Pages - Menu

Monday, 16 April 2018

நிலையில்லா இந்திய பயணங்கள்

நிலையில்லா இந்திய பயணங்கள்

இந்தியாவில் பயணம் செய்வது, அமெரிக்கர்கள் நிலவிற்கு சென்று வருவதற்கு சமம் என்று சொல்லலாம். அந்த நிலவுப் பயணம் கூட திட்டமிட்டு நடைபெறுகிறது. நமது நாட்டில் செய்யும் பயணங்கள் நிச்சயமற்ற தன்மை வாய்ந்தவை. என் அனுபவங்களிலிருந்து கீழ்க்காணும் குறிப்புகளைத் தருகிறேன்.  

 இரயில் பயணம்:

திருவனந்தபுரம் இரயில் நிலையத்தில் ஒருமுறை இப்படி அறிவிப்பு எழுதியிருந்தார்கள். ஓர்  இரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக வரும். மற்றொரு இரயில்,  எப்போது வருமென்று கூறமுடி யாது என்று எழுதியிருந்தார்கள். நம் நாட்டு இரயில்கள் கடவுளைப் போல, இரயில் எந்த நேரத்தில் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. வழக்கமாக தாமதமாக த்தான் வரும். நம் துரதிஷ்டம் நேரத்தோடு அத்திபூத்தாற் போல் வந்து விடும். பல தடங்கள் உள்ள நிலையங்களில் திடீரென்று தடம் மாற்றுவார்கள். அப்போது பயணிகள் ஆடி ஓடுவதை பார்க்க வேண்டுமே. சில நேரங்களில் இரயில் வரும் நேரத்தைப் பற்றி ஒலிப்பெருக்கியில் அறிவிக்கவே மாட்டார்கள். தேவையில்லாததற்கெல்லாம் கத்திக் கொண்டே இருப்பார்கள். எனவே ஒரு மணி நேரத்திற்கு முன்பதாகவே இரயில் நிலையம் சென்று விடுவது நல்லது. வேக வண்டிகளில், முன்பதிவு இல்லாதப் பெட்டிகளில் மக்கள்படும் அவதியைப் பார்க்க வேண்டுமே! ஒருமுறை, ஒருவர் தன் பெட்டியை இரயிலில் வைக்க இடமில்லாமல் நின்றுக்கொண்டே தன் தலையிலேயே தூக்கிக் கொண்டு பயணம் செய்வதைப் பார்த்து பதைத்துப் போனோம். பயணச் சீட்டு வாங்கியும் உட்கார இடமில்லாமல் பயணம் செய்வது வெட்கக்கேடு. இரயில்வே துறை பல சீர்திருத்தங்களை செய்திட வேண்டும். 

பயணச் சீட்டு பரிசோதகர் திடீரென்று வருவார். அல்லது இரயில் நிலையத்தில் சோதனை செய்வார்கள். இது ஆங்கிலேயர் இன்றும் இங்கிலாந்தில் பயன்படுத்தும் முறை. ஜெர்மனியில், நான்கு, ஐந்து பரிசோதகர்கள் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் இரயில் புறப்படும்போது எல்லா பெட்டிகளிலும் நுழைந்து பரிசோதிப்பர். பயணச்சீட்டு வாங்க முடியாதவர்களிடம் அப்பொழுதே பயணச்சீட்டை வழங்குவர். நம் நாட்டிற்கு ஏற்ற முறைகளை கண்டுபிடிக்க வேண்டும்.  இரண்டு அல்லது மூன்று பெட்டிகளுக்கு ஒரு நடத்துனரைப் போல நியமித்து, மக்களை அமர வைக்கவும், பயணச்சீட்டுகளை பரிசோதி க்கவும் செய்யலாம்.

முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் உள்ள பரிசோதகர், பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாவலர் போல செயல்படுவது கடமை என்று கருதுகிறேன். பரிசோதனை செய்துவிட்டுப் பெரும்பாலும் அவர்கள் டிரிங் சாப்பிட்டு விட்டு சாய்ந்து விடுகிறார்கள். இவ்வளவு நிலையற்ற தன்மைகள் பாம்பு ஊர்வதைப் போல இடையில் வந்தாலும் இந்தியரின் பயணம் நடந்து  கொண்டுதான் இருக்கிறது. உலக அதிசயங்களில் இதுவும் ஒன்று என்று வியக்கலாம்.

