வனத்தின் நடுவே கால்நடைப் பயணம்
அருட்பணி ச.இ. அருள்சாமி
ஊட்டி மறைமாவட்டத்தில் குந்தா என்ற பங்கு உண்டு. அதற்கு முன்னாள் முள்ளி என்ற பங்கும் இருக்கிறது. இது காட்டு பகுதியில் உள்ளது. முள்ளியில் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். இப்பகுதி கேரளா மாநிலத்தை சேர்ந்தது. இங்கு பிரான்சு நாட்டு அருள்பணியாளர் லெபேவர் (ஸிeக்ஷூeஸre) என்பவர் பங்குத் தந்தையாக இருந்தார். வெள்ளைக்கார சுவாமியார் அவர். கேரளா காட்டின் நடுவில் உள்ள தொடுக்கி என்ற சிறிய கிராமத்திற்கு வருடத்திற்கு ஒருமுறை சென்று மக்களை சந்தித்து வருவார். இந்த தொடுக்கி முள்ளியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு செல்ல சாலைகள் கிடையாது. ஒத்தடி பாதையில்தான் செல்ல வேண்டும். அந்த பாதையும் அங்கு வாழ்பவர்களுக்குத் தான் தெரியும்.
முள்ளியில் ஒரு சிறிய மருத்துவமனையை ய்னினி சகோதரிகள் நடத்தி வந்தார்கள். அங்கு தொடிக்கியிலிருந்து மக்கள் மருத்துவம் பெற வருவார்கள். அவர்களைத் தொடர்புக் கொண்டு, அவர்களின் துணையோடு சகோதரிகள், வேதியர், அருள்பணியாளர் என்று சுமார் 10 பேர் நடந்தே தொடிக்கிக்கு செல்வார்கள். அப்பகுதியில் யானை நடமாட்டம் உண்டு. யானையின் போக்குவரத்தை யயல்லாம் கணித்துதான் இப்பயணத்தை மேற்கொள் வார்கள்.
1989 ஆம் ஆண்டு, மே மாத விடுமுறையில் நானும் (ச.இ.அருள்சாமி) இப்பயணத்தில் பங்குக் கொண்டேன். நான்கு சகோதரிகள், வேதியர் ஒருவர், அருள்பணியாளர் இருவர் என்ற குழுவாக சென்றோம். இரண்டு நாள்களுக்குத் தேவையான உணவு, மக்களுக்கு கொடுக்க வேண்டிய பரிசு பொருள்கள், மருந்துகள் ஆகியவைகளை சுமந்துக் கொண்டு செல்ல வேண்டும். வயதானவர்கள் போல ஒரு குச்சியை ஊன்று கோலாக பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும். மேடு பள்ளம், பள்ளத்தாக்கு, அருவிகள் என கடந்து செல்ல வேண்டும். காலை 8 மணிக்கெல்லாம் புறப்பட்டு மாலை 5 மணிக்கெல்லாம் அங்கு போய் சேர்ந்தோம். இரவு தங்குவதற்கு வனஅலுவலர் தங்க பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாழடைந்த சிறிய கட்டிடம் உண்டு. அதில் புல்களைப் போட்டு அதன் மீது பாயை விரித்து படுத்துக் கொள்ள வேண்டும்.
இரவில் தொடுக்கி மக்கள் பாடல்பாடி நடனம் ஆடுவார்கள். நாங்களும் சேர்ந்து பாடல் பாடுவோம். ஒருவர் பாடிய பாடல் இன்னும் ஞாபகம் இருக்கிறது. ‘ஊசி பட்டாசே வேடிக்கையாச்சே, லைச்சாலே வெடி டமார், டமார்’ பழங்காலத்து பாடல் அது. மக்களுக்கு வேண்டிய முதலுதவி மருந்துகளை மக்களுக்கு சகோதரிகள் கொடுத்தார்கள்.
இரவு அந்த சிறிய அறையில் புல் மெத்தை மேல் உறங்கியபோது, கஷ்டகாலம், சிலருக்கு வயிற்றுபோக்கு வந்துவிட்டது. வெளியில் காடு. சுத்தம் செய்வதற்கு நல்ல வேளை பக்கத்தில் சிறிய ஓடை ஓடியது. பலரும் பல நேரங்களில் எழுந்து சென்றது தெரியாது. அவ்வளவு களைப்பு. காலையில் எழுந்ததும் தான் தங்களின் இரவு அனுபவங்களை வெட்கத்தோடு பட்டும் படாததுமாக பகிர்ந்துக் கொண்டார்கள்.
