகழ அகழ பூமித் தாய் விளைவித்துக் கொண்டே இருக்கின்றாள். வெட்ட வெட்ட வாழை தந்துக் கொண்டே இருக்கிறது. ஒளி உமிழும் முழு நிலவு தேய்ந்து தேய்ந்துக் கொண்டே அழிந்து போவதில்லை. அது எழுந்து ஒளிர்கிறது முழு நிலவாய். இவ்வாறு இயற்கையே கொடுப்பதில் இமயமாய் உயர்ந்து, நிமிர்ந்து வாழுகிறது. இயற்கை கொடுத்து, கொடுத்து உயிர்ப்பு வாழ்வை நிரந்தரமாக்குகிறது. இறைவன் சாதாரண ஏழை வறியவர்களுக்கு உரிமை வாழ்வு வழங்கிட, சரித்திரத்தில் தம்மையே வெளிப்படுத்தி, உயிர்ப்பு என்ற விடுதலையை எதார்த்தமாக்கி உள்ளார். இன்றைய சமுதாயத்திலும், சரித்திரத்திலும் திருப்பங்களைக் கொண்டு வரவேண்டுமென்றால், வார்த்தை விளக்கங்களால் இயலாது. ஆனால் திண்ணமான வாழ்க்கை விளக்கங்களால் கூடும். நமது வாழ்க்கை நடைமுறைகள், நற்சான்று வாழ்வை நாளும் சமுதாயத்திலும், சரித்திரத்திலும் சவாலாகப் பிரசன்னப்படுத்த வேண்டும். இதுவே மானிட வாழ்வின் வரலாறு. நமது வாழ்வும், வரலாறும் அன்றாட நடைமுறை விளக்கமாக வடிவெடுக்க வேண்டுமென்றால், மானிடர் தனது வாழ்வாலும், வார்த்தையாலும், சாதனையாலும், சீரும் சிறப்பும் மிக்க வரலாற்றை உருவாக்க வேண்டும். 

நீதிக்கானச் செயல்களும் விடுதலைக்கான போராட்ட ஈடுபாடுகளும் உயிர்ப்பு வாழ்விற்கான பணியின் பாங்கான பாகங்களே ஆகும். மேற்கண்ட அரிய அழுத்தமான உண்மைகளை மனிதர்களிடையேப் பேசக்கூடியச் சாத்தியக் கூறுகளை உருவாக்க வேண்டும். இன்றைய சமூகம் மறைக்கப்பட்ட, வீரியத்தை மீண்டும் வளர்த்தெடுக்க இயேசுவின் வாழ்வு தந்திருக்கும். உயிர்த்தல் வரலாற்றின், தீர்க்கமான செயல்பாடுகளைத் துணிந்து வாழ்ந்திடுவோம். இன்று நாம் வாழும் சமுதாயத்தில் அழுக்குப் படிந்த அரசியல், பாழாய்ப் போன ஊடகங்கள், எங்கும் எதிலும் தன்னலப் போக்கு... கலாச்சார மாற்றத்தால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காணமாற் போய்விட்டது. பிரச்சனைகளோடு பின்னிப் பிணைந்திருக்கும் இன்றைய நெருக்கடிகளைச் சமாளிக்க மனிதனுக்கு அவசியம் தேவை மன வலிமை.

‘நம் வாழ்வைத் தீர்மானிக்கும் ஆற்றல் மிகுந்த ஆயுதம் மனப்பாங்கு.’ - டேவிட்யஹல்மன்.

அன்று சிறைச் சாலையில் தன்னை உதைத்த அதிகாரியின் காலுக்கு காலணி செய்யத் துணிந்தவர் காந்தி. யாசித்தபோது கையில் காரி உமிழ்ந்த மனிதனையும் மதித்து கருணைப்  பார்வை பார்த்தவர் புனித அன்னை தெரசா. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர்’ வள்ளலார். ‘இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் மன்னியும்’ என்று கனிவாய் மலர்ந்தவர் இயேசு. இவர்களின் விழுமியங்களையும், சமூகத் தாக்கங்களையும் நாம் வாழும் வாழ்வில் கற்றுக் கொள்ள வேண்டியது இன்றையக் காலத்தின் தேவையாகும். இத்தகைய அன்புணர்வுகளும், அறவுணர்வுகளும் மனிதரைச் சரியான வாழ்வுப் பாதையில் நெறிப்படுத்தும் வல்லமைமிக்க உயிர்ப்பு வாழ்வுக்கான நிறைவு என்பதை உய்த்துணர்வோம்.

வாழ்க்கையில் மிக மோசமான சூழ்நிலைகளில்
பல வெற்றியாளர்கள் சிக்கித் தவித்திருக்கிறார்கள்
அவற்றைத் தங்களுடைய 
அசாத்திய மனப்பாங்கினாலும்
திடமான தன்னம்பிக்கையினாலும்
அயராத முயற்சியினாலும் 
தோல்விகளை முறியடித்து 
தடைகளைத் தகர்த்தெறிந்து
வெற்றிக் களிப்பில் மிதப்பர் 
என்கிறார்.  - ஆபிரகாம் லிங்கன்.

No comments:

Post a Comment

Ads Inside Post