 பேருந்து:

அரசு பேருந்துகளின் கட்டமைப்பு ஓட்டை உடைசல் ஒருபக்கம். வேறுபல வகையான ஓட்டைவசதிகளும் உண்டு. பேருந்துகளில் அவை செல்லும் இடங்கள் பற்றி அறிவிப்பு பலகைகள் இருக்காது. இருந்தாலும் மாறுபட்ட இடக்குறிப்புடன் இருக்கும். எனவே குழப்பமடைந்த பயணிகள் நடத்துனரைக் கேட்டால், அவரைக் கேட்கக் கூடாத கேள்வியாக நினைத்து முகத்தைக் காட்டுவார்.

நகரங்களிலுள்ள பேருந்து நிலையங்களில், குறிப்பிட்ட பேருந்து எங்கு நிற்குமென்று தெரியாது. அதற்கு விசாரிக்க வேண்டும். தவறான தகவல்களும் தரப்படுவதுண்டு. இதனால் பேருந்து நிலையத்தில் பயணத்திற்காக நிற்கும் மக்கள்படும் மனக்குழப்  பங்களைப்  பார்க்கலாம்.

குடந்தையிலிருந்து பெங்களூருக்கு செல்ல 7 மணி வண்டிக்கு முன்பதிவு செய்திருந்தேன். வண்டிகள் எப்போது வரும் எங்கு வரும் என்ற விபரமற்ற நிலையில் 6 மணிக்கே நிலையம் சென்றேன். 6.30க்கு ஒரு பேருந்து வந்தது. 7 மணி பேருந்துதான் முன்கூட்டியே வந்துவிட்டது என்று நினைத்து நடத்துனரைக் கேட்டால்,  இது ஆறு மணி வண்டி சார். 7 மணி வண்டி பிறகு  வரும் சார் என்றார். பிறகு ஏழே காலுக்குத் தான் ஏழு மணி வண்டி வந்து ஏழரை மணிக்கு எடுத்தார்கள்.  ஜெர்மனி மற்றும் மேலை நாடுகளில் 6:23 மணிக்கு வண்டி என்றால் அந்த நொடிக்கு வண்டி அங்கு வந்து நிற்கிறது. காலதாமதம் அங்கு விதிவிலக்கு. இங்கு இதுதான் விதி.

 ஆட்டோ:

தமிழ்நாட்டில் ஆட்டோ ஓட்டுனர்களைப் பார்த்து நாம் பரிதாபப் பட வேண்டும். ஏனென்றால் அவர்களின் சூழ்நிலை அப்படி. நான், ஏன் பெரும்பாலானோர் ஆட்டோ எடுக்க விருப்பப்படுவதில்லை. முக்கியமாக ஆட்டோ ஓட்டுனர்களுடன் சண்டையிட்டு, பேரம் பேசுவதற்கு தனித்திறமையும், பயிற்சியும் வேண்டும். தமிழ்நாட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வேன்.

கேரளாவில் ஆட்டோவில் மீட்டர் போட்டு, அதிலிருந்துதான் பணம் வசூலிக்கின்றனர். எனவே மக்கள் நம்பிக்கையுடனும், மகிழ்வுடனும் ஆட்டோ எடுத்து செல்கின்றனர். சாலக்குடி என்ற ஊரில்  ஆட்டோ எடுத்தேன். வழியில் ஆட்டோ ரிப்பராகிவிட்டது. அப்போது அந்த ஆட்டோ ஓட்டுநர், மற்றொரு ஆட்டோவை நிறுத்தி அதில் என்னை ஏற்றி விட்டார். அதுவரை சென்றதற்கு கட்டணம் வாங்கவில்லை. அங்கு ஆட்டோ ஓட்டுநர் களுக்கு நிற்பதற்கு நேரமில்லை. நமது ஆட்டோக் காரர்கள் யானை விலை, குதிரை விலை தான் கேட்பார்கள். மீட்டர் போட்டு விட்டால் தமிழ்நாட்டில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

பெங்களூரில் கேரளாவைப் போல நியாயமாக ஆட்டோ பயணம் நடந்தது. இப்போது அங்கும் குட்டிச்சாத்தான் நுழைந்துவிட்டான். இரயில் வந்து சேர்ந்தாலோ, பேருந்துகள், நிலையத்திற்கு வந்தாலோ, ஆட்டோ ஓட்டுநர்கள், ஓடி வருவார்கள். இவர்கள் பெரும்பாலும் ஏமாற்று பேர் வழிகள். ஏடோகோடமாக கட்டணம் கேட்பார்கள். கேள்வி கேட்டால் திட்டுவார்கள். இரயில், பேருந்து நிலையங்களிலிருந்து வெளியே வரிசையாக நிற்பார்கள். அதிலும் நியாயமானவர்கள் ஒருசிலர் தான்.