அடுத்த நாள் அருகிலுள்ள மற்றொரு பழங்குடியினர் பகுதிக்கு சென்றோம். ஆற்று ஓரத்திலும் ஆற்றிலும் பாராங்கற்களில் தாண்டி நடந்து சென்றோம். செல்லும் வழியில், மூங்கில் புற்றில் ஓரு காட்சி. ஒரு பாம்பை மற்றொரு பாம்பு விழுங்கிக் கொண்டிருந்தது. அப்படி செல்லும் வழியில் எனக்கு ஒரு விபத்து. எப்படியோ தெரியவில்லை, சீவங்குச்சியை விட மெலிதான மூங்கில் குச்சி எனது வலது காலின் நடுவிரலின் மேல்பகுதியில் இரத்த நாளத்தில் சொருகிவிட்டது. இரத்தம் வடிய ஆரம்பித்தது. எங்களோடு வந்த சகோதரி ஒருவர் செவிலியர். எனவே லாவகமாக அந்த குச்சியை எடுத்து விட்டு மருந்து வைத்து கட்டுகட்டினார்கள். எங்கள் பயணத்தை தொடர்ந்து அந்த பழங்குடியினர் பகுதிக்கு சென்றோம். சுமார் 10 குடிசைகள். எங்களோடு வந்த வேதியர் ‘ஒரு கோழி கிடைக்குமா?’ என்று அங்கு கோழி நிறைந்திருப்பதைப் பார்த்து கேட்டு விட்டார். உடனே பழங்குடி சிறுவர்கள், கோழிகளை விரட்டி சென்று பிடித்து வந்தார்கள்.
அங்கு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் விழாவினைப் பற்றி விளக்கினார்கள் அவ்வூர் மக்கள். அக்கிராமத்திலுள்ள மக்கள் அனைவரும் காட்டுப் பகுதியில் உள்ள ஓரிடத்திற்கு செல்வர். பத்து ஆடுகளை பலியிட்டு சோறு சமைத்து, இறந்தவர்களைப் பார்த்து சொல்வார்களாம். உங்களுக்கு வேண்டியதை செய்து விட்டோம். எங்கள் இடத்திற்கு திரும்பி வந்துவிடாதீர்கள் என்பார்களாம். மீண்டுமாக, முள்ளி நோக்கி நடைபயணமாக திரும்பினோம். ஒரு பெரிய மூட்டையை தலையில் தூக்கி வந்தேன். அதை இறக்கி வைக்கும் போது இவ்வளவு பாரமான மூட்டையை எப்படி இவ்வளவு தூரம் தூக்கி வந்தீர்கள் என்று வியந்தனர்.
இப்பயணத்தில் ஊட்டி மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி.பெனடிக்ட், எப்எம்எம் சபையைச் சேர்ந்த சகோதரிகள் பவுலா, குரியாகோஸ் ஆகியோரும் வேதியர் (பெயர் மறந்து விட்டது) அவரும் பங்குப் பெற்றனர். அருள்பணி. பெனடிக்ட் நகைச்சுவைக்குப் பெயர் போனவர். நன்கு நடிப்புத் திறமை கொண்டவர். வழியயங்கும் அவரது நகைச்சுவை உரையாடல் மிக இதமாயிருந்தது. அருவிகளில் ஓடிய தண்ணீர் அவ்வளவு குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருந்தது. பிரியாணிக்குப் போடும் பட்டைசெடியின் இலை ஆங்காங்குக் கிடைத்தது. சகோதரிகள் அவைகளை நிறைய சேர்த்தனர்.
மரங்கள், செடிகள், மலர்கள் அருவிகள் நிறைந்த அந்த வனப் பகுதியில் பயணம் செய்தது, இறைவனின் ஒப்பற்ற இயற்கையின் அழகைக் கண்டு வியக்கும் அனுபவம் கிடைத்தது. தொடிக்கிக்கு சென்ற இரண்டாவது பயணத்தைப் பற்றி அடுத்த கட்டுரையில்...
No comments:
Post a Comment