புதிய ஏற்பாட்டில் காணப்படும் அமைதியின் பரிமானங்கள்
அருள்பணி. ச.இ. அருள்சாமி
‘ஆண்டவருடைய அமைதி உங்களோடு இருப்பதாக.’
‘ஒருவருக்கொருவர் அமைதியை பகிர்ந்துக் கொள்வோம்’
என்று புதிய திருப்பலி புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. சமாதானம் என்ற வார்த்தை அமைதி என்று மாற்றப்பட்டிருக்கிறது. அண்மையில் ஒரு சிரிப்பு துணுக்கினை பத்திரிக்கையில் பார்த்தேன். ஓர் ஓட்டலில் இவ்வாறு எழுதியிருந்தது.
‘அமைதி தேடுவோர் இங்கே வாருங்கள் அமைதி கிடைக்கும். ஏனென்றால் நாங்கள் கொடுக்கும் மட்டன் பிரியாணியில் நிறைய பீஸ் கள் உள்ளன.’
அமைதி என்பதற்கு எபிரேய வார்த்தை ‘லோம்’ என்பதாகும். கிரேக்க மொழியில் ‘ஐரேனே’ என்பதாகும். ‘ஐரேனே’ என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் 92 முறை பயன்படத்தப்பட்டுள்ளது. ஐரின் என்ற பெயரை சில பெண்களுக்கு வைத்திருக்கிறார்கள். இது ‘ஐயரேனே’ என்ற வார்த்தையிலிருந்து உருவானது தான்.
மாற் 5:34 இல், இரத்தப் போக்குள்ள பெண், இயேசுவின் ஆடையைத் தொட்டு குணம் பெற்ற வேளையில், இயேசு, யார் என் ஆடையைத் தொட்டது? என்று கேட்க, அப்பெண் இயேசுவின் காலில் விழுந்து நடந்ததை சொல்ல, இயேசு, ‘மகளே, உனது நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று, அமைதியுடன் போ’ என்கிறார். ‘அமைதியுடன் செல்லுங்கள்’ என்பது யூத வழிபாட்டில் இறுதியாக சொல்லப்படும் வார்த்தைகளாகும். இன்றும் இஸ்ரயேல் நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, நாம் ‘வணக்கம்’ என்று சொல்வது போல ‘லோம்’ என்றுதான் வாழ்த்துகிறார்கள். ‘லோம்’ என்றால், எல்லா நலமும் பெறுக என்பதுதான் பொருள். இயேசு கூறும் அமைதி, அவர் கொண்டு வந்த இறையாட்சியின் வாழ்வின் நிறைவு. நலம் பெற்றவர்களைப் பார்த்து, அமைதியுடன் போ என்றால், இறையரசின் புதுவாழ்வு அவர்களில் வந்து தங்கி விட்டது என்பது பொருள். இரத்த போக்குள்ளவள், தீட்டுப்பட்டவள் என்று கருத்தப்பட்டவரை, தன்னைத் தொட அனுமதித்து, சமுதாயத்தில் ஒன்றாக வாழ ஏற்பாடு செய்கிறார்.
இயேசு சீடர்களுக்கு காட்சி தந்த போது, ‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக’ என்றுதான் வாழ்த்துகிறார் (யோவா 20:19-21). யோவான் 14:27 இல் இயேசு, ‘என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல’ என்று சீடர்களுக்கு வாக்களிக்கிறார். இறையாட்சியின் நிறைவு மகிழ்வு ஆகியவைகளை இயேசு தன் சீடர்களுக்குக் காட்சியளித்தபோது தருகிறார்.
இதே அமைதியை, இயேசுவின் சீடர்கள் மக்களுக்கு அளிக்க வேண்டும். எனவேதான், சீடர்கள், வீடுகளை சந்திக்கும் போது, ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக’ என்று வாழ்த்த வேண்டும் (லூக் 10:5).
தானி 10:19; தோபி 12:17; ஆகிய குறிப்புகளில், வானதூதர் மக்களை சந்தித்தபோது, ‘உங்களுக்கு அமைதி பெருகட்டும்’ என்று வாழ்த்துகிறார்கள். சீடர்கள் வானத்தூதரைப் போல மக்களைச் சந்தித்து இறையாட்சியின் பிரசன்னத்தை வழங்க வேண்டும் என்றுதான் இயேசு சீடர்களுக்குக் கட்டளை தந்தார். சீடர்கள் தரும் அமைதியை ஏற்றுகொள்பவர்கள், அமைதியின் பிள்ளைகளாகின்றனர். சீடர்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள், இறையாட்சியிலிருந்து தங்களை ஒதுக்கிக் கொள்கிறார்கள்.