பெங்களூரில் சிவாஜிநகர் பேருந்து நிலையத்திற்குக் காலை 6 மணிக்கு எனது பேருந்து சென்று சேர்ந்தது. வழக்கம் போல ஆட்டோ ஓட்டுநர்கள், ஆட்டோ வேண்டுமா? என்று ஓடி வந்தனர். அவர்களை தவிர்த்து வெளியே வந்தேன். ‘இந்திரா நகர், விவேகானந்தர் மெட்ரோவுக்கு செல்ல எவ்வளவு’ என்று கேட்டேன். முதலில் பெங்களூர்காரரை விசாரித்து வைத்திருந்தேன். நூறு ரூபாய் தான் கேட்பார்கள் என்று சொல்லியிருந்தார்கள். ஆட்டோ ஓட்டுநர் 200 ரூபாய் என்றார். ‘என்ன சார் அதிகமாய் கேட்கிறீர்கள்’ என்றேன். 150ரூபாய் கொடுங்கள் என்றார். சரியாக சொல்லுங்க சார் என்றேன். எவ்வளவு தருவீர்கள் என்றார். 100 ரூபாய் என்றேன். சிரித்தார். சற்று தள்ளி ஒரு ஆட்டோவை கேட்டேன். அதே இடத்தை சொல்லி எவ்வளவு? என்றேன். 250 ரூபாய் என்றார். சற்று நகர்ந்து சென்று மற்றொரு ஆட்டோவை கேட்டேன். 200ரூபாய் என்றார். ‘பார்த்து சொல்லுங்கள்’ என்றேன். 180 ரூபாய் தாங்க சார் என்றார். ‘100ரூபாய் தான் என்று சொல்லியிருக் கிறார்கள். ஏன்தான் இப்படி அதிகமா கேட்கிறீர்கள்?’ என்றேன். ‘மசால் தோசைக்கூட 70ரூபாய் சார். பார்த்து கொடுங்கள் சார்’ என்றார்.  சரி 170 ரூபாய் என்று ஒத்துக் கொண்டு ஏறினேன். இந்திரா நகர், விவேகானந்தர் மெட்ரோ நிலையம் என்றேன்.  வழியில் தமிழ் பாடலெல்லாம் டேப்பில் போட்டார். நம்ம தமிழ் ஆளுன்னு சந்தோ­ப்பட்டேன். இந்திரா நகர் என்று எழுதியிருந்தது. இதுதான் நீங்க கேட்ட இடம் என்றார். ‘சார் இந்திரா நகர் விவேகானந்தா ரோடு மெட்ரோ நிலையம்’ என்றேன். ‘இந்த ரோடே விவேகானந்தர் ரோடுதான் சார்’ என்று இறக்கி விட்டார். பிறகு அங்கிருந்தவர்களை நான் செல்ல வேண்டிய கோவில் இடத்தை விசாரித்தேன். பலருக்கு தெரியவில்லை. வீட்டில் பணிசெய்யும் பணியாளர் கனடாவில், ‘கொஞ்ச தூரம் சென்று இடதுபக்கமாக செல்லுங்கள்’ என்றார். அவர் சொன்னதைப் போல இடது பக்கமாக சென்றேன். சுமார் நாலு பேரை கேட்டேன். அவர்களுக்குத் தெரியவில்லை. கடைசியாக ஒரு இளம் பெண் காதில் போனை சொருகிக் கொண்டு வந்தார். தயங்கி தயங்கிக் கேட்டேன். தமிழ்ப்பெண். விபரமாகச் சொன்னாள். ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று நான் போக வேண்டிய இடத்தைக் கண்டுபிடித்தேன். படித்தவர் களுக்கே இந்த நிலை? படிக்காத பாமரர்களுக்கு எந்த நிலையோ? எனக்கு நடந்ததை விட மற்றவர்களுக்கு இன்னும் மிகமிக மோசமாக ஏற்பட்டிருக்கலாம்.

எனவே இந்தியாவில் பயணம் செய்யும் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்ள ஒரு பள்ளி நடத்தினாலும் பரவாயில்லை.

No comments:

Post a Comment

Ads Inside Post