மத் 10:34 இல் ஒரு வில்லங்கமான வாக்கியம் வருகிறது. ‘நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல வாளையே கொணர வந்தேன்’ என்கிறார் இயேசு. ஆனால் மத் 26:52 இல் இயேசு, ‘வாளை எடுக்க வேண்டாம், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்’ என்கிறார். அத்தோடு சீடர்களுக்கு எதிர்ப்புகளும், ஏன் உடன்பிறப்புகளே அவர்களுக்கு எதிராக எழுவார்கள் என்று எச்சரிக்கிறார்
(மத் 10:21-22). எனவே வன்முறை இயேசுகாட்டிய வழியல்ல என்பது தெளிவாகிறது.
இயேசு தன் மலைப் பொழிவில் ‘அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்’ என்கிறார் (மத் 5:9). ‘உரோமையின் அமைதி’ என்று உரோமையரின் ஆட்சியின் உயர்வை பேசுவார்கள். அதன் எதிர்நிலையில்தான் இயேசு பிறந்தபோது வானவர், ‘உலகில் அவருக்கு உகந்தோர்க்கு அமைதி உண்டாகுக என்று பாடுகிறார்கள் (லூக் 2:14). அதாவது இறைவனின் கருணை எளிமையாகப் பிறந்திருக்கும் குழந்தையில் வெளிப்படுகிறது. உரோமையர் பேசிய அதிகாரத்தால் வந்த அமைதிக்கு எதிர்நிலையில் தான் இயேசு வல்லமையைக் காண்கிறார். அதனால்தான் ‘இப்போது உம் அடியான் என்னை அமைதியுடன் போகச் செய்கிறீர்’ என்கிறார் சிமியோன் (லூக் 2:29). இயேசு எருசலேமில் நுழைந்தபோது, மக்கள் ‘விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக’ என்று வாழ்த்துகிறார்கள் (லூக்19:38). இயேசு பிறந்தபோது வானவர் பாடிய வார்த்தைகள் மக்களின் வார்த்தைகளாக இங்கு வெளிபடுகின்றன.
பவுல் அடிகளார், ‘கடவுளே அமைதியை அருளுகின்றார். அதே இறைவன் நம்பிக்கையாளர்களை தூய்மையாக்குகிறார். குற்றமின்றி காப்பாற்றுகின்றார்’ என்று விளக்குகிறார் (1 தெச 5:23).
ஆவிக்குரிய மனநிலை பெற்றவர்கள் பெறுவது வாழ்வும் அமைதியும் என்றுப் பவுலடிகளார் மேலும் விளக்குகிறார். (உரோ 8:6) ஆவியானவர் தரும் கனிகளில் ஒன்று அமைதியாக விளங்குகிறது (கலா 5:22; உரோ 14:17).
இறைவன் தரும் அந்த அமைதி, சீடர்களின் உறவில் வெளிப்பட வேண்டும் என்று கூறுகிறார். (உரோ 14:19; 1தெச 5:13; 2 கொரி 13:11)
இறைவன் தரும் அந்த அமைதி, சீடர்களை காவல் காக்கும் காவலரைப் போல் அமைந்திருக்கிறது என்றும் பவுலடிகளார் விளக்குகிறார் (பிலி 4:7).
எனவே பவுல் தன் கடிதங்களின் துவக்கத்திலும் இறுதியிலும் இறைவன் தரும் அமைதியை வாழ்த்தாகத் தெரிவிக்கிறார் (உரோ1:7; 1 கொரி 1:3; 2 கொரி 1:2; கலா 1:3; பிலி 1:2; 1தெச 1:1; 1தெச 5:23; பிலி 4:9; உரோ15:23)
புதிய ஏற்பாட்டில், இயேசு தன் சீடர்களுக்கு அளித்த அமைதி, சீடர்கள் மக்களுக்கு எடுத்துச் சென்ற அமைதி, சீடர்களின் வாழ்வில் ஒற்றுமை வழியாக வாழப்பட்ட அமைதி, சீடர்களை குறைகளிலிருந்து காப்பாற்றிய அமைதி என்று விளக்கப்படுகிறது. இவ்வாறு கடவுளின் அரசில் இடம் பெற கடவுளிடமிருந்து புறப்பட்டு வரும் அமைதி என்ற கொடை நம்மிடம் இடம் பெற்று வாழ்வைத் தருகிறது.
No comments:
Post a Comment